68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது

1124

நடராஜர் என்று வடமொழியில் அழைக்கப்பெறும் ஆடல் வல்லான் அல்லது கூத்தப்பிரான் திருவடிவில், உடுக்கை பரசிவம் இயற்றும் தோற்றுவித்தலையும் அமைந்த கரம் காத்தல் அல்லது நிற்பித்தலையும் குறிக்கும். வீசி நிற்கும் ஒரு கரத்தில் பெருமான் ஏந்தியுள்ள தீ, பெருமான் இயற்றும் அழித்தல் அல்லது துடைத்தலைக் குறிக்கும் என்று மெய்கண்ட நூல்களில் ஒன்றான உண்மை விளக்கம் என்ற நூல் குறிப்பிடும். பரசிவம் தீயின் துணைக்கொண்டே உலகையும் இதர கோள்களையும் அழிக்கின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பரசிவம் பூமியின் வயிற்றில் உள்ள வடவைத் தீயின் துணைக்கொண்டே கடல் நீரைக் கரையைத் தாண்டி வாராதவாறு அடங்கியிருக்கச் செய்கின்றது என்றும் முப்புற வாதிகள் என்று உருவகித்துக் கூறப்படும் ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களையும் தீயின் துணைக்கொண்டே எரித்து நீறாக்குகின்றது என்றும் திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பரசிவம் அரன் என்னும் வடிவில் நின்று இயற்றும் துடைத்தல் அல்லது அழித்தல் எனும் தொழில் மூன்று நிலைகளை உடையது என்கின்றார் திருமூலர். அழித்தல் அல்லது துடைத்தலை ஒடுக்கம் எனும் வழக்காலும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில் மூன்று ஒடுக்கங்கள் யாவை எனின் நாள் ஒடுக்கம், ஊழி ஒடுக்கம், பேர் ஊழி ஒடுக்கம் என்பனவாம். பெருமான் இயற்றுகின்ற துடைத்தல் தொழிலானது உயிர்கள் சிறிது காலம் இளைப்பாறுதல் அல்லது ஓய்வு எடுக்கும் பொருட்டுச் செய்வது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே, “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். அதாவது உயிர்களுக்கு இறப்பு என்பது உறக்கம் வருதலைப் போன்றது என்றும் பிறப்பு என்பது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது என்றும் பேராசான் குறிப்பிடுகின்றார்.

உயிர்கள் பிறப்பு எடுத்து வருகின்ற ஒவ்வொரு பிறப்பிலும் அவை செவ்வியுறுவதற்காகப் பெருமான் தோற்றுவித்தும் நிற்பித்தும் வந்த அனைத்தையும் உயிர் இளைப்பாறுவதற்காக அவ்வுயிரின் நுகர்ச்சிக்கு அவை வராமல் தற்காலிகமாக நீக்கிவிடுவதனையே நாள் ஒடுக்கம் எனப்படுகின்றது. உயிர்கள், புல், பூண்டு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, மாந்தர், பேய், கணங்கள், அசுரர், வானவர் போன்ற உடல் வகைகளை இவ்வுலகிலும் பிற உலகிலும் பெற்று வாழ்கின்றன. இவ்வுயிர்கள் தங்கி இருந்த உடல்களை அழிப்பதனையே துடைத்தல் எனப்படுகின்றது. பெருமான் துடைத்தலைச் செய்கின்றபோது உயிர்களின் உடலை மட்டும் அழிக்காமல் அவ்வுயிர்கள் வாழும் உலகும் அவற்றின் நுகர்ச்சிக்கு வராமல் பிரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட கால அளவு வரையிலும் உயிர்கள் நுகர்ந்து வந்த உலக வாழ்க்கை, நாடு, நகரம், மனை, வீடு, மனைவி மக்கள், சுற்றம், நண்பர்கள், பொன், பொருள், உடை, உணவு போன்றவை துடைத்து எடுக்கப்படுகின்றன. இதனையே இறப்பு என்கின்றோம்.

சில உயிர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் விபத்துக்களினாலோ, இயற்கைப் பேரிடரினாலோ, நோயினாலோ, பிற நடவடிக்கைகளினாலோ, உடல் உறுப்புக்களையும் பொன்னையும் பொருளையும் இழப்பது உண்டு. கை, கால், கண், காது, மூக்கு, வாய், மெய் செயல் இழப்பதும் இருதயம், மூளை, ஈரல், சிறுநீரகம் போன்றவை செயல் இழப்பதும் பெருமானின் துடைத்தல் தொழிலே அடங்கும். இவை அனைத்தும் உலையில் இட்ட அரிசியைப்போல் அழியக்கூடியவை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவன் செய்கின்ற துடைத்தலையும் நிலையாமையையும் நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம் என்று பேராசான் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுவார்.

பெருமான் இயற்றுகின்ற நாள் ஒடுக்கத்தில் உயிர்களின் உடலே மட்டுமின்றி பல உயிர்களும் வாழ்வதற்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும் குளிர்ந்த எட்டு உயர் மலைகளும் நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர் பரப்பு முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் நினைத்த மாத்திரத்திலேயே காய்தலைச் செய்யும் தீயைக் கொண்டு அழித்து உரு இல்லாதனவாகச் செய்து விடுவான்; இதில் வியப்பில்லை என்பதனை, “பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும், உதம் செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம், குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாச, விதம் செய்யும் நெஞ்சின் வியப்பில்லைதானே” என்கின்றார் திருமூலர். ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, தீ, என்பவை மட்டும் இன்றி ஆகாசம் எனப்படும் வெளியும் தம் தோற்றத்தில் அழியும் என்கின்றார். இறைவனின் துடைத்தல் தொழிலால் பரு உடலை விட்டு நீங்கும் உயிர்களில் சில உடனேயே மறுபிறவிக்கு உள்ளாகி  வேறு உடம்பைப் பெறுகின்றன. சில உயிர்கள் ஆவிகள் உலகில் இளைப்பாறுகின்றன. சில உயிர்கள் இறை உலகில் இளைப்பாறி மீண்டும் உலகிற்குப் பிறவி எடுத்து வருகின்றன. இன்னும் சில உயிர்கள் இறைவன் திருவடியிலேயே நிலைத்து நிற்கின்றன என்று குறிப்பிடுகின்றார்.

பெருமான் செய்கின்ற ஊழிஒடுக்கம் என்பது பரு உடலை நீங்கி நுண் உடலுடன் இறை உலகிலும் பிற உலகங்களிலும் வாழும் உயிர்களின் கருவிக் கரணங்களைத் துடைத்தல் என்பதாம். உயிர்களுக்கு நாம் அறிந்து வைத்திருக்கின்ற பரு உடலைத் தவிர்த்துக் கண்ணுக்குப் புலப்படாத நான்கு உடல்கள் உள்ளன. உயிருக்குப் பொறுத்தப் பெற்றிருக்கும் நான்கு உடல்கள் நுண் உடல், குண உடல், கஞ்சுக உடல், காரண உடல் என்பனவாம். உயிருக்குக் கொடுக்கப்பட்ட உடல்களை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். ஊழிஒடுக்கத்தில் பெருமான் உயிர்களுக்கு உள்ள நான்கு நுண் உடல்களையும் அந்நிலையில் அவற்றிற்கு அமைந்துள்ள உலகு, நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைத் துடைப்பான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

இறைவன் எல்லா உலகங்களையும் அவற்றின் நுகர்ச்சிப் பொருள்களையும் மாயை எனும் பொருளில் இருந்தே தோற்றுவிக்கின்றான். மாயை என்பது இறைவனால் படைக்கப் படாத என்றும் உள்ள பொருள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். மாயையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட எல்லாப் பொருள்களையும் அம்மாயைக்குள் மீண்டும் ஒடுக்குவதனையே பேரூழி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அவற்றை ஒடுக்குவிப்பவன் பரசிவம் ஒருவனே. வேறு யாரும் செய்ய இயலாது என்பதனை, “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று மணிவாசகர் திருவெம்பாவையில் குறிப்பிடுவார். பேரூழியில் நடைபெறும் துடைத்தலின் வழி எல்லாவற்றையும் மாயைக்குள் பெருமான் ஒடுக்குகின்றான் என்பதனை,   “பாழே முதலா எழும்பயிர் அப்பயிர், பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா, வாளா சங்காரத்தில் மால் அயன் செய்தியாம், பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே” என்கின்றார் திருமூலர். தாம் உரிமம் கொடுக்கத் தோற்றலையும் நிலைப்பித்தலையும் செய்து வந்த அயன், அரி போன்ற உயிர் வகைகளும் பெருமானின் பேரூழியின் போது துடைத்தலை எதிர்நோக்கும் என்பதனை உணர்த்தி நிற்றலே பிரமன் திருமால் போன்றவர்களின் மண்டை ஓடுகளைப் பெருமான் மாலையாக அணிந்து நிற்கும் கங்காளத் திருவடிவம் ஆகும் என்பர்.

நிலையில்லாத உலகத்தினையும் நுகர்ச்சிப் பொருள்களையும் தோற்றுவித்து நிற்பித்த பரசிவம் அதனை எப்பொழுதும் நிலைத்த ஒன்றாக வைக்காமல் துடைத்து அல்லது அழித்து ஒடுக்குவது தம்மிடத்தே உள்ள அழிவற்றத் திருவடி என்ற வாழிடத்தை அளிப்பதற்கேயாம். அதனை உணர்ந்து திருவடியை அடைவதற்காகப் பெருமான் அளித்துள்ள தற்காலிக உடம்பையும் உலகப் பொருள்களையும் நுகர்ச்சிப் பொருள்களையும் மிகச்சிறந்த வழியில் பயன்படுத்தி அவற்றின் துணையோடு இறையருளை முன் இருத்தித் திருநின்ற செம்மையோடு உலகில் யான் எனது எனும் செருக்கினை விடுத்து நிலைத்தப் பொருள் எது, நிலையற்றப் பொருள் எது எது என்ற உண்மையை உணர்ந்து வாழ்வோமேயானால் நிலையான வாழிடமான அவன் திருவடிகளை அடையலாம் என்கின்றார் திருமூலர். இறைவன் கொடுத்திருக்கின்ற இவ்வுலக வாழ்க்கை, இறைவன் உயிர்களுக்கு அளித்திருக்கின்ற கொடை என்பதனை உணர்வோமேயானால் தற்பெருமை பேசுவது நீங்கி என்றும் சிவத்தின் புகழையே நன்றிப் பெருக்கோடு பேசுகின்ற இயல்பு உண்டாகும். இதனையே, “என் செயலாவது யாதும் ஒன்று இல்லை, தெய்வமே நின் செயலே என்று உணரப்பெற்றேன்” என்பார் தாயுமானவ அடிகள். “ எப்பாரும் எப்பதமும் சென்றே நின் புகழைப் பேசிடல் வேண்டும்” என்பார் வள்ளல் பெருமான். எங்கும் எதிலும் சிவத்தைக் கண்டு மகிழ்கின்ற அன்பு இன்ப நிலை ஏற்படுமாயின் என்றும் இன்பமே! துன்பம் என்பது ஒருநாளும் இல்லையாம்.