97. அகத்தவம் எட்டில் தொகை நிலை

1051

செந்தமிழ்ச் சிவ ஆகம நூலான திருமந்திரத்தை அருளிய திருமூலர், சிவச் செறிவின் எட்டுப்படி நிலைகளில் ஐந்தாவது படிநிலையாகக் குறிப்பிடுவது தொகை நிலை என்பதாகும். வட மொழியில் இதனைப் பிரத்தியாகாரம் என்று குறிப்பிடுவர். தொகை நிலையில் மனதை, கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற பொறிகளின் வழியே போக விடாது தடுத்து, உள்முகமாக உடம்பின் உள்ளே உள்ள ஆறு ஆதாரங்கள் அல்லது நிலைக்களங்களின் வழி செலுத்துதலைத் தொகை நிலை என்று குறிப்பிடுவர். புறத்தே அல்லது வெளியே அலைபாய விரும்பும் மனத்தை அகமுகமாக அல்லது உள்முகமாக மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்று வட மொழியில் குறிக்கப்படும் ஆறு நிலைக் களங்களின் வழி செலுத்தப் பழகுதலே தொகை நிலைப் பயிற்சி என்கின்றனர். இவ்வாறு மனதை அகநோக்கிலே ஆதாரங்களை அல்லது நிலைக்களங்களைக் காணப்பழக்கினால், அந்த அந்த நிலைக் களங்களிலே மனம் நின்றுப் பல்வேறு இன்பங்களை அடையும். இறுதியில் வெளியில் எங்கு தேடியும் காண இயலாத சிவனை இந்நிலைக் களங்களிலே கண்டு அமைதியுற்று இன்புற்று இருக்கும் பேறு கிட்டும் என்பதனைக், “கண்டு கண்டுள்ளே கருத்துற வாங்கிடிற், கொண்டு கொண்டுள்ளேகுணம் பல காணலாம், பண்டு உகத்து எங்கும் பழமறை தேடியை, இன்று கண்டு இங்கேஇருக்கலும் ஆமே” என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.

கொப்பூழ் என்ற உந்திக்குப் பன்னிரண்டு விரல் அளவின் கீழ் உள்ள முதல் நிலைக்களமாகிய மூலாதாரத்தில் மனதைச் செலுத்தி நிலை நிறுத்தும் முறையை அகத் தவத்தின் வழி செய்யலாம் என்கின்றார் திருமூலர். அந்த நுட்ப முறையில் வெற்றி கண்டவரைச் சிவபெருமான் தானே வந்து, தன்பால் வர அழைத்து, அவர்தம் உள்ளத்திலே வீற்றிருப்பான் என்கிறார். மூலாதாரத்தை அடிநிலை நிலைக்களம் என்றும் குறிப்பிடுவர். இது உடலின் கழிப்புக்களை வெளியாக்கும் எருவாய்க்கு இரண்டு விரல் அளவில் மேலாகவும் கருவுருவாக்கும் கருவாய்க்கு இரண்டு விரல் அளவில் கீழாகவும் இருக்கின்றது. இந்நிலைக் களத்தையே குண்டலினியின் நிலைக் களம் என்று கூறுவர். இந்நிலைக் களத்திற்கு வட்டம் வடிவமாகக் கொள்ளப்படுகிறது. இந்நிலைக் களத்தில் உள்ள ஆற்றலைக் குண்டலினி ஆற்றல் என்கின்றனர். குண்டலினி ஆற்றல் எனப்படுவது அனைத்து மந்திரங்களுக்கும் மூலமாக இருக்கின்ற ஓங்கார ஒலியின் ஆற்றலாகும். இந்த ஓங்கார எழுத்து ஓம் எனப்படுகின்றது. குண்டலினி ஆற்றல் பாம்பு வடிவில் மூலாதாரத்தில் தலையும் புருவ நடுவில் வாலும் என தலை கீழாக நீண்டு நம்முள்ளே உறங்கிக் கொண்டிருக்கின்றது என்று செறிவு நெறி வல்லவர் குறிப்பிடுவர்.

ஓங்கார மந்திரம், அதற்கு உரிய எழுத்து, அதற்கு உரிய அடையாளம், அதற்கு உரிய இறைவனின் திரு உரு என்று இடைவிடாது பயின்று மூலாதாரத்தில் உள்ள தீயைப் பிராணாயமம் என்ற வளி நிலையாலும் பிரத்தியாகாரம் என்ற மன செலுத்துதலினாலும் மூட்டினால் பாம்பு வடிவில் தலைக் கீழாக உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி, ஆற்றல் கிளர்ந்து எழும் அல்லது கண் விழிக்கும் என்று குறிப்பிடுவர். மனமானது புலன்கள் வழியே சென்று, உலகப் பொருள்கள் மீது பற்றுக் கொண்டு, இறைவனைப் பற்றாது மெய்ப்பொருள் உணர்வு பெறாது இருக்கும் வரையில் இக்குண்டலினி ஆற்றல் உறங்கிக் கொண்டிருக்கும் என்பர். மெய்ப்பொருள் உணர்வு அகத்தவ முயற்சியினால் பெறப்படும் போது அது வீறு பெற்று மேல் நோக்கித் திரும்பும் என்பர். இக்குண்டலினி ஆற்றலை விழிப்படையச் செய்வதற்கு மனதை ஒன்றச் செய்து மூலாதாரத்திற்குச் செலுத்தி அங்கு அதனை நிலை நிறுத்துவது இன்றியமையாததாகும் என்பர்.

மனதை மூலாதாரத்தில் நிறுத்திப் பயின்ற பின் இரண்டாவது நிலைக் களமாகிய சுவாதிட்டானத்தில் நிறுத்தப் படுவதும் இந்த தொகை நிலைப் படிநிலையில் வலியுறுத்தப்படுகிறது. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி ஆற்றலில் இருந்து வெளிப்படும் சிவந்த சுடர் ஒன்று உண்டு. இது ஆறு ஆதாரங்களிலும் பரவி நிற்கின்றது. எனினும் இச்சுடருக்கு உரிய சிறப்பு இடமாகச் சுவாதிட்டானம் குறிப்பிடப்படுகின்றது. சுவாதிட்டானம் என்றால், “தனது இடம்” என்பது பொருள். இச்சுவாதிட்டானத்தின் நிலைக் களம் உந்திக்கு நான்கு விரல் அளவில் கீழ் உள்ளது என்பார் திருமூலர். குண்டலினியில் இருந்து வெளிப்படும் செஞ்சுடரைச் சுவாதிட்டானத்தில் மனம் காணும் ஆற்றலைப் பெறுமாயின் அதுவே பேரின்பம் அடைவதற்கான அறிகுறி என்று கொண்டு அவ்வொளியை மனதால் உற்று நோக்குதலைக் குறியாகக் கொள்ளுங்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

மூன்றாவது நிலைக்களமாவது மணிபூரகம் எனப்படும் உந்தித்தானம். இந்நிலைக் களத்தில் மனதைச் செலுத்தி நிறுத்துதல் என்பது வளி நிலையைக் கட்டுப்படுத்துதற்குப் பெருந்துணையாகும் என்கிறார் திருமூலர். உள்ளே இழுக்கின்ற உயிர்ப்பு வளியை வெளிவிடாமல் உந்தித் தானத்தில் இருத்தி, அது எருவாய் வழியாக வெளியாகி விடாமல், மூலாதாரத்தின் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து அம்முதுகெலும்பின் உள்ளே செல்லும்படி அவ்வுயிர்ப்பு வளியைச் செலுத்தினால், அது சுழுமுனை நாடி வழியாகச் சிறிது சிறிதாக அவ்வழியே அண்ணத்தில் உள்ள துளையை அடையும். அதனை வாய் வழி வராது தடுத்தால், உச்சியை அடைந்து மூக்கு வழியாக வெளிவரும். இந்த மாற்று வழியால் உடலுக்குப் பல நன்மைகள் உண்டாலும் என்பர். தவிர தொழிற்படாமலே உறங்கிக் கொண்டிருக்கின்ற அறிவுக் கருவிகள் பலவும் எழுச்சியுற்றுத் தொழிற்படும் என்பர். இதனால் அறிவு சிறந்து பல உண்மைகள் எளிதிற் புலனாகும் என்பர். இதனையே திருஞானசம்பந்தர், “ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர், ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து, ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இட, ரான கெடுப்பன அஞ்செழுத்துமே” என்று குறிப்பிட்டார் என்பர்.

சுழுமுனை வழியாக உயிர்ப்பு வளியைச் செலுத்தி உச்சியிலிருந்து மூக்கு வழியாக மீளச் செய்கின்ற சிவச்செறிவாளர்கள், தங்கள் உடலை விட்டுப் போய்விடக் கருதுவார்களாயின், உச்சியை அடைந்த வளி மூக்கு வழி வெளியாக விடாமல் மூக்கைப் பிடிப்பர் என்றும் அதனால் அவ்வளி உச்சியில் மென்மையாக மூடப்பட்டிருக்கும் பெருந்துளையைத் (பிரமரந்திரத்தை) திறந்து கொண்டு வெளியேறி விடும். அதனுடன் உடல் செயலற்று வீழ்ந்து விடும் என்பர். இது பற்றற்ற நிலையில் வீடுபேறு விருப்பினால் இறை நினைவுடன் செய்யப்படுதலினால் பாவம் ஆதல் இல்லை என்று நூல்கள் குறிப்பிடுவதாய்க் குறிப்பிடுவர். இதனையே பெருமிழலைக் குறும்ப நாயனார் இயற்றினார் என்பார் தெய்வச் சேக்கிழார். இதனையே கபால முத்தி என்றும் குறிப்பிடுவர்.

நான்காவது ஆதாரம் அல்லது நிலைக்களமாகக் குறிப்பிடப்படுவது அனாகதம் என்பதாகும். அனாகதம் என்றால் வரவு அற்றது என்று பொருள்படும் என்பர். மூக்குக்குக் கீழ் பன்னிரண்டு விரல் அளவில் உள்ள இருதையத் தானமே அனாகதம் எனப்படுகின்றது. இவ்விருதையைத் தானத்தில் மந்திரம், எழுத்து, அடையாளம், திரு உரு என்பதனைக் கொண்டு மனதைச் செலுத்தி வெற்றி பெற இயலுமானால் அட்டமா சித்திகள் என்று குறுப்பிடப்பெறும் எட்டு அரிய வெற்றிகளைத் தரும் அரிய ஆற்றலும் உடம்பிற்கு அழிவு இல்லா நிலையும் ஏற்படும் என்று திருமூலர் குடிப்பிடுகின்றார். வெறும் அட்டமா சித்திகளைக் குறித்து இயற்றப்படும் யோகம், “ஹட யோக” என்றும் உடம்பு நரை, திரை, மூப்பு இன்றி நெடுங்காலம் வாழுதலைக் குறித்து இயற்றப்படும் யோகம், “ராஜ யோகம்” எனவும் சொல்லப்படும் என்று மகாவித்துவான் அருணைவடிவேலனார் குறிப்பிடுவார். சிவச் செறிவு அல்லாத பிற செறிவுகளின் உயர்ந்த நிலை இதுவே ஆகும். சிவச்செறிவு குறிப்பிடும் மெய்யறிவினையும் சிவப்பரம் பொருளையும் பிற செறிவுநெறியாளர் அடையமாட்டார் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இருதயத்தானத்திற்கு மேல் உள்ள ஐந்தாவது நிலைக் களம் விசுத்தி எனப்படும் கண்டத்தானம் ஆகும். கழுத்து, மிடறு எனப்படும் இந்நிலைக் களத்தில் மனதை இருத்திச் சுவாதிட்டானத்தில் காணப்படும் செஞ்சுடரை அகக் கண்ணால் இங்கு கண்டால் பேரின்பம் பெறுவதற்கு வாயில் ஏற்பட்டு இறை அறிவு நெறிக்குத் தலைப்படுதல் ஏற்படும் என்கின்றார் திருமூலர். புருவ நடுவாகிய ஆறாவது நிலைக் களம் ஆக்ஞை அல்லது ஆஞ்ஞை எனப்படுகிறது. அறிவிற்கு நிலைக் களம் என்பது இதன் பொருள். சுவாதிட்டானத்தில் நின்று வெளிப்படும் பேரொளியை புருவ நடுவில் மனத்தால் காண வல்லவர்கட்கு பிறப்பை நீக்குகின்ற அறிவு வடிவாகிய இறைவனை உணரும் அறிவு ஏற்படும் என்கின்றார் திருமூலர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!