இறைவனை அடையும் வழிகள் – சீலம்

2655

அ. சீலம்

இறைவனிடத்தில் ஒர் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை அல்லது முறைமையைத் தமிழர் சமயமான சைவ சமயம் சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. இவ்வாழ்வியல் நெறிகளைச் சைவ சமயம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று தமிழில் குறிப்பிடும். இதனையே வடமொழியில் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று குறிப்பிடுவர். இறைவனிடத்திலே உறவையும், உணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற குறிப்பினை, “உறவு கோல் நட்டு, உணர்வு கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன் நிற்குமே” என்று திருதாவுக்கரசு சுவாமிகள் குறிப்பிடுவார்.

இச்சாதனங்கள் அல்லது வாழ்வியல் நெறியினைப் பற்றிக் குறிப்பிடும் சைவ சமய மெய்கண்ட நூலான “சிவஞான போதம்” என்ற நூல் “மாலற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்கிறது. அதாவது உள்ளத்தில் பொய்மை இல்லாத சமய ஆசிரியர்களிடத்தும் திருக்கோயிலிலுள்ள இறைவன் திருமேனியிடத்தும் நடமாடும் கோயில்களாக உள்ள பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி வழிபடுவதே உண்மையான வாழ்வியல் நெறி என்று குறிப்பிடுகின்றது. மேற்கூறிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்கின்ற இந்நான்கு வாழ்வியல் நெறிகளே அல்லது அன்பு நெறிகளே நம்மைப் பக்குவப் படுத்தி இறைவனிடத்தே இட்டுச் செல்லும் என்பதை, “விரும்பு நல் சரியை முதல் மெய்ஞானம் நான்கும் அரும்பு, மலர், காய், கனிபோல் அன்றோ பராபரமே” என்று தாயுமான சுவாமிகள் குறிப்பிடுவார். எனவே தமிழிலே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று சொல்லப்படுகின்ற இவ்வன்பு நெறிகளே நம் உயிரையும் உள்ளத்தையும் மொட்டு, பூ, காய், பழம் என்று பக்குவப்படச் செய்து இறைவனிடத்தே கூட்டுவிக்கும் என்று பெறப்படும். தவிர இவையே நம் உயிர் குற்றம் நீங்கி அறிவு பெறும் வாயில்கள் என்பதனை, “கிரியை என மருவும் அவையாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் என்று சிவப்பிரகாசர் எனும் அருளாளர் குறிப்பிடுகிறார்.

இந்நான்கு வாழ்வியல் நெறிகளில் முதல் நெறியாகிய சீலம் அல்லது சரியை, தொண்டு நெறியினைக் குறிப்பிடுகின்றது. தன்னலம் கருதாது உண்மையான அன்போடும், உள்ளத்தூய்மையோடும் இறைவனுக்கும் வன் வாழ்கின்ற உயிர்களுக்கும் நாம் செய்யக் கூடிய நற்செயல்களே நம்மை இறைவனிடத்தே சேர்ப்பிக்கும் என்கிறது. இதுவே நமக்கு இறைவனிடத்தே உறவையும் உணர்வையும் ஏற்படுத்தும் என்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறைவனின் பணியாள் போன்று திருநாவுக்கரசர் சுவாமிகள், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று கூறி அன்பு, தொண்டு இவற்றை மட்டுமே கருத்திற் கொண்டு இறைவனுக்கும், அவன் வாழும் உயிர்களுக்கும் கைமாறு கருதாமல் பணிவிடைகள் செய்வதே சீலம் எனலாம்.

இறைத்தொண்டு

 சீலத்தில் முதலில் இறைவனிடத்திலே உறவும் உணர்வும் ஏற்படுவதற்கு ஒர் உருவத்திருமேனியை வழிபடல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு சிவலிங்கத் திருமேனியையோ, ஆடல் அரசன் என்கின்ற நடராசர் திருமேனியையோ, அம்மை அப்பர் திருக்கோலத்தையோ, முருகரையோ, விநாயகரையோ அல்லது அம்பிகையையோ தெரிவு செய்து உள்ளன்போடு வழிபட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. இறைவனிடத்திலே உறவும் உணர்வும் ஏற்பட வேண்டும் என்பதனால் ஆன்மார்த்த வழிபாடு அல்லது நம் உயிர் ஈடேற்றதிற்கு நமக்குத் தெரிந்த, புரிந்த, அறிந்த மொழியில் எளிமையாக வழிபாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்து. நம் வீட்டு வழிபாட்டில் நாம் விரும்பியவாறு இறைவனைத் தொட்டு, திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபடலாம். அவரவருக்குத் தெரிந்த தம் தாய்மொழியிலேயே வழிபடலாம். தமிழர்கள் தங்கள் தாய்மொழியிலேயே வழிபடலாம். தமிழ் மந்திரங்களை பாடிய திருமுறை ஆசிரியர்கள் நம் தாய்த்தமிழ் மொழியிலேயே இறைவனைப் பாடிப் பரவி தங்கள் உள்ளன்பையும் உறவையும் வளர்த்து இறைவனை அடைந்திருக்கிறார்கள். “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று இறைவன் கேட்டு மகிழ்ந்த அன்னைத் தமிழில் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடினார். இறைவனைத் தாய்த்தமிழில் வழுத்திப் பாடியே திருஞானசம்பந்தர் 27 அற்புதச் செயல்களை  நிகழ்த்தினார். இழந்த கண்ணொளியைத் தீந்தமிழில் அகங்குழைந்து பாடியே சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீண்டும் பெற்றார். எனவே சீலத்தில் ஓர் ஆண்டானுக்கு அடிமை தொண்டு செய்வதைப் போன்று நீரும், பூவும், பாமாலையும் சாற்றி இறைவனை நன்றியினால் கைமாறு கருதாமல் வழிபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தவிர சீலத்தில் இல்லவழிபாட்டிற்கான திருத்தொண்டில் வழிபாட்டு அறையைத் தூய்மை செய்தல், அலங்கரித்தல், கோலமிடுதல், விளக்கேற்றுதல், வழிபாட்டிற்கு வீட்டில் பூச்செடிகள் நடல், மலர் பறித்தல், திருமுறைகளை ஓதுதல், எழுதுதல் , மாலை கட்டுதல், திருநீறு அணிதல், கணிகைமணி (உருத்திராக்கம்) அணிதல், உண்பதன் முன் ‘சிவ-சிவ” என்று கூறுதல், இறைவனை மனத்தில் நினைத்தல், அப்படி நினைப்பதனால் பெறும் சிறு உணர்வைப் பெறல் போன்றவற்றைக் கூறப்பட்டது.

சீலத்தில் அல்லது தொண்டு நெறியில் இல்லவழிபாட்டைத் தவிர இறைவன் உறைகின்ற மற்றொரு இடமான ஆலயத்தில் திருத்தொண்டு செய்தல் பற்றியும் வலியுறுத்தப்படுகிறது. கோயிலைக் கழுவுதல், கூட்டுதல், துடைத்தல், கோலமிடுதல், கோயிலில் குப்பைப் போடாமல் இருத்தல், கோயிற் தூண்களில் குங்குமம், சந்தனம், திருநீறு போன்றவற்றைத் தடவி கோயில் அழகைச் சிதைக்காமல் இருத்தல் போன்ற தொண்டுகளைச் செய்ய வேண்டும் என்கிறது.

திருக்கோயில் வழிபாட்டிற்குப் பூப்பறித்துக் கொடுத்தல், மாலை தொடுத்துக் கொடுத்தல், விளக்கிடுதல்,  நீர் சுமந்து கொடுத்தல், பூந்தோட்டம் அமைத்தல், குளம் வெட்டுதல், சந்தனம் அரைத்துக் கொடுத்தல், ஊதுபத்தி ஏற்றுதல், குங்கிலியம் (சாம்பிராணிப் புகை) புகைத்தல், தோரணம் கட்டுதல், பல்லக்குச் சுமத்தல், இறைவன் திருவுலாவில் குடைப்பிடித்தல், வடம் பிடித்தல், தீவத்தி ஏந்துதல், திருமுறைகள் ஒதுதல், இறையடியார்களுக்கு உணவு சமைக்க உதவுதல், உழவாரப் பணி செய்தல், பழங்கோயில்களைப் புதுப்பித்தல், அன்றாடப் பூசனைகளும், சிறப்புப் பூசனைகளும் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தல், கோயிலுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருதல், பூசனைச் செலவுகளை ஏற்றல், நிதி வழங்குதல், முறையான ஆகம விதிப்படியான கோயில்களைக் கட்டுதல், அவற்றை முறையாகப் பதிவு செய்தல், அன்னதானம் வழங்குதல் போன்றவை ஆலயத் திருத்தொண்டிலே சில.

ஆலயத் திருத்தொண்டினை அழகுற தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடுகின்றார். கணநாதர் வரலாற்றில், “நல்ல நந்தவனப் பணி செய்பவர், நறுந்துணர் மலர் கொய்வோர், பல் பணித்தொடை புனைபவர், கொணர் திருமஞ்சனப் பணிக்குள்ளோர், அல்லும் நண்பகலும் திருஅலகிட்டுத் திருமெழுக்கமைப்போர்கள், எல்லையில் விளக்கெரிப்பவர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர்” என்று பாடுகின்றார். தவிர சீலம் குறிப்பிடும் ஆலயத் திருத்தொண்டு செய்தவர்கள் வரிசையில்  திருநாவுக்கரசர் உழவாரப் பணியும், கண்பார்வையற்ற தண்டியடிகள் குளம் தூர் எடுத்தும், மூர்த்தி நாயனார் இறைவன் திருச்சந்தனக் காப்பிற்கு சந்தனம் அரைத்தும், நமிநந்தியடிகள், கணம்புல்லர் போன்றோர் விளக்கெரித்தும், கலைய நாயனார் குங்கிலியம் புகைத்தும், திருநாளைப் போவார் குளம் அமைத்தும் தோற்கருவிகள் செய்து கொடுத்தும், கோட்செங்கண் சோழன் கோயில் அமைத்தும், செருத்துணை நாயனார் போன்றோர் மலர் தொடுத்தும் சைவ சமய அடியார் வரலாற்றினைக் கூறும் சைவப் பெட்டகமான பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ளனர். இப்படிச் செய்த திருத்தொண்டுகள் அனைத்தையுமே உள்ளன்போடு நன்றி உணர்வினால் கைமாறு கருதாமல் செய்துள்ளனர். இறைவனை ஆண்டானாகவும் தங்களை அடிமையாகவும் எண்ணிச் செய்தார்கள்.

சீலம் கூறும் நெறிகளில் அடியார்களின் வரலாற்றினைக் கேட்டல், திருத்தல சுற்றுலாக்களை மேற்கொள்ளுல், நன்நீர் நிலைகளில் நீராடல், இறைவன் திருவிழாக்களில் கலந்து கொள்ளுதல் போன்றவையும் சுட்டப் பட்டுள்ளன. சீலத்தில் இறைவனுக்கு நன்றியுணர்வோடு அடியவர்கள் தொண்டு செய்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இறைவன் நமக்குச் செய்கின்ற உதவிதான் என்ன என்று சிந்தித்தல் நமக்கு இறைவனிடத்தில் உறவையும் உணர்வையும் ஏற்படுத்தும்.

கருணையே வடிவான இறைவன் கைமாறு கருதாது நமக்கு இவ்வுடம்பு, இவ்வுடம்புக்குள்ளே இருக்கின்ற மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற உட்கருவிகள், உலகங்கள், இவ்வுலகத்தில் நாம் நுகரும் நுகர்ச்சிப் பொருள்களான கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், வீடு, வாசல், பொன், பொருள் இவை அனைத்தையும் தாம் கேளாமலேயே கருணையின் காரணமாகக் கொடுத்திருக்கின்றானாம். இதற்காகவே நாம் நன்றியினால் இறைவனை வழிபடுகின்றோம். இக்கருத்தினை சைவ சமயக் குரவர்கில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் தமது திருவாசகச் சிவபுராணதில் குறிப்பிடுகின்றார்.

இறைவன் கண்ணிமைக்கும் நேரம்கூட நம் நெஞ்சில் இருந்து நீங்காமல் நம்மைக் காக்கின்றானாம். இறைவன் உயிர்கள் உய்வதற்காக பழங்காலத்தொட்டே திருவாடுதுறையில் இருந்து தலைசிறந்த நல்லாசானாக அறிவு புகட்டுகின்றானாம். அவனை வழிபடும் முறையையும் வழிபடு பொருளாயும் நமக்கு அருகே நின்று உதவுகின்றானாம். ஒரு பரம்பொருளான அச்சிவம் அடியார்களுக்காக பல்வேறு வடிவங்களில் வந்து நம் உள்ளத்தை உருகுவித்து ஆட்கொள்கின்றானாம். நம் சொல் கேளாது அலை பாய்ந்து திரியும் நம் மனத்தின் வேகத்தினை அவனே அடக்கி உதவுகின்றானாம். இறைவனே நம்முடைய இவ்வுலகில் பிறப்பினை அறுத்து உதவுகின்றானாம். மேலும் அவனை வணங்காது புறந்தள்ளி வைத்திருப்பவர்களுக்குத் தூரத்தே நின்று அருள்புரிகின்றானாம். கையாறக் கரங்குவித்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் உள்ளத்திலே நின்று மகிழ்கின்றானாம். தவிர அவனை தலையாறக் கும்பிடுகின்றவர்களை வாழ்வில் உயர்வித்து உதவுகின்றானாம். இப்படி ஆதிப்பழமையாக, காலங்காலமாக இறைவன் நமக்குச் செய்யும் தொண்டினை, தயாமூலத்தினை எண்ணியே அருளாளர் பெருமக்கள் நாளும் – நாளும் நைந்து மனமுருகி, கண்ணீர் மல்கி, செய்வதறியாது அவனுக்கு அடிமைபூண்டு அவன் உறைகின்ற ஆலயங்களில் தங்களால் இயன்ற திருப்பணிகளைச் செய்தார்கள். இதைத்தான், “யான் இலன் இதற்கோர் கைமாறே” என்று திருக்கோத்தும்பியில் மாணிக்கவாசகர் சுட்டுகின்றார். உள்ளன்போடு உணர்வினால் செய்யும் ஆலயத்தொண்டினையே சீலம் என்கிறோம்.

வாழ்துவதற்கு வாயும் நினைப்பதற்கு இளமையான நெஞ்சும் தாழ்த்துவதற்குத் தலையும் தந்த இறைவனை, காலத்தை வீணடிக்காமல் விரைந்து உள்ளன்போடு நன்றியினால் வழிபட வேண்டும் என்று திருநாவுக்கரசர் சுவாமிகளும் சீலத்தைப் பற்றிக் குறிப்பிடுவார்.

இது தவிர சீலத்தின் கூறாக உண்மை நெறி ஆசிரியர்களை வணங்குதல், அவர்களுக்கு வேண்டுவன செய்தல் போன்றவற்றையும் சைவம் குறிப்பிடுகின்றது. உண்மை நெறிப் பிழறாது வாழ்ந்தும் வாழ்விக்கின்றவர்களுமாகிய மெய்ச்சமய ஆசான்களுக்குப் பணிவிடைகள் செய்தல், அவர் நற்பணிகளுக்குத் துணையிருத்தல், அவரைப் பேணிக்காத்தல், அவர் சொல்லியிருக்கின்ற உண்மை நெறியினை வாழ்வில் பின்பற்றுதல் போன்றவை சீலத்தின் கூறுகளாம். உண்மைநெறி ஆசான்களைப் பார்த்தல், அவர்களின் திருவாய்ச் சொல்லைக் கேட்டல், அவர்களின் பெயரைச் சொல்லல். அவர்களின் திருவுருவத்தினை மனதில் சிந்தித்தல் பற்றித் தமிழ் ஆகமமான திருமத்திரத்தை அருளிய திருமூலர், தெளிவு குருவின் திருமேனி கண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே” என்பார்.

ஆசான் வடிவத்திலே சிவகுருவாய் வடிவம் தாங்கிவரும் இறைவனையும் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட சீவன் முத்தர்களாகிய 63 நாயன்மார்களையும் உண்மை நெறியை உணர்த்தும் மெய்கண்ட சமய ஆசிரியர்களையும் உள்ளன்போடு, கைமாறு கருதாது, உணர்வோடு பணிதல், போற்றுதல், வணங்குதல், அவர்களுக்குப் பணிவிடைகள் செய்தல் சீலத்தில் கூறப்பட்டுள்ளது.

சைவர்களின் சமயப்பெட்டகமான பெரிய புராணத்தில் இச்சீலத்தின் சீர்மையைக் காணலாம். அப்பூதி நாயனார் என்பார் திருநாவுக்கரசு சுவாமிகளின் பேரில் தண்ணீர்ப்பந்தல், மடம் போன்றவற்றை அமைத்தார். நாளும் அவர் பெயரைக் கூறும் வகையில் அவர் உடைமைகளுக்கெல்லாம் திருநாவுக்கரசு சுவாமிகளின் பெயரைச் சூட்டினார். அவர் வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவடிகளைத் துலக்கிப் பணிவிடைகள் செய்து அவர் பசியைப் போக்கினார். கோட்புலி, சோமாசி, பெருமிழலைக் குரும்பர், குண்டையூர்க்கிழார் போன்ற அடியவர்கள் சுந்தரமூர்த்திச் சுவாமிகளை தம் ஆசானாகக் கொண்டார்கள். சோமாசிமாறர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பணிவிடைகள் செய்தார், குண்டையூர்க்கிழார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீட்டிற்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதைத் தம் சீலமாகக் கொண்டார். சேரமான் பெருமான் நாயனார் என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தேவையான பொன்னும் பொருளும் கொடுத்து மகிழ்ந்து தம் சீலத்தைக் கடைபிடித்தார். மங்கையர்க்கரசியார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், குலச்சிறையார், முருகர், சிறுத்தொண்டர் போன்ற பெருமக்கள் முத்தமிழ் விரகர் திருஞானசம்பந்தரை ஆசானாகக் கொண்டு, அவருக்கும் அவர் செய்யும் நற்பணிக்கும் துணை நிற்பதைச் சீலமாகக் கொண்டனர். திருநீலகண்ட யாழ்பாணர் என்பார் திருஞானசம்பந்தர் அருளும் தமிழ் மந்திரங்களுக்குப் பண்ணோடு யாழ் இசைத்துத் தொண்டு புரிந்தார். அவர் மனைவியார் மதங்கச் சூளாமணியார் திருஞானசம்பந்தர் திருப்பல்லக்கினை அலங்கரித்துத் தம் அன்பைக் காட்டினார். குலச்சிறை நாயனார் என்பார் தம் அமைச்சர் பணியிலிருந்து தம் ஆசானாகிய திருஞானசம்பந்தர் கொண்ட சைவநெறி தழைக்கச் சமணர்களுக்குத் தண்டனை கிடைக்கப் பெருவதை உறுதிசெய்தார். மங்கையர்க்கரசியார் என்பார் திருஞானசம்பந்த சுவாமிகளைத் தம் ஆசானாகக் கொண்டு, அவர் நிலைநிறுத்திய திருநீற்று நெறியினைத் தம் மூச்சாகக் கொண்டு பின்பற்பற்றினார்.  திருநீறு பூசினால் தலை துண்டிக்கப்படும் என்று மன்னனாய் இருந்த தன் கணவனே கட்டளை பிறப்பித்து இருப்பினும் மங்கையர்க்கரசியார் தம் திருமார்பில் திருநீறு அணிந்திருந்தார்.

திருஞானசம்பந்தரை மதுரையம்பதிக்கு வரவைழைத்து அவரை வணங்கி, சமணரைத் திருஞானசம்பந்தரின் துணையால் வென்று, திருநீற்று நெறியினை நிலை நாட்டினார்.     திருஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலைமேல் கொண்டு போற்றித் தம் சீலத்தினை மெய்ப்தித்தார் மங்கையர்க்கரசியார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் திருமணம் செய்வதாய் மணமேடை வரை வந்து தம் திருமணம் தடைப்பட்ட சடங்கவி சிவாசாரியாரின் மகள் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பெயரையே மந்திரமாய் உச்சரித்து, சீலத்தின் சிறப்புற நின்று எளிதில் இறைவன் திருவருளை எய்தினார்.

நாமும் நம் வாழ்வில் பொய்யினைத் தவிர்ந்து மெய்யினைக் காட்டும் உண்மை நெறி ஆசிரியர்களைப் பணிதல் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்தல், அவர்கள் ஆற்றும் அளப்பரிய நற்பணிகளுக்குத் துணை நிற்றல் போன்றவற்றைச் சீலத்தின் நெறிகளாகச் செய்தல் வேண்டும். தவிர உண்மைநெறி ஆசான்களான 63 நாயன்மார்களுக்கு விழா எடுத்தல், அந்நாயன்மார்களின் வரலாற்றினை கேட்டல், கேட்பித்தல், அவர்கள் திருவுருவப்படங்களையோ, திருமேனிகளையோ வீட்டிலும் ஆலயத்திலும் வைத்துப் பணிதல் போன்றவற்றைச் செய்தல் வேண்டும். பணம், பதவி, குலம், பெயர், புகழ் என்று எதையும் கருதாது இறைவனை முன்நிருத்தி உண்மை நெறிகளை உலகினுக்களித்த அவ்வாசான்களின் எடுத்துக்காட்டு வாழ்வினை பின்பற்றி வாழவேண்டும். அவ்வாசான்கள் கூறிய, உணர்த்திய, வாழ்ந்துகாட்டிய நெறி அல்லாத நெறிகளை வாழ்வில் தவிர்ந்து வாழ்வதே உண்மைச் சீலமும் ஆசானைப் பேனுதலாகும். நம் அறியாமையை போக்கமுடியாத ஆசான்களை ஆட்டு மந்தைபோல் பின்பற்றுவது, “குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி, குருடும் குருடும் குழி விழுமாறு” போன்றது என்று தமிழாகம ஆசான் திருமூலர் எச்சரித்து அது உண்மை சீலம் ஆகாது என்று அறிவுறுத்துகின்றார்.

தமிழர் சமயமான சைவ சமயம் இறைவனை அடையும் வாழ்வியல் முறைமை சீலத்தில் அல்லது சரியையில் கடைபிடிக்க வேண்டியதாய் அடுத்து வருவது பிற உயிர்களிடத்தில் அன்பு பாராட்டுவது. இறைவன் எல்லா உயிர்களிடத்திலும் நீங்காமால் உறைவதனால் பிற உயிர்களை நடமாடும் கோயில்களாகவே கருதி, மண்ணுயிரைத் தன்னுயிர்போல் மதித்தலைக் குறிப்பிடுகின்றது. தன்னலமின்றிக் கைமாறு கருதாது உள்ளன்போடும் உணர்வோடும் பிற உயிர்களுக்கு உகவுதலையும் அன்பு பாராட்டுதலையும் சைவம் சீலம் என்று குறிப்பிடுகிறது. “எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவனென்று, எவ்வுயிர்க்கும் அன்பாயிரு” என்று ஓர் அருளாளர் குறிப்பிடுகின்றார். “அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து, இன்புற்றார் எய்தும் சிறப்பு” என்று வள்ளுவப் பேராசானும் அதனையே குறிப்பிடுகின்றார். இறையடியார்களுக்கும் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் செய்யும் கைமாறு கருதாத தொண்டே உண்மையான சமய வாழ்க்கையென்று சீலத்தில் குறிப்பிடப்படுகிறது.

இச்சீல வாழ்வியல் நெறியினையே தங்கள் கொள்கைப் பிடிப்பாக பல நாயன்மார்கள் வாழ்ந்துகாட்டினார்கள். பெரியபுராணத்தில் 27 அடியார்கள் சிவனடியார்களுக்கு உணவளிப்பதையே தங்கள் சீலமாகக் கொண்டார்கள். வறுமை வந்து வாட்டியபோதும் கொண்ட வாழ்வியல் நெறியில் பின்வாங்காது விதை நெல்லைக் கொண்டு வந்து, வீட்டுக் கூரையை அறுத்து விறகாக்கி அடியவறுக்கு உணவு படைத்து இறைவன் திருவடியின்பத்தைப் பெற்றார். அடியவருக்கு உணவு படைப்பதற்காக தன் ஒரே மகனை அறுத்துக் கறியாக்கி உணவு படைத்தார் சிறுத்தொண்டர். சிவனடியார்களுக்கு உணவளித்தல் உண்மையான சமய வாழ்வியல் நெறி என்பதனைத் திருஞானசம்பந்தரின் உண்மை வாக்கால் உணரலாம். மயிலாப்பூரில் பூநாகம் தீண்டி இறந்த பூம்பாவையின் சாம்பலை உயிர்ப்பிக்க “மண்ணில் பிறந்தார் பெறுப் பயன், மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல், கண்ணிலார் அவர் நல்விழா பொலிவு கண்டு ஆர்த்தல் உண்மையாமெனில், உலகவர் முன் வருக!” என்று மந்திர ஆற்றலுடைய மொழிகளைக் கூறுகின்றார். இப்பிறவியின் நோக்கம் அடியவர்களுக்கு உணவளித்தலும் இறைவன் திருவிழாவைக் கண்டலும் என்பது உண்மையானால் உயிர்பெற்று எல்லோர் முன்னும் வரவேண்டும் என்று உறுதி வைத்துப் பாடி பூம்பாவையை உயிர் பெறச் செய்தார்.

அமர்நீதி நாயனார் என்பார் சிவனடியார்களுக்கு உடை கொடுக்கும் தொண்டினைச் சீலமாகக் கொண்டார். திருக்குறிப்புத்தொண்டர் என்பார் அடியவர்களுடைய கோவணத்தைத் துவைத்துக் கொடுக்கும் தொண்டினைச் சீலமாகக் கொண்டார். திருநீலகண்டர் எனும் நாயனார் சிவனடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுப்பதைச் சீலமாகக் கொண்டார். எறிபத்தர் எனும் பெருமானார் சிவனடியார்களுக்கு ஏற்படும் துன்பத்தை மழுதாங்கிப் போக்குவதைத் தம் சீலமாகக் கொண்டார். சிவகாமியாண்டார் என்ற சிவனடியார்க்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கப் புகழ்ச்சோழனின் பட்டத்து யானையையே மழுவினால் எதிர்த்துக் கொன்றார்.

சிவனடியார் அல்லாத மற்ற மானிடர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ளன்போடு தொண்டு செய்தலையும் சீலம் என்கின்ற வாழ்வியல் நெறியாகச் சைவம் குறிப்பிடுகின்றது. கைமாறு கருதாத, இறையுணர்வை முன்னிருத்திய, தன்னலமற்ற மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதனை மூவாயிரம் தமிழாகம மந்திரங்கள் அருளிய திருமூல நாயனார், “நடமாடக் கோயில் நம்பர்க்கொன்றீயில், படமாடக் கோயில் பகவதற்கதாமே” என்கிறார். அதாவது நடமாடுகின்ற கோயில்களாக இருக்கின்ற உயிர்களுக்கு ஏதாவது ஒன்று கொடுத்து உதவினால் ஆது படம் போன்று அசையாமல் திருக்கோயிலில் நிற்கும் இறைவனுக்கு அளித்ததாய் அமையும் என்று தெளிவுபடுத்துகின்றார்.

செந்தமிழர் நெறியான சைவ சமயம் ஏழை எளியவருக்கும் உதவி தேவைப்படுகின்றவர்களுக்கும் உள்ளன்போடு செய்கின்ற தொண்டினையும் சீலம் என்று குறிப்பிடுகின்றது. வறுமையில் வாடுகின்றவர்களுக்கு உணவு, உடை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது சீலமே. இலவயக் கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்திறன், ஊனமுற்றோர்க்கு உதவுதல், ஆதரவற்ற முதியோர்க்கு உதவுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கைக்கொடுத்தல், தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவுதல், கல்வி நிதி வழங்குதல், அறக்கட்டளைகளை நிறுவுதல், சமய அறிவைப் புகட்டுதல்,  சமய அறிவைப் புகட்ட ஆக்ககர நடவடிக்கைகளில் ஈடுபடல், இனமான உணர்வை மேம்படுத்துதல், சமய, மொழிப்பற்றை ஏற்படுத்துதல் சீலமே. சமுதாயத்தில் நல்லொழுக்கம் நற்சிந்தனை, நற்பண்புகள் நலிவுறாமலும் செழித்து ஓங்கவும் பாடுபடுதலும் சீலமே. நம் கலை, இசை, நாடகம், நாட்டியம் என்பதைத் தன்னலம் கருதாது அன்போடு இளைய குமுகாயத்திடம் தியாக உணர்வோடு தழைக்கச் செய்யச் செய்யும் தொண்டும் சீலமே! தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுப்பதும், தமிழ்ப்பள்ளிகளின் உயர்வுக்குப் பாடுபடுதலும், தமிழ் இலக்கிய இலக்கணங்களை வளர்ப்பதும், அதைப் பேணிக்காப்பதும் தமிழ்ச் சான்றோர்களைப் பேணிக்காப்பதும் அவர்களுக்கு உதவுவதும் சைவம் கூறும் சீலமே! தன்னலம் கருதாது பிற உயிர்களின் துன்பத்தைப் போக்கி உள்ளன்போடு உதவுகின்ற எல்லா நற்பணிகளும் தொண்டுகளும் சைவம் கூறும் சீலத்தின் கூறுகளே! இதில் நாம் வாழும் சூழல், நம் தொழில், நம் பொருளாதார நிலை, நம் ஆற்றல், நம் அறிவு, நம் திறன், நம் கல்வி, போன்றவற்றைத் துணையாகக்கொண்டு நம்மால் செய்யக் கூடிய அனைத்து மக்கள் தொண்டும் பிற உயிர்த் தொண்டும் சீலமே! தங்களை முழுமையாக சமயத்தில் ஈடுபடுத்திக் கொண்ட திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இறைவனை அருந்தமிழால் பாடி, பொற்காசு பெற்று, திருவீழிமிழலையில் பஞ்சத்தால் பசிப் பிணியில் வாடிய மக்களின் துன்பத்தை அவர்களுக்கு இயன்ற வழியில் போக்கினார்கள். நாமும் நம்மால் இயன்ற வழிகளில் உள்ளன்போடு தொண்டு செய்வதே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் உண்மையான சீலம்.

சைவம் கூறும் வாழ்வியல் நெறியான சீலத்தில் அடுத்து குறிப்பிடப்படுவது இவ்வாழ்வில் உள்ளன்போடும் உணர்வோடும் ஆற்ற வேண்டிய தன்னலம் கருதாத தொண்டுகள். இல்வாழ்வை இன்புற அன்பு நெறியில் வாழ்வது சிறந்த அறம். அது நம்மைக் கடவுளிடத்து இட்டுச் செல்லும் என்று சைவம் குறிப்பிடுகிறது. எனவேதான் ஒளவை பிராட்டி, “இல்லறமல்லது நல்லறமன்று” என்றார். உலகப் பொதுமறையை அருளிய வள்ளுவப் பேராசானோ, “அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும், பிறன் பழிப்பதும் இல்லாயின் நன்று” என்றும் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும், தெய்வத்துள் வைக்கப்படும்” என்றும் குறிப்பிடுகின்றார்.

இல்வாழ்வில் செய்யவேண்டிய கடமைகளை இறைச்சிந்தனையோடு உள்ளன்போடு, கைமாறு கருதாமல் செவ்வன செய்து முடிப்பதும் சைவத்தில் சீலமே என்றும் அது படிப்படியாக நம்மைத் திருவடிப்பேற்றிற்கு ஆளாக்கும் என்பதை மெய்கண்ட நூலான திருவுந்தியார், “பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே, முற்ற வரும் பரிசு உந்தீபற, முளையாது மாயையென்று உந்தீபற” என்று குறிப்பிடுகிறது. இதனையே திருநாவுக்கரசு சுவாமிகளும், “வான்புலன்கள் அகத்தடக்கி, மடவாரொடு பொருந்து அணைமேல், வரும் பயனைப் போக மாற்றி” என்று பாடுகிறார். அதாவது மனைவி மக்கள் மீது காட்டுகின்ற உண்மையான உள்ளன்பே, உணர்வே பின்பு நமக்கு ஐம்புல அடக்கதினைத் தந்து இறையின்பத்தை நாடச் செய்யும் என்கிறார்.

ஒரு கணவனாகப்பட்டவன் அன்பை அடிப்படையாகக் கொண்டு மனையாளை உள்ளன்போடு காப்பது இறைவன் நமக்கு இட்டப்பணி என்று அரும்பாடு பட்டு உழைத்து அவளுக்குத் தேவையான உணவு, உடை, வசிப்பிடம், முறையான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது சைவத்தில் சீலம் எனப்படுகிறது. அதே போன்று மனைவியானவள் தனக்குக் கண்ணாய் இருக்கின்ற கணவனுக்கு உள்ளன்போடு செய்கின்ற பணிவிடைகள் சைவத்தில் சீலமாம். இச்சீலத்தையே, “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யென பெய்யும் மழை” என்பார் திருவள்ளுவ நாயனார். கணவனுக்குச் செய்யும் பணிவிடைகளை பேருவகையோடு விரும்பி, சிரமேற்கொண்டு செய்யும் பெண்களுக்கு இறையாற்றலைப் போன்ற கற்புத் திறனான உண்மை அன்பு தோன்றும் என்கிறார் திருவள்ளுவர். இதையே நாம் இளங்கோவடிகள் ஆக்கிய சிலப்பதிகாரத்தில், மதுரையைக் கண்ணகி எரிக்கின்ற ஆற்றலாகக் காண்கின்றோம். இதுவே உண்மைச் சீலம்.

தந்தையாக இருக்கின்ற ஒருவர் தம் பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை உள்ளன்போடு செவ்வன செய்தலே சைவம் கூறும் சீலம். பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உண்மையாய் உழைத்தல், அவர்களை நற்பண்புடையவர்களாக வளர்த்தல், அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து காட்டுதல், உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் பெற்றத்தரல் போன்றவையும் ஒரு தந்தையின் சீலமே. உலகம் தன் பிள்ளைகளைப் போற்றும்படியாக உயர்வடையச் செய்தலே ஒரு தந்தையின் சீலம். இதனைத் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர், “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்கிறார். தம் பிள்ளைகள் தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைக் காத்தல், உரிய பயனுள்ள நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துதல் போன்ற கடமைகளை உள்ளன்போடு செய்தல் ஒரு தந்தைக்குரிய சீலமாகும். இதுவும் சமயம் கூறும் வாழ்வியல் நெறியே!

பெரிய புராணத்தில் அமர்நீதி நாயனார், அப்பூதி அடிகள், குங்கிலியர், சிறுத்தொண்டர், அரிவாட்டாயர், இயற்பகை, இளையான் குடிமாற நாயனார் போன்றோர் இச்சீல நெறியில் சிறப்புற நின்று தங்களையும் தத்தம் மனைவியர்களையும் பிள்ளைகளையும் இறைவன் திருவடி நிழலுக்கு அழைத்துச் சென்றனர். அப்பூதி அடிகள் தன் மகற்கு ஆற்ற வேண்டிய கடமையைச் சிறப்புறச் செய்து நற்பண்புகளைப் போதித்திருந்தமையால் தந்தையிட்டப் பணியான வாழையிலை நறுக்கி வருதலைப் பாம்பு தீட்டினும் செம்மையுற செய்து முடித்தான். அதுவே பின்பு அப்பூதி அடிகள் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவருளைப் பெற துணை நின்றது.

ஒரு தாயானவள் தம் பிள்ளைகளுக்கு உள்ளன்போடு செய்கின்ற கடமையும் தொண்டும் சீலமாக அமைகின்றது. பிள்ளைகளுக்குத் தேவையான உணவு, உடை, வசிப்பிடம் போன்றவற்றைத் தூய்மையாகவும் அன்புடனும், தயார் செய்து கொடுத்தல் ஒரு நல்ல தாயின் சீலமாகும். குடும்ப பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், மொழி, இனமானம், அன்பு, ஈகை, இரக்கம், வீரம் ஆகியவற்றைத் தவறாது பாலூட்டும் போது சேர்த்து ஊட்டுவது அவளின் சீலம்.

பிள்ளைகள், “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று பெற்றோர் இட்ட பணியைச் சிரமேற்கொண்டு உள்ளன்போடு அவர் நற்பெயரைப் பேணிக்காத்தல் அவர்களுக்குறிய சீலம். தன்னைச் சான்றோன் எனப் பிறர் கூறுதலைத் தன் பெற்றோர் கேட்க வேண்டும் என்பதை மூச்சாகக் கொள்வதே அவர்களின் சீலம். குருதியைப் பாலாக்கித் தன்னை ஆளாக்கிய அன்னையையும் குருதியை வியர்வையாக்கி பணம் ஈட்டி வளர்த்த தந்தையையும் அவர்களின் கடைசிக்காலத்தில் கண்ணை இமை காப்பது போன்று பேணிக் காத்தலைச் சிரமேற்கொண்டு வாழ்வு நடத்துவதே பிள்ளைகளின் சீலம்.

எனவே இறைவனுக்கும், இறைவன் வாழும் திருக்கோயிலுக்கும், உண்மைநெறி அளிக்கும் மெய் ஆசான்களுக்கும், இறையடியார்களுக்கும், மக்களுக்கும், பிற உயிர்களுக்கும், நம் இல்வாழ்வோடு தொடர்புடையவர்களுக்கும் தன்னலம் கருதாது, கைமாறு கருதாது உள்ளன்போடும் உள் உணர்வோடும் செய்யும் திருத்தொண்டுகளே சைவம் கூறும் உண்மையான சீலமாகும்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

– திருற்சிற்றம்பலம் –