2. தமிழ் மந்திரம்

3189

மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய்  நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக் கூறுவது மந்திரம் என்பார்கள். எடுத்துக்காட்டாக “ஓம்” என்ற மந்திரம் “அ + உ + ம்” என்ற எழுத்துக்களின்  கூட்டாகும் என்பார் திருமூலர். அதில் “அ” என்பது சிவனையும், “உ” என்பது திருவருளையும், “ம்” என்பது மாயையையும் குறிக்கும் என்பார். “அ + உ + ம்” என்ற பிரணவத்தை அல்லது அசபா மந்திரம் முறையே அயன், மால், உருத்திரன் என்பதனைக் குறிகின்றது என்றும் குறிப்பிடுவர். அவ்வகையில் அமைந்ததே “நமசிவய” என்ற திருவைந்தெழுத்து மந்திரம். இதுவே தமிழ்ச் சமயமான சிவ நெறிக் கொண்டு ஒழுகுகின்றவர்களுக்கு உரிய மந்திரம் என்று சைவர்களின் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

 இலக்கணப் பேராசான் தொல்காப்பியர், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரம் என்ப” என்று மந்திரத்திற்குப் பொருள் கூறுவார். மந்திரம் என்ன மொழியில் வேண்டுமானாலும் இருக்களாம். அது  மந்திரமா இல்லையா என்பதற்குச் சில இலக்கணங்களைத் தருகின்றார். ஒரு சொல்லைச் சொல்கின்றவர், மனம், மொழி, மெய் என்பனவற்றால் தூய்மையானவராக இருப்பின், அவர் வாய்ச்சொல் என்கிறார். உன்மை, வாய்மை, மெய்மை உடையவர்களின் சொற்கள் மந்திரங்களே! இவர்களின் சொற்கள் ஆற்றல் உடயவை. இவர்கள் சொன்னவாறு செயல்கள் நிறைவேறும். இவர்களே நிறைமொழி மாந்தர்கள். அவ்வகையில் அமைந்த தமிழ் மந்திரங்கள் திருமுறைகள். இவை தவிர எப்பொழுதும் சொல்லுதற்குரிய, வழிப்பாட்டில் போற்றக்குரிய, கனித்தலுக்குரிய மந்திரமாக, “நமசிவய” என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தங்கள் கண்களாக வைத்துப் போற்றியிருக்கின்றார்கள் நம் தமிழர்கள் என்ற செய்தியினைப் பெரிய புராணம் நெடுகிலும் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

“நமசிவய” என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தில், “ந” என்பது நடப்பு ஆற்றலையும், “ம” என்பது மலத்தையும், “சி” என்பது சிவத்தையும், “வ” என்பது வனப்பாற்றலையும், “ய” என்பது யாக்கை (உயிர்) என்பதனையும் சுருங்கிய வடிவில் குறித்து நிற்கின்றது. தமிழர் சமயத்தில் முப்பொருள் உண்மை முதன்மை பெற்றிருந்தமையைத் தெய்வச் சேக்கிழார் சீர்மிகு செந்தமிழருக்கு உணர்த்துகின்றார். அந்தணர் மரபில் தோன்றி, அருந்தமிழ் சிவஞானம் பெற்ற காழிப் பிள்ளையார் தமிழ்ஞானசம்பந்தர் பூனூல் அணிவிப்பு  நிகழ்வின் போது திருவைந்தெழுத்து மந்திரத்தின் உயர்வினை சேக்கிழார்  நமக்குப் புலப்படுத்துகின்றார். சிவஞானத்தின் திருவுருவாய், மேன்மைகொள் சைவ நீதியினை எல்லா உலகமும் போற்றுமாறு சிறக்க வைக்க உலகில் தோன்றிய திருஞானசம்பந்தர், தமக்குப் பூனூல் அணிவிக்கின்ற அந்தணர்கள் சூரிய மந்திரத்தைக் கூறியதைக் கண்டிக்கின்றார்.  திருவைந்தெழுத்து மந்திரத்தின் பொருளை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் ஐயங்களை நீக்கி அவர்களைத் திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதச்செய்து அந்தணர் மரபிற்கு உரிய பூனூலினை அணிவித்துக் கொள்கிறார். இதனை, “மந்திரங்களான எலாம் அருளிச் செய்து மற்று அவற்றின் வைதிக நூற்சடங்கின் வந்த, சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம். செழுமறையோர்க்கு அருளி, அவர் தெருளும் ஆற்றால், முந்தை முதன் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதலாகும் “முதல்வனார் எழுத்தஞ்சு என்பார், அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்” என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருவைந்து எழுத்து மந்திரத்தின் உயர்வினை அவ்வைதிக மறையோருக்கு உணர்த்த திருஞானசம்பந்தர் ஒரு பதிகமே பாடினார் என்ற செய்தியைத் தெய்வச் சேக்கிழார் நமக்குச் சுட்டுகிறார்.

செந்தமிழ்ச் சிவ  நெறியினைத் தங்கள் மூச்சாகவும் பேச்சாகவும் வாழ்வாகவும் கொண்டு ஒழுகிய அடியார் பெருமக்கள் தங்கள் வாழ்வில் இன்பம் வந்தப் போதிலும் துன்பம் வந்தப் போதிலும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்து மந்திரத்தையே ஓதி உய்திபெற்றனர் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். “தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்செழுத்துமே” என்று திருஞானசம்பந்தர்  குறிப்பிடுவதைக் குறிக்கின்றார். கடுநோய்கள் வந்தாலும், நரகம் போன்று கொடுமை செய்கின்ற வறுமை, பசி, மூப்பு, குடும்பச் சிக்கல்கள், இன்னும் பல-பல சிக்கல்களும், முற்பிறவி வினையினால் வரும் துன்பங்களுக்கும், இறை உலகில் வாழும் நிலையிலும் தமிழர்கள் சொல்ல வேண்டிய மந்திரம், “நமசிவய” மந்திரமே என்று திருஞானசம்பந்தர் கூறியதைச் சேக்கிழார் நமக்கு உணர்த்துகின்றார்.

திருநாவுக்கரசு அடிகளைச் சமணர்கள் கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது தன்னைக் காக்கும் மந்திரம் “நமசிவய” என்ற செழுந்தமிழ் திருவைந்தெழுத்து மந்திரமே என்று, “கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று பாடி கடலில் கல்லை மிதக்கச் செய்து கரைமீண்டார் என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழருக்கு நினைவுறுத்துகிறார் தெய்வச் சேக்கிழார்.