35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

2030

35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

“வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று பல்வேறாகத் துதித்தாலும் ஓலம் இட்டாலும் அவற்றிற்கு எட்டாமல் மேல் உயர்ந்தும் கீழ் ஆழ்ந்தும் அகன்றும் நுண்ணியனாய் இருப்பவனே என்று பொருள்படும்படி இவ்வரிகளின் வழி உரைக்கின்றார்.

உயிர்கள் படிமுறையில் செவ்வி அடைவதற்கு அல்லது முதிர்ச்சி அடைவதற்குப் பெருமான் பல்வேறு வகையில், பல்வேறு மொழிகளில் சமய நூல்களைத் தாமாகவும் தம் அடியார்களின் மூலமும் அருளியுள்ளான். மொழி என்பது எவ்வாறு எந்த மொழியையும் குறிப்பிடாமல் பொதுவாக நிற்கின்றதோ அதைப்போன்று மறை அல்லது வேதம் என்பது எந்த மறையையும் அல்லது வேதத்தையும் குறிப்பிடாமல் பொதுவாய் நிற்பது. சீர்மிகு செந்தமிழர் வாழ்வில் சமய நெறிகளைப் புகட்டுகின்ற மறை அல்லது வேதங்கள் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் இடம் பெற்று உள்ளன. சமற்கிருதம் அல்லது வடமொழிச் சமய நூல்கள் அல்லது வேத நூல்கள் பொதுவாக இருக்கு, யசூர், சாமம், அதர்வனம் என்ற வடமொழி வேதங்களையும் அதன் முடிந்த முடிவையும் விளக்கி நிற்கின்றன. தமிழ்மொழியிலான மறைகள் அல்லது வேத நூல்கள் பெருவாறியாகச் சித்தாந்த சைவத்தையும் திருமாலியத்தையும் குறிப்பிடுபவையாக இருக்கின்றன.

வேதங்கள் என்று குறிப்பிடுவதனை வடமொழி வேதம், தமிழ்ச் சித்தாந்த சைவம் எனும் அடிப்படையில் இங்குக் காணுகின்றோம். நால்வேதங்கள் பற்றிய வடமொழி வேதங்களும் சித்தாந்த சைவம் பற்றிய தமிழ் மறைநூல்களும் உயிர்கள் பெருமானைச் சென்று கூடும் நெறியினை உணர்த்துகின்றன.

வடமொழி வேதங்களின் முடிவான முடிவை வேதாந்தம் என்பர். வேத வியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடநாட்டிலிருந்து வந்து காஞ்சிபுரத்தின் காமக்கோடிப்பீடம் என்றும் சக்திப் பீடம் என்றும் அமைத்த ஆதி சங்கரர் ஏற்படுத்திய கொள்கையே வேதாந்தம் எனப்படுகின்றது. வடமொழி வேதங்கள் நான்கில் ஞானகாண்டமாக அமைந்திருப்பவை உபநிடதங்கள். இவ்வுபநிடதங்கள் குறிப்பிடுபவையே வேதாந்தம் எனப்படுகின்றது. வேதாந்தத்தைப் பின்பற்றுபவர் வேதாந்தி என்று அழைக்கப்படுவர். வேதாந்தத்தைக் கடைப்பிடித்து வெற்றி பெறுபவர் பிரம்ம ஞானம், பரஞானம் பெறுவர். இறைவன் சத்சித்ஆனந்த (உண்மை, அறிவு, இன்பம்) வடிவாக இருக்கின்றான் என்பது வேதாந்தக் கொள்கை. வேதாந்திகள் மெய்ப்பொருளை அல்லது பரம்பொருளைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிடுவர். பரப்பிரம்மத்தின் ஆற்றலால் உலகமும்(சகம்), உயிரும்(சீவன்) தோற்றத்திற்கு வருகின்றன என்று குறிப்பிடுவர். உலகமும் உயிர்களும் பிரம்மம் எனும் அறிவுப் பெருவெளியில் தோன்றவும் இருக்கவும் ஒடுங்கவும் செய்கின்றன என்கின்றன. உலகமும் உயிர்களும் தோன்றுதலும் இருத்தலும் ஒடுங்குதலும் மாயா காரியங்கள் எனப்படுகின்றன. உலகையும் உயிர்களையும் என்றும் நிலையானவை அல்ல என்று மாயாவாத நூல்கள் குறிப்பிடுகின்றன.

கடலில் அலைகள் தோன்றுவது போலவும் கதிரவனிடத்து கதிர்கள் தோன்றுவது போலவும் எண்ணிலி சீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருந்து தோன்றி, இருந்து மீண்டும் பரமாத்மாவிலேயே ஒடுங்குகின்றன என்பது வேதாந்தக் கொள்கை. இக்கொள்கை பொருள் இரண்டு இல்லை எனும் அத்வைதக் கொள்கை எனப்படுகின்றது. உலகங்களும்(சகம்) சீவன்களும் பரமாத்மாவிற்கு உடலாக இருப்பதால், உடலையும் உடலுக்கு உரியவரையும் இரண்டாகப் பிரிக்க முடியாது என்கின்றது. உடல்களும் உயிர்களும் பரமாத்மாவின் உடற்கூறுகள் என்பதால் உலகங்களும் உயிர்களும் இரண்டு பொருள்கள் அல்ல! அவை ஒரே பொருளில் ஆனவை என்கின்றன. பரமாத்மா பரிபூரணப் பொருள் (நிறைவான பொருள்). உலகமும் உயிர்களும் பிரம்மமே. அவை பிரம்மத்திற்கு வேறானவை அல்ல என்று வேதாந்த வடமொழி வேதங்கள் குறிப்பிடுகின்றன. அத்வைதம் எனும் வேதத்தின் உட்பிரிவாக துவைதம், விசித்தாத்வைதம் எனும் பிரிவுகள் இருந்தாலும் பொருள் ஒன்றே என்பது வேதாந்தக் கொள்கையென வடமொழி வேதாந்த நூல்களான உபநிடதங்கள் விளக்குகின்றன. வேதாந்த நூல்கள் உயிர் பிரம்மமாகவே ஆகிவிடும் என்றும் உண்மைப் பொருள் ஒன்றே என்றும் இரண்டு இல்லை என்றும் குறிப்பிடுகின்றன.

தமிழ் வேதங்களாகத் தமிழ் மறைகளாகச் சொல்லப் பெறுபவை சித்தாந்த சைவ நூல்கள். சித்தாந்த சைவம் வடமொழி வேதத்திற்கு வேறுபட்டது. சித்தாந்த சைவம் 28 சிவ ஆகமங்களையும் 12 திருமுறைகளையும் 14 மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. பெருமானே கல் ஆல மரத்தின் கீழ் ஆசானாக வீற்று இருந்து சீலம், நோன்பு , செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பதன் பொருளைப் பெருமான் உணர்த்த அறிந்தது. சித்தாந்த சைவக் கோட்பாடு பெருமானாலேயே உணர்த்தப்பட்ட, “உள்ளது செயற்படும்” எனும் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த சைவம், ஆகமாந்தம் சித்தாந்தம் என வழங்கி வருகின்றது. ஆசான் பரம்பரை முறையாக நிலைபெற்று விளங்கும் இக்கொள்கையினை இரௌரவ ஆகமத்தில் உள்ள பன்னிரண்டுச் சூத்திரங்களைத் தழுவித் தமிழில் பன்னிரண்டுச் சூத்திரங்களில் சிவஞானபோதம் எனும் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூலை மெய்கண்டார் அருளினார். மெய்கண்டாரைப் பின்பற்றி அருள்நந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் போன்றோர் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்களை அருளினர்.

மேலும் 27 திருமுறை ஆசிரியர்கள் 12 திருமுறைகளை அருளினர். 12 ஆம் திருமுறையில் தெய்வச் சேக்கிழார் இறைவனை அடையும் நெறிகளை அடைந்து காட்டிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் அருளினார். சித்தாந்த சைவம் இறைவன், உயிர், உலகம் என்று பொருள்கள் மூன்றாக உள்ளன என்று குறிப்பிடுகின்றது. அவை என்றும் நிலையானவை என்றும் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிரிலும் உலகிலும் கலப்பினால் ஒன்றாயும் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான் என்று குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவம் உயிர் அறிவினை இறைவனிடம் உயிர் கொள்ளும் இடையறாத அன்பினால் இறைவனால் அருளப்பெற்று இறை அறிவில் உயிர் அறிவு அடங்கி உயிர் தான் எனும் முனைப்பு இன்றித் தான் என்றும் இறைவன் என்றும் வேறுபாடு அற்ற பிரிப்பின்றி இரண்டு அற்ற நிலையை உணர்ந்து அந்நிலையில் பேரின்பமே தானாய் அழுந்தி விடும் என்று குறிப்பிடுகின்றது.

.இவ்வாறு வேதாந்த நூல்களும் சித்தாந்த நூல்களும் பலவாறு இறைவனைப் பற்றியும் அவனை அடையும் நெறிகளைப் பற்றியும் விளங்கக் கூறி நின்றாலும் அவற்றைக் கற்று விட்டதனால் மட்டும் அந்நூல்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு எல்லாம் மேலாக ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாய் இருக்கும் எம்பெருமானை அளவிட்டுக் கூறவோ காட்டி உதவவோ இயலாது என்கின்றார் மணிவாசகர்.

பெருமானின் ஆழ்ந்த அகன்ற நுண்ணிய நிலையினை, வேத நூல்கள் அளவிட்டுக் கூறி முடிக்க முடியாத நிலையினை, இறைவனின் திருவடிக் கமலங்கள், கீழ் உலகங்கள் எழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும், அவனது திருமுடியோ எல்லாவற்றிற்கும் மேலுள்ள முடிவிடமாய் உள்ளது. அவன் ஒரே வகையாக உள்ளவன் அல்லன். வேத முதலாக, விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன் என்றும் மணிவாசகர் குறிப்பிடுவார். அத்தகைய பெருமானின் திருவடிகளை அன்பினால் வழிபட்டுச் சிக்கெனப் பிடித்துக் கொள்வோம்!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!