121. பொய்க் கோலம்
உலக மயக்கம் நீங்கியவராகவும் சிவபெருமானிடத்தும் அவன் வாழ்கின்ற உயிர்களிடத்தும் அன்பு மிக்கவராகவும் சிவனை நினைப்பிக்கும் கோலத்தவராகவும் உள்ளவரையும் திருக்கோயிலையும் சிவக்கொழுந்தினையும் (சிவலிங்கம்) சிவமாகவே எண்ணித் தொழ வேண்டும் என்பதனை,
“மால் அற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயம் தாமும் அரனெனத் தொழுமே”
என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் பதினான்கில் தலைமணி நூலாக விளங்கும் சிவஞான போதத்தில் மெய்கண்டார் குறிப்பிடுவார். இதனால் சிவனை நினைப்பிக்கின்ற அடியார் கோலம் இறை நெறிக்கு நம்மை இட்டுச் செல்வதற்கு முதன்மையானது என்று புலப்படுகின்றது. சிவனை நினைப்பிக்கின்ற
திருச்சடை, திருநீறு, உருத்திராக்கம் எனப்படும் கணிகை மணி, திருநீற்றுப் பை, திருவோடு, சைவர்களுக்குறிய வெண்ணிற ஆடை, இடைவிடாது திருவைந்தெழுத்தினையும் திருமுறைகளையும் கூறும் வாய், சைவ நூல்கள், சிவசிந்தை, கனிவான பேச்சு, அன்பே வடிவான தோற்றம், பணிவு, இறைவனை இன்னும் அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் போன்ற இயல்புகளை உடையது மெய்யடியார்களின் கோலம் என்பதனைத் தெய்வச்சேக்கிழார் திருநவுக்கரசு அடிகள் வரலாற்றில் குறிப்பிடுவார். இம்மெய்யடியார்களின் இயல்புகளுக்கு மாறான பொய்க்கோலத்தினைப் பற்றியும் அதனால் விளையும் தீமையினைப் பற்றியும் தமிழ்ச் சிவாகமச் சீலர் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
பணத்திற்காகவும் புகழுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பணியாட்களுக்காகவும் வசதிகளுக்காகவும் வயிறு வளர்ப்பதற்காகவும் உண்மைத் தவம் உடையவர்களின் கோலத்தினைப் பொய்யாகப் பூண்டு, அறியாமையை உடைய உலக மக்களை இறப்பு அச்சம், தொழில் வெற்றி, மந்திர மாயம், தீவினை, விபத்து, பாதுகாப்பு, வாய்ப்பு, வசியம், வசதி என்று எதைஎதையோ சொல்லி அச்சுறுத்தித் திரிகின்றவர்களைத் திருமூலர் அறிவிலிகள் என்கின்றார். இயல்பு நிலை மாந்தர்களின் கோலத்தை விடுத்து அடியார் கோலம் அல்லது தவக்கோலம் கொண்ட நீங்கள் அக்கோலத்திற்கே உரிய உண்மை அன்பால் இறைவனிடத்திலும் அவனடியார் இடத்திலும் அன்பைக் காட்டுங்கள். உண்மை அன்பால் இறைவனை ஆடியும் பாடியும் அழுதும் சிவனை எங்குத் தேடிப் பெறுவது என்று ஏங்கி நில்லுங்கள். சிவனது திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெறுங்கள். பிறரையும் அதற்கு நெறிப்படுத்துங்கள். அதுவே உங்களுக்கு உண்மையான பயனுடைய செயல் என்பதனை,
“ஆடம் பரம்கொண்டு அடிசில் உண்பான்பயன்,
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்,
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்,
தேடியும் காணீர் சிவன்அவன் தாள்களே”
என்று இடித்துரைக்கின்றார். இதனால் உள்ளத்திலே மெய்த்தவம் இல்லாது பொய்க்கோலம் கொண்டவர் அடையும் பயன் மற்றவரை அச்சுறுத்துவதோடு அறியாமையில் அழுந்தச் செய்தல் மட்டுமேயாம் என்பதனைத் தெளிய வேண்டும் என்கின்றார் திருமூலர்.
ஒரு நாட்டில் வாழும் மக்களிடத்தே உள்ள அறிவார்ந்த நற்செயல்களும் தீய செயல்களுமே அந்நாட்டிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இன்பமும் துன்பமும் உண்டாவதற்குத் துணை நிற்பவை என்று கற்றறிந்த சான்றோர் குறிப்பிடுவர். நாடு நல்ல நாடாவதும் தீய நாடாவதும் வாழும் மக்களது இயல்பினால் தான் அமைகின்றது என்பதனை, “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று புறநானூற்றுப் பாடலில் சங்க காலத்து ஒளவை குறிப்பிடுவார். முன்பு காலத்தில் அரசனானவன் தன் நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல் என்பனவற்றை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து, தீச்செயல்கள் நடவாது மக்களைக் காத்தும் திருத்தியும் தன் கடமையைத் தலைமேல் கொண்டிருந்தான் என்கின்றார் திருமூலர். இன்று, பொய்க்கோலத்தாரை ஆராய்ந்து அடையாளம் கண்டுத், தம் கீழ் இருக்கின்ற கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரைத் திருத்தும் கடமை இல்லத்து அரசர்களும் இல்லத்து அரசிகளுமான குடும்பத்தலைவர்களுக்கும் குடும்பத்தலைவிகளுக்கும் உண்டு என்கின்றார் திருமூலர்.
பல்வேறு குடும்பப் பொறுப்புக்களை நுணுகி ஆராய்ந்து திறம்பட இயற்றும் இல்லத்தலைவர்களும் இல்லத்தலைவிகளும், தம்மைச் சார்ந்தவர்கள், பொய்க்கோலம் கொண்டு உலக மக்களை ஏமாற்றி, அறியாமைக் குழியில் விழச்செய்யும் ஏமாற்றுக்காரர்களைச் சார்ந்து அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்காமல் இருப்பதனை உறுதி செய்தல் வேண்டும் என்று திருமூலர், ‘அவவேடம்’ எனும் பகுதியில் ஆறாம் தந்திரத்தில் குறிப்பிடுகின்றார். அவ்வாறு செய்யாவிடில் தன் குடும்பத்திற்கும் தான் சார்ந்துள்ள குமுகாயத்திற்கும் தம் இன மானத்திற்கும் தம் சமயத்திற்கும் தம் பண்பாட்டிற்கும் தாம் வாழும் நாட்டிற்கும் பெறும் கேடு விளையும் என்கின்றார் திருமூலர். தனித்து நின்று பொய்க்கோலம் கொண்டவரை அகற்றுதல் இயலாவிடில் தக்காரோடு இயைந்து குமுகாயமாகவோ, இயக்கமாகவோ, அரசு ஆணையாகவோ கொண்டு செயல்படுத்தாவிடில் அக்குமுகாயத்திற்கு இன்பம் விளைதற்குப் பதில் துன்பமே நேரிடும் என்பதனை,
“ஞானம் இல்லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை,
ஈனம் அதேசெய்து இரந்துஉண்டு இருப்பினும்,
ஆன நலம்கெடும் அப்புவி ஆதலால்,
ஈனஅவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே”
என்கின்றார். இதனால் பொய்க்கோலம் உடையவரை அடையாளம் கண்டு அவரை அகற்றுதல் அல்லது அவரை விட்டு விலகுதல் அறிவுடையவருக்கு உரிய கடமை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
மற்றவர் தம்மைப் போற்றிப் பணிவதையும் தம்மிடம் வாழ்த்துப் பெற்றுச் செல்லுதலையும் தனக்கு ஏவல் செய்து நிற்பதனையும் பெரிதாக எண்ணி ஒழுக்கத்தால் உயர்ந்த நிலையை அடையாது பொய்க்கோலம் பூண்டு மேன்மை உடயவரைப் போன்று நடிப்பர் சிலர் என்கின்றார் திருமூலர். இன்னும் சிலர் உண்மை அடியாருக்கு உரிய பண்புகள் இல்லாமல் இருப்பினும் தன்னைக் கடவுளின் மறு வடிவம் என்றே கூறி மக்களை ஏமாற்றுவர் என்கின்றார். இன்னும் சிலர் கடவுள் தன்மீது நின்று ஆடுவதாயும் தான் கூறுவது எல்லாம் கடவுள் கூறுவது என்றும் கூறுவர் என்கின்றார். இவ்விரு சாராரும் தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் தங்கள் இனத்திற்கும் தங்கள் சமயத்திற்கும் தங்கள் குமுகாயத்திற்கும் தங்கள் நாட்டிற்கும் பழி பாவங்களைத் தேடித்தருகின்றவர்கள் என்கின்றார் திருமூலர். இத்தகையோர் உலகில் பிற மாந்தரோடு கூடி வாழ்வதற்கு ஏற்புடையவர்கள் அல்லர் என்றும் இவர்களைக் காட்டிலும் உயிர் கொலை செய்யும் கொலைஞர் மேலோர் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,
“இழிகுலத்தோர் வேடம் பூண்பர்மேல் எய்த,
அழிகுலத்தார் வேடம் பூண்பர் தேவாகப்,
பழிகுலத்துபாஅகிய பாழ்சண்டர் ஆனார்,
கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே”
என்கின்றார் திருமூலர்.
பொய்க்கோலத்தவரால் ஏற்படும் தீமைகள் பல என்று குறிப்பிடும் திருமூலர் அவற்றுள் உண்மைக் கோலத்தாரையும் உலகம் ஐயுற நோக்குதலைக் குறிப்பிடுகின்றார். பொய்க்கோலத்தவரால் உண்மைக் கோலத்தவர் போற்றப் படாது போவதும் இத்தவற்றினால் ஏற்படக்கூடிய தலையாய தீமை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதனால் பொய்க்கோலத்தவரின் செயற்பாடுகள் களைதற்பாலது என்கின்றார். இதனாலேயே, மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போன்று வஞனை செய்து வாழ்கின்றவரைப் போன்று இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை என்று வள்ளுவப் பேராசானும் குறிப்பிடுவார்.
உள்ளத்திலே தவ உணர்வு இன்றிப் புறத்திலே பொய்க்கோலம் கொண்டு நடிக்கின்றவர் ஒருபோதும் நற்பண்புகள் எய்தாது தீயவர்கள் ஆவதோடு மட்டும் அல்லாமல் பாவங்களைச் சேமித்துக் கொள்வர் என்கின்றார் திருமூலர். இவர்கள் நடிப்பினால் இவ்வுலகில் சிறிது இன்பத்தினை நுகரினும் மறுமையில் பெரிய நரகத் துன்பத்தினை நுகரக் காத்திருக்கின்றனர் என்பதனை நினைவில் வைத்தல் வேண்டும் என்று திருமூலர் நினைவுறுத்துகின்றார்.
உழைத்து உண்ணாமல், பொய்க்கோலம் கொண்டு, இருந்த இடத்திலேயே இருந்தவாறு பிறரை ஏமாற்றி, அச்சுறுத்தி, வஞ்சகப் புகழ்ச்சி செய்து, பொய்யுரைத்துப் பிறரால் அளிக்கப்படும் பொருளையும் உணவையும் உதவியையும் பெறுபவர் இழிந்த பிச்சையை ஏற்பவர் என்கின்றார் திருமூலர். மனம் உவந்து கொடுக்கப்படாமல், வெறுத்தும் சினந்தும் துன்புற்றும் கடன்பட்டும் அளிக்கப்படும் பணம், பொருள், உணவு போன்றவை பாவத்தை பழியையும் கொண்டுவந்து சேர்ப்பவை என்கின்றார் திருமூலர். மெய்க்கோலமும் மெய்த்தவமும் உடையோருக்கு இல்லறத்தார் மனம் உவந்து அளிக்கும் உதவிகள் உயரிய பிச்சை என்கின்றார் திருமூலர். இல்வாழ்வான் மகிழ்ந்து இடும் பிச்சையை ஏற்றல், வண்டு, மலர் வருந்தாது அதனிடத்து உள்ள தேனை உண்டல் போழ்வது என்பர். இது உண்மைத் தவம் உடையவர் உய்வதற்கும் பிச்சை இட்டார் உய்வதற்கும் துணை நிற்கும் என்கின்றார் திருமூலர். பொய்க்கோலம் கொண்டு இல்லறத்தாரின் வெறுப்போடு ஏற்கும் பிச்சை பொய்க்கோலத்தார் இழிநிலை அடைதற்கு வழிவகுப்பதோடு மட்டும் அல்லாமல் பிச்சை இட்டோருக்கும் சோம்பேறிகளை வளர்த்த தீமைக்குத் துன்பத்தைத் தேடித்தரும் என்கின்றார் திருமூலர். பொய்க்கோலம் உடையவர் பின் செல்லும் அறியாமையை விட்டு விலகி உண்மை சமயத்தினைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!