102. அகத்தவம் எட்டில் எண் பெரும் பேறுகள்

1217

சிவச் செறிவின் முடிந்த பயனான திருவடிப் பேற்றினைப் பெறுதற்கான முயற்சியின் இடையில் கிட்டுவது எண் பெரும் பேறுகள் ஆகும். எண் பெரும் பேறுகள் அட்டமா சித்திகள் என்று வடமொழியில் அழைக்கப் பெறுகின்றன. சிவபெருமானின் பேர் அருளையும் திருவடிப் பேற்றையுமே குறிக்கோளாகக் கொள்ளும் சிவச் செறிவாளர்களுக்கு இவ்வெண் பெரும் பேறுகள் கிட்டினும் அவற்றை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள் என்கின்றார் திருமூலர். சிவயோகி எனப்படும் சிவச்செறிவாளர் ஒருவர் தான் வேண்டியவாறு எட்டுத் தன்மையாக நிற்கும் ஆற்றலைப் பெறுவதே எண் பெரும் பேறுகள் எனப்படுகின்றது. அணிமா, இலகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று வடமொழியில் அழைக்கப்பெறும் இவை அன்னைத்தமிழில் நுண்மை, மென்மை, பருமை, விரும்பியதெய்தல், விண்தன்மை, நிறைவுண்மை, ஆட்சியனாதல், கவர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது.

அணுவினுக்கும் அணுவாய் நுழையும் தன்மையைக் கொள்ளுதலே அணிமா அல்லது நுண்மை எனப்படுகின்றது. திருவருளாகவும் திருவருளாலேயும் கிட்டும் இவ்வெண் பெரும் பேற்றினில் அணிமா எனும் நுண்மை ஆற்றல், உயிரானது கீழ் நிலைக் களங்களுக்கு இறங்காமல், புருவ நடு எனும் நிலைக் களத்தில் இறை அருளுடன் பொருந்தி, ஓர் ஆண்டிற்கு நீங்காமல் இருக்குமானால் இப்பேறு கிட்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை, “முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில், அணிந்த அணிமாகை தானாம் இவனும், தணிந்தஅப் பஞ்சினுந் தான் நொய்ய தாகி, மெலிந்தங் கிருந்திடும் செல்லவொண் ணாதே” என்று குறிப்பிடுகின்றார். அணிமா எனும் இந்நுண்மைத் தன்மையினால் சிவச்செறிவாளன் அணுவிலும் அணுவாய் ஆகின்ற தன்மையைப் பெறக்கூடும் என்கின்றார். எல்லாப் பொருள்களிலும் நுண்ணியதாய் இருக்கின்ற திருவருளைத் திருவருளின் துணைக் கொண்டே தானும் நுண்ணியனாய் நின்று பயன்படுத்துதல் நுண்மைப் பேறு என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இந்நுண்மைத் தன்மை அல்லது பேற்றினைச் சிவசத்தி எப்பொருளிலும் நிறைந்திருத்தலை உணர்வதற்குப் பயன்படுத்துவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இலகிமா எனும் மென்மைத் தன்மை, காற்றினும் நொய்மையாய் வானத்தில் உலாவும் பேற்றினைக் குறிப்பது. தான் காணுகின்ற எப்பொருளிலும் அணுவுக்கு அணுவாய் நிறைந்து நிற்கும் இறைவனையும் அவன் திருவருளையும் நுண்மையாய் இருந்து உணர்ந்து அந்த ஒப்பற்றப் பரம்பொருளின் பேர் அருளையே பற்றுக் கோடாகக் கொண்டு ஐந்து ஆண்டுகள் சிவச்செறிவாளன் நிற்பானாகில் தற்போதம் எனப்படும் தான் உண்டு எனும் அறிவு கெடும். இதுவே இலகிமா அல்லது மென்மைத் தன்மைப் பேறு எனப்படுகின்றது. உயிர் தான் என்ற உணர்வு நீங்கி எல்லாம் திருவருள் என உணர்வதால் உலகப் பொருள்களை அது அதுவாய் அறியும் சுட்டி அறியும் அறிவும் நீங்கி அகண்டிதமாய் அறியும் அறிவுப் பெறும். இதனால் உலகப் பொருள்களின் பற்றினை விட்டுத் திருவருளையே உணர்ந்து நிற்பதனால் பரம்பொருளான சிவத்தை அறியும் பேற்றினைப் பெறும் என்கின்றார் திருமூலர். எங்கும் சென்று இறைவனின் திருவருளைக் காணும் பேறு உடைமையாய் அத்திருவருளிலேயே அழுந்தி நிற்கும் வாய்ப்பினை இப்பேறு அளிக்கும் என்கின்றார் திருமூலர்.

அணுவினுள்ளும் அணுவாய் இருக்கின்ற இறைவனின் திருவருளை இறைவனின் திருவருளாய் நிற்கும் நுண்மைத் தன்மை எனும் பேற்றினைக் கொண்டு கண்டு, உணர்ந்து, தன் உணர்வு அற்றுச் சிவத்தை உணர்ந்து நின்றால் அறிவு மேன்மேலும் பெருகும். அங்கனம் அறிவு பெருகப் பெற்றச் சிவச்செறிவாளர்களால் உலகம் நலம் பெறும். அங்கனம் நலம் பெற்ற உலகைச் சிவச்செறிவாளர்கள் ஆள நினையாமல் சிவனது அருள்வழி நின்று சிவனாகவே நிற்பார்கள் என்கின்றார் திருமூலர். எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாக நிற்கும் சிவத்தை அணுகிக் கண்ட பின், காலம் கழிதல் என்பது சிவச்செறிவாளர்களின் உணர்வில் தோன்றாமல் போகும். எல்லாவற்றிலும் பெரிதாகிய வாழும் காலத்தை அருள்வழி நின்று கடத்தலால் அகண்டிதம் அல்லது மகிமா எனப்படும் பருமைப் பேறு கிட்டியமையாகக் கொள்ளப்படும் என்கின்றார் திருமூலர். தான் வாழும் வாழ் நாள் காலத்தைத் தன் வழியாக்கிக் கொள்கின்ற பேறே பருமை அல்லது மகிமா எனப்படுகின்றது என்கின்றார் திருமூலர்.

பிராத்தி அல்லது விரும்பியது எய்தல் எனப்படும் பேறு சிவச்செறிவாளர்களுக்கு எண்ணியவற்றை எல்லாம் கைகூடச் செய்யும் என்கின்றார் திருமூலர். மாயாகாரிய மெய்களெனப்படும் உயிருக்குப் பொருத்தப்பட்டிருக்கும் கருவி கரணங்களான அகப்புற உடற்கூறுகளை இறைவனின் திருவருள் தொழிற்படுத்துவதனை அத்திருவருளுடன் ஒன்றி நின்று காணலாம். அவ்வாறு கண்டு அக்கருவிக் கரணங்கள் எல்லாம் உயிராகிய தனக்குக் கீழ்ப்பட்டவை என்று உணர்ந்து ஓராண்டு காலம் அவற்றின் தொழிற்பாடுகளைத் தமக்கு வேறாகக் கண்டு கொண்டிருப்பானாயின், அக்கருவிக் கரணங்களினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கித் தான் விரும்பியது எய்தும் பேறு கிட்டும் என்கிறார் திருமூலர். இச்சிவச்செறிவாளர்கள் விரும்பியதை எய்தும் இப்பேற்றினைக் கொண்டு சிவனை அடைதலையே விரும்புவர் என்பதனால் சிவனை அடைதலுக்கு இப்பேறு பெருந்துணை நிற்கும் என்கின்றார் திருமூலர். தவிர கருவிக் கரணங்கள் சிவச்செறிவாளனைத் தம் வழிப்படுத்தாமல் அவை சிவச்செறிவாளன் நினைத்தவாறே செயல்படுதல் பற்றியும் இப்பேற்றின் வழி பெறப்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

எண் பெரும் பேறுகளில் ஐந்தாவது கரிமா எனப்படும் விண் தன்மை கிட்டுதல் என்பதாகும். விரும்பியது எய்தல் எனும் பிராத்தியில் கருவிக் கரணங்களின் செயற்பாடுகளை அவற்றின் வேறாக நின்றும் அவற்றினைத் தன் வழிப்படுத்தியும் நிற்கும் சிவச்செறிவாளன் குண்டலி ஆற்றலையும் நன்கு காணும் ஆற்றலையும் பெறுவான் என்கின்றார் திருமூலர். இவ்வாறு குண்டலி ஆற்றலை நன்கு காண வல்லவருக்குப் பல்வேறு வகைப்பட்ட புவனங்களுக்குப் போக்கு வரவு புரிதல் எனும் ஆற்றல் ஏற்படும். உடல் வீழ இறத்தல், நுகர்ச்சிப் பொருள்களால் இன்புறுதல் (மயங்குதல்), துன்புறுதல் போன்ற உலகியல் உணர்வுகள் இவர்களுக்குச் சிறிதும் இல்லை என்கின்றார் திருமூலர். எத்துணை ஆடவர் கூடி எடுப்பினும் எடுக்க முடியாதவராய் மலை போன்ற திண்மை உடையவராய் இருத்தல் போல கரிமா எனப்படும் இப்பேற்றில் சிவச்செறிவாளனை உலகியல்கள் அசைக்க முயாமல் இருத்தல் என்பது பெறப்படும் என்று திருமூலர் குறிப்பிடுவார்.

சிவச்செறிவாளர்களுக்குக் கிட்டும் எண் பெரும் பேறுகளில் ஆறாவது பிராகாமியம் எனப்படும் நிறை உண்மை ஆகும். உலகியல்புகளில் தாக்குறாது நிற்கும் சிவச்செறிவாளனுக்குச் சிவச்செறிவின் பயிற்சியால் காட்டுத்தீ போன்ற பேரொளியாகச் சிவபெருமான் தென்படுவான் என்றும் அச்சிவப் பேரொளியில் ஒன்றுபடுகின்ற நிலை எளிய ஒன்றாய் அமைவதே நிறை உண்மைப் பேறு எனப்படுகின்றது என்பார் திருமூலர்.

சிவப்பேர் ஒளியாகத் தோன்றும் சிவப்பரம்பொருளில் இறைவனின் திருவருளைத் துணைக்கொண்டு ஓராண்டுக் காலம் ஒன்றி இருப்பானாயின் சிவச்செறிவாளனுக்குச் சிவனது இறைமைத் தன்மைகள் கிடைக்கப் பெறும். இதுவே ஈசத்துவம் எனும் ஆட்சியன் ஆதல் பேறு எனப்படுகின்றது. சிவச்செறிவாளனின் செயல் அனைத்தையும் தன் செயலாக ஏற்று, அனைத்துச் செயல்களையும் அவனுக்கு நலமாக அமையும் வகையில் சிவம் புரிதல் இப்பேற்றின் வழிக் கிட்டும் என்பார் திருமூலர். இதனாலேயே சிவச்செறிவாளன் சிவன் செய்யும் செயல்களை எல்லாம் தானும் செய்ய வல்லவன் என்றும், ‘சிவன் இவனே’ என்றும் உலகத்தாரால் கருதப்படுபவனுமாக இருப்பான் என்கின்றார். உலகத்தார் அவர்களைச் சிவன் என்றும் சிவனது மறுவடிவம் என்றும் கூறினாலும் இம்மயக்க உரையினால் தாக்குறாது, எவ்வகையிலும் தாங்கள் உயிர்களே என்பதில் இவர்கள் தெளிவு உடையவர்களாய் இருப்பர் என்கின்றார் திருமூலர். உலகோரையும் பிறரையும் ஆட்சி செய்யும் பேற்றினைப் பெற்றச் சிவச்செறிவாளன் அதனைப் பொருட்படுத்தாது சிவத்தின் அடிமையாய்த் திருவடியில் கிடப்பதனையே பேறாகக் கருதுகின்றமையால் இத்தன்மையைக் கண்டு எல்லா உயிர்களும் அச்சிவச்செறிவாளனையே இறைவனாகக் கருதி அவனிடத்தில் பணிவும் அன்பும் உடையனவாய் அச்சிவச்செறிவாளனின் வழி நிற்கும் பேற்றினை உடையவன் ஆவான் என்கின்றார் திருமூலர். இதுவே வசித்துவம் எனும் கவர்ச்சிப் பேறு என்பார் திருமூலர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!