130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்
எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடையவர். பகுத்து ஆராயும் மாந்தர்க்கே ஏன் இறைவனை வழிபட வேண்டும், ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும் உண்டு. தனக்கு உடலையும் தான் வாழுதற்கு இடமாகிய உலகையும் அவ்வுலகில் உயிரும் உடலும் குறிப்பிட்ட நாள் வரை நிலைபெறுவதற்குத் தேவையான ஐந்து பூதங்களையும் நுகர்ச்சிப் பொருள்களையும் ஆக்கித் தந்த வால் அறிவனாகிய இறைவனுக்கு நன்றி பாராட்டுதற்குச் சிறந்த வாய்ப்பு மாந்தப் பிறவியிலேயே கிட்டுகின்றது என்று சித்தாந்த மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் அருள்வடிவாகத் தோன்றும் சிவலிங்கத் திருமேனிக்கு அன்புடன் பூசனை இயற்றுவது மாந்தப் பிறவியில் கிட்டும் அரிய பேறு என்றும் அவை குறிப்பிடுகின்றன. சித்தாந்த சைவத்தினைத் தங்கள் இறைக் கொள்கையாக ஏற்று, அன்புடன் சிவனை வழிபட வேண்டும் என்று எண்ணுகின்ற யாவரும் சிவலிங்கப் பூசனை இயற்றலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
மாந்தப் பிறவியை இறைவன் நமக்கு வகுத்துக் கொடுத்தது அவனை, மனம், வாக்கு, காயம் என்பவற்றால், பசுவினிடத்துக் கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு திருமஞ்சனம் ஆட்டி அவனுக்குப் பூசனை செய்து, நம் அன்பைப் பெருக்கி, நம் உயிரை மேம்படுத்திக் கொள்வதற்கே என்கின்றது சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல். இதனாலேயே வான் உலகத்தில் வாழும் வான் உலகவரும் கூட நிலவுலகிற்கு வந்து சிவபெருமானை அர்ச்சித்துப் பூசனை இயற்றுவர் என்றும் சிவபூசனை இயற்றுவதற்கு உரிய உடலோடு வாழும் மாந்தரில் பலர் இதனை அறியாது வெறுமனே வாழ்கின்றனர் என்றும் மேலும் அது குறிப்பிடுகின்றது.
சிவலிங்கத்தையே அல்லது சிவனின் இதர திருவடிவங்களையே இல்லங்களில் வைத்துப் பூசனை இயற்றினால் தீங்கு ஏற்படும் என்ற அறியாமை சித்தாந்தச் சைவர்களிடையே இன்று பரவலாக வேர் ஊன்றிக் கிடக்கின்றது. சிலர் தங்கள் சுயநலம் கருதி, உண்மைக்குப் புறம்பாக அள்ளி விட்டப் புழுகுகள் இன்றளவும் சைவர்களிடையே விரவிக் கிடக்கின்றன. சிவலிங்க வழிபாடும் பூசனையும் சைவர்கள் அனைவரும் இயற்ற வேண்டியது என்பதனை அறியாமையினாலும் தங்களுக்குத் தகுதி இல்லை என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மையினாலும் பலர் சிவபெருமானின் நிழற்படங்களை மட்டும் வைத்து வழிபடும் வழக்கினைக் கொண்டுள்ளனர். சிவலிங்கத்தை வைத்து வழிபட ஆர்வம் இருந்தும் குற்றம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சி ஏங்கி செய்வது அறியாது நிற்கின்றனர் பலர்.
சிவலிங்கப் பூசனை இயற்ற வேண்டுமானால் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுவது போன்று தீக்கை முறையாகப் பெற வேண்டும் என்று எண்ணி அஞ்சுகின்றனர் சிலர். சிலர் அதனை வலியுறுத்தியும் வருகின்றனர். திருக்கோயில்களில் உள்ள சிவலிங்கத் திருவடிவங்களையும் பிற வடிவங்களையும் தீண்டிப் பூசனை இயற்றும் சைவ ஆசான்களுக்கு இது வலியுறுத்தப் பெற்றிருக்கின்றது. முப்போதும் திருமேனி தீண்டுபவர்களான இவர்கள் முறையாக சைவ சமயத் தீக்கைகள் பெற்ற பின்பே சிவலிங்கத்திற்குப் பூசனை இயற்றும் தகுதியினைப் பெறுகின்றார்கள். இல்லப் பூசனைகளையும் தனி மாந்தப் பூசனைகளையும் (ஆன்மார்த்தப் பூசனை) இயற்றுகின்றவர்களும் தீக்கைப் பெற்றுச் சிவலிங்கப் பூசனை இயற்றினால் சிறப்பு எனினும் சிவனிடத்தே அன்பு வளர்வதற்கு அடிப்படையாக விளங்கும் சிவலிங்கப் பூசனையை இயற்றுவதற்கு இவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்கிறார் திருமூலர்.
திருக்கோயில்களிலே, கருவறையிலே மூலவடிவமாக வைத்து வழிபடப்படும் சிவலிங்கத் திருவடிவைச் சிவஆகம முறைப்படி நிறுவி, எழுந்தருளச் செய்து, திருமஞ்சனம் முதலானவும் பதினாறு பணிவிடைகளும் முறையாக இயற்றப்பட வேண்டும் என்று சிவப்பூசனை நூல்களும் பத்ததிகளும் குறிப்பிடுகின்றன. இவற்றோடு சிவப்பூசக ஆசான்கள், மனம், மொழி, மெய்களால் பொருந்தியும் பூசனைகளை அன்போடு இயற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு அன்றி சென்ற பிறவிகளிலே இயற்றி வழிபாட்டின் பயனால் அன்புப் பெருகி இப்பிறவியிலே அப்பெருமானைப் பூசனை செய்து வழிபட வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் இல்லங்கள் தோறும் ஆற்றக்கூடி சிறந்த தவம் சிவலிங்கப் பூசனை என்கின்றார் திருமூலர். ஈசன் பால் அன்புடை எவரும் இல்லத்திலோ அல்லது காடுகளிலோ அல்லது பிற இடங்களிலோ சிவலிங்கத் திருவடிவினை நிறுவி வழிபடலாம் என்கின்றார் திருமூலர்.
அன்பின் மிகுதியால் சிவலிங்கப் பூசனை இயற்ற விரும்பும் இவர்களுக்கு வேண்டுவது பூவும், நீரும், போற்றிப் பாடல்களுமே என்கின்றார் திருமூலர். சிவனை அடைவதற்குச் செய்ய வேண்டிய தவமாகிய இதனைத் தீக்கை பெறாமலேயே இயற்றலாம் என்கின்றார் திருமூலர். எவ்விடத்தும் எளிதில் கிடைக்கும் பூவையும் நீரையும் மட்டுமே வழிபாட்டிற்குத் துணையான பொருள்களாகக் கொண்டு, போற்றிப் பாடல்களையே அவனுக்குத் திருவமுதாகப் படைத்து, அன்போடு அவனை எளிமையாக வழிபடலாம் என்கின்றார் திருமூலர். எண் அற்ற நல்ல ஊழ் இல்லாத பலர் இந்த எளி தவத்தைச் செய்யாது, வீணே பொழுதினைப் போக்கிப் பிறவி எனும் சுழற்சியில் மறுபடியும் மறுபடியும் வீழ்கின்றனர் என்பதனை,
“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு,
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்,
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை,
நண் அறியாமல் நழுவு கின்றார்களே”
என்று குறிப்பிடுகின்றார்.
மாந்தர்களில் அனைவருக்கும் உடல் உறுப்புக்களையும் அறிவையும் ஆற்றலையும் பெருமான் கொடுத்திருக்கின்றான். இறைவன் பால் அன்பு இல்லாமையும், தன்னம்பிக்கை அற்றலும், தன்மான உணர்வும் அற்றலும், சோம்பலுமே இன்று சிவலிங்கப் பூசனை குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆற்றுவதற்கு உரியது போன்ற சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. தொழிலோ, குலமோ, சிவலிங்கப் பூசனைக்குத் தடை இல்லை என்பதனை, வேடுவரான கண்ணப்பர், மீனவரான அதிபத்தர், வண்ணானாகிய திருக்குறிப்புத்தொண்டர், குயவராகிய திருநீலகண்டர், வேளாளராகிய இளையான் குடிமாறனார் போன்றோரின் வரலாற்றின் வழி தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் நிறுவுகின்றார்.
சிவலிங்க வழிபாடு இல்லங்கள் தோறும் இயற்றுவதற்கு வேண்டுவது உண்மையான அன்புதான். சாத்திரங்கள், கோத்திரங்கள், குலங்கள் என்பன முதன்மையானவை அல்ல என்பதனைச்,
“சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள்,
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்,
பாத்திரம் சிவம் என்று பணிந்திரேல்,
மாத்திரைக்குள் அருளும் மால் பேறரே”
என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். செந்தமிழர், தமிழ் வேதியர், தமிழ்ப் புலவர், கலை வல்லுநர், நல்லொழுக்கம் மிக்கவர், பண்பாட்டில் சிறந்தவர், நல்ல துறவிகள், செவ்வியுடை பெரியவர்கள், சிவப்பூசனை செய்கின்ற ஊராகத் திருவீழிமிழலை அமைந்திருக்கின்றது என்று திருஞானசம்பந்தரும் (திரு:3:20:பாடல்:4) குறிப்பிடுகின்றார்.
இல்லத் தலைவர்களும் குடும்பப் பெரியவர்களும் யாவரும் சிவலிங்கப் பூசனையை இயற்றலாம் என்றும் அதற்கு முதன்மையானது அன்பே என்றும் திருமூலர் குறிப்பிடுவதனைத் தெளிதல் வேண்டும். அவர் அவர் சுயமாய் இறைவனை நம்பிக்கையோடு பூசனை இயற்றி வழிபடும் நிலை ஏற்படவேண்டும். தமிழ்ச் சைவர்களுக்கே உரிய நம் பண்டை சிவலிங்க வழிபாட்டினையும் சிவலிங்கப் பூசனையையும் இல்லங்கள் தோறும் அஞ்சுதல் இன்றி இயற்ற வேண்டும்! உண்மைச் சைவர்களாக வாழ வேண்டும்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!