132. அடியார் பூசனை

1351

132. அடியார் பூசனை

சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர். அவை சிவலிங்கப் பூசனை, சிவஅறிவு பெற்ற சிவஆசான் பூசனை, சிவஅடியார் பூசனை என்பனவாகும். மக்களால் கட்டப்பெற்ற, படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில் இயங்காமல் எழுந்து அருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை அன்பினால் படைத்தால் அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் உடம்பாகி கோயிலினுள் எழுந்து அருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச் சேறாது என்கின்றார் திருமூலர். ஆனால் எழுந்து இயங்கும் உயிர்களின் உடம்பாகிய கோயிலினுள் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிவனுக்கு படைத்தல் ஆவதுடன், கொடிச்சீலை ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச்சேரும் என்பதனை,

“படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயின்,
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா,
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்,
படமாடக் கோயில் பகவற்கு அதாமே”

என்று குறிப்பிடுகின்றார்.
திருக்கோயில்களில் உள்ள பெருமானின் திருமேனிகள் மந்திர ஆற்றல்களால் சிவனாகவே விளங்குதல் போல அடியார்களின் இறை அன்பின் உறைப்பாலும் இறைவனை இடைவிடாது எண்ணும் இயல்பாலும் சிவஅறிவு உணர்வாலும் அடியார்களின் உடம்பு எனும் கோவிலில் இறைவன் நிலைபெற்று இருக்கிறான் என்கிறார் திருமூலர். பெருமானை ‘மகேசுரர்’ என்றும் அடியார்களை ‘மாகேசுரர்’ என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானிடத்திலிருந்து எந்த ஒன்றாலும் தங்களைப் பிரிக்க முடியாத உள்ளத்தை உடைய அடியார்கள் உண்ட பொருள், மூன்று உலகத்திலும் உள்ளவர்கள் உண்டதின் பயனாய் விளையும் என்கின்றார் திருமூலர். இத்தகைய அடியார்கள் பெற்றுக்கொள்ளும் பொருள்கள் மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பெற்றுக்கொண்ட பொருளின் பயனை அளிக்கும் என்றே நந்தி பெருமான் தனக்கு உரைத்ததாகத் திருமூலர் குறிப்பிடுவார். இத்தகைய அடியார்களை வணங்கி அவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் கொடுத்தலே அடியார் பூசனை எனப்படுகின்றது.

சிவன், சிவலிங்கப் பூசனையை ஏற்று மகிழ்வதனைக் காட்டிலும் தன் அடியவர் பூசனையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவானே ஆயினும் சிவஆசான் பூசனையையும் சிவஅடியார் பூசனையையும் மட்டும் செய்து சிவலிங்கப் பூசனையை விட்டுவிடுதல் தவறு என்று திருமூலர் தெளிவுபடுத்துகின்றார். சிலர் சிவபெருமானிடத்து மட்டும் அன்பு வைத்துச் சிவஅடியாரிடத்து அன்பு இல்லாது இருப்பதனால், நீண்ட நாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் மிகக் கிடைக்காது வருந்துவதற்கு இதுவே காரணம் என்கின்றார் திருமூலர். சிவபெருமானை அடைய விரும்புவோர் சிவனடியார்களை விரும்பி வழிபடல் இன்றியமையாதது என்ற கருத்தினைத் திருமூலர் உணர்த்துகின்றார். இதனையே பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் நாயன்மார்களும் வாழ்ந்து காட்டினார்கள் என்பது நினைவுகூறத்தக்கது. “அடியவர்க்கு அன்பிலார் ஈசனுக்கு அன்பிலார்” என்று அருள்நந்திசிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் என்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூலும் இதனையே குறிப்பிடுகின்றது.

“காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடை இறைவா, எங்கள் பெருமானே” என்று சிவனை எப்பொழுதும் போற்றி வணங்கி, அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனது அடியவர் ஆவார்கள். இவர்களை நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள் என்றும் சிவபெருமான் என்றும் கருதி, இவர்களைச் சராசரி மக்களில் இருந்து வேறாக வைத்து வழிபடுகின்றவர்களுக்குக் குவிந்து கிடக்கும் வினைகள் கெட்டு ஒழியும் என்பதனை,

“ஏறுஉடையாய் இறைவா எம்பிரான் என்றே,
நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்,
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று,
வேறுஅணிவார்க்கு வினை இல்லை தானே”

என்று குறிப்பிடுகின்றார். சிவனைத் தவிர வேறு ஒரு தேவரை வழிபடாத, சிவனின் அருள்வீழ்ச்சி கிடைக்கப்பெற்ற இத்தகைய அடியார்களை வானவர்களுக்கு ஒப்பாகவும் இவர்களை வழிபட்டால் அது சிவபூசனையாகிப் பிறப்பை அறுக்கும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்ற வழக்கு ஒன்று தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளதனை அறிவோம். சராசரி உயிர் வகைகளுக்குச் செய்யும் உதவியும் அடியார்களுக்குச் செய்யும் உதவியும் வேறு என்கின்றார் திருமூலர். சராசரி உயிர் என்கின்ற நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைபெற்று நின்று சிவமாம் தன்மையில் நிற்கும் அடியவர்க்குச் செய்யும் உதவியும் வழிபாடும் நம் வினையைப் போக்கிப் பிறவி அறுக்கும் என்கின்றார் திருமூலர். சராசரி உயிர்களுக்குச் செய்யும் உணவு அளித்தல், உறையுள் அளித்தல், பிற உதவிகளைச் செய்தல் என்பதானது உயிர்களுக்குச் செய்யும் நல்வினையாய் மட்டுமே முடியும் என்பதனைத் திருமூலர் உணர்த்துகின்றார். உயிர் நல்வினைகள் சிவ நல்வினைகளாய் மாறுதற்குப் படிக்கல் என்பதும் உணர்தற்பாலது.

மாகேசுவர பூசனை என்பது சிவஅடியார்களுக்கு உணவு அளித்தல் என்பதனால் இதனைப் பெரும்பாலும் இல்லறத்தார்களே செய்யும் கடப்பாட்டினை உடையவர் ஆகின்றனர். இல்லறத்தார்க்குச் சிறப்பாக உரிய விருந்தோம்பலில் அடியார்க்கு உணவு அளிப்பதனை மாகேசுவரப் பூசனையாகக் குறிப்பிடுவர். விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பதனை இயற்றுவதற்கு அந்தணர்கள் என்று அழைக்கப்படும் பிராமணர்களை வழிபடுவதும் அவர்களுக்கு உதவிகள் செய்வதும் வேண்டும் என்பது வேத அடிப்படையில் நிலவும் வைதீக நெறி என்று தருமை ஆதீனப் புலவர், சித்தாந்தக் கலைமணி, மகாவித்துவான், முனைவர் சி.அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார். இல்லறத்தார்க்கு உரிய கடமைகளாகத் திருவள்ளுவரும் குறிப்பிடும் விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பனவற்றை மாகேசுரர் பூசிவர் என்ற சிவனடியார்களுக்குச் செய்தலே சைவ நெறி என்று முனைவர் குறிப்பிடுகின்றார். சிவனடியார்களை, ‘பராவுசிவம்’ அல்லது நடமாடும் சிவம் என்று அருணந்திசிவம் சிவஞானசித்தியாரில் குறிப்பிடுவதனால் சிவஅடியார்களுக்கு உணவளிப்பதே இறந்த நம் முன்னோர்க்காச் செய்யப்படும் மிகச் சிறந்த பிதிர்க்கடன் என்று நிறுவுகின்றார்.

அந்தணர் என்று அழைக்கப்படுபவருக்குப் பசு, குடை, தானி வகைகள், காய்கறிவகைகள், செருப்பு, தங்க அணிகலன்கள், வீதிகள், மாடமாளிகைகள், இன்னும் பிற நன்மைகள் செய்து கொடுப்பது உயிர் நல்வினையே அன்றி சிவஅடியாருக்குச் செய்யும் உதவியினால் கிட்டும் பெரும் பயனைக் கூட்டுவிக்காது என்பதனை,

“அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்என்,
சிகரம் ஆயிரம் செய்தே முடிக்கில்என்,
பகரும் ஞானி பகல்உண் பலத்துக்கு,
நிகர்இலை என்பது நிச்சயம் தானே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
‘அகரம்’ என்பது அக்கிரகாரம் அல்லது திருக்கோயிலின் முதற்சுற்று. கோயிலைச் சூழ்ந்த முதற்சுற்று வீதிகளே அந்தணர்கள் இருத்தற்குரிய இடம் என்பது வைதீக முறைமையாகும். அந்தணர்களை மாடமாளிகையில் தான் வாழ வைத்தல் வேண்டும் என்பதும் வைதீக நெறியாகும். இது சைவ நெறிக்குப் பொருந்தாது என்கின்றார் காஞ்சிப் புராணம் பாடிய சிவஞானயோகிகள். திருக்கோயிலை நடுவாக வைத்து அதனைச் சூழ ஏழு சுற்று அமைய மதில்கள் எழுப்ப, அவற்றில் அமையும் வீதிகள் யாவும் மாடவீதிகள் என்கின்றார். அவ்வீதிகளில் பரத்தையர் எனப்படும் விலைமகளிர் போன்றோரைத் தவிர யாவரும் கலந்தே வாழ வேண்டும் என்பதே சைவ நெறி என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும் வேதம் ஆகிய நூலை ஓதுகின்றவரும் முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர் என்று அழைக்கப்படுகின்றவர்கள் கோடி பேர் உண்டு மகிழ்வதனால் உண்டாகின்ற பயனைக் காட்டிலும் திருநீற்றை அணிகின்ற சிவ அடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளையும் பயன் மேலானது என்பதனை,

“ஆறிடு வேள்வி அருமறை நூல்சாலவர்,
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்,
நீறிடும் தொண்டர் நினைவின் பயன்நிலை,
பேறுஎனில் ஓர்பிடி பேறுஅது ஆகுமே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இதனால் தானங்களில் தலையதாகிய அன்னதானமும் அந்தணர் என்று அழைக்கப்படுவோருக்குச் செய்தலைக் காட்டிலும் சிவ அடியாருக்குச் செய்தல் கோடான கோடி மடங்கு மிக்க பயனைத் தரும் என்று தெளிதல் வேண்டும்.

உலகப் பற்றுக்களாகிய இழிநிலையில் இருந்து நீங்கி உயர் நிலையை அடைந்தவர்களாயினும் மீண்டும் அந்த இழிநிலைப் பற்றுக்கள் வந்து பற்றாதபடி என்றும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு ஆகிய அரிய தவங்களை விடாது இயற்றும் உண்மைச் சிவனடியார்களை வணங்கி, அவர்களுக்கு உதவிகளைச் செய்வோம். வினைப் பயன்களைப் போக்கிப் பிறவி அறுவோம்!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!