50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்

1063

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” எனும் முதுமொழி பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைப்பவர்களின் பொருளைத் தீயவர்கள் கைக்கொண்டுவிடுவர் என்பதனை உணர்த்தும். அதற்கு மாறாகப் பிறருக்கு ஈயும் பண்பு உடையவர்களின் செல்வத்தை அவர்கள் செய்த கொடையே திருவருளாய் நின்று காக்கும் என்பதனை அறநூல்கள் குறிப்பிடுகின்றன. உலகில் பிறக்கும் போது செல்வம் கொண்டு வராவிட்டாலும் இது என்னுடைய செல்வம் என்று இறக்கும் போது கொண்டுப் போவது போன்று எண்ணிப் பலரும் மயங்கிக் கிடக்கின்றனர் என்கின்றது திருமந்திரம். வெறும் உடம்போடு மட்டும் நின்று விடக்கூடிய செல்வத்தை உயிரினுடன் வரக்கூடியதாய் எண்ணிப் பலரும் உலகில் செல்வத்தின் பெருக்கத்தால் ஏற்படக்கூடிய செருக்கில் அகப்பட்டு இறைவனை வழிபடுதலை மறந்து வாழ்கின்றனர் என்கின்றது திருமந்திரம். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகியாங்கு” என்பார் ஐயன் திருவள்ளுவர். இவ்வுலக வாழ்விற்குப் பொருளும் செல்வமும் தேவையே எனினும் அச்செல்வம் இருக்கும் காலத்திலேயே அச்செல்வத்தினைத் துணையாகக் கொண்டு அருள் உலகிற்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பதே ஐயன் திருவள்ளுவரின் கருத்தாகும். சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவ உண்மைகளை மூவாயிரம் மந்திரங்களில் குறிப்பிடும் திருமந்திரம் செல்வத்தின் பயனையும் அதன் நிலையாமையையும் தெளிவுறக் குறிப்பிடுகின்றது.

              தம் கீழ் உள்ள மக்களின் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவர்களூக்கு ஈந்து வாழ்ந்த நல்ல மன்னன் ஒருவனுடைய படையையும் செல்வத்தையும் அவன் மீது பகை கொண்ட அரசன் ஒருவன் கவர்ந்து கொள்வதற்கு முன்பாகவே அவை நிலையற்றவை என்பதனை உணர்ந்து தெளிந்து, காலம் உள்ள போதே திருவருளே நிலையானது என்பதனைத் துணிந்து அதில் ஆழ்ந்து இருப்பானேயானால், மேற்கூறிய படையும் செல்வமும் போனபோது பெரும் துன்பத்திற்கு ஆளாகமாட்டான். தவிர அவன் செய்த அறமே அவன் வாழ்நாள் முழுமைக்கும் அவனை அரசனேயாய் மக்கள் மனதில் வைத்துப் போற்றும் நிலையையும் உயர்வையும் தந்துவிடும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

              இதனையே, “தேடியமாடு நீடுசெல்வமும் தில்லைமன்றுள், ஆடிய பெருமான் அன்பர்க்குஆவன ஆகும் என்று, நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது, கூடிய மகிழ்ச்சிபொங்க குறைவற கொடுத்து வந்தார்” என்று பெரியபுராணத்தில், மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைக் கூறுகையில் தெய்வச்சேக்கிழார் குறிப்பிடுவார். செல்வம் நிலையற்றது; நிலைத்து நில்லாதது. அவ்வாறான செல்வம் தன்னை விட்டுப் போகும் முன்பாகத் தம்முன்னோர் தேடிவைத்த செல்வத்தையும் தாம் தேடிய செல்வத்தையும் தில்லைச் சிதம்பரத்திலே ஆடிக்கொண்டிருக்கின்ற பெருமானின் அன்பர்கள் தம்மைத் தேடி வந்தபோது அவர்களின் தேவை தீருமாறு பொங்கி எழும் மகிழ்ச்சியோடு செலவு செய்து திருவருள் செல்வத்தைச் சேர்த்து வைத்தார் என்று குறிப்பிடுகின்றார் தெய்வச் சேக்கிழார்.

              நம் மீது படும் வெயிலின் வெப்பத்தினைத் தணித்துக் கொள்வதற்கு நம் நிழலே நமக்கு உதவுவது இல்லை என்பதனைக் கண்கூடாகக் காண்கின்றோம். நம் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்து வாழ்ந்த உயிர், இறுதியில் உடம்பைக் காக்காது பிரிந்து செல்வதனையும் கண்கூடாகக் காண்கின்றோம். இவற்றைக் கண்டும் செல்வம் நிலையில்லாதது; இறந்தபோது உடன் வராதது; அருட்செல்வமே இறுதியில் உயிரோடு உடன் செல்வது என்பதனை உணராது இருக்கின்றோம். அருட்செல்வத்தினை, நிலையில்லாத இயல்பினை உடைய பொருட்செல்வத்தினைக் கொண்டு விரைவாக அருட்செல்வத்தினைத் தேட முற்படவேண்டும் என்பதனைப் பலரும் சிந்தியாது இருக்கின்றனர் என்பதனை, “ தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு, என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள், உன்உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது, கண்ணது காணொளி கண்டு கொளீரே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

              நிலையற்ற செல்வம் பிறருக்குக் கொடுத்தும் நாம் நுகர்ந்தும் இன்புற வேண்டியது. அப்படி அல்லாது செல்வத்தினை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அதனை இழக்கும் காலம் பெரும் துன்பத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாவார்கள் என்பதனை உணர்த்துதற்குத் திருமூலர் அரிய உவமானத்தைக் குறிப்பிடுகின்றார். சுறுசுறுப்பாய் இயங்கும் தேனீக்கள், தேனைச் சேர்ப்பதற்குப் பல இடங்களுக்குப் பறந்து திரிந்து, பூக்களின் மணங்களைத் தங்களின் தனித் திறத்தால் அறிந்து, அம்மணம் வந்த வழியே சென்று அம்மணத்திற்கு உரிய மலரை அறியும். பூக்களிலிருந்து தேனைச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் சேர்த்து வைக்கும். சேர்த்து வைக்கும் தேனைத் தாமும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் வாழும். வலிமையுடைய தேன் சேகரிப்பவர் ஒருவர் வந்து அத்தேனீக்களைக் கொன்றோ அல்லது துரத்தியோ தேனை எடுத்துச் செல்ல அத்தேனீக்கள் ஒன்றும் செய்ய இயலாது நிற்கும் அல்லது மடிந்து கிடக்கும். தாமும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும் இவ்வாறுதான் என்பதனை, “ ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும், கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும், ஓட்டித்துரந்திட்டு அதுவலியார்கொளக், காட்டிக் கொடுத்துஅது கைவிட்டவாறே” என்பார் திருமூலர்.

              பொருட்செல்வத்தைக் கொண்டு பிறப்பையும் இறப்பையும் வெல்ல இயலாது. அருட்செல்வத்தினாலேயே பிறப்பையும் இறப்பையும் வெல்ல இயலும் என்பதனால் நிலையாமையை உடைய பொருட்செல்வத்தினைக் கொண்டு அது நம் கையை விட்டுப் போகும் முன்பாகவே அருட்செல்வத்தைத் தேடுங்கள் என்கின்றார் திருமூலர். உங்களிடத்தில் உள்ள செல்வத்தினால் செருக்குண்டு வாழ்வில் தடுமாறி விடாதீர்கள் என்கின்றார். கரை புரண்டு ஓடும் ஆற்று நீரில் அகப்பட்டவர் உள்ளம் கலங்குவது போலவும் உடல் அலைக்கழிக்கப்படுவது போலவும் செல்வம் எனும் பெரும் வெள்ளத்தில் அகப்பட்டுத் திணறி மூழ்கிவிடாமல் நம்மைத் தற்காத்து நிலைநிறுத்திக் கொள்ளல் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர்.

              செல்வத்தினால் மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும் கைப்பொருளும் கிட்டும். அவற்றைக் கண்டு மயங்கி, அவற்றுள்ளேயே மூழ்கி வாழும் காலத்தை வீண் அடிப்பது அறியாமை ஆகும். செல்வத்தினால் வருகின்ற இன்பங்களும் செல்வமும் எந்நேரமும் நம்மை விட்டு நீங்கக் கூடியன. நீரின் மேல் செல்லும் மரக்கலம் திடீரெனக் கவிழ்ந்து மூழ்குதலைப் போல, திடீரென இறப்பு ஏற்படுகின்ற போது இதுவரை உடலுக்கு ஒரு பேர் இன்பம் போல் இருந்த செல்வத்தினால் வந்த இன்பங்கள் திடீரென அகன்று ஒழியும். உடலை நீங்கிய உயிர் துன்பத்தில் ஆழும். உண்மையில் உயிர் ஈடேற்றத்திற்கே செல்வம் கூட்டுவிக்கப்பட்டிருக்கின்றது என்பதனைப் பலரும் அறிந்து இருக்கவில்லை என்பதனை, “ மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே, கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல், அவிகின்ற ஆக்கைக்கோர், வீடு பேறாகச் சிமிழ்ஒன்று வைத்தமை தேர்ந்தறியாரே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.

              மனம் ஒத்து வாழ்கின்ற மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் எவ்வளவுதான் நம்மிடத்தே அன்பாய் இருந்தாலும் அவர்களை நாம் நம் செல்வங்கள் எனக் கருதினாலும் நம் வாழ்நாள் முடியும்போது அவர்கள் நம் உடன் வருகிறோம் என்று உயிரையே விட்டாலும் நம் உயிரோடு அவர்கள் சேர்ந்து வருவது இயலாதது. அவர் அவர் தனி வழியயை உடையவர். மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் சுற்றத்தாரும் இன்புற வேண்டும் என்று அவர்கள் விரும்பும் பொருட்களைப் பெற்றுத் தருவதிலேயே வாழ்நாள் எல்லாவற்றையும் கழிப்பவர்கள், அவர்களின் உயிர் பயணச் செலவிற்குக் கொண்டு செல்லவேண்டிய அருட்செல்வத்தையும் மறவாது ஈட்ட வேண்டும். தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பொருட்செல்வம் ஈட்டப் பாடுபடுபவர்கள், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அருட்செல்வம் கிட்டவும் பாடுபடுதல் வேண்டும் என்பதனை, “ வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும், அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள், மேவும் அதனை விரிவு செய்வார்கட்குக், கூவும் துணையொன்று கூடலுமாமே” என்கின்றார் திருமூலர்.

              எனவே பொருட்செல்வம் இவ்வுலகப் பயனையே தர வல்லதாய் உள்ளது என்று புலனாகிறது. அதனை இறையுலகப் பயனைப் பெறுவதற்குத் திறம்படப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும் என்றும் புலப்படுகின்றது. உலகச் செல்வமும் உறவுச் செல்வமும் நமக்கு உற்றத்துணை என்று எண்ணும் மயக்கத்தினை விட்டு விரைந்து நிலையான செல்வமான திருவருளைப் பெறும் வாயில்களை அறிந்து அவற்றை நடைமுறைப் படுத்துவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!