1. மழை இறைவனது திருவருள் வடிவு

1383

மழையின் சிறப்பினை, “வான் சிறப்பு” எனும் அதிகாரத்தில் ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருதலால் மழை உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இறவா நிலை அளிக்கும் அமிழ்தம் என்கின்றார். மழை பெய்யாமல் போகுமானால் பசி பரந்த உலகத்து உயிர்களை வருத்தும் என்கின்றார். மழை இல்லையானால் உழவு தடைபடும். மாந்தர் வாழ்வு கெட்டுப்போவதோடு மட்டுமல்லாமல் புற்பூண்டுகள் கூட வாழ வழியில்லாமல் போகும் என்கின்றார். மழை அற்றுப் போகுமானால் பிறர் பொருட்டுச் செய்யும் தானமும் நம் பொருட்டு செய்யும் தவமும் இடம்பெறாது போவதோடு மட்டுமல்லாது மாந்தரின் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என்கின்றார். மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் இறைவழிபாடும் திருவிழாக்களும் நாள் வழிபாடும் கூட நின்றுவிடும் என்பதனைச், “சிறப்பொடு பூசனை செல்லாது வானம், வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு” என்று குறிப்பிடுவார். இக்கருத்தினையே மூவாயிரம் தமிழ் அருளிய திருமூலரும் சுட்டுகின்றார்.

              திருமந்திரத்தில் வான் சிறப்பு எனும் பகுதியில் மழையின் சிறப்பினைத் திருமூலர் குறிப்பிகின்றார். மாந்தர் வாழ்வில் ஒழுக்கம் நிலை பெறுவதற்கு உலகில் முதலில் வேண்டுவது மழை என்று குறிப்பிடுகின்றார். “அமுதூறு மாமழை நீர் அதனாலே, அமுதூறும் பன்மரம் பார்மிசை தோன்றும், கமுகு ஊறுதெங்கு கரும்பொடு வாழை, அமுதூறும் காஞ்சினரை ஆங்கதுவாமே” என்று குறிப்பிடுகின்றார். வற்றாத அமுத ஊற்றுப் போலச் சுரந்து பொழிகின்ற மழை நீராலே உயிர்களுக்குப் பலன் தருகின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்கின்றன. அவை உலக உயிர்கள் வாழ்வதற்கு வேண்டும் நிலையான உணவு முதலான பல நன்மைகளை அளிக்கின்றன. உலகில் உயிர்கள் வாழ உயிர்க்காற்றைக் கொடுத்துக் கரியமில காற்றினைப் போக்குகின்றன. உலகம் வெப்பம் அடைவதிலிருந்து நம்மைக் காக்கின்றன. உண்ணும் உணவாக நின்று உதவும் மழை, உண்ணும் உணவினைத் தரும் பல மரங்களும் பயிர்களும் வளர்வதற்குத் துணை நிற்கின்றன என்கின்றார். அவற்றுள் இவ்வுலகில் உயிர்கள் தொடர்ந்து வாழ துணை நிற்கும் பாக்கு மரம், தென்னை, கரும்பு, வாழை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். மழையின் துணையாலே மாந்தருக்கு நிரம்பிய உணவை இம்மரங்கள் கொடுக்கின்றன. இத்தகைய மழை இல்லையானால் உலகம் பெரும் துன்பம் அடையும் எனவும் அத்துன்பம் எல்லோராலும் வெறுக்கப்படும் பெரும் துன்பமாகவும் அமையும் என்கின்றார். எல்லோராலும் வெறுக்கப்படும் துன்பமாக இத்துன்பம் இருப்பதனாலும் அது உயிர்களுக்கு இறப்பினைத் தரக்கூடியது என்பதனாலும் மழையினால் எட்டி போன்ற நச்சு மரங்களும் தோன்றுவனவே என்று குறிப்பால் உணர்த்துகின்றார்.

        உலக உயிர்கள் உண்ணவும் பயிர்கள் வளரவும் பெரும் துணையா மழை இருப்பதனாலேயே மழையை இறைவனின் திருவருளுக்கு நேராக வைத்து, ‘மாரி’, ‘மாரியம்மன்’ என்று மழைக்கு அம்மை வடிவம் கொடுத்தனர் நம் பண்டைத்தமிழர். உழவுத் தொழிலைத் தங்கள் குடும்பத் தொழிலாகச் செய்து வந்த தமிழர்கள் முத்து முத்தாகப் பெய்த மழையை, ‘முத்து மாரியம்மன்’ என்றும் கருமேகம் திரண்டு மழை பெய்வதனால், ‘கருமாரியம்மன்’ என்றும் குறிப்பிட்டனர். மழை இறைவனது திருவருள் வடிவாக இருக்கின்றது என்ற கருத்தினைத் திருவாசகத்தில் மணிவாசகரும் குறிப்பிடுவார். “முன்இக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள், என்னத்திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின், மின்னிப் பொலிந்து எம் பிராட்டித் திருவடிமேல், பொன்னம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம், என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு, முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்” என்று குறிப்பிடுவார். மழை மேகமானது முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மை உடையவளாகிய அம்மையின் திருமேனியினைப் போல நீல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாக உடைய அவ்வம்மையின் சிறிய இடை போன்று மின்னலாய் மின்னி விளங்கி, எம் பிராட்டியாய் இருக்கின்ற அவ்வம்மைத் திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்புபோல் இடியாய் ஒலித்து, அவ்வம்மையின் அழகிய திருப்புருவம் போல் வளைந்து வானவில்லினை விட்டு, நம்மை அடிமையாக உடைய அவ்வம்மையை விட்டுப் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய சிவபெருமானது அடியார்களுக்கும் பாவை நோன்பு நோக்கின்ற பெண்களாகிய நமக்கும் அவள் திருவுளம் கொண்டு அவள் தனது அருளை மழையாகப் பொழிகின்றாள் என்பார். பெருமானின் திருவருளே இங்கு நமக்கு மழை வடிவில் வருகின்றது என்று மணிவாசகர் அழகாகக் குறிப்பிடுவார். இக்கருத்தினையே திருமூலரும் வலியுறுத்திக் கூறுகின்றார்.

              எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவருள் நல்ல தாயின் வடிவில் உயிர்களைக் காப்பது போன்று உலக உயிர்களை மழை திருவருள் வடிவில் நின்று காக்கின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிர்களுக்கெல்லாம் தந்தையாகிய சிவ பெருமானுக்குத் திருமுழுக்காட்டுக்கு உரிய திருத்தமான நீரைத் தருவது கழுமணியாறு என்று சொல்வர். கழுமணி என்பது குற்றமில்லாத நீல மணி என்பர். இம்மணியினைப் போன்று கழுமணியாற்றின் நீர் தெளிந்த நீர் என்பர். சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும் நான்கு நெறிமுறைப் படியே நின்று இறைவனை வழிபடும் உண்மை அடியார் நெஞ்சினுள்ளே நீலமணி ஆற்றின் நீர் போன்று குற்றமில்லாத அருள் வெள்ளம் தோன்றும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அறிவு நெறி, உண்மை நெறி, சன்மார்க்க நெறி, ஞான நெறி என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும் நெறியின் படி வழுவாது வாழும் உண்மை அன்பர் உள்ளத்திலே தூய மழை நீரைப் போன்று பெருமானின் அருள் அருவி தோன்றும் என்கின்றார்.

         உண்மை அன்பரின் உள்ளத்தே தோன்றும் இவ்வருவியின் பெருமை சொல்லில் அடங்காதது. இவ்வருவி உண்மை அன்பர்களின் அகத்தின் உள் நின்று ஊறுவது. வானிலிருந்து பெய்யும் புறத்து ஆற்று நீருக்கு உள்ளது போன்று இதற்கு நுரை இல்லை. அன்பரின் அகத்தே தோன்றும் பெருமானின் அருள் அருவி நீரினுக்கு எவ்வகை மாசும் இல்லை. மழை நீரின் துணையாலே தோன்றும் இதர தெளிந்த அருவி நீர்களுக்கு அமைவது போன்று பெருமானின் திருவருள் அருவிக்குத் தோன்றும் இடம், புகும் இடம், இரண்டுப் பக்கங்களிலும் உள்ள இரு கரை முதலிய எல்லை எதுவும் இல்லை என்கின்றார். இதனை, “வரையிடை நின்று இழி வான் நீர் அருவி, உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறும், நுரை இல்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர், கரையில்லை எந்தை கழுமணி ஆறே” என்று குறிப்பிடுகின்றார்.

         தெரிந்த ஒன்றினை வைத்துத் தெரியாத ஒன்றினை விளக்கிக் கூறுவது கற்பித்தலில் மிகச் சிறந்த உத்தி என்பர். நமக்கெல்லாம் தெரிந்த மழையினையும் அம்மழையினால் உயிர்கள் அடையும் நன்மையினையும் குறிப்பிட்டுப் பெருமானின் திருவருள் மழை எத்தகைய சிறப்புடையது என்று விளக்குகின்றார் திருமூலர். மழை நீரினைக் கொண்டு பெருமானின் திருவருள் வடிவினை விளக்குவதோடு மட்டும் அல்லாமல் மழை நீரினை விடப் பெருமானின் திருவருள் அருவி, எல்லை இலாச் சிறப்பும் நன்மையும் உடையது என்று ஒப்பிட்டுக் காட்டுவதால் விளக்குகின்றார்.

         இதனை உணர்த்தும் முகத்தானே சீர்மிகு செந்தமிழர் திருக்கோயில் வழிபாட்டிற்குச் செல்கையில் திருக்கோயிலின் உள்ளே செல்லும் முன்பு நீர் நிலைகளில் நனைந்து நீராட வேண்டும் என்று வகுத்து வைத்துள்ளனர். நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழாய் நீரிலாவது கை கால்களை அலம்ப வேண்டும் என்கின்றனர். “மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகக் கொண்டோர்க்கு ஒரு வார்த்தை சொல்லவும் சற்குரு வாய்க்குமே” என்று தயுமானவ அடிகள் குறிப்பிடுவார். தீர்த்தம் என்பது தூய நீர் ஆடல் என்பதனைக் குறிப்பது. நீர் நிலைகளில் முழுக்காடுவதும் காவிரி, கங்கை என்று நீராடுவதும் இறைவன் திருவருள் வெள்ளத்தில் நனைய வேண்டும் என்பதற்கேயாம். ஆடிமாதத்தில் காவிரியின் பெருக்கின் போது அக்காவிரியில் நீராடுவதும் காவிரியின் படுகையில் உணவுப் பொருட்களையும் மலர்களையும் படைத்து அவற்றைக் காவிரித் தாய்க்கென காவிரி ஆற்று நீரில் விடுவதும் அக்காவிரி ஆற்று நீரை இறைவனின் திருவருளாகத் திகழும் அம்மையின் வடிவாக எண்ணித்தான். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அவர்களது திருமண மாலைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருந்து ஆடிப்பெருக்கின்போது அவற்றை நீர்நிலைகளில் விடுவதும் இறைவனின் திருவருளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில்தான். தமிழர் பண்பாட்டில் ஆறுகளைப் பெண்களாகவும் தாயாகவும் எண்ணுவது இறைவனின் திருவருளை எண்ணித்தான் என்பதனைத் தெளிய வேண்டும். இறைவனின் திருவருள் ஊற்று உள்ளத்திலே நிலைத்து ஊறுவதற்கு நால்வகை நெறிகளை நாளும் வாழ்வில் நடைமுறைப் படுத்துவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!