54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்

929

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்வாழ்க்கை என்பார் ஐயன் திருவள்ளுவர். இதனாலேயே, “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற முதுமொழியும் அமைந்துள்ளது. இல்வாழ்வுக்குப் பெருந்துணையாவது வாழ்க்கைத் துணைநலம் என்பர். வாழ்க்கைத் துணைநலம் எனும் இல்லாளின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பர். இல்வாழ்க்கையில் வாழ்க்கைத் துணைநலமாக வருகின்ற மனைவி எனும் இல்லாளே இவ்வுலக வாழ்க்கையும் இறை உலக வாழ்க்கையும் செம்மையாக அமைவதற்குத் துணை நிற்கின்றவள் ஆவாள்.

இவ்வுலக வாழ்க்கையும் இறை உலக வாழ்க்கையும் செம்மையாக அமைவதற்குத் துணை நிற்கின்ற இல்லாளோடு இறைவனின் திருவருளை முன் இருத்தி இல்லறத்தை நல்லறமாக நடத்துவதே தூய இல்வாழ்க்கை என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இல்லறவியலில் திருவள்ளுவமும் இதனையே குறிப்பிடுகின்றது. பிறனில் விழையாமை எனும் அதிகாரத்தில், பிறர் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை உலகில் அறமும் மெய்ப்பொருளும் ஆராய்ந்து கண்டவரிடத்தில் இருக்காது என்கின்றார் ஐயன் திருவள்ளுவர். நம்பியவரின் மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீய செயலைச் செய்பவர் செத்தவருக்கு ஒப்பாகும் என்கின்றார் ஐயன் திருவள்ளுவர். பிறர் மனைவியினிடத்து செல்பவருக்குப் பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காது என்கின்றார். இக்கருத்தினையே சிவ ஆகமங்களை மூவாயிரம் தீந்தமிழ் மந்திரங்களின் வழி அருளிய திருமூலர், பிறன்மனை நயவாமை எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.

சிவன் அருள் கிட்ட வேண்டுமாயின் பிறன்மனை நயவாமைப் பண்பு வேண்டும் என்கின்றார். ஊரார், உறவினர், உற்றார், பெற்றோர், சான்றோர், ஆசான், இறைவன் சான்றாகப் பொன்னால் செய்த தாலியைக் கட்டிக் கைப்பிடித்தவள் மனைவி. வாழ்க்கைத் துணை நலங்களான மனைவியும் கணவனும் உருவம் ஆகிய உடலாலும் உருஅருவம் ஆகிய உள்ளத்தாலும் அருவம் ஆகிய உணர்வாலும் இவற்றிற்கெல்லாம் மேலாகிய உயிராலும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி நிற்கின்றனர். உடலால் என்பது உடல் உழைப்பாலும் உடலால் செய்யும் பணிவிடைகளாலும் உடலால் ஏற்படும் இன்பத்தாலும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்றல் என்பதாம். தவிர, இல்லாள் வாழுதற்கு ஏற்ற இல்லமும் அவளுக்குப் பாதுகாப்பான சூழலை வீட்டிற்கு வெளியில் செல்லும் போதும் வீட்டில் இருக்கும் போதும் கணவன் உறுதி செய்வது உடலால் ஏற்படுத்தும் காவல் என்பர். உள்ளத்தால் ஏற்படுத்தும் காவல் என்பது இருவரும் கற்புநெறி தவறாது தங்களைக் காத்துக்கொள்ளல் என்பர். உணர்வால் காத்தல் என்பது ஒத்த பண்புடையவராய் அன்பு அகலாது நிற்றல் ஆகும். உயிர்க்காவல் என்பது கணவனும் மனைவியும் இறைவழிபாட்டு நெறியில் இருந்து தவறாது ஒருவரை ஒருவர் காத்தும் ஈடுபடுத்தியும் வழிகாட்டியும் பின்பற்றியும் வாழ்வது ஆகும் என்பர். இதனை,” உருவம் உடலாகும் உருஅருவாம் உள்ளம், அருவம் உணர்வு அப்பால் உயிராம் திருவருளால், இல்லுறைவு கற்புநிறை ஏருணர்வு தெய்வ வழிச், செல்லும் இயல் வாழ்க்கைத் துணை” எனும் வெண்பாவால் சான்றோர் குறிப்பிடுவர்.

எனவே ஒருவரின் இல்லாள் என்பது அவர் தம் வாழ்க்கையில் மேம்பட இறைவன் அளித்த ஒன்றாம். இறைவன் ஒருவருக்கு அளித்த ஒன்றை அவரிடம் இருந்து கவர எண்ணுவது சிவக் குற்றம் ஆகும். பிறன்மனை நயவாமையுடன் இருத்தல் வேண்டும் என்பதனை, “ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே, காத்த மனையாளை காமுறும் காளையர், காய்ச்ச பலாவின் கனிவுண்ண மாட்டாமல், ஈச்சம் பழத்திற்கு இடருற்றவாறே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதாவது தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் தவம் பெருக்குதலுக்கும் இறைவன் அளித்த அருமை மனைவி கற்புநெறி தவறாது அன்போடு தனது கணவனைக் காத்து அவனுக்குப் பாத்திரமாய் வீட்டில் இருக்க, இவரைப் போன்றே, தன் மனைவி தன் வாழ்விற்குத் துணை நிற்க வேண்டும் என்று காத்துவரும் பிறர் ஒருவரின் மனைவியை அடைய எண்ணுவது பெரும் தீமையான நிலையைக் கொண்டு வரும் என்கின்றார் திருமூலர்.

மா, பலா, வாழை என்ற முக்கனிகளுள் ஒன்றாய், இன்பப் பகுதியாய் இருப்பது பலாப்பழம். இது நன்கு காய்த்துப் பழுத்துச் செவ்வியுற்றால் மிக்க இன்பம் தரும் கனியாய் அமையும். அத்தகைய பலா மரத்தின் கனியை எளிதில் எவ்வகை அச்சமும் இன்றி பெற்று உண்ணலாம். நம் தோட்டத்துக் கனியாதலின் அச்சமும் பழியும் பாவமும் தீவினைக் குற்றமும் பகையும் துன்பமும் இன்றி வேண்டிய அளவு உண்ணலாம். கைப்பிடித்த மனைவியுடன் இன்பம் நுகர்தலைத் திருமூலர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மாறாகப் பிறன் மனையை நோக்குகின்ற செயலை, பிறர் ஒருவரின் வீட்டின் பின்புறத்தில் வளர்ந்துள்ள ஈச்சம் பழத்தினைத் திருடி உண்ண முற்பட்டுத் துன்புறுகின்ற செய்கையைப் போன்றது என்கின்றார். இத்தகைய செயல் செய்பவர்கள் மாந்தருக்குரிய பண்பிலிருந்து விலகுகின்றவர்கள் என்பதனால் காளையார் என்று குறிப்பிட்டு அறியாமையை உடைய எருதிற்கு ஒப்பவர் என்கின்றார். இவர்கள் காமம் எனும் குற்றத்திற்கும் களவு எனும் குற்றத்திற்கும் உரியவர் என்பதால் இடரைத் தேடிக்கொள்கின்றவர்கள் என்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழும் மாந்தர் வாழ்வில் அறப்பகுதியாகிய சிவ வழிபாடும் பொருள் பகுதியாகிய இல்லற வாழ்க்கையும் இன்பப் பகுதியாகிய உழைப்பின் நுகர்ச்சியும் வீட்டுப் பகுதியாகிய திருவருள் நோக்கமும் திருவடிப்பேறும் கிட்டுமாறு வாழ்ந்தும் பிறருக்கு அதனைப் புகட்டியும் வாழ்வர். இத்தகைய இல்லங்களில் வாழும் கற்புடைய பண்பிற்சிறந்த மனைவியரைத் தேனைப் போன்று இனிக்கின்ற மாங்கனி என்கின்றார் திருமூலர். அத்தகைய மாங்கனியை குறையுடையது என்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்தப் புளிய மரத்தின் நுனிக் கிளையில் ஏறி கீழே விழுந்து கால் ஒடித்துக் கொள்வது போன்றது பிறன்மனை நயத்தல் என்பதனைத், “திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை, அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்து, பொறுத்தம் இல்லாத புளிமாங்கொம்பேறிக், கருத்தறியாதவர் கால் ஆற்றவாறே” என்று குறிப்பிடுகின்றார்.

அன்பும் அருளும் இன்றி முறையற்ற வழியில் பணம் தேடி செலவு செய்யும் செல்வர்கள் காமுற்று அறம் பிழைத்து மயக்குற்று பிறன்மனை நயந்து வாழ்வர் என்கின்றார் திருமூலர். மெய் உணர்வு எழாது என்றும் ஆணவ முனைப்போடு இருளின் நடுவே மின்னொளி போன்று அறிவுத் தெளிவு இல்லாமல் இருப்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்களின் மீது மயக்குற்று இருப்பார்கள் என்கின்றார் திருமூலர். இவ்விரு வகையினரும் தங்கள் மனத்தைத் தேற்றி நன்னெறிப் படும் நெறியினை மேற்கொள்ளமாட்டாது இறுதியில் சிவம் கிட்டாது துன்பத்தை நுகர்வர் என்கின்றார். இத்தகைய பிறன்மனை நயப்பவர்களுக்குத் துணைப்போகும் மகளிரையும் தீயொழுக்க  மகளிரையும் நல்லோர் போற்றமாட்டார்கள் எனவும் திருவருளும் கிட்டாது எனவும் குறிப்பிடுன்கின்றார் திருமூலர். பிறன்மனை நயத்தல் தவத்தைக் கெடுக்கும் என்பதை ஆண் பெண் இருபாலரும் உணரவேண்டும். மனைவிக்குத் தெரியாமல் பணியிடத்தில் கணவன் பிற பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும் மனைவிக்குத் தெரியாமல் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்துதலும் விலை மகளிரிடம் செல்வதும் பிறன்மனைக் குற்றங்களேயாம். கணவனுக்குத் தெரியாமல் மனைவி பிற ஆடவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் விலைமகளிர் ஆவதும் பிறன்மனை நயக்கின்ற குற்றமேயாம்.

நாகரிகம் என்ற பெயரில் திருமணம் ஆகிய பெண்களும் ஆண்களும் கட்டுப்பாடின்றிப் பழகுதலும் கேளிக்கை மையங்களில் பிற ஆடவர்களுடன் ஆட்டங்கள் போடுவதும் விருந்து நிகழ்ச்சிகளில் கும்மாளம் அடிப்பதும் திருமணத்திற்கு முன்பு இளைஞர்களும் யுவதிகளும் நண்பர்கள் என்ற பெயரில் கட்டுப்பாடின்றிப் பழகுதலும் முறையற்ற உறவுகளில் ஈடுபடுவதும் இவ்வகைக் குற்றமேயாம். திருமணத்திற்கு முன்பு வாலிபப் பருவத்தில் செய்யக் கூடிய இயல்பான தவறுதான் என்று சமாதானம் கூறிப் உணவுப் பொருட்களுக்கும் ஆடை அணிகளுக்கும் பலருடன் சுற்றித் திரிந்து தவறுகள் செய்து பின் வேறு ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்கின்ற ஆடவரும் பெண்டிரும் பிறன்மனை நயத்தல் குற்றத்திற்கு உட்பட்டவரே என்பதனை மறத்தல் கூடாது. “ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், பெண்கள் தான் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்” என்பது இன்றி, கற்புநெறி இருபாலருக்கும் உரியது என்பதனை எண்ணிப் பிறன்மனை நயத்தல் எனும் குற்றம் நீங்கிப் பழி, பாவம், பகை, துன்பம், தீவினைப் பயன், அச்சம் என்பனவற்றை  நீங்கித் தூய வாழ்க்கை வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!