விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை

1484

பரம்பொருள் ஒன்று. தமிழர்களின் செந்நெறியாகிய சித்தாந்தம் அப்பரம் பொருளைச் சிவம் என்கிறது. அச்சிவம் என்னும் பரம்பொருள் தமது பொதுநிலையில் உயிர்களுக்கு அருள்புரிய பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றது. அவ்வகையிலேயே சைவர்களுக்கு விநாயகன், முருகன், அம்பாள், நடராசர், சிவக்கொழுந்து என்று பல்வேறு இறை வடிவங்கள் அமைந்துள்ளன. இறைவன் காட்டிய பல்வேறு வடிவங்களைக் கொண்டு அவை வேறு-வேறு கடவுளர்கள் என்று நம்மில் பலர் மயங்கவும் இன்று கடவுள் பல போன்று தோற்றம் நிலவுகின்றது. இன்னும் சைவர்களில் பல சிவன், சக்தி, விநாயகன், முருகன் என்ற கடவுளர்கள் ஒரு குடும்பமாய் வாழ்வதாய் எண்ணி அத்தகைய சிந்தனையையே தத்தம் பிள்ளைகள் மனதிலும் விதைத்து வருகின்றனர். ‘நவந்தரும் பேதம்தனில் ஏக நாதனே நடிப்பன்’ என்று சைவ மெய்கண்ட நூல் அழகுற தெளிவாக விளங்குகின்றது. அவ்வகையில் பற்பல வடிவங்களில் தோன்றி அருளும் இறைவன் ஒருவனே என்றும் அவன் பல்வேறு வடிவங்களில் வருகின்றான் என்பதும் இதன்வழி புலனாகின்றது.

அவ்வகையில் பரம்பொருளான சிவம் ஓசை வடிவாகத் தோன்றியதே விநாயகர் வடிவம். ‘ஓம்’ என்கின்ற நாத வடிவ உண்மையை விளக்குவதே விநாயகர் வடிவம். எனவே விநாயகர் எனப்படும் இறைவன் சிவத்தைவிடுத்து வேறு கடவுள் என்று எண்ணுவது தவறு. விநாயகர் சிவத்தின் மகன் என்று எண்ணுவதும் பிறருக்கு அவ்வாறு போதிப்பதும் தவறு. சிவம் தான் விநாயகர். விநாயகர் தாம் சிவம். விநாயகர் சிவத்தின் மற்றொரு வடிவம் அவ்வளவே!

விநாயகர் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் பரம்பொருளான சிவமும் அவர் ஆற்றலான பராசக்தியும் ஒரு சோலையில் இருந்த சித்திர மண்டபத்தினுள்ளே விரைந்து சென்று அங்கிருந்த ‘ஓம்’ என்கின்ற நாத ஆற்றலை நோக்க அதிலிருந்து சிவசக்தியின் ஆற்றல் வெளிப்பாடாக விநாயகர் தோன்றினார் என்று கச்சியப்பரின் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. இதைவிடுத்துச் சைவத்திற்குப் பொருந்தாத விநாயகர் தோற்றம் பற்றிய செய்திகள் சைவ கொள்கைக்கு மாறானவை. பொருந்தாதவை. உண்மைச் செய்திகளை அறிந்து அவற்றைப் பின்பற்றுவதும் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் மேன்மைகொள் சைவநீதியை விளங்கச் செய்வதாகும்.   நாத ஆற்றலின் வடிவமாய் விநாயகப் பெருமான் தோன்றிய நாள் மடங்கல் (ஆவணி) வளர்பிறை நான்மி (சதுர்த்தி) ஆகும். எனவே தான் மடங்கல் வளர்பிறை நான்மியில் விநாயக சதுர்த்தி அல்லது விநாயகர் நான்மி கொண்டாடுகிறோம். எனவே விநாயகர் சதுர்த்தி என்பது சிவம் என்னும் பரம்பொருள் நம் இடர்களைப் போக்குவதற்கு விநாயகர் வடிவம் கொண்ட நாளாகும். இறைவன் நம் இடர்களைப் போக்குவதற்கு நாளும் ஓடி வருகின்றான் என்பதனை உலகவாழ் நடவடிக்கையினால் மறந்துவிடும் நமக்கு அதனை உணர்த்த வருகின்ற சிறந்த திருநாளே விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி விநாயகர் பிறந்த நாள் என்று சிலர் கூறுவது அறியாமையே! பரம்பொருள் பிறப்பு இறப்பிற்கு உட்படாதது என்பதனைச் சைவர்கள் சிஞ்சிற்றும் மறந்துவிடக்கூடாது.

விநாயகர் சதுர்த்தியன்று முழுமையும் உணவு உட்கொள்ளாமல் இருந்தோ, அல்லது பால் பழமோ மட்டும் உண்டு உள்ளத்தால், சொல்லால், செயல்களினால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது எண்ணிக்கொண்டும் அவன் திருமுறைகளையோ அல்லது திருப்பெயர்களையோ சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். வீட்டிலும் திருக்கோயில்களிலும் இருந்து வழிபாடுகள் செய்ய வேண்டும். திருக்கோயில்களிலே நடைபெறும் சிறப்புப் பூசனைகளில் கலந்து கொண்டு நல்லடியார்களோடு இருக்க வேண்டும். இறைவனை இடைவிடாது எண்ணுவதற்கென சமய நிகழ்வுகளில் பங்குபெற்றுப் பயனடையலாம். இதற்காகவே திருக்கோயில்களில் சமய சொற்பொழிவுகள், திருமுறை இன்னிசைகள், திருமுறை நடனங்கள், நாயன்மார்களின் வரலாற்றினை உணர்த்தும் நாடகங்கள், சமய திரைப்படங்கள், கடமையுணர்வு மிக்கத் திருக்கோயில் நடத்துனர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. திருக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டில் திருமுறைகளை ஓதுதல், சமய உரைகளைக் குடும்பத்தோடு ஒலிநாடாக்கள் அல்லது குறுவட்டுக்கள் மூலம் கேட்டல், சமய நூல்களைக் குடும்பமாய் இருந்து ஒருவர் வாசிக்கக் கேட்டல் போன்றவற்றைச் செய்து சிந்தனையைச் செம்மையாக்கலாம்.

விநாயகர் தோன்றிய நாளை விநாயகர் சதுர்த்தி நினைவுறுத்துவதால் விநாயகர் சதுர்த்திக்குப் புற்று மண்ணால் புதிய விநாயகர் திருவடிவினைச் செய்து, அதற்கு அழகு சேர்ப்பித்து, தமிழ் மந்திரங்கள் பாவனை (முத்திரைகள்) வழிபாட்டுத் திருச்செயல்களால் (கிரியை) இறைவனை அத்திருவடிவினுள் எழுந்தருளச் செய்து, திருநீராட்டு, ஆடை அணிகளால் மேலும் அழகு சேர்த்து, திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு, மறுநாள் ஊர்வலமாகக் கொண்டு சென்று, அத்திருவடிவினைத் திருக்குளத்திலோ அல்லது, நல்லாறுகளிலோ அல்லது கடற்கரைகளிலோ கரைத்துவிடுவார்கள். ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுத் திருவடிவங்களைத் திருநீராட்டி, மேற்கூறியவற்றையெல்லாம் செய்து ஆலய உள்சுற்று வலமோ, அல்லது வீதி ஊர்வலமோ செய்து இறைவன் மீள்வார்.

திருநாரையூரிலே பொல்லாப் பிள்ளையாராகத் தோன்றி, நம்பியாண்டார் நம்பி எனும் பெருமகனாருக்கு விநாயகர் அருள்புரிந்தார். நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாரின் துணைகொண்டு சிதம்பரத் திருக்கோயில் திருச்சுற்றில் மேற்குத் திசையில் உள்ள அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் திருமுறைப்பாடல்களைக் கண்டுப்பிடித்துக்கொடுத்தார். அன்று விநாயகரும் நம்பியாண்டார் நம்பிகளும் தோன்றாவிட்டால் நமக்கு ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் தமிழ் மந்திரங்கள் கிடைக்காமல் போயிருக்கும். அன்று விநாயகர் ஔவைக்குத் தோன்றி அருளிராவிட்டால் அரிய சைவ சித்தாந்தக் கொள்கையுடைய விநாயகர் அகவல் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். அன்று சிவம் என்னும் பரம்பொருள் விநாயகர் எனும் வடிவம் கொண்டிராவிட்டால் நம் அறியாமையும் இடர்களும் நீங்க வழியில்லாமல் போயிருக்கும். இவற்றையெல்லாம் எண்ணியே நன்றியுணர்வால் அகங்குழைந்து அன்பினால் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றோம்.

திருச்சிற்றம்பலம்.