6. ஏகன் அநேகன் இறைவன்

6181

6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

             செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின்  இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது.  இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில்  மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத  “சிவமாக” இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் “சிவன்” ஆகின்றான் என்று  திருமந்திரத்தின் முதல் பாடலான,ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..“,  எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில்  தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் சிவை” என்கிறது.

பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய  ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து  காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும்  பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால்,எத்திறம்நின்றான் ஈசன்அத்திறம் அவளும் நிற்பள்”  என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும்  இறைவனை விட்டு  வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும்  உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து  வழிபட்டு மகிழ்ந்தனர்.

இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு  பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான்.  இதனையே,உண்ணாமுலை உமையாளொடும்  உடனாகிய ஒருவன்” என்று தமிழ்ஞானசம்பந்தர் அருளினார். இதனால் இறைவனின் இடப்பக்கம் உள்ளபெண் வடிவம் நாம் காணுகின்ற  சாதாரணப் பெண்ணின் வடிவம் அல்ல! உமை   அம்மையை இறைவனின்  மனைவியைப்   போன்று உருவகப்படுத்தியே சொல்கின்றனர். இறைவனின் திருவருள்  இறைவனுக்கு எல்லாமாக இருக்கின்றது  என்பதனைத்தான்  திருமூலர்,அரனுக்கு  மனோன்மணி தாயும்அரனுக்கு மனோன்மணி மகளும்அரனுக்குமனோன்மணி  நல்தாரமுமாமே” என்று குறிப்பிடுவார். இறைவி இறைவனுக்குத்  தாயாகவும் மகளாகவும்  மனைவியாகவும் குறிக்கப்படுவது அவன் திருவருள் இயல்பினை  உருவகமாகக் குறிப்பது  பற்றியே அன்றி, அது அதுவாக அல்ல என்கிறார்.

எனவே சைவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சிவஆகமங்களிலே சொல்லப்பட்டுள்ள,  திருமுறைகளிலே இயம்பப்பட்டுள்ள, பல்வேறு பெண் கடவுளர் வடிவங்கள் அனைத்தும்  ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் திருவருளையே குறிக்கும். அது இறைவனைத் தவிர வேறு அல்ல! தெளிவின்மையின்காரணமாகவே நம் கடவுள் இல்லறம் நடத்துதல்  போன்ற ஒரு மயக்க சிந்தனையில் உழல்கின்றோம் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார்.  இறைவனின் அருள் இயல்பினையொட்டியே இறைவன் ஆற்றுகின்ற தொழில்களுக்கேற்ப  இறைவனின் சத்திகளுக்கும் இறைவனுக்கும் பல்வேறு பெயர்களையும் வடிவங்களையும்   வழங்கியுள்ளனர் நம் முன்னோர். வீர இயல்பினை மலைமகள் என்றும் செல்வம் நல்கும்  இயல்பினை அலைமகள் என்றும் கல்வி நல்கும் இயல்பினைக் கலைமகள் என்றும்  குறிப்பிட்டனர். அதற்கேற்பப் பெருமானின் பெயரையும் முறையே துடைப்போன், காப்போன்,படைப்போன் என்றும் அமைத்தனர் (உருத்திரன், திருமால், பிரமன்). இவ்வடிவங்கள்  இறைவனின் திருவருள் இயல்பு பற்றி அமைந்தவையே அன்றி கணவன் மனைவியர் என்று பொருள்படாது.

 இவ்வடிப்படையிலேதான் பிற வடிவங்களும் வருகின்றன. முருகன், பிள்ளையார் போன்ற திருவடிவங்கள் வேறு கடவுளர் அல்ல! அல்லது இறைவனின் பிள்ளைகளும் அல்ல!இறைவன், இறைவி, முருகன், பிள்ளையார் போன்றோர் ஒரு குடும்பத்தினர் அல்லர்!  ஒன்றாய் இருந்த பெருமானின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து அறிவு  வடிவாய்த் தோன்றியதே அறிவு வடிவாகிய முருகன் வடிவம். ஒன்றாய் இருந்த இறைவரின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து ஓசைவடிவாக வெளிப்பட்டதே ஓம்கார  வடிவாகிய பிள்ளையார். இவ்விரு வடிவங்களின் இயல்பு பற்றித் தோன்றிய பல்வேறு  வடிவங்களும் பரம்பொருளான அந்த ஓர் இறைவனின் வேறு வடிவங்களே! எனவேதான், எத்தெய்வம் கண்டீர் ஆங்கு அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று  மெய்கண்ட நூல்கள் புகல்கின்றன. இதனையே ஏகன்  அநேகன் இறைவன்  அடி வாழ்க  என்று மணிவாசகரும் குறிப்பிட்டுள்ளார். எனவே, சீர்மிகு செந்தமிழர் சைவத்தில் கடவுள்  ஒன்றே, பல்வேறாகத்தோன்றுவது அவ்வொரு பரம்பொருளின் அருள் வடிவங்களே  என்பதனை நினவில் கொள்ளல்வேண்டும்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!