1. தமிழர் சமயம்

1563

“அருண்மொழித் தேவ சிந்தாமணியே, அருந்தமிழ் மணிதரும் தூமணியே” என்று தமிழ்க்கடல் ராய.சொச்கலிங்கனாரால் போற்றப் பெறும் தெய்வச் சேக்கிழார், செந்தமிழ் நாட்டில் தோன்றிய சிவநெறியே தமிழர் நெறி அல்லது தமிழர் சமயம், தமிழர் சமயமான சிவநெறியினைச் சித்தாந்த சைவம் என்று குறிப்பிடுவார். “தமிழர் தம் சிந்தனைச் செழுமையில் தோன்றியது சைவ சித்தாந்தம்” என்பது டாக்டர் ஜி.யு.போப் என்ற மேல்நாட்டு அறிஞர் குறிப்பிடுகின்றார். இச்சிவ நெறி தமிழ் மண்ணிலேயே தோன்றியது தமிழர் தம் அறிவு சால்புக்கும் இறையன்பிற்கும் சிறந்த சான்று.

பழந்தமிழர் இறையருளை முன் இருத்தி, பகுத்து ஆய்ந்து, சிந்தனையின் முடிவான முடிவாக உலகிற்கு உணர்த்தியதே தமிழர் சமயமான சித்தாந்த சைவம். இச்செழுந்தமிழ் நெறியினை, சிவநெறி, திருநெறி, குருநெறி. அருள்நெறி, பெருநெறி, நன்னெறி,செந்நெறி, முத்திநெறி, ஒளிநெறி, ஒருநெறி, திருநெறிய தெய்வத் தமிழ்நெறி, உண்மைநெறி, ஆகமநெறி என்றெல்லாம் அருளாளர்கர் குறிப்பிடுகின்றனர். “சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி, உய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு, தெய்வச் சிவ நெறி சன்மாக்கம்சேர்ந்துய்ய, வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே” என்று திருமூலர் சிவநெறியைக் குறிப்பிடுகின்றார். தமிழ் நெறியாகிய சிவ நெறியால் வீடு பேறு அடையலாம் என்பதனைத், “திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று தமது முதல் திருப்பதிகத்திலேயே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதனைத்தான் தெய்வச் சேக்கிழாரும் தமிழர் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தின் உயிர் நாடியாகக் கொண்டு செல்கின்றார். “திரு நெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திருமின்” என்று அருட்பிரகாச வள்ளளாரும் இதனையே குறிப்பிட்டார்.

பெரிய புராண முழுமைக்கும் தமிழர் முழுமுதற் பொருளாக, அன்றாட வாழ்வில் வழிபட்டக் கடவுளாக சிவபெருமானையே சேக்கிழார் குறிப்பிடுகின்றார். முருக வழிபாட்டினைக் கண்ணப்ப நாயனார் வரலாற்றில் சிறு குறிப்பாகக் காட்டினும் கண்ணப்பர் தெளிவு பெற்று உய்தி அடைந்தது குடுமித் தேவராகிய சிவபெருமானின் திருவடி நிழலில் என்று தெய்வச் சேக்கிழார் புலப்படுத்துகின்றார். சிறுதொண்டர் வரலாற்றில் வாதாபி விநாயகரைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடினும் அவர் உய்தி பெற்றது சிவபெருமான் திருவடி நிழலில்தான் என்றே குறிப்பிடுகின்றார். கொடுங்கோளூரில் சேரமான் பெருமான் நாயனார் கொடுங்கோளூர் பகவதி அம்மனை வழிபடுவதாய்க்  காட்டினும் கூத்தப்பிரானை நாளும் பூசனை செய்து உய்தி பெற்றதாய்க் காட்டுகின்றார்.

திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் உமை அம்மையைப் பற்றி குறிப்பிடினும், உமையம்மை ஏகம்பநாதரைப் பூசித்து அறம் வளர்த்தாகக் குறிப்பிடுகின்றார். பெரிய புராணத்தில் காணப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் ஒன்பது தொகை அடியார்களும், சேக்கிழாரும் சிவநெறியின் நடுநாயகமான சிவபெருமானையே முழுமுதலாக வழிபடுவதைக் காட்டுகின்றார். பெரிய புராண தமிழர் மரபில் உமை அம்மையைப் பெருமானின் இடப்பாகமாக வைத்து வழிப்பட்ட மரபையே காணுகின்றோம். உமை அம்மையைத் தனித்து வழிபடும் மரபு தமிழர்மரபு அல்ல! அது சாக்த சமயத்தினரால் பின்னால் திணிக்கப்பட்டிருக்கலாம் என்று பெரிய புராணத்தின் வழி அறியக் கிடக்கின்றது.

 சிவபெருமானை முழுமுதலாகக் கொண்டு வழிபடுவதே தமிழர் மரபு, பண்பாடு! சிவனை வழிப்பட்டால், சிவநெறியைப் பின்பற்றினால், தமிழர் சமயத்தைப் பின்பற்றினால் துன்பம் வந்து சேரும் என்ற மயக்கம் சைவத்திற்குப் புறம்பானவர்கள் திரித்துவிட்ட கயிறு ஆகும். சிவனையே முழுமுதலாகக் கொண்டு வழிபட்டு வந்தால் இறைவனை அடையலாம் என்பதனைத் தமிழர்களுக்கு நம் நாயன்மார்கள் வாழ்ந்தும், அடைந்தும் காட்டியிருக்கின்றார்கள். சிவ நெறி தமிழ் நெறி! அது இறைவனை அடைவிக்கும் அரிய நெறி; செந்நெறி என்பதனைத் தமிழர்கள் உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வதே சிறப்பு என்பதே சேக்கிழாரின் திருவுளக் குறிப்பாகும்.