நாங்கள்

திருச்சிற்றம்பலம்

வணக்கம்.
உலகில் வாழ்கின்ற அனைத்துத் தழிழ் நெஞ்சங்களையும் இணையத்தின் வழி சந்திப்பதில் மகிழ்கின்றேன். மலேசியாவை மையமாகக் கொண்டுள்ள மலேசிய சைவ நற்பணிக் கழகம் தமிழர்களின் அரிய இறைக்கொள்கையான சைவ சமயத்தையும் அவர்களின் தாய்மொழியான தமிழையும் இரு கண்களாக வைத்துப் போற்றுகின்றது. இக்கழகத்தின் வழி உலகெங்கும் உள்ள சைவர்களையும் தமிழர்களையும் ஒன்று திரட்டி ஒருங்கிணைத்துச் சைவத்திற்கும் தமிழுக்கும் பாடுபடுவதே எங்களின் தலையாய குறிக்கோள் ஆகும்.

தமிழரின் தாய்மொழியான தமிழ் வளர, தமிழ்ச் சமயமான சைவம் வளரும். தமிழ்ச்  சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.

தமிழ், சைவக் களஞ்சியங்களான திருக்குறள், திருமுறைகள், மெய்கண்ட நூல்கள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் போன்ற அரிய கருவூலங்களைப் பயன்பாட்டில் கொண்டுவரவும் உறுதி பூண்டுள்ளது. இதனால் சமயச்சொற்பொழிவுகள், குருபூசைகள், சமய வகுப்புகள் போன்றவை ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. இனமானம் காத்து தமிழினம் ஓங்கிட பொருளாதார வழிக்காட்டிக் கருத்தரங்குகள், திருமணப் பயிற்சிகள், தன்முனைப்புக் கருத்தரங்குகள், கல்வி வழிக்காட்டிக் கருத்தரங்குகள், இணையம் வழி தமிழ்க் கல்வி போன்றவையும் கழகத்தால் மேற்கொள்ளப் படுகிறது. தமிழ்ச் சமயத்தைக் காக்கவும், தமிழ் மொழியை உயர்த்தவும் தமிழர் வாழ்வியல் நெறியினை நிலை நிறுத்தவும், தமிழர் இனமானத்தைக் காக்கவும் உலகத் தமிழர்களே எங்களுடன் இணைந்து கொண்டு செயலாற்றத் திரண்டு வாரீர்! உங்கள் சேவையைத் தாரீர்.

தமிழர் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நில்லுவோம்!

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்!

“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

திருமுறைச் செம்மல், சித்தாந்த இரத்தினம், திருமுறைத் தொண்டர்
திரு ந. தர்மலிங்கம் எம்.எ
(தலைவர், மலேசிய சைவ நற்பணிக் கழகம்)