சிவ ஆகமங்கள் இருபத்து எட்டு என்றும் அச்சிவ ஆகமங்களை அறுபத்து ஆறு பேர் சிவபெருமானை வணங்கி, அச்சிவபெருமானது ஐந்தாம் முகமான, உச்சி முகத்தின் வழியாகக் (ஈசான முகம்) கேட்டு உணர்ந்தார்கள் என்பதனைத் திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் ஆகமச் சிறப்பு எனும் பகுதியில் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவை காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீர்த்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோகிதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் என்பன ஆகும். முன்பு காலத்தில் சிவ ஆகமங்கள் தமிழ் மொழியிலே இருந்தன என்றும் தமிழர்களின் கருத்தின்மையினாலும் கவனக் குறைவினாலும் அவை காக்கப் படாமல் அழிந்து போயின என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். இன்று வடமொழியிலே கிடைக்கப் பெறும் இருபத்து எட்டுச் சிவ ஆகமங்களும் கூட முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிவ பெருமான் உயிர்களின் அறியாமையையும் தளையாகிய பற்றினையும் போக்குகின்ற முறையினை மெய்கண்ட நூல்களான சிவ ஆகமங்கள் உணர்த்துகின்றன. உயிர்களை அன்பின் வழியாகத் தன்னிடத்திலே நிலைப்பிக்கின்ற முறைகளையும் சிவ ஆகமங்கள் உணர்த்துகின்றன. அவ்வாறு உயிர்கள் அறியாமை நீங்கி, உலகப் பற்று அற்று, இறையன்பினைத் துணையாகக் கொண்டு இறைவனின் திருவடியில் நிலைத்த இன்பத்தை நுகர்ந்து வாழும் வழியினைத் தமிழ் மொழி, வடமொழி எனும் இரு மொழிகளுமே ஒரு படித்தாக உணர்த்துகின்றன. எனினும் அவற்றுள் எதையாவது ஒன்றை முறைப்படி உணர்வால் உணர வல்லார்க்கே இறைநெறித் தெளிவும் இறை உணர்வும் ஏற்படும். இதனை, “அவிக்கின்ற வாறும் அதுகட்டு மாறும், சிமித்தலைப் பட்டுஉயிர் போகின்ற வாறும், தமிழ்ச்சொல் வடச் சொல் எனும்இவ் விரண்டும், உணர்த்தும் அவனை உணரலும் ஆமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
ஆரியம் தமிழ் இரண்டையும் உணர்தல் சிறப்புடையதாயினும் அது எல்லோராலும் முடியாதது என்பதால், தாங்கள் அறிந்த, உணரக்கூடிய ஒன்றையேனும் ஆழ்ந்து உணர வேண்டும். அதன் பயனை அடைதல் வேண்டும் என்பதற்காக ஒன்பது தமிழ்ச் சிவ ஆகமங்களைச் சிவ பெருமான் திருமூலரின் வழி தமிழர்களுக்கு அருளினான். சிவபெருமான் தனக்குச் செந்தமிழ்ச் சிவ ஆகமங்களை அருளியதைத் திருமூலரே அவர் பாடலில், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று குறிப்பிடுவார்.
மேற்கூறிய இருபத்து எட்டு சிவ ஆகமங்களில், இன்றைய உலகிற்குத் தேவையான காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்ற ஒன்பது ஆகமங்களைத் தமிழில் தாம் உணர்ந்ததாகப், “பெற்ற நல்ஆகமம் காரணம் காமிகம், உற்ற நல்வீரம் உயர் சிந்தம் வாதுளம், மற்று அவ்வியாமளம் ஆகும் காலோத்தரம், துற்ற நற்சுப்பிரம் சொல்லு மகுடமே” என்று குறிப்பிடுவார். இவ்வாறு திருமூலர் பெற்றச் சிவாகமங்கள் ஒன்பதனுள் இடம் பெறுகின்ற வீர ஆகமத்தில் சிவச் செறிவு அல்லது சிவயோகம் என்று அழைக்கப் பெறுகின்ற அகத்தவம் இடம் பெற்றுள்ளது. இவ்வகத்தவத்தை எட்டாகக் குறிப்பிடுகின்றார் திருமூலர். இதுவே அட்டாங்க யோகம் என்று அழைக்கப் பெறுகின்றது. அகத்தவம் எட்டினைக் கடைப்பிடித்து நீண்ட நாள் உயிர் வாழ்ந்து இறைவனைத் தம் அகத்திலே இருத்தி வழிபட்டு இருந்து பெருமானின் பேரின்பத் திருவடி நிழலில் அமர்ந்து இருந்தமையைச், “செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும், அப்படி நல்கும் அருள்நந்திதாள் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்ட பின், ஒப்பில் எழு கோடி யுகம் இருந்தேனே” என்கின்றார்.
திருமூலர் தம் வரலாறு கூறும் பகுதியில் தம் உடலோடே பல கோடி யுகங்கள் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைத்து இருந்தமையைச், “சேர்ந்து இருந்தேன் சிவமங்கை தன் பங்கனை, சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடுதன்னுறை, சேர்ந்து இருந்தேன் சிவபோதி நிழலில், சேர்ந்து இருந்தேன் சிவநாமங்கள் ஓதியே” என்றும் “இருந்தேன் இக்காலத்தே எண்ணிலி கோடி, இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே, இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே, இருந்தேன் என்நந்தி இணையடி கீழே” என்றும் குறிப்பிடுகின்றார். இத்தைகைய அகத்தவமே திருமூலரை இத்தகையப் பேற்றிற்கு ஆளாக்கியமையால் அச்சிறந்த சிவச் செறிவான அல்லது சிவ யோகத்தை முயன்று பயில்வது இன்றியமையாதது என்று குறிப்பிடுகின்றார்.
அகத்தவமாகிய சிவச் செறிவில் எட்டுப் படிநிலைகள் இருப்பதனால், இதனை அகத்தவம் எட்டு என்றும் வடமொழியில் அட்டாங்க யோகம் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவபெருமானை எண்ணி இருந்ததே தான் கைவரப்பெற்றச் சிவயோகம் அல்லது சிவச் செறிவிற்குக் காரணம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அட்டாங்க யோகம் என்று பலர் யோக முறைகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டாலும் சிவபெருமானை அகத்தில் இருத்தி, நமசிவய என்ற திருவைந்தெழுத்தினைக் கணிக்காமல் இயற்றப் படுகின்ற அகத்தவங்கள் அல்லது யோகங்கள் திருமூலர் குறிப்பிடும் சிவ யோகம் அல்லது சிவச் செறிவு ஆகா. அவை சிவபெருமானையும் அவனின் திருவருளையும் கூட்டுவிக்காது என்கின்றார் திருமூலர். எனவே சைவர்கள் இயற்ற வேண்டியது திருமூலர் குறிப்பிடும் சிவச் செறிவே ஆகும். இதர யோக முறைகள் அவை அவற்றிற்குரிய பலனை அளித்தாலும் சிவ உணர்வையும் சிவ அறிவையும் சிவனின் திருவடி நிழலையும் அவை தரமாட்டா என்கின்றார் திருமூலர்.
சிவ பெருமானை அகத்தில் இருத்த நல்லொழுக்கமும் அகத்தூய்மையும் நல்லறிவும் மெய்யுணர்வும் வேண்டப்படுவதனால் சிவச் செறிவான இவ்வகத்தவம் இயற்றுவதற்கு எளிதானது அல்ல எனினும் இறைவனைக் கூட்டுவிப்பதற்கு அருமையானது. எனவே தான் அனைவருக்கும் சிவச் செறிவு வேண்டுவதாய் உள்ளது. சிவச் செறிவு எனப்படுவது வெறும் மூச்சுப் பயிற்சி, இருக்கைகள்(ஆசனம்), உடற்பயிற்சி என்பவை மட்டும் செய்து மனதை அடக்கிச் சிந்தனையை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பது மட்டும் அல்ல என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். மூச்சுப் பயிற்சி, இருக்கைகள், மனவடக்கம், சிந்தனையை ஒருமுகப்படுத்துதல் போன்றவை சிவச் செறிவில் ஒரு பகுதியாக வரினும் அவற்றிற்கு அடிப்படையாக விளங்கக் கூடிய அடிப்படையான சில பண்புகளையும் படிநிலைகளையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவ்வகையில் சிவச் செறிவின் எட்டுப் படிநிலைகளை அகத்தவம் எட்டு என்று குறிப்பிடுகின்றார்.
சிவச் செறிவு இயற்ற இருக்கின்றவர்கள் அந்நெறி இந்நெறி என்று தடுமாறிக் கொண்டிராமல், முதலில் சிவ நெறிக்குரியவர்களாக வேண்டும் என்கின்றார். சிவ நெறியை உறுதியாகப் பற்றிக் கொண்ட பின் அகத்தவமாகிய எட்டு உறுப்புக்களைக் கொண்ட சிவச் செறிவு நெறி வழியே சென்று சமாதியாகிய நொசிப்பு என்பதில் நிலையாக நில்லுங்கள். மற்ற யோக முறைகளுக்கு வேறுபட்டு விளங்கும் சிவ யோகம் அல்லது சிவச் செறிவு குறிப்பிடும் சமாதி அல்லது நொசிப்பி நிலைக்கு அடுத்த நிலையான சிவ அறிவு அல்லது திருவடி உணர்வு உங்களுக்கு ஏற்படும் என்கின்றார். அவ்வுணர்வு ஏற்படுகின்றவர்களுக்கு மீண்டும் வேறு உடலில் பிறக்கும் பிறவி ஏற்படாது காலத்தை வென்று திருவடி நிழலில் அமர்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என்கின்றார். இத்தகைய சிவச் செறிவின் எட்டுப் படிநிலைகளாக தீது அகற்றல்(இயமம்), நன்று ஆற்றல்(நியமம்), இருக்கை(ஆதனம்), வளி நிலை(பிரணாயாமம்), தொகை நிலை(பிரத்தியாகாரம்), பொறை நிலை(தாரணை), நினைதல்(தியானம்), நொசிப்பு(சமாதி) என்று குறிப்பிடுகின்றார்.
அகத்தவம் எட்டு இயற்றுவதன் வழியாக அதன் முடிந்த நிலையாக, குறிக்கோளாகக் கொள்ளப் பெறுவது சிவபெருமானின் திருவருளேயாம். அத்திருவருளின் துணைக்கொண்டுச் சிவ பெருமானின் திருவடியிலே பேரின்பப் பெருவாழ்வு பெற்று இருத்தலேயாம் என்கின்றார் திருமூலர். இக்குறிக்கோளை விடுத்து, செல்வம், தொழில், வசியம், பல்வேறு சிற்றாற்றல்கள், பேர், புகழ், பாதுகாப்பு என்பனவற்றை முன்னிருத்தி இயற்றப்படும் அகத்தவங்கள் சிவச் செறிவோடு தொடர்பு அற்றவையாம். அவை சிவ நெறிக்கு மாறுபட்டவையாம். உண்மைச் சிவச் செறிவினைத் திருமூலரின் வழி அறிவோமாக! சிவச் செறிவின் உண்மை நோக்கத்தினை உணர்ந்து அதை நோக்கிச் செல்வோமாக! உலகம் போற்றும் சிவச் செறிவின் சிறப்பினை உணர்ந்து அதனை நம் இளைய குமுகாயத்திற்குக் கொண்டு சேர்ப்போமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!