உலக உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை நுகர வேண்டும் என்ற பேர் அருளினால் சிவன் என்னும் பரம்பொருள் ஆசான் எனும் வடிவில் தோன்றி அறம் உரைத்தது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. கல்லால் ஆன ஆல மரத்தின் அடியில் தென்முகக் கடவுளாகப் பெருமான் தோன்றி இருந்து பாடம் புகட்டியதைக் கேட்டவர்களில் மூவாயிரம் தமிழ் அருளிய திருமூலரும் ஒருவர் என்பதனைத் திருமூலரே தமது பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானிடத்தில் பாடம் கேட்ட அருள் ஆசானாகிய திருமூலர், பெருமான் தமக்கு அருளிய படிப்பினைகளை அன்னைத் தமிழில் அழகுற இயம்பிடும் போது ஓர் அரிய செய்தியினை உணர்த்துகின்றார். உயிர்கள் இறைவனின் திருவடிக்கு ஆளாகும் படி நிலைகளில் உயிர்களுக்கு முதலில் ஆசான்களாக அமைபவர்கள் அவ்வுயிர்களை ஈன்றவர்களே என்கின்றார். ஒவ்வொரு உயிருக்கும் அவற்றின் பெற்றோர்களே முதல் ஆசான்களாக அமைகின்றனர் என்கின்றார்.
கள்ளம் கபடம் அறியாத, எதுவும் தெரியாத, அப்பழுக்கற்றத் தத்தம் பிள்ளைகளுக்குத் தாயும் தந்தையுமே அன்பு எனும் அரிய உணர்வாலும் உறவு எனும் உன்னத உறைப்பாலும் அத்தனையையும் கற்பிக்கின்றார்கள் என்கின்றார். தாய், தந்தை, உடன் பிறப்புக்கள், தாய் மாமன், உறவினர்கள் முதலாகிய இவர்களே நமக்கு அன்றாட வாழ்க்கை நடைமுறைகளைச் சொல்லிக் கொடுத்த முதல் ஆசான்கள் என்கின்றார். சிவபெருமானை இகழ்வது எவ்வளவு குற்றமோ அது போன்று இவர்களை இகழ்வதும் பெருங்குற்றம் என்பதனைப், “பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள், உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்,” என்கின்றார் திருமூலர். கீழான பண்புகளை உடையவர்கள், மற்ற பெரியோர்களைப் பேணிக் காக்காமல் விட்டுவிடுவதோடு மட்டுமல்லாமல் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணிக் காக்கமாட்டார்கள் என்கின்றார். தவிர உறவினராய் உள்ளவர்களையும் அவர்களின் மனம் நோகும்படியான சுடு சொற்களைச் சொல்லி இகழ்வார்கள் என்கின்றார். “கற்றுஅறிந்தார் வழி உற்று இருந்தார்அவர், பெற்றுஇருந்தார் அன்றி யார்பெறும் பேறே,” என்று கூறும் திருமூலர், தாய் தந்தையரையும் உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்க முறையில் பேணுவது சான்றோர்களின் இயல்பு எனவும் அச்சான்றோர் காட்டிய நெறியில் நில்லாதவரை விடுத்து வேறு யார் இறைவனின் திருவடிப்பேற்றினைப் பெற இயலும் என்றும் குறிப்பிடுகின்றார்.
சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையை விளக்குகின்ற தமிழ்ச் சிவ ஆகமமான திருமந்திரம், பெற்றோரும் உடன்பிறந்தாரும் சுற்றமுமே நமக்கு முதல் ஆசான்கள் என்று குறிப்பிடுவதோடு மட்டும் அல்லாமல் பெற்றோரைப் பேணாதவர் ஒருபோதும் இறைநெறிக்கும் இறைவனின் திருவடிக்கும் ஆளாக முடியாது என்பதனை வலியுறுத்துகின்றது. பெற்றோரே நமக்கு உண்ணல், உறங்கல், உடுக்கல், கழிவகற்றல், உடற்தூய்மை செய்தல் முதலானவற்றைப் பிறந்தது முதல் நாமே செய்துகொள்ள ஆளாகும்வரை சொல்லிக் கொடுத்த முதல் ஆசான்களும் கைமாறு கருதாத நல்லாசான்களும் ஆகும் என்கின்றார் திருமூலர்.
பெற்றோர்களே நமக்கு நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் நம் பண்பாட்டினையும் இறைவழிபாட்டினையும் நமக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்கின்றார். அவர்களே நமக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் வாழ வசிப்பிடமும் நோய்நொடியிலிருந்து பாதுகாப்பும் நமக்கு அளித்தனர் என்கின்றார். அன்பும் அரவணைப்பும் காட்டிய குடும்பத்தினையும் தமிழ் இனத்தையும் பிற இனத்தவரையும் நாட்டையும் இவ்வுலகத்தவரையும் நமக்குக் காட்டியவர்கள் இவர்களே என்கின்றார். இறைவன் நம் பெற்றோருக்குள்ளே விதைத்த விதையின் மூலமே நாம் உருவாகி உலகில் நடமாடி இன்று ஆளாகி இருக்கின்றோம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அம்முதல் ஆசான்களை மறப்பது நல்லறிவையும் இறையருளையும் ஒருபோதும் நமக்குக் கூட்டுவிக்காது என்கின்றார் திருமூலர்.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “தாயிற் சிறந்த கோயில் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற வழக்குகளும் இதனையே பறைசாற்றுகின்றன. தெய்வச் சேக்கிழாரின் பெரிய புராணத்தில், தன் தந்தைக்காகத் திருமணக் கோலத்தில் நின்ற மானற்கஞ்சாறரின் மகள் தன் கூந்தலை அரிந்து கொடுப்பதற்குத் துணிந்தாள். தன் தந்தை இயற்றும் தொண்டினுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் துணிந்தான் சைவக்கொழுந்து சீராளன் எனும் சிறுத்தொண்டரின் மகன். பெற்றோரைத் தங்கள் உயிரினும் மேலாகக் கருதிய இந்நன்மக்களே நாயன்மார்களின் நிலைக்கு உயர்ந்து இறைவனின் திருவடிக்கு ஆளானார்கள்.
உயிர்கொடுத்து, உண்டிகொடுத்துப் போற்றிப் பேணி வளர்த்து நம்மை ஆளாக்கி விட்ட நல் ஆசான்களை இன்று ஆதரவு அற்றவர்களாக, அல்லல்படுகின்றவர்களாக, அன்பிற்கு ஏங்குகின்றவர்களாக, அரவணைப்பு அற்றவர்களாக விட்டு விட்டு வெறும் போலிப் பூசனைகளை இயற்றுகின்ற அன்பு அற்றவர்களின் வழிபாட்டைப் பெருமான் ஒருபோதும் ஏற்கமாட்டான் என்கின்றார் திருமூலர். இதனாலேயே முற்றும் துறந்த பட்டினத்து அடிகளும்கூட தன் தாய்க்கு இயற்ற வேண்டிய இறுதிக் கடனை இறுதிவரை இருந்து ஆற்றிவிட்டு நீங்கினார். நம் வாழ்வின் ஒளி விளக்காய் முதல் ஆசான்களாய் விளங்கும் பெற்றோர்கள் ஆற்றிய நன்றியினை மறந்து அவர்களின் மனதை நோக வைப்பதுவும் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதும் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுவும் பெருங்குற்றமாகும் என்கின்றார் திருமுலர்.
பெற்றோரைத் தவிர பெற்றோருக்குத் துணையாய் நம் இல்லத்தில் நம்மோடு உடன் பிறந்த அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி, தாய் மாமன், மாமனார், மாமியார் என்று பலரும் நாம் வாழ்வில் பலவற்றைக் கற்றுக் கொள்வதற்கும் இன்புற்று வாழ்வதற்கும் துணைபுரிந்துள்ளனர் என்கின்றார் திருமூலர். “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்ற இலக்கணத்திற்கு உரியவர்கள் உடன் பிறந்தோர். “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பார்கள் நம் முன்னோர். எனவே இவர்களின் பங்களிப்பும் அளப்பரியது என்கின்றார் திருமூலர். அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை நாம் கற்றுக் கொள்வதற்குப் பேர் உதவி புரிந்துள்ள நம் உடன் பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு, அவர்களின் உறவினைத் துண்டித்துக் கொள்வது, பேசாமல் இருப்பது, அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பது, அவர்களுக்கு உதவி வேண்டும் போது உதவாமல் இருப்போது என்பது நன்றி மறந்த செயலாகும். அண்ணனின் உதவியில் வாழ்வில் முன்னேறிய தம்பி, அண்ணனை மறப்பதும், அக்காளின் அற்பணிப்பால் உலக வாழ்வில் முன்னேறிய தங்கை அக்காளை மறப்பதும் அறிவுடைமையன்று என்கின்றார் திருமுலர்.
பெற்றோரையும் தன் வருங்கால கணவனையும் இழந்து இறக்கத் துணிந்த திலகவதியார், தம் தம்பியார் திருநாவுக்கரசரை வாழ்வில் கடைத்தேற்றத் துறவு பூண்டு அவருக்காக வாழ்ந்தார் என்பதனைப் பெரியபுராணம் நமக்குக் கற்பிக்கின்றது. அதனாலேயே திருநாவுக்கரசரைக் குறிப்பிடும்போதெல்லாம் அவர் தமக்கையார் திலகவதியாரையும் குறிப்பிடுகின்றனர்.
சான்றான்மை என்பது மெய்நெறிக் கொள்கைகளை உணர்த்துவது என்றாலும் அதற்கு அடிப்படையாக ஆரம்பமாக இருப்பது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகள்தான் என்பதனை உணர்ந்து முதல் ஆசான்களாகிய பெற்றோர்களை மதிக்கவும் பேணவும் அன்பு செலுத்தவும் கற்றுக்கொள்வோமாக! பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கிட்டும் முதல் நல் ஆசான்கள் என்பதனை உணர்ந்து தங்கள் கடமைகளைச் செவ்வன செய்வோமாக! பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்கின்ற அடிப்படை நற்பண்புகளே, “தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்கின்ற முதுமொழிக்குப் பொருளாய் இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்வோமாக! பிள்ளைகளுக்கு நல் எடுத்துக்காட்டாக இருந்து நற்பண்புகளை அவர்களின் வாழ்க்கையில் வேர் ஊன்றச் செய்வோமாக! நம் வாழ்வில் முன்னேறுவதற்கு இறைவனால் உடன் பிறப்புக்களாகவும் உறவினர்களாகவும் கொடுக்கப் பெற்றவர்களை மதித்து நல்லுறவினை வலுப்படுத்தி நல்வாழ்வு வாழ்வதற்கு முயல்வோமாக! இதன்வழி நம்மைச் சுற்றி உள்ள பெற்றோர்களிடத்தும் மற்றவர்களிடத்தும் உள்ள சிறிய அன்பே பின்பு பேர் இன்பமாகப் பேரரறிவாளனாகிய பெருமானிடத்தில் பெருகுமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!