89. பொறுமை கடலினும் பெரிது

13433

சீர்மிகு செந்தமிழரின் சீரிய சிந்தனையில் உதித்த தமிழ் மறையாகிய திருக்குறள் பொறுமையைப் பற்றி விரிவாகப் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது. தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல, தம்மை மனம் நோகும்படி இகழ்ந்து பேசுவாரையும் பொறுத்துக் கொள்பவரே மாந்தரில் தலையாய பண்பினை உடையவர் என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. வலிமை மிக்கவனின் உண்மையான வலிமை என்னவெனில் அறிவில்லாதவர் செய்த தீங்கினைப் பொறுத்துக் கொள்ளல் என்று குறிப்பிடுகிறது. ஒருவர் நிறைவு உடைமை அல்லது நற்பண்பில் முழுமை பெறுதலை அடைய வேண்டுமானால் பொறுமையைப் போற்றிக் கடைப்பிடித்தல் வேண்டும் என்கின்றது திருக்குறள். மேலும் தீங்கு செய்தவரைப் பொறுத்துக்கொள்ளாமல் வருத்தினவரை உலகத்தவர் ஒரு பொருளாக மதிக்கமாட்டார் என்றும், அதற்கு மாறாகத் தீங்கு செய்தவரைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர் என்றும் குறிப்பிடுகிறது. இதனாலேயே பொறுமை கடலிற் பெரிது என்பார்கள்.

பொறுமையின் சிறப்பினை உணர்த்தும் திருக்குறள், தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவருக்கு ஒரு நாள் இன்பமே கிட்டும் என்றும் அத்தீங்கு செய்தவரைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. இதனையே, “பொறுத்தார் பூமி ஆள்வார்” எனும் வழக்காலும் குறிப்பிடுவர். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்கின்றவர்களை வெல்வதற்கு மிகச் சிறந்த வழி பொறுத்தலே என்கிறது திருவள்ளுவம். தாங்கொணாத, எல்லை கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடும் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் பற்றுக்களைத் துறந்த துறவியைப் போன்று தூய்மையானவர்கள் என்கின்றது திருக்குறள். பொறுமைப் பண்பு உடையவர்களின் சிறப்பின் முத்தாய்ப்பாகத் திருக்குறள் குறிப்பிடும் அரிதான ஒன்று என்னவெனில் உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவரைக் காட்டிலும் பிறர் சொல்லும் கொடும் சொற்களைப் பொறுப்பவர் நோன்பு நோற்பவரைக் காட்டிலும் நிலையில் உயர்ந்தவர் என்பதுதான். இவ்வரிய பொறுமைப் பண்பினையே திருமூலரும் இரண்டாம் தந்திரத்தில் பொறையுடைமை எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.

பொறுமை இல்லாதவரிடத்தே அன்பும் அருளும் உண்டாகாது என்பதனால் அவர் அன்பின் வடிவாய் உள்ள சிவத்தை உணர்தல் இயலாது என்கின்றார் திருமூலர். பொறுமை இல்லாமை சினம் என்ற வெகுளிக்கு அடிப்படையாகின்றது என்கின்றார். சினத்தைத் தவிராதவருக்குக் காமம் என்ற ஆசையும் மயக்கம் என்ற அறிவு மங்கலும் நீங்காது என்கின்றார். பொறுமை இல்லாமையின் விளைவே சினமாகி, சினத்தால் கடும் சொற்கள் வெளிவருகின்றன என்கின்றார் திருமூலர். மனம், வாக்கு, காயம் என்பவற்றால் நிகழும் தீங்குகள் அனைத்தும் பொறுமை இன்மையின் காரணத்தினாலேதான் என்கின்றார் திருமூலர். “யான், எனது” என்ற செருக்கே நமக்குப் பொறுமையை இழப்பதற்குக் காரணமாகின்றது என்கின்றார் திருமூலர். இறைவன் நமக்கு அளித்துள்ள இவ்வுடல், இவ்வுடலிலுள்ள கருவிகள், நாம் வாழும் உலகம், பணம், பதவி, பட்டம், மனைவி, மக்கள் போன்ற நுகர்ச்சிப் பொருள்கள் எல்லாம் இறைவன் கொடுத்தவை. இவை தற்காலிகமானவை. உரிய காலம் வரும் போது இவை நம்மிடம் இருந்து பறிக்கப்படும் என்பதனை உணராமல் செருக்கித் திரியும் நம்மையும் இவற்றையெல்லாம் கொடுத்த இறைவன் பொறுமையுடன் மன்னித்து காத்து அருளுகின்றான் என்பதனை உணர வேண்டும் என்கின்றார் திருமூலர்.

உலகையும் உலகப் பொருட்களையும் தோற்றுவித்தும் நிறுத்தியும் அழித்தும் மறைத்தும் அருளியும் பெருங் கருணைப் புரியும் இறைவனும் கூட பொறுமையோடு இருக்கின்றான். உயிர்களுக்கெல்லாம் தலைவனான, பேர் ஆற்றல் மிக்க இறைவனும் கூட உயிர்கள் இழைக்கும் குற்றங்களைப் பொறுமையோடு நின்று மன்னித்து அருளுகின்றான். இதனால் அவனின் திருவடியை அடைய விரும்பும் அடியார்களே, அவனின் திருவருளை உணர விரும்பும் அடியார்களே, நீங்கள் வாழும் இடத்திலும் அதற்கு வெளியேயும் உள்ள எவ்விடத்திலும் எவ்வுயிரிடத்திலும் இயன்ற அளவு பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு வைத்துக் கொள்ளப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள் என்பதனை, “வல்வகையால் உம் மனையிலும் மன்றிலும், பல்வகையாலும் பயிற்றிப் பதஞ்செய்யும், கொல்லையில் நின்று குதுகொள்ளும் கூத்தனுக்கு, எல்லை இலாத இலயம் உண்டாமே” என்று குறிப்பிடுகின்றார்.

திருமூலரின் இவ்வரிய செய்தியினைச், சமய நெறிகளை வாழ்ந்துகாட்டிய நாயன்மார்களின் வரலாற்றில் காணலாம். சைவ சமய வாழிவியல் பெட்டகமான பெரிய புராணத்தில், திருஞானசம்பந்தர் வரலாறு பொறுமையைப் பற்றி விளக்குகின்றது. பாண்டிய நாட்டின் அரசியார் மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் தம் அடியார்களுடன் மதுரையில் மடத்தில் தங்கியிருந்தார். அது போது சமண சமயத்தவர் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சமணர் வைத்தத் தீ அடியார்களுக்குத் தீங்கு விழைவித்த போதினும் தம்முடைய சினம் காத்துப் பொறுமையுடன் சமணர்களின் இத்தீய செயலுக்குத் துணைபோகிய பாண்டிய மன்னனைச் சைவத்திற்கு மீட்கவும் மங்கயர்க்கரசியாரின் இல்வாழ்வு நிலைக்கவும் பொறுமையுடன் இறைவனின் திருவருளை எண்ணி, “பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என்று தீயினுக்கு ஆணையிட்டார். தீயானது பாண்டியனை மெல்லச் சென்று பற்றிக் கொள்ள வேண்டும் என்று அச்சுழலிலும் பொறுமையோடு செயல்பட்டதனைத் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார்.

திருநாவுக்கரசு அடிகள் வரலாற்றிலோ, சமணர்கள் திருநாவுக்கரசருக்குப் பல்வேறு தீங்குகளைச் செய்தனர். சுண்ணாம்பு உலையில் இட்டும், நஞ்சு கலந்த சோற்றைக் கொடுத்தும், தரையில் கிடத்திச் சினங் கொண்ட யானையை ஏவி காலால் இடரச் செய்தும், கல்லோடு பிணைத்துக் கடலில் இட்டும் பல கொடுமைகளைச் செய்தனர். இறைவனின் திருவருளை முன்வைத்துப் பொறுமையோடு இருந்து அவர்களின் செருக்கினை வென்றார். தவிர, சிவ உணர்வு ஒருவருக்குக் கிட்ட வேண்டுமானால், “மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப், பொய்மையாம் களையை வாங்கி பொறையெனும் நீரைப் பாய்ச்சி ……….. சிவகதி விளையும் அன்றே” என்று நான்காம் திருமுறையில் குறிப்பிடுவார். அதாவது சிவகதி அடைய விரும்புவோர், உண்மை என்ற கலப்பையைக் கொண்டு உள்ளத்தைக் கிளறி, அன்பு எனும் விதையை அவ்வுள்ளத்தில் விதைத்து, வேண்டாத தீயப் பண்புகள் எனும் களைகளைப் பிடுங்கி எறிந்து, அன்பு எனும் சிவப் பயிர் வளர பொறுமை எனும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

இறை நெறியான அன்பு நெறிக்கு நம்மை ஆளாக்கிக் கொள்ள விரும்பும் அன்பர்கள் அகத்திலேயும் புறத்திலேயும் இறைவனுக்குச் செய்யும் பூசனை முறைகளைச் செய்வதோடு, பொறுமை போன்ற நற்பண்புகளை உள்ளத்தில் நீங்காமல் வைத்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். பெற்றோர், மனைவி, மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், பணியிடத்திலுள்ளவர்கள், ஊர், நாடு என்று எவரிடத்திலும் இப்பொறுமைப் பண்பு பெருகுமானால் உள்ளத்தில் அன்பும் அருளும் உண்டாகும் என்கின்றார் திருமூலர். இப்பொறுமைப் பண்பு வளர பெற்றோரிடத்தில் பொறுமையுடன் இன் சொற்களைப் பேசுவோம். உடன் பிறந்தோருடன் பொறுமையுடன் இன் சொற்களைப் பேசக் கற்றுக் கொள்வோம். அன்பு மனைவியிடமும் அருமை கணவரிடமும் பொறுமையோடு பேசிப் பழகுவோம். பிள்ளைகளிடத்தில் பொறுமையைக் கடைபிடித்து அவர்கள் பொறுமைப் பண்பைப் பெறுவதற்கு முன்மாதிரியாக விளங்குவோம். நம்மை விட படிப்பாலோ, பணத்தாலோ, பதவியாலோ, பட்டத்தாலோ, அழகலோ, வலிமையாலோ குறைந்தவர்களிடம் பொறுமை காத்து இன்முகம் காட்டி இன்சொற்களைப் பேசக் கற்றுக் கொள்வோம். எதற்கெடுத்தாலும் எறிந்து விழுவதனை விடுத்து, பொறுமையுடன் அறிவுக்கு இடமளித்து அமைதி காப்போம். நாம் செய்யும் குற்றங்களையெல்லாம் பொறுமையோடு நின்று பார்த்துக் கொண்டிருக்கும் பரம்பொருளான சிவத்தின் பொறுமையைச் சிறுமையை உடைய நாம் எண்ணிப் பார்த்துக் குற்றம் விழைவிப்பவரிடம் பொறுமை காப்போம். குற்றம் செய்பவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்வோம். பொறுமையின்மையினால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணிப் பார்த்துப் பொறுமையை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!