29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்

1519

எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருளைக் கொண்டு நடத்தலால், அந்தணர் எனப்படுபவர்கள் அறத்தை உடையவர் என்பதனை, “அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டு ஒழுகலான்” என்பார் ஐயன் திருவள்ளுவர். அறத்தை உடையவர் யாவரேனும் அவரை அந்தணர் என்று குறிப்பிடலாம் எனினும் வழக்கில் அந்தணர் எனும்போது பிராமண வேதியர்களையே குறிப்பிடுகின்றனர். திருமுறைகளில் குறிப்பிடப்படும் அந்தணர்களும் இத்தகையவர்களையே குறிப்பிடுகின்றன. வடமொழி வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இவர்கள் சைவவேதியர்களாகவும் வைணவவேதியர்களாகவும் வைதீக வேதியர்களாகவும் இருக்கின்றனர்.

அந்தண்மை என்றால் உள்நோக்குதல் என்று பொருள். அந்தணர்கள் எப்பொழுதும் உள்முகமாக அகத்தில் இறைவனை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்று குறிப்பிடுவர். சைவவேதியராய் இருப்பின், புறத்தில் இறைவனை நினைப்பிக்கும் திருநீறு, கணிகைமணி, எளிய ஆடைகள் என்று அணிந்திருக்கும் இவர்கள் எப்பொழுதும் சிவசிவ என்றும் இறைவனின் திருப்பெயரையும் இன்சொற்களைப் பேசுபவர்களாகவும் இருப்பர். பேராசை நீங்கியவர்களாகவும் பணம்படைத்தத் தனிமாந்தர் புகழ்பாடாது உலக நன்மைக்காகவும் பொதுமக்களின் நலனுக்காகவும் எப்பொழுதும் இறைவனை வழிபடுபவர்களாகவும் இருப்பர். இதனைக், “கற்றுஆங்கு எரிஓம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லை…” என்று திருஞானசம்பந்த அடிகள் குறிப்பிடுவார். சமயநெறிகளை நன்றாகக் கற்று உணர்ந்து, உலகிற்குத் துன்பம் வராமல் இருப்பதற்கு நாளும் சிவநல்வேள்விகள் செய்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற தில்லை நகர் என்று உண்மை அந்தணர்களின் சிறப்பினைப் போற்றுகின்றார்.

உலக நன்மைக்காக நாளும் இறைவனை வழிபடுவதையும் இறைவனுக்குப் பூசனை இயற்றுவதையும் தங்கள் அன்றாடக் கடமையாகக் கொண்ட இவர்கள் உள்ளத்தில் பற்று அற்றவர்களாக, எளிய வாழ்க்கை வாழ்ந்து பிறவி அறுதலையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். வேதியர்கள் என்றும் அழைக்கப்படும் இவ்வந்தணர்கள் சைவர்களாய் இருப்பின் சிவவேள்வியினைச் செய்வார்கள். தமிழ் மந்திரங்களான திருமுறைகளை அருளிய திருஞானசம்பந்த அடிகளும் சுந்தர அடிகளும் சிவவேள்வி செய்யும் அந்தணர் மரபில் தோன்றியவர்கள்தான். நாயன்மார்களில் அப்பூதி அடிகளும் திருநீலநக்க அடிகளும் சிவவேள்வி செய்த அந்தணர்கள் என்று தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். சிவவேள்வி செய்வதற்குத் தம் தந்தையான சிவபாத இருதையருக்குப் பெருமானிடத்தில் பொன் பெற்றுத் தந்த திருஞானசம்பந்தர் வேள்வி செய்யாது, இறைவனைத் தீந்தமிழ்ப் பாடல்களால் பாடி வழிபடும், “பதிகப் பெருவழி” எனும் செந்தமிழர் தமிழ் வழக்கினைப் பின்பற்றி இறைவன் திருவடியை அடைந்ததைச் சீர்மிகு செந்தமிழர் நினைவில் கொள்ளல் வேண்டும். இத்தகைய சிறப்பினை உடைய அந்தணர்கள் கடைபிடிக்க வேண்டிய அரிய ஆறு நெறிகளைத் திருமூலர் அந்தணர் ஒழுக்கம் எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.

“அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர், செந்தழல் ஓம்பிமுப்போதும் நியமம் செய்து, அந்தவ நற்கருமத்து நின்று ஆங்கிட்டுச், சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே,” என்று அந்தணர்களின் கடமைகளைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றவர்கள் எல்லா உயிர்களிடத்தும் ஒருபடித்தாக அருள்கொண்டு நடக்க வேண்டிய அறவோர் என்கின்றார் திருமூலர். தங்களுடைய பிறப்பு அறவேண்டும் என்று நாளும் எண்ணுகின்ற இவர்கள் இறைவனுக்குப் பணி செய்வதனையே தங்கள் வாழ்வாகக் கொண்டவர்கள். நாளும் தவறாது மூன்று வேளை சிவவேள்வி செய்து உலகம் நலம் பெற வழிபாடு இயற்றும் கடப்பாடு உடையவர்கள். இதனாலேயே உலகம் நலம்பெற வேண்டும் என்று திருஞானசம்பந்தர் எண்ணி அருளிய திருமுறைத் திருப்பதிகத்தில், “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக, ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே, சூழ்க வையகமும் துயர் தீரவே” என்று அருளினார்.திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடும் அனைத்துமே உலக நன்மைக்காக இருப்பவை என்பதனைக் காணலாம். உலக நன்மைக்காக நாளும் வழிபாடு இயற்றும் அந்தணர், உயிர்களைக் காக்க இறைவன் இட்ட பணியைச் செய்யும் வானவர், திருக்கோயில்களில் சிவபூசனைகள் நடைபெற்று உலகம் உய்ய ஐந்து வகையான பொருட்களைத் தரும் பசுக்கள், உலக உயிர்வகைகள் நிலைபெற நீரைக் கொடுக்கும் மழை, மக்களின் நலனைக் குறைவின்றிக் காக்கும் மன்னன் ஆகியவை நலமுடன் வாழ வேண்டும் என்று உலக நன்மைக்காக வேண்டிப் பாடினார்.

          மாந்தரில் வேறுபாடு காட்டாது தன்முனைப்பு இன்றி இறைவன் திருவருளை முன்னிருத்தி இறைபணி செய்யும் அக இருள் இல்லாதவர்கள் அந்தணர்கள். எண்ணெய் இல்லாதபோது நீரின் துணைகொண்டு விளக்கு எரித்த அருட்செயலைச் செய்த, அந்தணர் மரபைச் சேர்ந்த, நமிநந்தி அடிகளின் மனதில் மாந்தரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் இருள் இருந்தமையை அகற்றி அவரை நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டான் பெருமான். இத்தகைய அந்தணர்களுக்கு உரிய ஆறு முதன்மையான கடமைகளை ஆறு தொழில்களாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல் என்கின்றார்.

அந்தணர்கள் நாளும் வேதங்களையும் திருமுறைகளையும் தவறாமல் ஓதவேண்டும். சிவவேதியர்களான அந்தணர்கள் வேதங்களையும் சிவாகமங்களையும் தெரிந்து இருத்தலோடு திருமுறைகளையும் தெரிந்து இருத்தல் வேண்டும். அவற்றின் பொருளையும் அறிந்து இருத்தல் வேண்டும். சைவசமய மெய்கண்ட நூல்களைக் கற்றிருப்பதோடு சிவதீக்கைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இல்லையேல் இவர்கள் சைவத் திருக்கோயில்களில் பூசனை இயற்றுவதற்கும் சைவசமய வழிபாடுகளையும் ஏற்று நடத்தும் தகுதியை இழந்து விடுவர் என்று மெய்கண்ட அவை குறிப்பிடுகின்றன. பிழையறக் கற்றுணர்ந்த சமய அறிவைப் பிழையின்றி உள்ளவாறு பிறருக்குக் கற்றுக்கொடுத்தல் அந்தணருக்கு உரிய கடமைகளில் ஒன்றாகும் என்கின்றார் திருமூலர். எக்காரணத்திற்காகவும் உண்மைச் சமயநெறிகளுக்குப் புறம்பானவற்றச் செய்யாது சமயத்தைப் பேணிக்காத்தல் இவர்களது தலையாயக் கடமைகளில் ஒன்று என்கின்றார்.

வேள்வி மரபு சிவவேதியர்களாய் இருப்பின் சிவவேள்வியையே செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். இவர்கள் வேள்வியில் பிற மந்திரங்களை விடுத்துச் “சிவயநம” எனும் அஞ்செழுத்தையே மந்திரமாகக் கூற வேண்டும் என்கின்றார். திருஞானசம்பந்தரோ, “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே,” என்று தமக்கு உபநயனம் செய்வித்த சிவவேதியர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிவவேதியர்கள் சிவனையே வேள்வித்தலைவனாகக் கொண்டு வேள்வி இயற்றவேண்டும் என்கின்றார். சிவவேதிய அந்தணர்கள் பிறருக்குத் தங்களால் இயன்றதை ஈதல் கடமையாகும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். பணமாகவோ பொருளாகவோ கொடுக்க இயலாவிடில் உழப்பாகவோ அல்லது அறிவு ஈதலாகவோ கொடுக்கலாம் என்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் பிறருக்கு ஈதலின் பயனை நினைப்பித்து ஈதலைச் செய்ய துணைநிற்பதும் அந்தணர் கடமை என்கின்றார் திருமூலர்.

இறைபணிக்கு உரியவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் சிவவேதியர்கள் அல்லது அந்தணர்கள் திருமூலர் குறிப்பிடுவது போன்று தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்வது இன்றியமையாதது. திருக்கோயில்களைச் சமயம் கற்கும் அறிவுநிலையங்களாக மாற்றுவதில் இவர்கள் நினைத்தால் பெறும் பங்காற்றலாம். திருக்கோயில்களில் நீண்ட நேரம் வேள்விகளையும் திருமஞ்சனங்களையும் பூசனைகளையும் இயற்றுவதோடு நில்லாது மக்கள் நடுவே சமயத்தைக் கொண்டு சேர்க்கும் ஆக்ககரப் பணிகளிலும் ஈடுபடுதல் வேண்டும். சமயத்தில் மக்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் களைய வேண்டும். முறையற்ற வழிபாடுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் ஒருபோதும் துணைபோகக்கூடாது. அவர்களே உண்மையான அந்தணர்கள் என்பது திருமூலரின் கருத்து. அந்தண்மை உடைய அந்தணர்கள், உண்மையான அந்தணர்களாக இருந்து நம் சமயம் தழைக்கத் தோள்கொடுப்பார்களாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!