44. சிவசித்தரும் தவசித்தரும்

1296

அடயோகம் அட்டாங்கயோகம் ஆகிய தவயோகங்களையும் கடந்ததுவாய் அவற்றிற்கு மேம்பட்டதுவாய்த் திருமூலர் சொல்கின்ற சிவயோகம் திகழ்கின்றது. இச்சிவயோகத்தை நவயோகம் அல்லது மற்ற யோகங்களின் வேறுபட்டப் புதிய யோகம் என்றே திருமூலர் குறிப்பிடுகின்றார். தவயோகங்களில் உயிர்களின் முயற்சியால் பெறும் எட்டுப் பெரிய ஆற்றல்களையும் (அட்டமாசித்தி) இதர ஆற்றல்களையும் பெறும் யோகியர்களைத் தவசித்தர்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வாற்றல்களைத் துணைக்கொண்டு இவ்வாற்றல்களுக்கு எல்லாம் மூலமாக இருக்கின்ற, பேராற்றலான சிவத்தின் திருவருளைப் பெற்றச் சிவயோகியர்களைச் சிவசெறிவாளர்களைச் சிவசித்தர் என்கின்றார் திருமூலர். அரிய, மிகச் சிறந்த சிவசித்தராகிய திருமூலர் சிவசித்தர்களின் இயல்பினையும் சீர்மையினையும் விளக்கிக் கூறுகின்றார்.

            சித்து என்றால் அறிவு என்று பொருள். சிவசித்து என்றால் சிவஅறிவு என்று பொருள். சிவசித்தர் என்றால் சிவ அறிவினைப் பெற்றவர் என்று பொருள். சிவஅறிவு என்பது நம் முயற்சியால் பெறுவது அன்று, இறைவனால் உணர்த்தப்படுவது என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. நன்று ஆற்றல், தீது அகற்றல், இருக்கை, மூச்சைக் கட்டுப்படுத்துதல், புலன்களை ஒருநிலைப்படுத்துதல், நினைதல், நினைந்ததில் அழுந்தி இருத்தல் ஆகிய எட்டு நிலைகளைக் கடந்த சிவசித்தர்களுக்கு இறைவன் ஆசானாகத் தோன்றித் தன் திருவருளை நல்கி, சிவ அறிவைக் கொடுப்பான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு சிவஅறிவு அருளப்பெற்ற சிவசித்தர் எவ்வாறு இருப்பர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

            சிவயோகம் அல்லது சிவச்செறிவு கைவரப் பெற்ற சிவசித்தர்கள், சிவ அறிவு கிடைக்கப்பெற்ற உடனேயே, இறைவன் உலகம் முழுவதிலும் எல்லாப் பொருள்களிலும் விரவி இருக்கும் உண்மையை அறிவதோடு மட்டும் அல்லாமல் அதனை உணர்வார்கள் என்கின்றார் திருமூலர். உலக மாந்தர் தம் முயற்சியினால் பெற இயலாத இச்சிவ அறிவினைப் பெற்றமையைச் சேந்தனார், ஒன்பதாம் திருமுறையான திருப்பல்லாண்டில், “சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ், ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதுஆர் பெறுவார் உலகில், ஊரும் உலகும் கழறஉழறி உமை மணவாளனுக்கு ஆள், பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே” என்று குறிப்பிடுவார். சிவ அறிவும் திருவருளும் கிடத்தபோது, எல்லாவற்றையும் எல்லோரையும் உடையவன் சிவபெருமான்; அவன் எல்லாவற்றிலும் எல்லாவுயிர்களிலும் விரவி இருக்கின்றான் என்பதனை அறியும் அறிவு பெற்றேன். அச்சிவ அறிவால் யான் பெற்ற அப்பேற்றினை எவரும் தம் முயற்சியால் பெற இயலாது. அப்பெருமான் அளிக்கவே பெற இயலும். அப்படிப்பட்ட சிவபெருமானின் பேரையும் புகழையும் ஊரும் உலகும் எடுத்து இயம்பிப் போற்றி வழிபட்டு, அப்பேற்றினை அடையும் வண்ணம் பல்லாண்டு பாடுவோமாக என்று குறிப்பிடுகின்றார்.

            உலகப் பொருள்கள் அனைத்தும் சிவமயமாக சிவசித்தர்களுக்குத் தோற்றம் அளிக்கும். எல்லா உயிர்களும் சிவத்தின் வடிவாய்த் தெரியும். எங்கும் இறைவனின் திருமேனியாகவும் எல்லாவற்றிலும் சிவசத்தியாகிய இறைவனும் அவனின் திருவருளும் தென்படும். எங்கும் எதிலும் சிவமே தென்படுவதனால், இவ்வுலகத்தில் வாழுங்காலத்திலேயே இவ்வுலகம் அவர்களுக்குச் சிவ உலகமாய்த்(சிவலோகம்) தென்படும். சிவ உலகத்தில் பெறும் சிவ இன்பத்தினை இவ்வுலகிலேயே பெறுவர். இவர்களை உயிர் முற்றப் பெற்றவர்கள் அல்லது சீவன் முத்தர்கள் என்பர். உலகில் அனைத்தும் சிவத்தோற்றமாய்ச் சிவசித்தர்களுக்குத் தென்படுவதால் இவர்கள் அன்பின் பிழம்பாய்த் திகழ்வார்கள். நாளும் பொழுதும் இறையின்பத்திலே மூழ்கி இறைவனையே உற்று நோக்கியவாறு இருப்பார்கள். உலக உயிர்கள் அனைத்தையும் சிவமாகவே பார்ப்பதனால் உலக உயிர்களுக்கு நன்மை புரிவதனையே தங்கள் மூச்சாகக் கொள்வர். அன்பும் அருளும் தங்களின் இயல்பாய் உள்ள இவர்கள், ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவது போன்று, “அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு” எனும் இயல்புடையவர்களாய் இருப்பார்கள் என்கின்றார். பொன், பொருள், உலகச் சிற்றின்பங்கள் என்பதனைச் சிந்தையிலும் எண்ணாத சிவசித்தர்கள், இறைவனுக்காகவும் உலக உயிர்களுக்காகவும் தங்கள் உயிரையும் உடலையும் ஈகம் செய்யத் தயங்கமாட்டார்கள்.

            வானவர்கள் வானுலகத்தில் வாழ்ந்தும் காணமுடியாத அச்சிவப்பரம்பொரு¨ளை இப்பூவுலகத்திலே காணும் பேற்றினை உடைய சிவசித்தர்களான திருமூலர், நால்வர் பெருமக்கள், இதர நாயன்மார்கள் போன்றோர் சிவநெறியைப் பற்றுக்கோடாக உடையவர்கள். சிவ சிந்தையை உடைய, இறைவன் திருவடியை எப்பொழுதும் அணைந்து இருப்பதனால் அணைந்தோர் தன்மை உடையவர்கள் என்று குறிப்பிடப்படுவர். சிவசித்தர்கள், உண்மையான இறையன்பு, சிவனடியார்களின் இணக்கம், இறை வழிபாடு, ஆலயவழிபாடு, சிவச்சின்னங்கள் ஆகியவற்றைச் சிவமாகவே கருதி, அவற்றைத் தவறாமல் கடைபிடித்து வருபவர்கள். சிவநெறி தவறாத இச்சிவசித்தர்கள், தங்களூக்குக் கிடைக்கப்பெற்ற சிவ அருளினால் சித்த ஆகாயப் பெருவெளியில் கிட்டும் இன்பத்தினையும் நுகர்வர் என்கின்றார் திருமூலர். இதனையே, “அளித்தான் உலகெங்கும் தான் ஆன உண்மை, அளித்தான் அமரர் அறியா உலகம், அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள், அளித்தான் பேரின்பத்து அருள்வெளிதானே” என்பார்.

            சிவசித்தர்களுக்கு இறைவனே ஆசானாக வந்து திருவருள் புரிந்து சிவ அறிவினைக் கொடுத்தவுடன், சிவசித்தர்களின் உயிர் சிவனின் அகண்டிதத்துள் அடங்கி இருப்பதனை உணர்வதால் தங்களை ஒருபோதும் சிவம் என்றோ, கடவுள் என்றோ கூறும் தவற்றினைச் செய்வதில்லை. சிவசித்தர்கள் பிற உயிர்களிடத்துக் காட்டும் அருளைச் சிவத்தின் திருவருளாகவே உணர்வர். தன்முனைப்பு அற்றுத் தங்கள் செயல் என்பது இல்லாமல் எல்லாம் சிவன் செயலாக உணர்கின்ற இவர்கள், சிவனது அறிவாகிய பேர் ஒளியில், தங்களின் உயிரின் அறிவாகிய சிற்றொளி அடங்கியிருக்கும் நிலையை உணர்வார்கள் என்பதனை, “வெளியில் வெளியேபோய் விரவியவாறும், அளியில் அளிபோய் அடங்கியவாறும், ஒளியில் ஒளிபோய் ஒடுங்கியவாறும் தெளியும் அவரே சிவசித்தர்தாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

            அடயோகம் முதலியவற்றால் பல சித்துவேலைகளும் அட்டமாசித்தி போன்ற ஆற்றல்களையும் தவச்சித்தர்கள் பெற்றிருப்பினும் அவர்கள் சிவஅறிவு பெறாமையால் பிறவியை அறுத்துக்கொள்ளமாட்டார்கள். சிவஅறிவு கிடக்கப் பெற்றுச் சிவப்பேறு கிடக்கப்பெற்றவரே சிவசித்தர் ஆவார். சிவசித்தர்களின் முடிந்த முடிவு வெறுமனே இருப்பது அல்ல! மாறாகச் சும்மா இருந்து சிவபோகம் என்ற சிவப்பேரின்பத்தை நுகர்தல் ஆகும் என்பார் திருமூலர். சிவசித்தர்கள் சிவ உலகினை இவ்வுலகிலேயே கண்டு, வாக்குகளை வென்று, மௌனியாய் இருப்பர். யான் எனது எனும் செருக்கினையும் அறியாமையையும் செய்யும் ஆணவம் என்ற மலத்தினைக் கண்டு, அதனில் இருந்து தன்னை இறைவன் திருவருளால் விடுவித்துக்கொண்டவர்கள். காலத்தை வென்ற அழிவில்லாதவர்கள். உள்ளத்தில் குற்றம் நீங்கினவர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக நோக்கும் தன்மை உடையவர்கள் என்பதனால் கவலையற்றவர்கள். எல்லை இல்லாத இறை இன்பத்தில் இடைவிடாது மூழ்கி இருக்கும் இவர்கள் உடலில் உள்ள புறக்கருவிகளையும் அகக்கருவிகளையும் வென்று அவற்றினால் ஏற்படும் சிற்றின்பங்களைக் கடந்தவர்கள். இறைவனின் திருவருளையே கருவியாகக் கொண்டு இறை இன்பத்தை நுகர்ந்தவாறு இருப்பர் என்பதனைச், “சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர், சத்தமும் சத்த முடிவும் தம்உள் கொண்டோர், நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர, முத்தர் தம் முத்தி முதல் முப்பத்தாறே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவநெறியில், சிவயோகம் எனும் சிவச்செறிவினை இறைவனை அடையும் வழியாகத் தெரிவு செய்பவர்கள் உண்மையான சிவசித்தர் நிலையை அடைவதனை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும். அதனை விடுத்து தவசித்தர்களின் சிறு சிறு ஆற்றல்களைக் கண்டு மயங்கவும் அவற்றினால் நிலை தடுமாறுதலும் சிவசித்தர் நிலைக்கு ஆளாகும் முறைமையில் ஊறுவிளைவிக்கும். சிவசித்தர்கள் யார், சிவசித்தர்களின் இயல்புகள் என்ன, என்பதனை அறிந்து சிவசித்தர் நெறியினைக் கற்பிக்கும் ஆசான்களைத் தெரிவு செய்தல் வேண்டும். உண்மை சிவசித்தர்களை நாடி, அச்சிவசித்தர்களின் சீர்மிகு சிவநெறியையும் அவர்களின் அன்பின் பிழம்பான இயல்பினையும் போற்றிப் பின்பற்றி உண்மைச் சைவர்களாக வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!