23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட

2525

23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட

நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண்ணைக் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்தேன் என்பதனை, “கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி” என்று மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் குறிப்பிடுவார். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று குறிப்பிடும் மணிவாசகப் பெருமான், பெருமானின் திருவருளே நம்மை அவனின் திருவடிக்கு அழைத்துச் செல்கின்றது என்பார். பெருமானின் திருவருளே நமக்கு அவனைக் காணும் உதவியையும் அவனைக் காட்டும் உதவியையும் செய்கின்றது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

மணிவாசகப் பெருமானுக்குச் சிவபெருமானே குருந்த மரத்தின் அடியின் கீழ் ஆசானாக வந்து இருந்து சிவஞானபோதம் எனும் சிவ அறிவினை ஊட்டினான். செவ்வியுற்ற உயிர்களுக்குச் சிவபெருமானே சிவஆசானாக மாந்தச் சட்டைத் தாங்கி வந்து அருள் செய்வான் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையை விளக்கும் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சிவபெருமானுடைய அருள் நோக்கால் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம் எனும் அழுக்கு நீங்கிச் சிவஅறிவுத் தெளிவு ஏற்படும் என்று குறிப்பிடுகின்றன. சிவபெருமான் சிவஅறிவுத் தெளிவு வழங்குவதனையே பெருமானின் நெற்றிக் கண்ணோடு தொடர்பு படுத்திக் கூறினர்.

“கறைமிடற்று அண்ணல்” என்றும் “கண்ணுதற் கடவுள்” என்றும் பரம்பொருளான சிவபெருமான் சங்க இலக்கியங்களில் போற்றப் பெறுகின்றான். பெருமான் கொடிய நஞ்சினை உண்டு, கழுத்தில் நிறுத்தியப் பேர் அருள் திறத்தைப் போற்ற அவனைக் கறைமிடற்று அண்ணல் என்றனர். பெருமானின் பேர் அறிவுத் திறத்தைப் போற்றக் கண்ணுதல் கடவுள் அல்லது நெற்றியில் கண்ணுடைய கடவுள் என்றனர். பெருமானின் பேர் அருள் துணை நிற்க அப்பெருமானின் சிவஅறிவினைக் கொண்டே அவனின் திருவடியினைக் காண இயலும் என்று நம்முன்னோர் தெளிவாக உணர்ந்திருந்தனர்.

பரம்பொருள் சிவபெருமானின் நெற்றிக் கண் தொடர்பான புராணச் செய்திகளும் பெருமானின் பேர் அறிவினை அல்லது சிவஅறிவினை உருவகமாக விளக்கி நிற்பனவாகவே உள்ளன. கச்சியப்பர் எழுதிய கந்த புராணத்தில் பெருமான் காமனை எரித்தச் செய்தி பெருமானின் நெற்றிக் கண்ணோடுத் தொடர்பு படுத்தியே சொல்லப்படுகின்றது. பதுமசூரனை அழிக்க வானவர்களும் முனிவர்களும் பெருமானின் திருவருளை வேண்டி நிற்கின்றனர். பெருமான் தனது திருவருளை உள்ளடக்கி அசைவற்று அமர்ந்து இருக்கப் பெருமானின் அருளைப் பெற அவர்கள் முற்படுகின்றனர். எவரும் துணியாத நிலையில் காமனை வற்புறுத்தி அவனின் மலர்க்கணையைப் பெருமானின் மீது ஏவுமாறு செய்கின்றனர். காமன் தனது மலர் அம்பினைப் பெருமான் மீது ஏவ, பெருமான் தனது நெற்றிக் கண்ணை விழிக்கக் காமன் எரிந்து சாம்பலாகிப் போவதாகக் குறிப்பிடப் பெறுகின்றது.

காமன் என்பவன் ஆசைகள் தோன்றுகின்ற இடமாகக் குறிக்கப் பெறுகின்றவன். அவன் ஏவிய மலர்க் கணைகள் ஆசைகள் என்பவையே! பற்று அற்றப் பெருமானின் சிவஅறிவின் முன்பு ஆசைகள் எரிந்து சாம்பலாகி விடும் எனும் கருத்தினை உணர்த்தவே காமனைப் பெருமான் தம் நெற்றிக் கண்ணால் எரித்தச் செய்தி கூறப்பட்டது என்பர். காமனைத் தம் நெற்றிக் கண்ணால் எரித்தக் கடவுள், அதே நெற்றிக் கண்ணின் வழி முருகப் பெருமானைத் தோற்றுவித்தச் செய்தியும் கச்சியப்பரின் கந்தபுராணத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. மறக்கருணையினால் காமனை எரித்த நெற்றிக்கண் வழியே அறக்கருணை கொண்டு முருகப் பெருமானைத் தன்னில் இருந்து வெளிப்படுத்தியதைக் குறிப்பிடுவர். வால் அறிவன் என்று பேராசான் வள்ளுவரால் போற்றப் பெறும் பேர் அறிவாளன் சிவபெருமானின் சிவஅறிவே ஆறு தீப்பொறிகளாகப் பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்டுப் பின் ஆறு குழந்தைகளாக மாறிச் சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் விழுந்தது என்பர்.

ஆறு குழந்தைகள் பின்பு ஆறுமுகனாக, முருகனாக ஒன்றாய் இணைந்தன என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். ஈசானம், தட்புருடம், வாமம், அகோரம், சத்தியோசாதம், அதோமுகம் என்ற ஆறுமுகங்களைக் கொண்டப் பரம்பொருளான சிவபெருமானே அறிவு வடிவமாக, ஆறுமுகனாக, முருகனாகத் தோன்றினான் என்பர். சிவபெருமானின் நெற்றிக் கண் அப்பெருமானின் பேர் அறிவினை உணர்த்தி நிற்பதனையும் அப்பேர் அறிவுக் கண்ணின் வழி வெளிப்பட்ட முருகப் பெருமான் பரம்பொருளான சிவத்தின் அறிவு வடிவே என்பதனையும் உணர்த்தி நிற்கின்றது என்பர். முருகன் பெருமானின் அறிவு வடிவினை விளக்கி நிற்பதனாலேயே அவனை ஞானப்பண்டிதன் என்று குறிப்பிட்டனர்.

பெருமானின் நெற்றிக் கண் உணர்த்தி நிற்கும் சிவஅறிவு, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக உள்ளது என்பதனாலேயே சிவனின் அறிவு வடிவாக விளங்கும் முருகனை, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் உள்ள வேலின் வடிவைக் கொண்டு வழிபட்டனர். சிவஅறிவு நாவில் சிறக்க வேண்டும் என்பதற்காகவே முன்பு காலத்தில் வேலின் அடியினைக் கொண்டு நாவில் மந்திரங்களை எழுதும் வழக்கு ஏற்பட்டது. அதுவே பின்பு நாவில் வேல் குத்தும் வழக்காக மறுவியது என்பர். இங்கும் பெருமானின் திருவருளாலேயே சிவபெருமான் முருகனாகப் பெருமானாகத் தோன்றி நம்மை அவனின் திருவருளைப் பெறச் செய்கின்றான் என்பதனை அவனின் நெற்றிக் கண் உணர்த்தி நிற்கின்றது.

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தந்த வரலாற்றில் பெருமானின் நெற்றிக் கண் குறிப்பிடப் பெறுகின்றது. நக்கீரர் எனும் புலவருக்குப் பொருள் உணர்வு ஏற்படுத்தும் பேர் அருள் திறத்தால் பெருமான் இறையனாராகத் தோன்றிப் பாண்டியனின் ஐயத்தைப் போக்குவதற்குத் தருமிக்குப் பாட்டு எழுதிக் கொடுத்தான்.
தொடர்ந்து மலர்களைச் சூடிக் கொள்வதனாலும் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதனாலும் மட்டுமே பெண்களின் கூந்தலுக்கு மணம் ஏற்படுகின்றது. இயற்கையாகப் பெண்களின் கூந்தலுக்கு மணம் கிடையாது என்று பொருள் உணர்வு பெறாமல் நக்கீரர் வாதிடுகின்றார். பெண்களின் தலை மயிர் மண் தத்துவத்தினால் ஆனது. மண்ணுக்கு இயற்கையாக மணம் உண்டு. அதனால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டு என்று பெருமான் எடுத்து உரைத்தும் நக்கீரர் உணர்வதாய் இல்லை! அவர் சிவஅறிவு அல்லது பொருள் உணர்வு பெற வேண்டிய வேளை கூடி விட்டமையால் பெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தான்.

“நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!” என்று வாதாடிய நக்கீரரைப் பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட அறிவுத் தீ எரித்துச் சாம்பலாக்கி நக்கீரரைப் பொற்றாமரைக் குளத்தில் விழச் செய்தது. பெருமானின் திருவருளால் சிவஅறிவுடன் நக்கீரர் நலமுடன் மீண்டும் வருகின்றார். இங்கும் பெருமானின் பேர் அருள் திறமும் பெருமானின் பேர் அறிவுத் திறமுமே தருமிக்கும் பாண்டியனுக்கும் நக்கீரருக்கும் நல்வழி காட்டியமையை அறிய முடிகின்றது.

பெருமானின் பேர் அருள் கருணையையும் பேர் அறிவுத் திறத்தையும் பெருமானின் நெற்றிக் கண் உணர்த்தி நிற்பதனால், “கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தினேன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பேர் அருள் பேர் அறிவாளனாகிய அக்கண்ணுதல் கடவுளை நாளும் வழிபட்டு நாமும் நற்கதி அடைவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!