36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

12935

பெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர் குறிப்பிடுவார். தமிழ்ச் சிவாகமான திருமந்திரத்தையும் அடியார்களின் வரலாறுகளைக் குறிக்கும் பெரிய புராணத்தையும் பெருமானே திருமூலருக்கு ஆசானாக (குருவாக) வந்தும் தெய்வச் சேக்கிழாருக்கும் ‘உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுத்தும் உணர்த்தினார். திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும், சுந்தரருக்கும், மணிவாசகருக்கும் இறைவனே அருள்புரிந்து திருமுறைகளும் திருவாசகமும் கிட்டும்படியாகச் செய்தான். சீர்மிகு செந்தமிழரின் இறைகொள்கையான சித்தாந்த சைவ கொள்கைகளைப் பதினான்கு மெய்கண்ட நூல்களின் வழி உலகிற்கு அறிவிக்க இறைவனே மெய்கண்டார், அருநந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் போன்ற மெய்கண்ட ஆசான்களுக்கு அருள் செய்தார்.

இறைவனே அடியவர் கோலத்திலும், ஆசான் வடிவிலும் வந்து உணர்த்திய சிவ நுகர்ச்சியைச், சிவ அறிவை, இறை இன்பத்தைச் சொல்லில் அடக்க இயலாது உருகி உருகி, அழுது அழுது, அகங் குழைந்து குழைந்து பாடினர் அருளாளர்கள். இறைவனின் திருவருளை, “ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கும் உலப்பிலா ஆனந்தம்” எனவும், “நினைந்தொறும், காணும் தொறும் பேசுந்தொறும் அனைத்து எலும்பும் உள்நெக ஆனந்த தேன்” எனவும் மாணிக்கவாசகர் குறிப்பிடுவார். “ஆரா அமுதே அரசே ஆனந்த பேராறே பெருந்துணையே’ என்று இறை உணர்வு இன்ப வெள்ளமாய் இருப்பதனைத் தாயுமானவர் அடிகளும் குறிப்பிடுவார்.

செவ்வி (பக்குவம்) உடைய உயிர்களுக்குப் பெருமானே தானாகத் தேடிவந்து தன் திருவடி இன்பத்தினைத் தருகின்றான் என்பதனை, ‘நானே ஓர் தவம் செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன், தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான், தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்” என்று மாணீக்கவாசகர் குறிப்பிடுவார். அவ்வாறு இறைவனே வந்து அளித்த பேரின்பத்தினை மற்றவர்களும் பெற வேண்டும் என்று அருளாளர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். நீண்ட தூரம் நடந்து சென்று திருகோயிலில் வழிபாடுகளைச் செய்து தங்களை வளப்படுத்திக் கொண்டதோடு மட்டும்மல்லாமல் தாங்கள் பெற்ற இன்பத்தினை பிறரும் பெற வேண்டும் என்று இறைவனின் பெருமைகளையும் இறைவனின் அருளும் திறத்தையும் அவனை அடைவதற்கான வழிமுறைகளையும் மக்களுக்கு எடுத்து இயம்பினர். பெருமானிடத்திலிருந்து இலவயமாகப் பெற்ற அச்சமய அறிவினைச் சிவ அறிவினை இலவயமாகவே மக்களுக்கு அளித்து அவர்கள் இன்பத்தில் திளைப்பதைக் கண்டு மகிழ்ந்தனர்.

பெறற்கரிய இவ்விறை இன்பத்தை எல்லோரும் பெற வேண்டும், அதில் திளைக்க வேண்டும் என்ற கருத்தினைத் திருமூலரும், “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின், ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்ற தலைப்படும் தானே’ என்று குறிப்பிடுகின்றார். இறைவன் திருவருளால் இறைவனின் திருவடி உணர்வினைப் பெறப் பெற்றேன். அடியேன் பெற்ற இறாவாப் பேரின்பமாகிய இவ்வின்பத்தினை இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் பெற்று இன்புற வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். உயிர்களின் உடம்பிலே ஓசைவடிவில் அல்லது மந்திர வடிவில் இருக்கின்றது இறைவனின் திருவருள். அதனை இடைவிடாது தேடிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு அது உயிரில் உணர்வாய் மாறி இன்பத்தினை அளிக்கும் என்கிறார். மந்திர வடிவில் அல்லது இசை வடிவில் அருளுவாய் நின்று பின் உணர்வாய் மாறும் இறை உணர்வை அடையும் நெறியினை, வழியினைத் திருமூலரும் இதர அடியார்களும் எல்லோரும் அறிந்து கொண்டு இறை இன்பத்தினைத் துய்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஏழை, பணக்காரர், பதவி உள்ளவர், பதவி அற்றவர் என்று பார்க்காமல் அனைவருக்கும் இவ்வழி முறைகளைச் சொன்னார்கள். ஆயிரக்கணக்கான பாடல்களில் இவற்றைச் சொல்லி அதனை அனைவருக்கும் அளித்தார்கள்.

இறை இன்பத்தினை அடையும் நெறிகளைத் தங்களுக்கு இறைவன் தன் கருணையினால் வழங்கியதைக் கருணையோடு மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுத்தார்கள். இறைக் கொள்கைகளானாலும் சரி, பூசை முறைகளானாலும் சரி, யோக முறைகள் என்ற செறிவுச் செய்திகளாய் இருந்தாலும் சரி, ஞானம் என்ற அறிவு நெறியாக இருப்பினும் சரி, கருமித்தனமும் வஞ்சகமும் இன்றி எல்லோர்க்கும் தெரிவித்தார்கள். இப்பெருமக்களிடன் இருந்து கற்றுக் கொண்ட நெறி முறைகளை சமய உண்மைகளை இன்று தங்களை அருளாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் விலை போட்டு விற்கின்றார்கள்.

சமய வழிகாட்டல்களும் நெறி முறைகளும் சமய உண்மைகளும் இன்று வணிகம் செய்யப் படுகின்றது. பணம் படைத்தவர்கள் கோயிலில் பூசனைகளையும் இறைவனை அடையும் பயிற்சி நெறிமுறைகளையும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பெற்றுக்கொள்கின்றனர். பணம் படைத்தவர்களுக்கே இன்று வழிபாட்டில் முன்னுரிமையும் வழிகாட்டலும் கொடுக்கப் படுகின்றது. சோற்றுக்கே வழியில்லாத வறியவர்களும், கையில் பணமில்லாதவர்களும் கைவிடப்பட்ட நிலையில் அவர்கள் நிலைக்கு, அவர்களை ஏற்றுக் கொள்கின்ற குமுகாயத்தினில் வழிகாட்டுதல் இல்லாமையால் உண்மை சமயத்திற்குப் புறம்பான முறைகளில் கோயில்களை அமைத்துக் கொண்டும் உண்மைச் சமயத்திற்குப் புறம்பான வழிபாடுகளைச் செய்து கொண்டும் திசை மாறிப் போகின்றார்கள். மேட்டுக் குடிகள் மத்தியிலே உள்ள உண்மைச் சமய வழிபாட்டினை, வழிமுறைகளை நுகரும் இன்பத்தினைப் பாமர மக்களும் பெரும்படி செய்தல் வேண்டும். சரியான வழிகாட்டல், பின்பற்றுதல், முன்மாதிரிகள் இல்லாமையால் சமயத்தின் பேரில் நிகழும் அவலங்களையும் தமிழர் சமயத்திற்கு வரும் இழுக்கினையும் இதன்வழி தவிர்க்கலாம்.

ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு சமயப் பயிற்சிகள், மெய்யுணர்வு பயிற்சிகள், உயிர் தேற்றப் பயிற்சிகள் என்று பல பயிற்சிகளை நடத்தும் சமய வணிகர்கள் தாங்கள் இலவயமாகப் பெற்ற இந்த சமய அறிவினை ஏழை எளியவர்களுக்கு இலவயமாக நடத்த முன் வரவேண்டும். ஏழை எளியவர்களால் அளிக்க முடிந்த சிறிய தொகையயைப் பெற்றுக்கொண்டு ஆன்மிக அறிவினை அவர்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். ஆன்மிக அறிவினை அளிக்கும் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தாங்கள் குடியிருக்கும் வீட்டினை விற்கும் நிலையும் நண்பர்களிடம் கடன் பெறும் நிலையும் வட்டி முதலைகளிடம் கடன் பெறும் நிலையையும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்படுமானால் இப்பயிற்சிகளை நடத்துகின்றவர்களின் நெறி திருமூலரின் நெறிக்குப் புறம்பானது என்பதனை அனைவரும் உணர்தல் வேண்டும். வாழ்வில் துன்பம், நிம்மதியின்மை, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழி என்று தங்களை நாடி வந்தவர்களுக்குத் தாங்கள் இறைவனிடம் இருந்து பெற்ற இன்பத்தினை மற்றவர்களுக்குக் கொடுத்து அவர்களை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்றே திருமூலர் போன்ற சிவச் செறிவாளர்கள் (சிவயோகிகள்) நாளும் முயன்று உழத்திருக்கின்றார்கள். இவர்களே உண்மை உலக நோன்பிகள். ஆருயிர்களூக்கெல்லாம் அன்பு செய்கின்றவர்கள்.

திருக்கோயில்களும் சமயப்பயிற்சி மையங்களும் சமயத்தொண்டூழிய அமைப்புகளும், சமயக் கிரியைகளையும் சமயப் பயிற்சிகளையும் மக்களுக்கு அளிக்கும் சேவை மையங்களாகத் திகழ வேண்டும். இறைவனிடத்திலே பணம் பெற்று அதை அன்பர்களுக்கு அளித்து மகிழ்ந்த உண்மை அடியார்களைப் போன்று உரிய இடத்தில் பணத்தைப் பெற்று அதை ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் செலவிட வேண்டும். வங்கி கணக்கை உயர்த்தி மகிழ்ச்சி அடையாமல் மக்களின் துன்பத்தினைப் போக்கி மகிழ்ச்சி அடைய வேண்டும். மெய்யுணர்வுப் பயிற்சிகளுக்கும் ஆலயங்களுக்கும் செல்லும் ஏழை எளிய மக்கள் உள்ளத்தில் பண அச்சம் இன்றி இன்பமாய் அச்சேவைகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் உண்மைச் சமயமும் சமய விழிப்புணர்ச்சியும் குமுகாய மேம்பாடும் எல்லா தரப்பு மக்களுக்கும் போய்ச்சேரும். ஒரு சில தரப்பினர் மட்டும் நுகரும் இன்பத்தினை அவர்களும் பெறுவார்கள், வாழ்வில் உயர்வார்கள்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!