80. சிவன் பொருள் குலக் கேடு

1506

“சிவன் சொத்துக் குல நாசம்” என்ற வடமொழி வழக்கு ஒன்று உண்டு. அதாவது சிவ பெருமானுக்கு உரிய பொருளைக் கையாடல் செய்தால் கையாடல் செய்தவனின் குலமே அழிந்து போகும் என்பது இதன் பொருள். சிவன் கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு உரிய பொருளை எவரேனும் தங்கள் உடைமையாக்கிக் கொண்டால் அது பெரும் கேட்டினை விளைவிக்கும் என்பதனைத் திருக்கோயிற் குற்றம் எனும் பகுதியில் திருமூலர் விளக்குகின்றார். திருக்கோவிலில் அக்கோயிலின் மதிலைக் கட்டுவித்தவரே பின்பு பொருளாசையின் காரணத்தால் அதிலிருந்து ஒரு கல்லை எடுத்தாலும் தமிழ்ச் சிவ ஆகமங்களை அருளோன் திருவடிவில் நின்று அருளிச் செய்த சிவபெருமானின் மறக்கருணை அவரை அழிக்கும் என்கின்றார் திருமூலர். திருக்கோவிலைக் கட்டுவித்தவருக்கே இவ்வாறு என்றால் திருக்கோயிலின் உடைமைகளைக் கையாடல் செய்யும் பிறருக்கு என்னவாகும் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும் என்கின்றார் திருமூலர். திருக்கோயில் மதிலில் உள்ள கல் மட்டும் இன்றி, திருக்கோவிலின் உள்ளே, வெளியே உள்ள சிவபெருமானுக்கென கொடுக்கப்பட்ட, உரிமை படுத்தப்பட்ட எவற்றக் கைக் கொண்டாலும் தீங்கு வந்தே தீரும் என்கின்றார் திருமூலர்.

திருக்கோவிலுக்குச் சொந்தமான தோட்டம், துறவு, கால்நடை, நிலம் போன்றவற்றின் மூலம் வரும் நன்மைகளைத் திருடுகின்றவர்க்குத் தீமை வந்தே தீரும் என்கின்றார். கோயிலுக்கு உரிமையான கட்டடம், மண்டபம், பள்ளிக்கூடம், அறச்சாலை போன்றவற்றினால் வரும் பயன்களைக் கைக் கொள்கின்றவர்களையும் தீங்கு வந்து சேரும் என்கின்றார். திருக்கோவிலின் பேரில் நடத்தப்படும் மடங்கள், கண்காட்சிச் சாலைகள், அன்னமிடும் சாலைகள் போன்றவற்றில் கையாடல் செய்யப்படும் எதுவாயினும் உறுதியாக தீமை வந்தே தீரும் என்கின்றார் திருமூலர். திருக்கோயில் வழிபாட்டிற்கென வழங்கப்படும் மலர், பால், எண்ணெய், கற்பூரம் போன்ற பூசனைப் பொருள்கள் வாங்கும் போது கைக்கொள்ளும் கோயில் பணத்தாலும் இத்தகைய தீமை வரும் என்பதனை இது உணர்த்துகின்றது.

திருக்கோவிலை வழி நடத்துகின்ற திருக்கோவில் தலைவர்களும் அவர்தம் செயற்குழு உறுப்பினர்களும் அறங்காவலர்களும் திருக்கோவில் உரிமைப் பொருள்கள் கையாடப்படுதலைப் பார்த்தும் பார்க்காமலும் இருப்பார்களேயானால் அவர்களையும் இத்தீங்கு வந்து சேரும் என்கின்றார் திருமூலர். திருக்கோவில் பொருள்களைக் கையாடல் செய்கின்றவர்கள் திருக்கோவிலில் பூசனை இயற்றுகின்ற பூசகரே ஆயினும் திருக்கோவிலில் சிவபெருமானின் பொருள்களைக் கையாடல் செய்த குற்றமும் அதனால் வரும் அழிவும் வந்தே தீரும் என்பதனைக், “கட்டுவித்தார் மதிற்கல்லொன்று வாங்கிடில், வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசிரை முட்டுவிக்கும் முனி வேதியராயினும், வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே” என்கின்றார். இதன்வழி திருக்கோவிலில் இறைப்பணி செய்கின்ற இறைஅடியார்களும் கூட திருக்கோவில் உரிமைப் பொருட்களைக் கையாடல் செய்தல் கூடாது என்பது தெளிவாகின்றது.

திருக்கோவிலின் உரிமைப் பொருட்களை கையாடல் செய்தால் அல்லது தவறாகப் பயன்படுத்தினால் துன்பம் வந்தே தீரும் என்பதனைத் தெய்வச் சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கழற்சிங்கர் எனும் மன்னனும் அவர்தம் பட்டத்து அரசியும் ஆலயத் திருச்சுற்றில் வலம் வருகையில் இறைவனுக்குப் பூத்தொடுக்கும் மண்டபத்திற்கு முன்னாகத் தரையில் கிடந்த ஒரு பூவைப் பட்டத்து அரசியார் எடுத்து முகரவும் அங்குப் பூ தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை எனும் நாயனார், தரையில் கிடந்த இறைவனின் உரிமைப் பொருளான மலரை எடுத்து முகர்ந்தது தவறு என்று பட்டத்து அரசியின் மூக்கை வாளால் அரிந்தார். அது மட்டுமன்றி அரசியாருடன் வந்த கழற்சிங்கர் தம் மனைவி செய்தது குற்றமே என்று ஏற்றுக் கொண்டு, முகர்ந்த மூக்கை மட்டும் அரிந்தது போதாது என்று பூவை எடுத்த கையையும் தமது வாளால் துண்டித்தார். திருக்கோவிலில் உள்ள ஒரு மலரை எடுத்தால் கூட எவ்வளவு பெரிய குற்றமாகக் கருதப்படுகின்றது என்பதனைப் பெரிய புராணம் புலப்படுத்துகின்றது.

திருக்கோயிலில் உள்ள இறைவனுக்குத் திருவமுது படைக்கப் பண்டாரத்தில் சேமித்து வைத்த நெல்லை, உணவு தட்டுப்பாடு ஏற்பட்ட போது தம் குடும்பத்தினரும் உறவினர்களும் அதனைச் சமைத்து உண்டனர் என்பதற்காக கோட்புலி நாயனார் என்பவர் அவர்களை வாளால் வெட்டிக் கொன்றார். திருக்கோயில் அரிசியினைக் கொண்டு சமைத்து உண்ட தாயின் முலைப்பாலை உண்ட குழந்தையினையும் வெட்டிக் கொன்றார் கோட்புலி நாயனார். சிவபெருமான் திருக்கோவிலின் உடைமையைச் சிறு குழந்தை உண்டாலும் அல்லது உடைமையாக்கிக் கொண்டாலும் அது குற்றமே என்பதனை இதன் வழி அறியலாம். தவிர, சிவன் கோவிலின் உடைமைகளைக் கையகப் படுத்தியதின் விளைவாக ஏற்படும் தீமைகளைக் கையகப்படுத்தியவர் மட்டுமின்றி அதன் பயனை நுகர்கின்ற மனைவி, மக்கள், உறவினர், எவராய் இருப்பினும் அத்தீமையை நுகர்ந்தே தீருவர் என்பதனை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

திருக்கோவில் பணத்திலே ஆடம்பரமான விருந்துகள் வைப்பது, திருக்கோவில் பணத்திலே கூட்டமாகச் சுற்றுலா செல்வது, திருக்கோவில் பணத்திலே சுய விளம்பரம் தேடுவது, திருக்கோவில் பணத்தை வீணடிப்பது போன்றவையும் திருக்கோவில் உடைமையைப் பாழ்படுத்துவதாகும். திருக்கோவிலுக்கு அளிக்கப்படும் ஆடைகள், பூசனைப் பொருள்கள், விளக்குகள் போன்றவற்றைக் குறைந்த விலையில் விற்று பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் கோயில் பணியாளர்களின் செயலும் திருக்கோவில் குற்றமே! இவ்வாறு கோயில் பணியாளர்கள் கோவில் நிறுவாகத்திற்குத் தெரியாமல் கோயில் பொருட்களை விற்கின்றார்கள் என்று தெரிந்தும், குறைந்த விலையில் கிடைக்கின்றது என்பதற்காக பொதுமக்கள் அதனை வாங்குவதும் திருக்கோவில் குற்றமே!

இது இவ்வாறிருக்க, திருக்கோவிலுக்கு இறைவழிபாடு செய்ய வருகின்றவர்களின் காலணிகளைத் திருடுவதும் திருக்கோவிலின் வாசலிலே பெண்களின் சங்கிலிகளையும் தாலிகளையும் பறித்துச் செல்வதும் திருக்கோவில் குற்றமே! தவிர ஆயுதங்களை ஏந்தி வந்து திருக்கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருப்பவர்களின் அணிகலன்களையும் பணத்தையும் கொள்ளை இடுவதும் திருக்கோயில் குற்றமே! அத்தகைய தீயவர்களின் செயல்களால் கிட்டும் பயனையும் பணத்தினையும் கொண்டு இன்புறுகின்ற அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் திருக்கோவில் குற்றத்திற்கும் தீங்கிற்கும் ஆளாவார்கள் என்பது திருமந்திரம் உணர்த்தும் கருத்தாகும்.

திருக்கோவில் உண்டியலை உடைத்துப் பணத்தைத் திருடுவதும் திருக்கோவிலில் உள்ள திருவுருவங்களைத் திருடிச் செல்வதும் பெருமானுக்கு உள்ள அணிகலன்களைத் திருடுவதும் கோபுரத்தின் கலசங்களைத் திருடுவதும் திருக்கோவில் இருப்பு நுழைவாயில்களைத் திருடுவதும் திருக்கோவில் குற்றங்களாகும். இத்தகையோருக்குப் பெருந்தீங்கு வந்தே தீரும் என்பதும் அத்தகையோர் விற்கும் பொருட்களை வாங்குவோருக்கும் அத்தகையோருக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் அதே நிலை தான் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டியது என்பதனைத் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. திருக்கோவிலில் எல்லா அன்பர்களுக்கும் என தயார் செய்யப்பட்டிருக்கின்ற உணவுப் பொருட்களை ஒரு சிலரே அளவிற்கு அதிகமாக எடுத்துச் செல்வதும் பிறருக்கு வைக்காமல் அனைத்தையும் ஒருசிலரே உண்டு முடிப்பதும் திருக்கோவில் குற்றமாகும். பொதுக்கோவிலைக் குடும்பக்கோவில் போன்று நடத்துவதும் இன்ன கோவில் இன்ன பிரிவினருக்கு மட்டும் தான் உரியது என்பதும் திருக்கோவில் குற்றங்களேயாம். உயர்ந்த எண்ணங்களோடு உயர்வானவற்றைச் சிந்தித்துப் பரம்பொருளின் திருவருளுக்கு ஆளாவோமாக!