7. எழுவகை உயிரில் அடங்காதவன்

2225

மூவாயிரம் தமிழ் மந்திரங்களைக் கொண்டு  தமிழ்ச் சிவ ஆகமத்தின் பிழிவாக விளங்குவது திருமந்திரம். திருமூலர் அருளிய அத்திருமந்திரத்தின் முதல் பாடலில், “ஏழு உம்பர்ச் சென்றனன்” என்று இறைவனைக் குறிப்பிடுகின்றார். ஏழுக்கு அப்பாலாய் மேற்கடந்து, தானேயாய் நின்றான் என்பதே இதன் பொருள் என்று மகா வித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுவார். எந்த ஏழிற்கு அப்பாற் பட்டுத் தானேயாய் இறைவன் நிற்கின்றான் எனக் குறிப்பிடுகையில், “ஏழு அண்டத்து அப்பாலான்” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். பெருமானின் அகண்டிதத்தை மேல் நோக்கி குறிப்பிடும் இதில் பெருமான் ஏழு அண்டங்களைக் கடந்து நிற்கின்றான் என்பார்.

பெருமான் நான்முகன், திருமால், துடைப்போன், மறைப்போன், அருளோன், சத்தி, சிவன் ஆகியோரின் ஏழு உலகங்களையும் கடந்தவன் என்பதாலும் ஏழு உலகத்தைக் கடந்தவன் என்பர். தவிர, பெருமானின் அகண்டிதத்தைக் கீழ்நோக்கிக் காண, பாதாள உலகு ஏழையும் கடந்தவன் என்பர். இதனைப், “ பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்” என்று திருவாசகத்தின் திருவெம்பாவையில் குறிப்பிடுவார் மணிவாசகர். சிவஞான சித்தியார் என்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூலின்படி, பெருமானின் திருவருள், வாணி, திரு, துடைப்போள், மறைப்போள், அருளம்மை, ஒளிச்சத்தி, சத்தி என்ற ஏழு சத்திகளாக வந்தும் அதற்கு மேலாக பராசத்தி, பரம சிவன் என்றும் தானேயாய் நிற்கின்றது என்கிறது. பெருமான் இளி (சட்சம்), விளரி (ரிசபம்), தாரம் (காந்தாரம்), குரல் (மத்திமம்). துத்தம் (தைவதம்), கைக்கிளை (நிடாதம்), உழை (மேல்சட்சம்) என்ற ஏழிசையின் இன்பத்திற்கும் அப்பாற்பட்டவனாக இருப்பதையும் ஏழாகக் குறிப்பிடுவதும் உண்டு. இதனை,     “ ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று சுந்தரரும், “பண்ணும் பதம் ஏழும்” என்று திருஞானசம்பந்த அடிகளும் குறிப்பிடுவர். பெருமான் ஏழுக்கு அப்பாற்பட்டவன் என்று பலவற்றைக் குறிப்பிடினும் ஏழு வகை உயிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று நோக்குவது சிறப்புடையதாய் அமைகிறது.

சீர்மிகு செந்தமிழர் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள் முட்டை, வியர்வை, விதை, கரு என்ற நான்கு வகைகளிலேயே தோன்றுகின்றன. அவை தேவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என எழுவகைப் பிறவிகளிலே பிறக்கின்றன என்கின்றது. உலகின் உயிர் வகைகள் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் எனவும் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு பிறக்கின்ற உயிர் வகைகள் அறிவு நிலையில் வேறுபடுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. தொட்டால் அறியும் ஓர் அறிவினை மட்டும் உடையன தாவரங்கள். தொடுதல், சுவை என்ற இரண்டினை மட்டும் அறியும் அறிவினை உடையவை இப்பி, சங்கு போன்றவை. கறையான், எறும்பு முதலியன தொடுதல், சுவை, மணம் போன்றவற்றை அறியும் ஆற்றல் உடையன. வண்டு, தும்பி முதலியன தொடுதல், சுவை, மணம், காணுதல் போன்றவற்றை அறியும் நான்கு அறிவினை உடையன. ஐந்து அறிவினை உடையன விலங்கு, பறவை முதலியன. இவை தொடுதல், சுவை, மணம், காணுதல், ஒலியைக் கேட்டல் போன்ற ஐந்து அறிவினை உடையன. மேற்கூறிய ஐந்து அறிவுகளோடு பகுத்து அறியும் ஆறாவது அறிவோடு கூடியவர் மாந்தரும் தேவரும் ஆவர். இத்தகைய ஏழு வகை உயிர்களுக்கும் அப்பாற்பட்டவன் பெருமான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

உயிர்களில் உயர்ந்தவையாகக் கருதப்படும் ஆறு அறிவை உடைய தேவர், மாந்தர் ஆகியோருக்கும் மேலான அறிவை உடையவன் பெருமான். பெருமான் வாலறிவன் என்பார் திருவள்ளுவர். பெருமான் மேற்கூறிய நால்வகைத் தோற்றத்திற்கும் உட்படாதவன். அவன் பிறப்பு இறப்பு அற்றவன். அவன் பிறவிக்கு உட்படாதவன். உயிர் வகைகளுக்கு அப்பாற்பட்டவன். அருளாளர்களுக்கும் பிற உயிர்களுக்கும் அருள்புரிவதற்காக இறைவன் மாந்த வடிவமும் பிற உயிர்களின் வடிவமும் சூழலுக்கேற்பத் தற்காலிகமாகக் கொள்வானே ஒழிய அவனது உண்மை நிலை அதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்கிறார் திருமூலர்.

ஏழு வகை உயிர்களுக்கு உட்படாதவனாய், அவற்றிற்கு அப்பாற்பட்டவனாய் விளங்கும் பெருமானின் உண்மை நிலையை உணர்ந்து நம்மிடையே உள்ள மயக்கத்தினைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பது திருமூலரின் கருத்து. தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பிறந்து இறக்கும் உயிர் வகையினர் என்பதனால் அவர்கள் ஒருபோதும் கடவுளாக மாட்டார்கள். சிவமே சிவ குருவாக மாந்த வடிவம் தாங்கி வந்தாலே ஒழிய பிறரைச் சிவம் என எண்ணுதல் சித்தாந்த சைவத்திற்கு ஏற்புடையது அன்று. கடவுள் வேறு குரு வேறு என்பதனைத் தெளிய வேண்டும் என்பது திருமூலரின் கருத்து. சிவ குரு வேறு மாந்த குரு வேறு. மாந்த குருமார்களுக்கு மறியாதையால், பணிவால், நன்றியினால் வணக்கம் தெரிவிக்கலாம். அவர்களை வழிபடுதல் என்பது தவறு. வழிபாடு இறைவன் ஒருவனுக்கே. ஏழு உயிர் வகைகளையும் கடந்து நிற்கின்ற அவனே வழிபாட்டிற்கு உரியவன்.

பிறந்து இறந்த போற்றுதலுக்குரிய நம் முன்னோர்களும் நாட்டிற்கு உயிரை ஈகம் செய்த வீரர்களும் மக்களின் நலனைக் காத்தத் தலைவர்களும் காவலர்களும், சான்றோர்களும் உயிவகைகளாக இருப்பதனால் அவர்களை வழிபடுதல் பெருமானை வழிபடுதல் ஆகாது. மேற்குறிப்பிட்டவர்களையும் காத்து அவர்களுக்கும் மேலாய் இருக்கின்ற பெருமானை வழிபடுதலே உண்மை இறை வழிபாடு. மருத்துவ இயல்புடைய வேப்பிலை, ஆல், அரசு போன்ற மரங்களும் பெருமானை நினைப்பிக்கின்ற யானை, பசு, பாம்பு, போன்ற விலங்குகளும் மயில், சேவல் போன்ற பறவைகளும் உயிர்களே ஆதலின் அவற்றை இறைவன் என்று எண்ணுதலும் வெறும் மயக்கமே! அவற்றைப் படத்து அவற்றிற்கும் மேம்பட்டு நிற்கும் பெருமானை வணங்குவதே தெளிவு உடைமையாகும் என்பது திருமூலரின் குறிப்பு.