பிள்ளையார், முருகன், அம்மை என்ற வடிவங்களை வழிபட்டாலும் அவை சிவபெருமானின் அருள் வடிவங்களே என்று உணர்ந்து சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு திருநீறும் கணிகை மணியும் முதலிய சிவ சின்னங்களை அணிந்து வழிபடுவோர் யாவரும் சைவர் எனப்படுவர். இச்சைவருள் சிவ ஆகமத்தின் வழி சிவதீக்கைப் பெற்றோர் சிறப்புச் சைவர் என்றும் சிவ ஆகமத்தின் வழி சிவதீக்கைப் பெறாதவர் பொதுச் சைவர் என்றும் குறிப்பிடப்படுவர். சிவ ஆகமத்தின் வழி சிவதீக்கைப் பெற்ற சிறப்புச் சைவருள்ளும் பூணூல் அணிவிக்கப்படும் உபநயனத்தைப் பெற்றுச் சிவ ஆகமத்தைப் பொதுவாகவும் வடமொழி வேதத்தைச் சிறப்பாகவும் ஓதுதலையே தொழிலாகக் கொண்டு சிவபெருமானை வடமொழி வேத மந்திரங்களால் வேத விதிப்படி வழிபடுவோர், “மகா சைவர்” எனப்படுவர் என்றும் வடமொழி வேதத்தைப் பொதுவாகவும் சிவ ஆகமத்தைச் சிறப்பாகவும் ஓதுதலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவ ஆகம மந்திரங்களால் சிவ ஆகம விதிப்படி வழிபடுவோர் “ஆதி சைவர்” என்றும் குறிப்பிடப்படுவர் என்று மகாவித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுவார்.
சிவ தீக்கையின்றி உபநயனம் மட்டுமே பெற்று வடமொழி வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேதத்தின் வழி வேள்வி வேட்டல், வேட்பித்தலைச் செய்து சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொள்ளுதலில் வழுவாது நிற்பவர், “வைதீகச் சைவர்” எனப் பெயர் பெறுவர் என்கின்றார். வடமொழி வேதத்தை ஓதுதல், பிறருக்கு அவ்வேதத்தை ஓதுவித்தல், அவ்வடமொழி வேதத்தின் வழி வேள்வி செய்தல், பிறருக்கு வேள்விகள் செய்வித்தலைச் செய்யினும் சிவபெருமானை முதல்வனாகக் கொள்ளாமல் மற்ற தெய்வங்களோடு ஒன்றாகக் கருதுபவரும், சிவ ஆகமங்களைக் கொண்டு சிவ தீக்கையைப் பெறாதவரும் ஒருபோதும் சைவர் ஆகமாட்டார்கள் என்பதும் மெய்கண்ட நூல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு புறத்தே சிவவேடம் கொண்டு அகத்தே சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சிறப்பு வகையில் அன்பு செய்கின்றவர்களே அந்தணர் என்றும் பார்ப்பர் என்று குறிக்கப்படுகின்றனர்.
இதனால் எங்கும் எதிலும் எப்பொழுதும் பரம்பொருளைப் பார்க்கின்ற பாங்கு உடையவர்களே பார்ப்பான்கள் எனப்படுவர். எங்கும் எதிலும் பரவியும் விரவியும் இருக்கும் பரம்பொருளைத் தங்கள் உள்ளேயும் வெளியேயும் கண்டு வழிபடுகின்றவர்களே அந்தணர் எனப்படுகின்றனர். இறைவனைப் பார்க்கின்ற தன்மை பிறப்பினால் வருவது அன்று. வெறும் பூணூல் அணிகின்ற செயலினாலோ தீக்கை முறையினாலோ வருவது அன்று. சிறப்பான இறையன்பும் ஆழ்ந்த இறையறிவும் உயர்வான நல்லொழுக்கமும் பழுத்த செவ்வியும் உடையவர்களுக்கே அந்தண்மை இயல்பும் பார்க்கும் இயல்பும் ஏற்படும். இதனாலேயே, “அந்தணர் என்போர் அறவோர்” என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். எனவே பார்ப்பான் தன்மையும் அந்தணர் தன்மையும் இறைநெறி திறத்தாலும் இறநெறி உறைப்பாலும் வருவது என்பதுவும் அது ஒருபோதும் பிறப்பால் வருவது இல்லை என்பதுவும் தெள்ளத்தெளிவாகப் புலனாகும்.
பிறர் பொருட்டுத் திருக்கோவில்களில் பூசனை இயற்றுபவர் பார்ப்பான் அல்லது அந்தணர் என்று பெயர் அளவில் இருந்து பூசனை இயற்றினால் என்ன நிகழும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். பிறப்பின் அடிப்படையில் பார்ப்பான் என்று எல்லோராலும் சொல்லப்படுகின்ற “பார்ப்பான்”, பெயரை மட்டும் பார்ப்பான் என்று பெற்றுக்கொண்டு சிவபெருமானிடத்து அன்பும் சிவ ஆகமம் மற்றும் திருமுறையின் அறிவும் இல்லாது சைவர்களின் இறைக்கொள்கையையும் நெறி முறைகளையும் அறியாது திருக்கோவிலில் பிறர்பொருட்டு வழிபாடு செய்வாராயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும் வெளிநாட்டுப் போர்களும் விளையும் என்கின்றார் திருமூலர். தவிர அந்நாட்டில் கொடிய நோய்களும் வயல்கள் வளம் குன்றி விளைச்சல் இல்லாது உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும் என்று சீர்மிகு செந்தமிழர் சமயமான சைவத் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்தி பெருமான் எங்களுக்கு ஆகமங்களை ஆய்ந்து உரைத்து அருளினார் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனைப், “பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர், போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம், பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமாம் என்றே, சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே” என்கின்றார் திருமூலர்.
திருக்கோவில்களில் பூசனை இயற்றுவோர் மனனமாக நீண்ட மந்திரங்கள் சொல்லவும் வேள்விகள் இயற்றவும் பழக்கத்தினாலும் மரபினாலும் தெரிந்து வைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அதன் உட்பொருளை அறிந்தவர்களாயும் இருத்தல் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். கூறும் மந்திரங்களை வெறும் மனனமாக ஒப்புவித்தலோடு அதன் பொருளை அறியாமலும் செய்யும் செயல் முறைகளை அதன் வரிசை முறைகள் தவறாது செய்ய அறிதிருப்பதோடு அதன் உள்ளார்ந்த உண்மையை அறியாமலும் மணிக்கணக்கில் செய்தல் வெறும் வீணாம். தவிர பல மணி நேரம் செய்யப்படும் கிரியைகளின் பொருளைப் பிறருக்கு அறிவிக்காமல் செய்தலும் வீண் என்கின்றார். சிவ ஆகமம், பன்னிரு திருமுறைகள், நாயன்மார்களின் வரலாறு, மெய்கண்ட நூல்கள், இவற்றினைக் கற்றுத் தெரிந்து வைத்திராது, சிவ தீக்கைப் பெறாது, சைவ திருக்கோவில்களில் பூசனை இயற்றுதல் பெறும் தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமூலர். இதனாலேயே சைவ நெறிக்குப் புறம்பான, அறிவுக்கு எட்டாத, மக்களை அறியாமையில் ஆழ்த்தும் பயனற்ற பல வழிபாடுகள் திருக்கோவில்களில் இடம் பெறுகின்றன.
பிறப்பால் அந்தணர், பார்ப்பனர், தமிழர் என்ற வேறுபாடு இன்றியும் வடமொழி, தென்மொழி என்ற வேறுபாடு இன்றியும் இறையன்பிற்கும் இறையறிவிற்கும் நல்லொழுக்கத்திற்கும் நற்பண்புகளுக்கும் முதன்மை கொடுத்து அனைத்துச் சைவரும் திருக்கோவிலில் சிவபெருமானைப் பல் வகையாலும் நாள்தொறும் முறை வகுத்துக் கொண்டு வழிபாடு செய்தமை வழக்கத்தில் இருந்திருந்தமையைச் சைவர்கள் அறிதல் வேண்டும். ஆதி சைவர்கள் மட்டுமே வடமொழியில் திருக்கோவிலில் வழிபாடு இயற்றுவதற்கு உரியவர்கள் என்ற வழக்கம் கங்கை கொண்ட சோழனான முதல் இராசேந்திர சோழன் காலத்திற்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் தோன்றியது என்று மகாவித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார். இச்செய்தியினைத் திருஞானசம்பந்தர் உறுதி செய்கின்றார். “செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு, அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்…… வீழிநகரே” என்று திருவீழிமிழலைப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். செந்தமிழ் அறநூல்களைக் கற்றுத் தெளிந்த சான்றோரும் சிவ வேள்வி செய்கின்ற வேதியர்களும் தமிழ்ப் புலமையோடு நற்கலை வல்லுநர்களும் நல்லொழுக்கமும் பண்பாடும் உடைய சான்றோர்களும், துறவிகளும் வழிபாடுகளை இயற்றி உள்ளனர் என்ற செய்தியினை உறுதி செய்கின்றார் திருஞானசம்பந்தர் பெருமான்.
எனவே சைவ திருக்கோவிலில் பூசனைகள் இயற்றும் தகுதி ஒருவருக்குப் பிறப்பினால் வருவது இல்லை எனும் உண்மையைச் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் உணர்தல் வேண்டும். உண்மை இறையன்பு உடைய எவரேனும் முறையான சிவ தீக்கைகளைப் பெற்றுச் சைவ சமயக் கல்வியினைப் பயின்று சைவ மரபுகளை அறிந்து முறையான சிவ பூசனைகளை இயற்றலாம். சைவ சமயத்தின் உயர்ந்த கொள்கைகளை அறிந்து மக்களுக்கு உண்மை சமய நல்லறிவினைப் புகட்டி, நல் எடுத்துக்காட்டாக விளங்கி அவர்களின் அறியாமையைப் போக்க வேண்டும். தூய மனத்தோடு மக்கள் தொண்டினையும் இறைத்தொண்டினையும் ஆற்றித் திருக்கோவில்களுக்கு வருகின்றவர்கள் முறையான இறைவழிபாடு இயற்றுவதற்கும் இறையன்பு பெருகுவதற்கும் துணைநின்று உதவவேண்டும். திருக்கோவில்களில் இறைக்கல்வியும் திருமுறைக் கல்வியும் சமய விளக்கங்களும் இடம் பெறுவதற்குத் தூண்களாய் நிற்க வேண்டும். தவிர திருவிழாக்கள், சமய கிரியைகள் போன்றவற்றிற்கு விளக்கங்கள் அளித்து மக்களுக்குச் சமய தெளிவினை ஊட்டவேண்டும். மக்கள் மிகுதியாய் கூடுகின்ற நாட்களில் நீண்ட நேரம் கிரியை முறைகளை மட்டும் செய்து வழிபாட்டை முடித்து விடாமல் இயன்ற அளவு சிறு சிறு சமய சொற்பொழிவுகள் சமய விளக்கங்கள் கொடுப்பதோ அல்லது கொடுப்பவர்களை வருவித்தோ மக்களுக்குச் சமய அறிவினை ஊட்ட வேண்டும். இதற்குத் திருக்கோவில் நடத்துனர்கள் ஆவன செய்தல் வேண்டும். இல்லையேல் பேர்கொண்ட பார்ப்பான்களே நமது திருக்கோவில்களில் சமய ஆசான்களாக இருப்பர். அவை வாணிக மையங்களாகவே திகழும். மேலும் நமது திருக்கோவில்கள் இறைவனின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய கட்டடங்களாக மட்டுமே இருக்கும். தவிர அவை இறைநெறியைப் பரப்புகின்ற நிலையங்களாக இருக்கமாட்டா! சிந்திப்போம், செயல்படுவோம்! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!