21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

14406

21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு பொருளாய் இருக்கின்றான் என்று சிவ ஆகமங்களும் திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் குறிப்பிடுகின்றன. உயிர்களின் மீது கொண்ட பரிவின் காரணியமாகக் கருணையே வடிவமான அப்பரம்பொருள் உயிர்களின் நன்மை பொருட்டுத் தானாகவே தனது சிறப்பு நிலையிலிருந்து பொது நிலைக்கு இறங்கி வந்தது என்றும் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடும். “அகலமாய அறிவரிது சகலமாய் வந்ததென உந்தீபற, தானாகத் தந்தது என உந்தீபற” என்று இக்கருத்தினைத் திருவுந்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடும்.

மேல்நிலையிலிருந்து இறங்கி வரும் பரம்பொருள் உலக உயிர்கள் தன்னை அறிந்து உய்தி பெறும் வகையில் உயிர்களின் செவ்விக்குப் (பக்குவத்திற்கு) ஏற்ப பல்வேறு வகைகளில் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு வந்து அருள்புரிகின்றது என்று குறிப்பிடுகின்றது. உயிரின் செவ்வியானது அதன் அறியாமையை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகின்றது. இவ்வறியாமையைப் போக்கிக் கொள்ள உயிர்கள் வினை எனும் செயல்களை ஆற்ற வேண்டி உள்ளது. பொது நிலைக்கு இறங்கி வந்து உயிர்களுக்கு உதவும் பரம்பொருள் உயிர்களின் வினைக்கேற்பத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு வந்து அருள் புரிகின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பொது நிலைக்கு இறங்கி வருகின்ற அப்பரம்பொருளின் திருவருளைச் சத்தி என்று குறிப்பிடுவர். இறைவனின் ஆற்றலும் அருளுமான சத்தி எல்லா உலகங்களையும் அவற்றிலுள்ள பொருள்களையும் ஆக்கி, நிறுத்தி, இளைப்பாறச் செய்து, மறைத்து, ஒடுக்கி அருள்புரிகின்றது. உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் விரவி இருப்பதோடு அல்லாமல் எல்லா உயிர்களிலும் பிரிப்பின்றி கலந்து நின்று அவற்றை இயக்கிக் காக்கும் சத்தியாயும் உள்ளது. இதனை, “விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டு” என்று திருமூலர் குறிப்பிடுவார்.

பொதுநிலைக்கு இறங்கி வரும் பரம்பொருளின் திருவருளை, ஆற்றலை, சத்தி என்று பெண் வடிவம் கொடுத்து வழிபட்டமையால் சத்தி என்பது தனிப் பெண் கடவுள் என்று சிலர் உண்மையை உணராமல் குறிப்பிடுவர். “அரன் தனக்கு அருளது சத்தியாகும், எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்” என்று திருவருட்பயன் என்ற மெய்கண்ட நூல் இதனைத் தெளிவு படுத்தும். எனவே இறைவனின் திருவருளான சத்தி இறைவனின்று சற்றும் மாறுபடாது இறைவனின் திருநோக்காகவே செயல்படும். இப்படி உலக உயிர்களிலும் உலகப் பொருள்களிலும் அவற்றினோடு கலக்கும் வகையால் ஒன்றாயும், அவற்றைச் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் வகையால் வேறாகவும் பெருமானின் திருவருள் பிரிப்பின்றி நின்று காத்து அருளுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிர்களை அன்பினால் கசிந்து கசிந்து உருகச் செய்து அவற்றின் வினை முழுவதையும் போக்கித் தனது இணையற்றத் தனிப் பேரின்பத்தைத் தருகின்றான் என்பதனைத் திருமூலர், “தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து, உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டி களிம்பறுத்தானே” என்கின்றார். இதனையே, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

உலக உயிர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற நோக்கம் இல்லாது தன் திருவருளைத் தன் உள்ளே அடக்கி வைத்திருக்கும் பெருமானின் திருவருளை அல்லது ஆற்றலைப் பராசத்தி என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையை உலகை நோக்காது உள்நோக்கிய நிலை என்பர். பெருமானின் திருவருளான, உள்நோக்கிய நிலையில் பராசத்தி என்று குறிப்பிடப்படும் நிலையிலிருந்து உலக முகமாக உயிர்களுக்கு அருள்புரிய, உலகைத் தொழில்படுத்த இயங்கும் பெருமானின் திருவருள் ஆற்றலுக்கு ஆதிசத்தி என்று பெயர். உயிர்கள் தங்கள் அறியாமையைப் போக்கிக் கொண்டு இறைவனிடம் இருக்கின்ற பேரின்பத்தை அடைவதற்குச் செயல்கள் செய்து அன்பின் பிழம்பாய்க் கசிந்து உருகுவதற்குப் பக்குவம் அல்லது செவ்வி அடைய வேண்டும் என்பதனால் இறைவனின் ஆதிசத்தியானது உயிர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே இறைவனைக் காட்டாது உலகத்தின் மீது பற்றுக்கொண்டு உலக முகமாகவே செலுத்தி நிற்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

உலகப் பொருள்களை அழுந்தி அறிகின்ற பட்டறிவினாலே மட்டுமே உயிர்கள் செவ்வி அல்லது பக்குவம் அடைய முடியும் என்பதனால் இறைவனின் திருவருளான ஆதிசத்தி இவ்வாறு செய்கின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இறைவனைக் காட்டாது, இறைவன்பால் முழு ஈடுபாட்டினையும் செலுத்த இயலாது, உலக நடவடிக்கைகளின் மீது ஈடுபாடு கொண்டு, உலகமுகமாக உயிர்களைச் செலுத்தும் ஆதிசத்திக்கு வடமொழியில் திரோதாயி அல்லது திரோதான சத்தி எனப்பெயர் என்று குறிப்பிடுவர். பெருமானின் இத்திருவருள் நிலையை மறைப்பாற்றல் என்று மெய்கண்ட நூல்கள் தமிழில் குறிப்பிடுகின்றன. இறைவனை மறைத்து உலகினைக் காட்டுவதால் இதனை மறைப்பாற்றல் அல்லது மறைப்புச் சத்தி என்பர். உயிர்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்குவதற்கே இம்மறைப்பும் செய்யப்படுகின்றது என்பதனால் இதனைப் பெருமானின் மறக்கருணை என்பர். நோய் கண்டவரின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் மருத்துவர் நோயாளியின் உடலை அவர் துன்புறும் வகையில் அறுத்து அவருக்கு நன்மை செய்வது போன்றது இது என்று ஒப்புமை கூறுவர்.

உயிருக்கு அறியாமையைச் செய்யும் அழுக்கிற்கு ஆணவ மலம் என்று பெயர். இந்த ஆணவ மலத்தினைப் போக்கவே வினைகள் என்ற நற்செயல்களையும் தீயசெயல்களையும் பிறவி தோறும் உயிர்கள் செய்து இனி செயல்கள் செய்வதில் நாட்டமில்லா செவ்வியை அடைய வேண்டி இறைவன் வழிநடத்துகின்றான். மறைப்பாற்றலாய் இறைவனின் திருவருள் நின்று நம்மைத் தொழில்படுத்தவே உயிர்களுக்கு உலகமுகமான நடவடிக்கைகளின் மீது சோர்வு ஏற்படத் தொடங்குகின்றது. உலகமுகமான செயல்களில் நாட்டம் குறையத் தொடங்கி எல்லாச் செயல்களும் ஒன்றாகவே தோன்றுகின்றன. எல்லாச் செயல்களையும் விருப்பு வெறுப்பு இன்றிச் செய்தலினால் இந்நிலையை இருவினை ஒப்பு என்று குறிப்பிடுவர். உயிர்களைச் சுற்றி நடக்கும் செயல்களின் மீது விருப்பு வெறுப்பு என்பது இல்லாமையால் உயிரைப் பற்றியிருக்கின்ற வினை என்பது அதனை விட்டு நீங்குவதற்குப் பக்குவம் அல்லது செவ்வி அடைந்து விட்டமையால் அதனை உயிருக்கு மலபரிபாகம் ஏற்பட்ட நிலை என்கின்றனர்.

உயிரின் வினைகள் நீங்குவதற்குத் தயாரான இந்நிலையில் இதுவரை மறைக்கும் ஆற்றலாய் இருந்து செயல்பட்டு வந்த இறைவனின் திருவருள் வனப்பாற்றல் எனும் அருட்சத்தியாய் மாறி நின்று அருள்புரியத் தொடங்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் தலையாய மந்திரமான திருவைந்தெழுத்து மந்திரத்தில், ‘ந’ என்ற எழுத்து நடப்பாற்றல் என்ற மறைப்பாற்றலையும், ‘வ’ என்ற எழுத்து வனப்பாற்றலையும் உணர்த்தி நிற்பன என்பது இங்கு உணர்தற்பாலது.

நடப்பாற்றல் உயிர்களுக்குத் தொழிற்பட ஆரம்பித்தவுடன் மறைப்பாற்றலில் உயிரை உலகமுகமாகச் செலுத்திய இறைவனின் திருவருள் இனி உயிரை இறைவன் முகமாகச் செலுத்தி உலக நாட்டத்தினை மறைக்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் திருவருட்சத்தி அல்லது வனப்பாற்றல் உயிரில் பதிய ஆரம்பித்தவுடன் உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உயிர் இறைவனை அறிவில் எழும் கதிரவனாய்க் காணத்துவங்கும் என்பர். இதனையே உயிரின் மீது விழும் அருள் வீழ்ச்சி அல்லது சத்திநிபாதம் என்பர்.

இறைவனின் அருள்வீழ்ச்சி முற்றப்பெற்ற உயிர்கள் இறைவன் வெளிபட்டுத் தோன்றுவதை காணத் துடிக்கும் என்பதனால் இறைவனே சிவகுருவாக வெளிபட்டுத் தன் திருத்தாளினை நல்கி உயிரின் கருவிக் கரணங்களை எல்லாம் சிவக் கருவிக் கரணங்களாய் மாற்றித் தன்னை முழுமையாகக் காணும் நிலையினை உயிருக்கு அளித்துத் தன் திருவடி நீழலில் இருத்தி மகிழ்வான் என்று மெய்கண்டநூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே முத்தி அல்லது பேரின்பப் பெருவாழ்வு என்று குறிப்பிடுகின்றனர். இத்தகைய அரிய செயல்களைப் பெருமானின் திருவருள் உயிர்கள் பொருட்டு இடையறாது செய்து, அவனின் திருவடிகளை வணங்குவதற்கு நமக்கு அருள் செய்வதனால், “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மணிவாசகர் குறிப்பிட்டார்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!