22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்

2589

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்

சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம், பாசம் எனும் கட்டு, ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று பொருள்களை உட்கூறாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடுகின்றது. உயிர்கள் தங்களின் உண்மையான நிலையை உணர முடியாதவாறு இப்பாசக்கட்டு உயிர்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது என்றும் இக்கட்டு நீங்கினால் மட்டுமே உயிர் இறைவனின் திருவடி இன்பமான வீடு பேற்றினை அடைய முடியும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. பெருமானின் திருவருள் துணையினைக் கொண்டே உயிர்கள் பாச நீக்கம் பெற முடியும் என்று பெறப்படுகின்றது.

பாசத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான கன்மமே வினை அல்லது செயல் என்று சுட்டப்படுகின்றது. வினையை நல்வினை, தீவினை என்று இரண்டாகக் குறிப்பிடுவர். ஆணவம், கன்மம், மாயை என்பவற்றை மும்மலங்கள் என்றும் கூறுவர். இம்மும்மலங்களில் ஆணவம், உயிரின் பழைமை தொட்டே உயிரைப் பற்றி உள்ளது என்றும் அது உயிரின் இயல்பு அல்ல என்றும் கூறுவர். செம்பில் களிம்பு பற்றி இருப்பது போல உயிரை ஆணவம் உயிரின் பழைமை தொட்டே பற்றி இருக்கின்றது என்று சைவம் குறிப்பிடுகின்றது. உயிரை அணுத்தன்மைப் படுத்திக் கீழ் நிலைக்கு இட்டுச் செல்கின்ற இவ்வாணவ மலத்தினை நீக்கவே சிவம் எனும் பரம்பொருள், கன்மம், மாயை என்கின்ற வேறு இரு மலங்களை உயிருக்குக் கூட்டி வைத்துள்ளது என்று சைவம் உணர்த்துகின்றது.

உயிரின் இயல்புகளில் சிலவான அறிவித்தால் அறிதல், எதையும் அழுந்தியே அறிதல் என்ற தன்மைகளுக்கு ஏற்ப பெருமான் உயிர்களில் ஒன்றாய், உடனாய், வேறாய் இருந்து, தன் அறிவு, விருப்பு, செயல் என்பவற்றை உயிர்களின் அறிவு, விருப்பு, செயல் என்பவற்றின் மீது திருவருளாய்ச் செலுத்தி உயிர்களைச் செவ்வி அடையச் செய்கின்றான். உயிர்களின் ஆணவ மலத் தடிப்பிற்கு ஏற்றவாறு நுகர்ச்சிகளை வகுத்துக் கொடுத்து, உயிர்கள் அழுந்தி நுகர்ந்து செவ்வி அடைய உதவுகின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இப்படி உயிர்கள் அழுந்தி நுகர்ந்து தங்களின் அறியாமையைப் போக்கிக் கொள்ளவே பெருமான் உயிர்களை நல்வினை தீவினை என்ற இருவினைகளை ஆற்றத் தூண்டுகின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

உயிர்கள் பிறவிக்கு வரும் முன் இருக்கும் நிலையில் அவற்றிற்குக் கன்மம் சேர்க்கப்பட்டு, அக்கன்மம் செயற்பாட்டிற்கு வராமல், நன்மை தீமை என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கின்றது. பின்பு உயிர் பிறவி பெற்றுப் பொது நிலைக்கு வருகின்ற போது அதற்குச் சேர்க்கப்பட்ட கன்மம் செயல்பாட்டிற்கு வந்து நல்வினை தீவினை என்று இரு திறப்பட்டுச் செய்யப்படுகின்றது. நல்வினை என்பது தனக்கும் பிற உயிர்களுக்கும் செய்யும் நற்செயல்கள். தீவினை என்பது தனக்கும் பிற உயிர்களுக்கும் செய்யும் தீய செயல்களாகும். இவை இரண்டுமே விடப்பட வேண்டியவை என்று சைவம் குறிப்பிடுகின்றது.

உயிர்கள் ஆற்ற வேண்டிய வினையினை மூன்று நிலைகளில் சைவம் குறிப்பிடுகின்றது. அவை பழவினை (சஞ்சிதம்), நுகர்வினை (பிராரர்த்தம்), ஏறுவினை (ஆகாமியம்) என்பனவாகும். பழவினை உயிர் பிறவிக்கு இன்னும் கொண்டு வராத சேமிப்பில் உள்ள வினை. இதனைத் தொல்வினை, கிடைவினை என்றும் குறிப்பிடுவர். நுகர்வினை என்பது பிறவிக்கு எடுத்து வரப்பட்டு நுகர்ந்து கொண்டிருக்கும் வினை. தற்போது வாழும் பிறவியில் இன்ப துன்ப நுகர்வைக் கொடுக்கும் வினை. இந்நுகர்வினையை ஊழ்வினை என்றும் குறிப்பிடுவர். ஏறுவினை என்பது பிறவியில் நல்வினை தீவினை என்று செயல் ஆற்றும்போது புதிதாகச் சேர்த்துக் கொள்ளும் வினை. இதனை வருவினை அல்லது மேல்வினை என்றும் குறிப்பிடுவர். நல்வினை தீவினைகளைப் பிறவியில் நுகர்வினையில் செய்து கொண்டும் அதனால் விளையும் பயனாகிய ஏறுவினையைச் சேர்த்துக் கொண்டும் போவதனால் பிறப்பு இறப்பு எனும் சுழலில் உயிர்கள் சிக்கிக் கொள்கின்றன. இச்சுழலில் இருந்து உயிர்கள் மீள்வதற்குப் பெருமானின் திருவருளே துணை நிற்கின்றது.

பெருமானின் பெரும் பரிவை முன்வைத்து, வெறுப்பு விருப்பு இன்றிச் சிவநல்வினைகளைச் செய்து வந்தால் நல்வினை இன்பம் தரும் செயல், தீவினை துன்பம் தரும் செயல் என்ற வேறுபாடு இன்றி எல்லாம் பெருமானின் செயல் எனும் செவ்வி உண்டாகும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இத்தகைய செவ்வி ஏற்பட்டால் பெருமானின் அருள் வீழ்ச்சி உயிர்களின் மீதுபட, மணிவாசகருக்குப் பெருமான் சிவஆசானாக வந்து அவரின் பழவினையையும் ஏறுவினையையும் வருத்த விதையைப் போன்று ஆக்கி இனி முளையாமல் செய்து வீட்டின்பம் அளித்தது போல் அளிப்பான் என்று சைவம் குறிப்பிடுகின்றது. உள்ளத்தில் மகிழ்ச்சிப் பொங்க பெருமானின் பெருமைகளை முன்வைத்து என் பழவினை, நுகர்வினை, ஏறுவினை ஆகியவற்றை முழுமையாகக் கெடச் செய்வேன் என்பதனையே, “சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்” என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

இதனால் பிறவியில் நுகர்கின்ற நுகர்வு அல்லது வினைப்பயன் நாம் செவ்வியுற பெருமான் கூட்டுவிப்பது. வருகின்ற வினை நுகர்வுகளைப் பெருமானின் திருவருளை முன் இருத்தி மன உறுதியுடன் எதிர்கொள்வதே அறிவுடைமையாகும். வரவிருக்கும் நுகர்வுகளைப் பரிகாரம் செய்து தவிர்த்து விடலாம் என்பது அறியாமை ஆகும். அவர் அவர் செய்த நன்மைக்கும் தீமைக்கும் பயனை அவர் அவரே நுகர வேண்டும் என்பது தெளிவுடைமை ஆகும் என்பன சைவம் குறிப்பிடும் உண்மைகளாகும். திருவருளை முன் இருத்திச் சைவநெறிப்படிச் செம்மையுற வாழ்வோமானால் தீவினை மேலும் ஏறாது, நுகர்வினை உடல் அளவாய்க் கழிந்து உயிரினைத் தாக்காது என்பதும் சித்தாந்த சைவம் கூறும் உண்மையாகும். “கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்” என்று திருஞானசம்பந்தப் பெருமான் உறுதி கூறுவது போல, பேர் அருளாளனான அப்பெருமானை மலரிட்டு வாழ்த்தி வணங்குவோம், வினை நீங்கப் பெறுவோம்!

 

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!