131. ஆசான் பூசனை

1424

131. ஆசான் பூசனை

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டுநெறியில் ஆசான் பூசனை இன்றியமையாததாகும். ஆசான் பூசனையைக் குருவழிபாடு என்றும் சிவலிங்கப் பூசனையை இலிங்க வழிபாடு என்றும் அடியார் பூசனையைச் சங்கம வழிபாடு என்றும் குறிப்பிடுவர். சிவலிங்கப் பூசனைக்குப் பெருந்துணையாவது அறிவே என்பதனால் அவ்வறிவினை வழங்குகின்ற ஆசானைச் சிவலிங்கப் பூசனைக்கு முன் எண்ணுதல் இன்றியமையாதது ஆகின்றது. இதனாலேயே சிவபெருமானிடத்தில் கைலாயத்தில் சிவ அறிவு பெற்றவர்கள் பெருமான் ஆசான் வடிவில் இருந்து போதிக்கப் பெற்றிருக்கின்றனர். இவ்வாசான் வடிவினை உணர்த்துவதே ஆலஅமர் செல்வர், தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) எனப்படும் திருவடிவாகும். சிவபூசனை அல்லது சிவலிங்கப்பூசனை செய்வதற்கு முன்பு ஆசானை நினைதல் அல்லது குருபூசனை எனப்படும் ஆசான்பூசனை செய்வது முதன்மையானது என்கின்றார் திருமூலர்.

திருக்கைலாயத்தில் ஆல்அமர் செல்வர் வடிவில் பெருமானிடத்தில் சிவ ஆகமங்களைக் கேட்ட நந்திஎம்பெருமான், திருமூலருக்கு ஆசானாக இருந்து பாடம் புகட்டியமையால் நந்திஎம்பெருமானைத் தன் ஆசானாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

“நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்,
நந்தி அருளாலே மூலனை நாடினோம்,
நந்தி அருளாவது என்செய்யும் நாட்டினில்,
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே”

என்று நந்திஎம்பெருமானைத் தன் ஆசானாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானே நந்திஎம்பெருமானாக இருந்து தமக்குச் சிவ அறிவினைக் கற்பித்ததாகத் திருமூலர் குறிப்பிடுவார்.

சிவபெருமான், நந்திப்பெருமானாய் ஆசான் வடிவில் நின்று உணர்த்தவே அந்நந்திப்பெருமானின் திருவடிகளைப் பற்றியே, உயிர்கள் பின்பற்றி ஒழுகுதற்குரிய இறை நூல், அவற்றின் வழி இறைவனை வழிபடும் வழிபாட்டு முறை, அகக்கோயில்களாகி நிலைக்களங்கள் (ஆதாரங்கள்), முப்பத்தாறு மெய்கள், அம்மெய்களைக் கடந்து அவை அனைத்திற்கும் மேலே செல்கின்ற தூ நிலை ஆகியவற்றை உணர்ந்து உலகிற்கு மூவாயிரம் பாடல்கள் வழி உரைத்தேன் என்பதனை,

“ஆகின்ற நந்தி அடித்தாமரை பற்றிப்,
போகின்ற உபதேசம் பூசிக்கும் பூசையும்,
ஆகின்ற ஆதாரம் ஆறுஆறு அதனின்மேல்,
போகின்ற பொற்பையும் போற்றுகின் றேனே”

என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். இதன்வழி குருவருளின் சிறப்பினையும் குருவருளைப் பெற்றோர் அவரை நினைந்த பின்பே சிவலிங்கப் பூசனை இயற்றல் வேண்டும் என்பதனையும் குறிப்பிடுகின்றார்.

உயிர் முற்றப் பெற்றத் திருமூலர் போன்ற உயர்ந்த உயிர்களுக்கு இறைவனே நந்திப்பெருமானாக, ஆசானாகத் தோன்றி அருள்புரிகின்றான். மணிவாசகருக்கு இறைவனே திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலின் கீழ் ஆசான் வடிவாக இருந்து போதித்து அருளினான். இதனாலேயே மணிவாசகர் அவ்வாசான் வடிவாகவே இறைவனை உத்தரகோசமங்கைத் திருக்கோயில் சிவலிங்கத்தில் கண்டு வழிபட்டார். இதனை, “உத்தரகோசமங்கை தன்னில் வித்தக வேடம் காட்டியும்” என்றும் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க” என்றும் மணிவாசகர் குறிப்பிடுவார்.

திருஞானசம்பந்தருக்குப் பெருமானே அம்மை அப்பராய்த் தோன்றி, ஞானப்பால் ஊட்டி ஆட்கொண்டமையினாலும் திருநாவுக்கரசு அடிகளுக்குத் திருநல்லூரில் பெருமானே அவர்தம் சென்னியில் திருவடி சூட்டி அருளியமையாலும் சுந்தரருக்குப் பெருமானே வயோதிக வடிவில் திருவதிகைக்கெடிலத்தில் திருவடி சூட்டி அருளினமையாலும் இறைவனையே தங்கள் ஆசானாகவும் இறைவனாகவும் வழிபட்டனர். தாயுமானவ அடிகளுக்கு இறைவனே மௌனதேசிக குரு வடிவில் தோன்றியமையினாலும் அருணகிரியாருக்கு முருகனே ஆசான் வடிவில் தோன்றியமையினாலும் அவ்வடிவிலேயே தங்கள் ஆசானையும் இறைவனையும் பூசித்தனர்.

பூசனைக்குரிய ஆசானைப் பற்றித் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருவருளை மிகப் பெற்றவர் நந்திப் பெருமான். அவர் சிவனோடு மாறுபட்டுச் சிவனை அடைய இயலாது தடையாய் நிற்கும் செயலையே செய்கின்ற உயிர்களைப் பற்றி இருக்கின்ற ஆணவ இருளைப் போக்குகின்ற பகலவனாய் இருப்பார் என்கின்றார். இத்தகையோரை வானவர்களும் முனிவர்களும் நல் அடியார்களும் எப்பொழுதும் மனதில் வைத்து எண்ணும் பெற்றியினைப் பெற்றிருப்பர் என்பதனை,

“பெருந்தன்மை நந்தி பிணங்குஇருள் நேமி,
இரும்தன்மையாகும் என் நெஞ்சிடம் கொள்ள,
வரும் தந்மையாளனை வானவர் தேவர்,
தரும் தன்மையாளனைத் தாங்கி நின்றாரே”

என்கின்றார்.

செவ்வியுறாத அல்லது உயிர் முதிர்ச்சிப் பெறாத நம்மைப் போன்றோருக்கு இறைவனின் திருவருளைப் பெற்ற நாயன்மார்களே ஆசான்களாக ஆகும் நிலையில் நிற்பவர். இறைவனைக் கண்டும் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றும் சிவ அறிவினை இறைவனால் உணர்த்தப் பெற்ற திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் போன்ற நால்வரும், இறைவனைக் கண்ட நாயன்மார்களுமே நாம் சிவலிங்கப் பூசனை செய்வதற்கு முன்னாக எண்ணத் தக்க ஆசான்கள் ஆகும். தங்களை ஒருபோதும் கடவுள் என்று கருதாது, கடவுளை அடைதற்குரிய வழியினையும் அவ்வழியினைப் பின்பற்றிக் கடவுளை அடைந்தும் காட்டிய இவர்களே ஆசான் பூசனைக்கு உரியவர்கள்.


தங்களைப் பற்றியுள்ள ஆணவ மல இருளைப் போக்கிக் கொண்டு, மற்ற உயிர்கள் எவ்வாறு ஆணவ மல இருளைப் போக்கிக் கொள்ளலாம் என்பதற்கு வழிகாட்டியாய் வாழ்ந்து, இறைவனின் திருவடியையே தங்களின் உயிர்த்துணையாகக் கொண்டு, பிறவியை அறுப்பதற்குத் திருக்கோயில்தோறும் சென்று அப்பெருமானைப் பாடிப்பரவி, திருத்தொண்டுகள் செய்து, தன்னலம் அற்று, பற்றுக்களை விட்டு, இறைவனை அடைவதனையே குறிக்கோளாகக் கொண்ட சீவன் முத்தர்கள் அல்லது உயிர் முற்றப் பெற்றவர்களே சிவலிங்கப் பூசனைக்கு முன்பு எண்ணப்பட வேண்டிய ஆசான்கள் ஆகும். இதனை ஒட்டியே திருக்கோயில் திருச்சுற்றுக்களிலும் திருக்கோபுரங்களிலும் நால்வர், சந்தானக் குரவர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவடிவங்கள் வைக்கப்பெற்று இருக்கின்றன. இது இறைவனை வழிபடும் முன்பும் சிவலிங்கப் பூசனை இயற்றுவதற்கு முன்பும் இவ்வாசான்களை எண்ண வேண்டும் என்பதற்காகும்.

இத்தகைய ஆசான்களை எண்ணும் தோறும் நற்பண்புகளும் நல்லுணர்வும் இறை அறிவும் ஏற்படுவதனால்தான் இப்பெருமக்களை ஆசான்களாக வைத்துப் போற்றினர். இப்பெருமக்களின் நல்லுரைகளே நம் போன்றோருக்குச் சிவ அறிவினை விளைவிப்பதற்கு ஏதுவாக உள்ளன. இவர்கள் இறைவனைப் போற்றிப் பாடிய பாடல்களே நம்மிடத்தே இறை அன்பையும் இறை அறிவையும் இறை உணர்வையும் அரும்பச் செய்வதனால், ‘நால்வர் குருபூசை’, ‘சந்தானக் குரவர் குருபூசை’, ‘திருமூலர் குருபூசை’ என்று சிறப்புப் பூசனைகள் இயற்றுகின்றனர். தவிர, ஒவ்வொரு நாளும் சிவ பூசனை இயற்றும் முன், ஆசான்களை எண்ணுவதற்காக, உமாபதிசிவம் அருளிய, “பூழியர்கோன் வெப்பு ஒழித்த புகலியர்கோன் கழல் போற்றி..” எனும் நால்வர் துதியினை ஓதுவர்.

தான் ஒருபோதும் கடவுள் இல்லை என்றும் அதனைத் தன் மாணாக்கர்களுக்கு உணர்த்தியும், உலகப் பற்றை நீங்குதற்கு வழிகாட்டியும், இறைவனிடத்தில் அன்பைப் பெருக்கி அதன்வழி சிவ அறிவினைப் பெருக்க உதவியும், பிறவி அறுவதற்கு வழிகாட்டியும் நிற்கும் உண்மை ஆசான்களைச் சிவலிங்க வழிபாட்டிற்கு முன்பு ஆசான் பூசனையில் எண்ணிப் பேரின்பப் பெருவாழ்வினை எய்துவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!