32. ஓங்காரமாய் நின்ற மெய்யா

2715

32. ஓங்காரமாய் நின்ற மெய்யா

பெருமான் நாம் கண் இமைக்கும் பொழுது கூட நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்பார் மணிவாசகர். பெருமான் எப்போதும் உயிரில் பிரிவின்றி இருக்கின்றான் என்பதனைப் பலரும் உணருவதில்லை! நாம் உய்வதற்காகவே பெருமான் நம் உயிரையும் உடலையும் விட்டு நீங்காமல் இருக்கின்றான் என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையை விளக்குகின்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சிவ ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. உயிர்களைப் பிணித்துள்ள அறியாமையை நீக்கி, உயிர்களை மேல் நிலைக்குக் கொண்டுச் செல்லவே, அழுக்கு நிறைந்த புழுக்கள் நெளியும் நம் உடலில் பெருமான் பரிவோடு தங்கி இருந்து அருள் செய்கின்றான் என்று மேலும் அவை குறிப்பிடுகின்றன. இவ்வாறு நம் உடலில் தங்கி இருந்து நம் உடலை இயக்கும் பெருமான் எவ்வடிவில் உயிரிலும் உடலிலும் காத்து இருக்கின்றான் என்பதனை உணர்த்தவே, “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

பொய் நீங்கிய உண்மைப் பொருளாய் இருக்கின்ற அப்பெருமான், நான் மேல்நிலையை அடைய என் உள்ளத்தில் ஓங்கார வடிவாக இருக்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். உள்ளத்துள் ஓங்காரமாய் நிற்றல் என்பது பெருமான் ஒலி வடிவாகவும் ஒளி வடிவாகவும் நிற்றல் என்பதனைக் குறிப்பிடுவர். இதனையே நாத விந்து வடிவம் என்று வடமொழியில் சுட்டுவர். பெருமானின் மேலான நிலைகளை ஒலி, ஒளி வடிவம் என்று குறிப்பிடுவர். மேலான ஒலியைச் சிவம் என்றும் மேலான ஒளியை அச்சிவத்தின் சத்தி என்றும் குறிப்பிடுவர். இதனை வரி வடிவில் அகரம் எனவும் உகரம் எனவும் குறிப்பிடுவர். இதனையே தமிழ் எண்கள் அடிப்படையில், “எட்டும் இரண்டும் அறியாத என்னை, எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி” என்பார் திருமூலர். தமிழ் எண்களில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். அ+உ+ம் என்பதன் கூட்டே ஓங்காரம். அகரம் சிவத்தையும் உகரம் சிவத்தின் சத்தியையும் மகரம் மாயையையும் குறித்து நிற்கின்றது என்பர். இதனால் பெருமான் நம் உயிரில் ஒலிப் பொருளாயும் ஒளிப் பொருளாயும் பெருமான் தோற்றுவிப்பதற்கும் இயக்குவிப்பதற்கும் துணையாய் உள்ள மாயைப் பொருளாயும் நம் உயிரில் கலந்து நிற்கின்றான் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார்.

பெருமான் நம் உயிரில் சிவமாகவும் சத்தியாகவும் மாயைப் பொருளாகவும் இருந்து நம் உட்கருவிகளான மனம், சித்தம், அறிவு, அகங்காரம் எனப்படும் மனவெழுச்சி ஆகியவற்றை இயக்குகின்றான் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் நம் உட்கருவிகளை ஓங்கார வடிவில் நின்று இயக்குவதனால்தான் நாம் அறியாமை நீங்கி, உண்மை அறிவு அல்லது பொருள் உணர்வு பெறுகிறோம் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானே நம் உயிரில் ஓங்காரமாய் நின்று பெருமானைப் பற்றிய தெளிவினையும் உயிரினைப் பற்றிய தெளிவினையும் உலகினைப் பற்றிய தெளிவினையும் அளித்து உண்மை அறிவு அல்லது மெய் அறிவினை அளிக்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

ஓங்காரமாய் உயிரில் கலந்து இருக்கின்ற பெருமானை அறிதற்கும் உணர்தற்கும் மேற்கொள்கின்ற முயற்சிகளே உள்நோக்குதல் எனும் முயற்சியாகும். இம்முயற்சிக்குத் துணை நிற்பதே சிவச்செறிவு அல்லது சிவயோகம் ஆகும். சிவச் செறிவாளர்கள் மூலாதாரம் எனும் மூல நிலைக்களத்தில் ஓங்கார வடிவில் இருக்கின்ற பெருமானின் ஆற்றலைத் தேடிக் கண்டு எழுப்பி அதன் துணையாலே உடலில் இருக்கின்ற இதர நிலைக்களங்களுக்குப் (ஆதாரங்கள்) பாவனையால் கொண்டுச் சென்று பின்பு பரவெளியில் அதனைக் கண்டு மகிழ்ந்து அதனோடு ஒன்றாய்க் கூடி நிற்பர். சிவச்சித்தர்கள் எனும் சிவஅறிவாளர்களும் சிவ அறிவால் இவ்வோங்காரத்தினைக் கூடி நின்று செவ்வியால் மேல் நிலையினை அடைவர். இதனாலேயே மூலம், சுவாதிட்டானம், கொப்புள், நெஞ்சு, கழுத்து, புருவநடு, உச்சி என்று உடலில் பெருமானை வைத்து எண்ணும் நிலைக் களங்களைக் குறிப்பிடுகையில் மூலநிலைக்களத்திற்கு உரிய கடவுளாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுவர்.

பிள்ளையாரின் வடிவு சிவத்தின் அகர, உகர, மகர எனும் ஓங்காரத்தைக் குறிப்பது. பெருமான் நம் உயிரில் சிவம், சத்தி, மாயை எனும் வடிவில் நின்று அல்லது ஒலி, ஒளி, மாயை எனும் வடிவில் ஓங்காரமாய் நின்று நம்மை இயக்குகின்றான் என்பதே இதன் பொருள். இதனாலேயே பிள்ளையாரை வினை முதல்வன் என்று குறிப்பிடுகின்றனர். பெருமானே ஓங்கார வடிவில் நின்று நம் எல்லா வினைகளையும் கூட்டுவிக்கின்றான் என்று உணர்த்துவதே பிள்ளையார் வடிவம். நம் அறியாமையினால் பிள்ளையாரைத் தனி ஒரு கடவுளாயும் சிவனின் மகனாகவும் எண்ணி மயங்கிப் பல்வேறு தவறுகளைச் செய்து வருகின்றோம். சிவ பெருமானும் பிள்ளையாரும் ஒன்றுதான் என்பதனை உணரத் தவறி விட்டோம்.

பெருமான் ஓங்கார வடிவில் நம் மூலநிலைக்களத்தில் நின்று உதவுகின்றான். அதனை உணர்ந்தாலே மேல்நிலையை அடைய இயலும் என்பதனை உணர்த்தவே திருக்கோயில்களில் பலிபீடத்திற்கு முன்பு உள்ள கொடிக்கம்பத்தின் அடியில் பிள்ளையார் திருவடிவினைச் செய்து வைத்தனர். கொடிக்கம்பங்களில் உள்ளள ஆறு முடிச்சிகள் உடலில் உயிர் நின்று இயங்கக்கூடிய ஆறு நிலைக்களங்களை உணர்த்தி நிற்கின்றன. மேல் நிலையை அடையும் உயிர், பரநாதம் எனப்படும் மேலான ஒலி நிலையை அல்லது சிவநிலையினை அடையும் என்பதற்காக மணிகளை அதன் உச்சியில் தொங்க விட்டுள்ளனர். உயிரை அதில் கட்டப்பட்டிருக்கும் கொடிச் சீலையாக ஒப்புமை காட்டினர். கோயில் கொடிக்கம்பங்களுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம் என்று முகப்பு இடுவதற்கு முனையும் நாம் அது உணர்த்தும் உண்மையையும் அறிய முனைவது இன்றியமையாதது.

நமசிவய என்ற திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவாக ஓங்காரம் இருக்கின்றது. திருவைந்து எழுத்து மந்திரத்தில் சிகரம் சிவத்தையும் வகரம் வனப்பாற்றலாகிய சத்தியையும் யகரம் யாக்கை எனும் மாயையிலான உடம்பையும் குறிக்கும். சிவய என்ற மந்திரத்தின் மறுவடிவே சிவத்தையும் சத்தியையும் மாயையையும் குறிக்கும் ஓங்காரம். இதனாலேயே திருமுறைகளில் ஓங்காரம் இன்றியே திருவைந்து எழுத்து மந்திரம் நமசிவய என்று பருவடிவிலும் சிவயநம என்று நுண்வடிவிலும் குறிக்கப் பெறுகின்றது. திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவம் ஓங்காரம் என்பதனைத் திருமூலரின் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. ஓங்காரத்தினை அசபா மந்திரம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நாம் சுவாசிக்கும் போது இயல்பாகச் சொல்லப்படுகின்ற மந்திரம் ஓங்கார மந்திரம் அல்லது அசபா மந்திரம் என்கின்றார் திருமூலர். நாம் காற்றை உள் இழுக்கும் போது வாயைத் திறந்து “அ” என்று (அங்காத்து) இழுத்தும் காற்றை வெளியே விடும் போது “உம்” என்றும் விடுகின்றோம். அதனால் இயல்பாகவே ஓங்கார மந்திரம் கூறுதல் அதில் இடம் பெறுகின்றது. திருவைந்து எழுத்தின் சிறப்பினையும் தனியே திருமூலர் குறிப்பிடுகின்றார். எனினும் திருவைந்து எழுத்தினைக் கணிக்கும் போது ஓங்காரத்தையும் முன் சேர்த்து, “ஓம் நமசிவய”, “சிவயநம ஓம்” என்று கணிக்கும் வழக்கு எவ்வாறோ வந்து விட்டது.

ஓங்காரம் மூல மந்திரம் என்றும் எல்லா மந்திரங்களுக்கும் கடவுளர்களுக்கும் உரியது என்ற வழக்கும் உண்டாகி எல்லாச் சூழலிலும் ஓதப்பெறுவது பரம்பொருளை எண்ணுவதாய் அமைகின்றது. வழிபாட்டுப் பொருட்களில் ஒன்றான சங்கும் இவ்வோங்காரத்தைக் கொண்டே சிறப்புப் பெறுகின்றது. சங்குகளின் உள்ளே காற்று நுழையும் போது இயல்பாகவே ஓம் எனும் ஒலி கேட்பதனால் சங்குகளில் திருநீறு இட்டு வைத்தல், சங்குகளில் நிரப்பிய நீரினால் திருநீராட்டுதல் (சங்காபிசேகம்) சிறப்பு என்றனர். ஆயிரத்து எட்டு சங்குகளினால் திருநீராட்டினால் ஆயிரத்து எட்டு முறை ஓங்கார மந்திரத்தைக் கூறியதற்கு ஒப்பாய் எண்ணினார்கள். இதனாலேயே சங்கினைக் கொண்டு சோழியம் பார்த்தல் எனும் கணிகை முறையினுக்கு அல்லது சோதிடம் பார்ப்பதற்குச் சங்குகளைப் பயன்படுத்தினார்கள். சங்கில் இயல்பாக ஓங்கார ஒலி ஏற்படுவதனாலேயே முன்பு காலத்தில் அணிகலன்களைச் சங்குகளை அறுத்து வளையல்களாகவும் காதணிகளாகவும் அணிந்தனர். இவ்வாறு செய்வதனால் ஓங்காரத்தைக் கூறும் நன்மை உண்டாகும் என்று நம்பினர். குழந்தைகளுக்கும் சங்கினால் பால் ஊட்டினர்.

எது எப்படி இருப்பினும் ஓங்காரமாய் பெருமான் இருக்கின்றான் என்பதனை உணர நாமே பெருமான் அளித்த வாயால், வாயாற உச்சரிப்பதே மேல் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் ஓங்கார வடிவாய் இருந்து நம்மை நாளும் மேம்படுத்துகின்றான் என்பதனை அறிந்து, உணர்ந்து அப்பெருமானை நன்றியினால் வழிபட வேண்டும் என்பதே மணிவாசகர் நமக்குக் கூறும் படிப்பினையாகும்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!