திருநெறிய தமிழ்

3460

நலந்தரும் தமிழ் மந்திரங்களான திருமுறைகளைத் ‘திருநெறிய தமிழ்’ என்று தமிழ் விரகர் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் முதல் மந்திரமான திருபிரமபுரப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். “தோடுடைய செவியன்” என்ற பதிகத்தின் இறுதிப்பாடலில்,

“அருநெறியமறை வல்ல முனியகன் பொய்கை அலர் மேய
பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான் இவன் தன்னை 
ஒருநெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த 
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே”

என்று குறிப்பிடுகின்றார். தாம் அருளிய தமிழ் மந்திரங்களைத் திருநெறிய தமிழ் என்று சிவஞானப்பால் உண்ட திருஞாசம்பந்தர் குறிப்பிடுவது சிந்தை மகிழச் செய்கிறது. “திரு” என்பது இறைவனை அல்லது இறைவனது திருவருளைக் குறிக்கும். எனவேதான் உயிரில் இறைவனைத் தாங்கி இருக்கின்ற மனிதர்களைப் பெயர் குறிப்பிட்டு அழைக்கும்போது அவர்களின் பெயர்களுக்கு முன்பாக “திரு” அல்லது “திருமதி” என்று குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என்று மறைமலையடிகளைப் போன்ற சான்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். இறைத்தன்மையுடைய வழிபாட்டுப் பாடல்களை மந்திரங்களைத் திருமுறைகள் என்றனர். இறைத்தன்மையுடைய விழாக்களைத் திருவிழா என்றனர். இறைத்தன்மையுடன் நிகழவேண்டிய மன நிகழ்வினைத் திருமணம் என்றனர். இறைத்தன்மை விளங்கித் தோன்றுகின்ற இடங்களைத் திருக்கோயில் அல்லது திருத்தலம் என்றார்கள். நெறி என்பது வழி அல்லது முறைமை எனப்படும். திருநெறி என்பது இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த முறைமை அல்லது வழி என்று புலனாகிறது. “திருநெறிய தமிழ்” என்று திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுவதால் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த முறைமை தவறாது சொல்லப்பட்டத் தமிழ் மந்திரங்கள் என்று பொருள் படுகின்றது. எனவே நலம் தரும் மந்திரங்களான திருமுறைகள் இறைநெறிமாறாது இறைவனை அடைவதற்கான தமிழ்மந்திரங்கள் என்று தெற்றென விளங்குகின்றது.

திருஞானசம்பந்தப் பெருமான் பரப்பிய இறைநெறியினைக் குறிப்பிடும்போது, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுவார்.

மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் பாடிய திருமூலரோ தாம் பரப்பிய சிவநெறியை, இறைநெறியை, திருநெறிய தமிழைத், “தமிழ்” என்றே குறிப்பிடுகின்றார். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று குறிப்பிடுகின்றார்.

சைவநெறிக் கருவூலமான பெரியபுராணத்தில், இறைவன் சுந்தரரை ஆட்கொண்டு சிவநெறியைப் பரப்பச் சுந்தரருக்கு ஆணையிட்டபோது, “மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று ஆணையிட்டதாய்ச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார். எனவே இங்கும் திருமுறைகள் திருநெறிய தமிழ் எனும் குறிப்பில் சுட்டப்படுவதனைக் காணலாம்.

நலந்தரும் மந்திரங்களான திருமுறைகள் இறைநெறிமுறைமையைக் காட்டுகின்ற தமிழ் மந்திரங்கள் என்பதனைத் திருஞானசம்பந்தப் பெருமானின் பிறப்பின் நோக்கத்தோடு தொடர்புபடுத்தி அழகுறக் குறிப்பிடுவார் சேக்கிழார் சுவாமிகள். இதனை,

“திசையனைத்தின் பெருமையெலாந் தென்திசை வென்றேற 
மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல
அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக”

என்று குறிப்பிடுவார். இப்பாடலில் குறிப்பாக, “அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல, இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலை பெருக” என்பது உற்று நோக்கத்தக்கது. இதில் திருஞானசம்பந்தப் பெருமான், தாழ்ச்சியடைதல் இல்லாத செழுமை வாய்ந்த தமிழ் மரபுகளே பிற மரபுகளை வென்று தனிச்சிறப்பெய்தவும் தமிழிசை ஞானம் முழுமை பெறவும் சிவநெறி, மெய்யறிவு எங்கும் பரவி நிலவும் நிலை ஏற்படவும் இவ்வுலகத்தில் தோன்றினார் என்று சேக்கிழார் சுவாமிகள் குறிப்பது திருநெறிய தமிழைத் தொடர்பு படுத்துவது.

எனவே இறைநெறி முறைமை நமக்கு அளிக்கும் நலம்தரும் மந்திரங்களான தாய்த் தமிழ் திருமுறைகள் வீடுபேற்றை நமக்கு அளிக்க வல்லவை என்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை. அதிலும் “திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று திருஞாசனசம்பந்தப் பெருமான் ஆணையிட்டுக் குறிப்பிட்டுள்ளதை வாதிட்டு திரிபவர் ஒருபோதும் வினை நீங்கமாட்டார். நற்கதி அடையமாட்டார் என்பதனைத் தெளிந்து திருநெறிய தமிழை வாழ்வில் வழிபாட்டில் கொண்டுவருவோமாக!

திருச்சிற்றம்பலம்.