129. அறிவுப் பூசனை
அறிவுப் பூசனையே ஞானப் பூசனை என்று திருமந்திரத்தில் குறிக்கப்படுகின்றது. சிவஞானம் என்ற சிவஅறிவினைப் பெற சீலம், நோன்பு, செறிவு ஆகிய நன்னெறிகள் படிக்கற்களாக அமைகின்றன என்பர். சீலம், நோன்பு, செறிவு ஆகியவற்றால் பெற்றப் பயன்களே சிவஅறிவினை உயிரில் முதிரச் செய்கின்றன என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. கோயில் திருத்தொண்டு, அடியார் திருத்தொண்டு, சிவத் திருத்தொண்டு என்று சீலத்தின் வழி சிவஅறிவு பெறத் தலைப்படுவர். பின்பு சீலத்தில் பெற்றப் பயனால் வேள்வி, திருக்கோயில் சிவபூசனை, இல்லச் சிவபூசனை என்று நோன்பு நெறியில் நின்று இறைவனை அகத்திலும் புறத்திலும் கண்டு பூசனை இயற்றிச் சிவ அறிவினைப் பெற முயல்வர். சீல நெறியில் நின்றதனாலும் நோன்பு நெறியில் நின்றதனாலும் பெற்றப் பயனால் செறிவு நெறியில் உடலில் உள்ள ஆதாரங்கள் எனப்படும் நிலைக்களங்களில் இறைவனை வைத்து எண்ணிச் சிவ அறிவினை வளர்க்க முயல்வர். இத்தகைய முயற்சிகளின் பயனினாலும் இறைவனின் திருவருளினாலும் சிவ அறிவு முதிர்ச்சி பெறும் என்று சித்தாந்த மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
சிவ அறிவு முதிரப் பெற்றவர்களுக்குப் புறத்தே கண்ட சிவலிங்கத்தை அகத்தே வைத்து எண்ணுதல் என்பது என்று இல்லாமல் அவர்களின் உயிரையே சிவலிங்கமாக எண்ணும் நிலை ஏற்படும் என்கின்றார் திருமூலர். சிவஅறிவாளர்கள் அல்லது சிவஞானியர்க்கு அவர்களின் ஊன் பொருந்திய உடம்பே ஆலயமாகவும் உயிரே சிவலிங்கமாகவும் அவர்களின் அறிவே உயிராகிய சிவலிங்கத்திற்குப் பூசனை செய்யும் அடிமையாகவும் அவர்களின் வாயே அச்சிவலிங்கத்தின் நேர் நோக்கு வாசலாகவும் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பொறிகளின் உணர்வுகளே ஒளி மிக்க இரத்தின தீபங்களாகவும் அமையும் என்கின்றார் திருமூலர். இதனை,
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்,
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே”
என்று குறிப்பிடுகின்றார்.
“தெள்ளத் தெளிந்தார்” எனப்படும் சிவஅறிவு முதிர்ச்சிப் பெற்றவர்க்கே உயிரைச் சிவலிங்கமாக எண்ணி அறிவுப் பூசனை இயற்றும் நிலை ஏற்படும் என்கின்றார் திருமூலர். சிவசித்தர்கள் எனப்படும் இவ்வறிவுப் பூசனை இயற்றுகின்றவர் எங்கும் எப்பொழுதும் அறிவால் இறைவனைப் பூசனை செய்து கொண்டே இருப்பர். இவர்களுக்கு, வெளியே கருவறையில் காணப்படும் சிவலிங்கமும் திருக்கோயிலும் வேண்டுவது இல்லை என்கின்றார். இவர்களுக்குக் கருவறை புறத்தே கண்முன்னே இருப்பினும் இவர்கள் சிவ அறிவினைத் துணைக்கொண்டே உள்ளே உயிரைச் சிவலிங்கமாய் வழிபடுவர் என்கின்றார் திருமூலர். சிவஅறிவு முதிர்ச்சியாளர்களை விடுத்து பிறர் புறத்தில் காணப்படும் சிவலிங்கங்களை அகத்தில் கற்பித்துக்கொண்டு அகத்தும் புறத்தும் வழிபடுவர் என்கின்றார். சிவஅறிவாளர் அகத்து மட்டும் வழிபடுவர் என்கின்றார். இவர்கள் அகத்தே அறிவால் செய்யும் பூசனை அறிவுப் பூசனை என்றும் பிறர் செய்யும் பூசனையைச் சிவபூசனை என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே, “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார்.
சீலநெறியில், திருக்கோயில் திருத்தொண்டின் வழியும் சிவத் தொண்டின் வழியும் இறைவனை வழிபடுகின்றவர் பழம், பொங்கல், உணவு என்பனவற்றைத் திருவமுதாக இறைவனுக்குப் படைத்து வழிபடுவர். அவற்றை இறைவன் உண்பதாக எண்ணி மகிழ்வர். இறைவனும் உண்பது போன்று நடித்து அருள் புரிவான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஏனெனில் ஒளிப்பொருளாய், அறிவுப் பிழம்பாய், பேர் ஆற்றலாய், திருவருளையே தனக்குத் திருமேனியாய் உடைய பெருமானுக்கு உணவு வேண்டுவது என்பது இல்லையாம். அன்பர்கள் அவர்களின் மன நிறைவுக்காகவும் இறைவன் செய்யும் உதவிக்கு அவர்கள் கைமாறு செய்வது அறியாது இதனை அன்போடு செய்கின்றனர் என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும். இறைவன் உண்ணுதல், உடுக்குதல் என்ற மாந்தரின் இயல்புகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதும் உணர்தல் பாலதாகும். நோன்பு நெறியில் நின்று பூசனை இயற்றி வேள்வித் தீயில் சிவனை வழிபடுபவரும் சிவலிங்கத் திருமேனிக்குப் பூசனை இயற்றி வழிபடுபவரும் இறைவனுக்குத் திருவமுது படைப்பர். வேள்வித் தீயினைச் சிவமாக எண்ணிப் பூசனை இயற்றுவர். சிவனை எண்ணி அவ்வேள்வித் தீயில் உணவை இட்டு, அவ்வுணவினைப் பெருமான் உண்டு மகிழ்வதாக எண்ணி அகமகிழ்வர். சிவலிங்கத் திருமேனிக்குப் புறத்தே பூசனை இயற்றுபவரும் அச்சிவலிங்கத் திருமேனியின் முன் உணவுப் பண்டங்களைப் படைத்து அவற்றை இறைவன் உண்பதாக எண்ணி மகிழ்வர். இறைவனும் உண்பதைப் போன்று ஏற்றும் நடித்தும் அவர்களுக்கு அருள் புரிவான் என்பர்.
அறிவுப் பூசனை இயற்றுவோர், உயிராகிய சிவலிங்கத்தினைச் சிவஅறிவால் வழிபடுவதனால், புறத்திலே வழிபடுகின்றவர்கள் போன்று, பூசனைக் காலங்களில் வழக்கமான உணவுப் பொருள்களைத் திருவமுதாகப் படைப்பது இல்லை என்கின்றார் திருமூலர். மாறாக அங்குப் பெருமானுக்குக் காட்டும் உணவானது அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற திருமுறைப்பாடல்களே என்கிறார். உண்மையில் அறிவுப் பூசனையில் திருவமுதாக ஓதப் பெறும் திருமுறைகளும் சிவஅறிவாளர் சிந்தையை மகிழ்விப்பதே அல்லாமல் அதுவும் இறைவருக்கு வேண்டுவது இல்லை என்று குறிப்பிடுவர். இதனாலேயே, “சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். திருமுறைப் பாடல்களை அகம் குழைந்து ஓதுவதனால் இறைவன் அகமகிழ்வது இல்லை! ஏனெனில் அவன் என்றும் ஒருபடித்தானவன். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். அன்போடு அடியார்கள் அவனைப் போற்றிப் பாடுவதைக் கேட்டு மகிழ்வது போன்று நடிக்கும் அவன் உண்மையில் நம்மைத் தான் அதன் வழி அகம் குழையவும் நெக்கு உருகவும் செய்விக்கின்றான் என்பர்.
பெருமானின் பெருமைகளையும் நம் சிறுமைகளையும் அவனின் அருளும் திறத்தையும் அவன் உயிர்களின் மீது காட்டும் பரிவினையும் உணர்த்துகின்ற திருமுறைகல் போன்ற போற்றிப் பாடல்கள் நம்மை கசிந்து உருகச் செய்கின்றன. பெருமானின்பால் மேலும் ஈடுபாட்டினை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே அறிவுப் பூசனை இயற்றுகின்றவரும் தங்களது அறிவு பூசனையில் திருமுறைகள் போன்ற போற்றிப் பாடல்களைத் திருவமுதாகப் படைப்பர் என்பதனை,
“வேட்டுஅவி உண்ணும் விரிசடை நந்திக்குக்,
காட்டவும் யாம்இலம் கலையும் மாலையும்,
ஊட்டுஅவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்,
பாட்டுஅவி காட்டுதும் பால்அவி ஆமே”
என்று குறிப்பிடுகின்றார். அறிவுப் பூசனையில் போற்றிப் பாடல்களாய்ப் படைக்கப்படும் திருவமுது சொற்களேயானாலும் அதில் பொதிந்துள்ள பொருள் பாற்சோற்றிற்கும் உயரியவானதாகக் கொள்ளப்படும் என்கின்றார் திருமூலர்.
பெருமானுக்கு ஊட்டி மகிழ்தலும் காட்டி மகிழ்தலும் போற்றி மகிழ்தலும் உரியனவே ஆயினும் அவ்வவ் நிலையில் பெருமான் ஏற்று அருள்புரிவான் என்கின்றார் திருமூலர். உயிரையே சிவலிங்கமாகவும் அச்சிவலிங்கத்தினைச் சிவஅறிவால் வழிபடும் அறிவு வழிபாட்டினையும் திருமுறை போன்ற போற்றிப் பாடல்களையே திருவமுதாகப் படைத்தலையும் திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். ஊன் உடம்பையே கோயிலாகவும், வேகம் உடைய அறிவினை அத்திருக்கோயிலில் இறைவனுக்கு வழிபாடு இயற்றும் அடிமையாகவும் வாய்மை என்பதே அத்திருக்கோயிலின் தூய்மையாகவும் உயிரே சிவலிங்கமாகவும் அறிவுப் பூசனை இயற்றுவோர் மேற்கொள்வர் என்பார். பெருமானிடத்தில் கொள்கின்ற அன்பினையே நெய்யாகவும் பாலாகவும் நீராகவும் கொண்டுத் திருமஞ்சனம் செய்து போற்றிப் பாடல்களையே பெருமானுக்குத் திருவமுதாகப் படைப்பர் என்பதனை,
“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாகக்,
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக,
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி,
பூசனை ஈசனார்க்குப் போற்றுஅவி காட்டினோமே”
என்று குறிப்பிடுவார்.
திருக்கோயில் தொண்டும் அடியார் தொண்டும் சிவத்தொண்டும் சிவவேள்விகளும் சிவப்பூசனைகளும் செறிவு நெறியில் நின்று இயற்றப்பெறும் நிலைக்கள வழிபாடுகளும் அறிவு நெறியில் நின்று இயற்றப்படும் அறிவுப் பூசனையை நோக்கியே என்பதனை உணர்வோமேயானால் பொருளற்ற செயற்பாடுகளும் மூடநம்பிக்கைகளும் தவறான பூசனைகளும் இலக்கு அற்றச் செறிவுப்பயிற்சிகளும் நீங்கி உண்மைச் சிவஅறிவு வழிபாடு தலைப்படும்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!