மாந்தரின் வாழ்க்கைச் சுற்றை முறையே மாணி(பிரமசாரி), இல்வாழ்வான்(கிருகத்தன்), நோன்பி(வானப்பிரத்தர்), துறவி(சந்நியாசி) என்று நான்கு பகுதிகளாகப் பகுத்துக் கூறுவர். இந்நான்கு வாழ்க்கைப் பகுதிகளில் மாணி எனும் இளமைப் பருவமே மிகவும் முதன்மையானதாகும். இளமைப் பருவம் கல்வி கற்றலுக்கும் பொருள் ஈட்டலுக்கும் உரியது ஆதலின் அதனை இன்றியமையாப் பருவம் என்று குறிப்பிடுவர். உலகக் கல்வியையும் இறைக்கல்வியையும் கற்றலுக்கு இளமைப் பருவமே உரியது என்பதனை, “இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து” என்பர். இவ்வரிய இளமைப் பருவம் கிடைத்தற்கு அரியது என்றும் போனால் திரும்ப வராதது என்றும் குறிப்பிடுவர். இளமைப் பருவத்திலே உலகக் கல்வியைக் கற்றுக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் இறைக்கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனைச் சிவ ஆகமங்களை மூவாயிரம் தமிழ் மந்திரங்களின் வழி அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார்.
ஒரு மாந்தனின் அரிய இளமைப் பருவம் எவ்வாறு விரைவில் மாறிப்போய்விடும் என்றும் அதனைப் பலரும் அறியாமல் இருக்கின்றனர் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இளமை வேகமும் துடிப்பும் இளங்குருதியும் நாள்படக் குறைந்து சோர்வு அடைந்து தளர்ச்சியுறும் என்பதனைப் பல உவமைகளைக் கொண்டு விளக்குகின்றார் திருமூலர். ஒவ்வொரு நாளும் கிழக்கில் அழகிய இளங்கதிராய்த் தோன்றுகின்ற கதிரவன் பின் வானில் பேர் ஒளியும் வெப்பமும் உடையது ஆகிப் பின்பு மேற்கில் வெப்பமும் ஒளியும் குறைந்து மறைதலைக் கண்டும் கண்ணிருந்தும் குருடர்களாய்ப் பலர் இளமை நிலையில்லாதது என்பதனை உணராமல் இருக்கின்றனர் என்று எள்ளி நகையாடுகின்றார்.
அழகிய கன்றுக் குட்டியாய்ப் பிறந்த பசுவின் கன்று இளமைக் காலத்தே துடிப்புடன் துள்ளிக் குதித்துப் பின்பு சில காலங்களில் வளர்ந்து பெரிதாகி, வயலில் நன்கு உழுதலைச் செய்து பின் சில காலங்களில் கிழப் பசுவாய் வயதாகித் தளர்ச்சியுற்று எழ முடியாமல் விழுவதனைக் கண்ணால் கண்டும் மாந்தரில் பலர் அறியாமையினால் இளமை நிலையற்றது என்பதனை உணராமல் இருக்கின்றனர் என்கின்றார். முதுமை நம்மைத் தளர்ச்சி அடையச் செய்து இறைவழிபாட்டினையும் அன்றாடக் கடமைகளையும் செய்ய இயலாது செய்து விடும் என்று குறிப்பிடும் திருமூலர், இளமை நம்மை விட்டு அகலும் முன்பே இறைவனை வழிபட வேண்டும் என்கின்றார்.
இளமைக் காலத்தில் சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் துடிதுடிப்புடனும் நம் கருவிக் கரணங்கள் இயங்கும் காலத்திலே அப்பருவத்தை வெறும் கேளிக்கைகளுக்கும் பயன் அற்ற செயல்களுக்கும் தனக்கும் பிறருக்கும் தீமை பயக்கும் செயல்களுக்கும் வீண் செய்யாது விரைந்து இறைவழிபாட்டிற்குப் பயன் படுத்துதல் வேண்டும் என்கின்றார். இதனையே, “இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார், வளமை போய்ப்பிணியோடு வருதலால், உளமெலாம் ஒளியாய் மதியாயினான், கிளைமையே கிளையாக நினைப்பனே” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். அதாவது இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால், உள்ளமெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினப்பேன் என்கின்றார். இளமைக் காலம் நண்பர்களோடு வெறுமனே கழித்தற்கும் கேளிக்கைக்கும் உரியது என்று எண்ணும் இளைஞர்களும் யுவதிகளும் தத்தம் நண்பர்களோடு தங்களைச் சமய நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்வது இன்றியமையாதது என்பது இங்குப் புலப்படுகின்றது.
இளமைக் காலத்திலேயே சிவபெருமானை வழிபட்டு நற்கதி அடைந்தார் திருஞானசம்பந்தர் என்பதனை, “முன்னடைந்தான் சம்பந்தன்” என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுவார். மேலும் அவர் தமது இளமைக் காலத்தில் இறைவனை வழிபடாமல் இருந்து விட்டமையை எண்ணி வருந்துவதனை, “முன்பெலாம் இளையகாலம் மூர்த்தியை நினையாது ஓடி, கண் கண இருமி நாளும் கருத்தழிந்து அருத்தமின்றி….,” என்றும் “முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை” என்றும் கூறி வருந்துகின்றமையை அவரது பாடல்களில் காணலாம். இதனையே, “நரைவரும் என்று எண்ணி நல்லறிவாளர், குழவியிடத்தே துறந்தார்” என்று நாலடி நானூறு எனும் நூலும் குறிப்பிடுவதனை இங்கு ஒப்பு நோக்கலாம்.
இளமைப் பருவம் சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிந்து, இறுதி காலத்தில் மிகவும் குறைந்து முடிந்து விட்ட பின்பு செயல்கள் யாவும் செய்வதற்கு இயலாததாய் நிற்கும். எனவே நன்கு செயல்படக்கூடிய இளமை இருக்கின்ற போதே சிவபெருமானின் பெருமையை உணர்ந்து உள்ளத்திற்கொண்டு, இறைப்பணியில் நிற்க வேண்டும் என்பதனைத், “தேய்ந்து அற்றுஒழிந்த இளமை கடைமுறை, ஆய்ந்துஅற்ற பின்னை அரிய கருமங்கள், பாய்ந்துஅற்ற கங்கைப் படர்சடை நந்தியை, ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ளபோதே” என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பல ஆண்டுகள் ஆயினும் சிவபெருமானைப் பிள்ளைகளுக்கு அறிவித்தலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிவிக்கின்ற பெற்றோரும் மிகச் சிலரே என்பதனை இங்கு சிந்தித்தல் பெற்றோர்களின் கடன் ஆகும். உலகக் கல்வியை இளமைப் பருவத்தே தத்தம் பிள்ளைகளின் உலக வாழ்விற்குப் புகட்ட மிக முயலுகின்ற பெற்றோர்கள், இறைக்கல்வியையும் முயன்று புகட்டுவதற்கு முனைப்புக் காட்டுதல் இன்றியமையாததாகும். அதுவே அவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் தேடிக்கொடுக்கும் நிலையான செல்வமாகும்.
அழகு என்றும் இளமை என்றும் உடுத்துதல் என்றும் நாகரிகம் என்றும் புதுமை என்றும் இளமைக்காலத்தே மயக்கொடு வாழும் இளைஞர்களும் பெண்டிரும் இளமை நிலையாமையை எண்ணி உயிருக்கு உறுதி பயக்கும் இறைப்பணியை இளமைக்காலத்திலேயே செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். முன்பு தன்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து அதிலிருந்து கிட்டும் கருப்பஞ்சாற்றின் இனிமையைப் போல விரும்பினர் என்றும் இளமை நீங்கி முதுமை வந்த இப்பொழுதோ அவர்கட்குத் கரும்பு போன்று நின்ற தாம் காஞ்சிரங்காய்போல(எட்டிக்காய் போல) கசந்து நிற்கின்ற நிலையை அடைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இதனை, “விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர், கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல், அரும்பொத்த மென்முலை ஆயிழையார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங்காயும் ஒத்தேனே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
உலக இன்பம், கேளிக்கை என்று நாளும் நாளும் இளமைக் காலத்தைக் கழிக்கும் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இளமை நிலையாமையைப் பற்றித் திருமூலர் குறிப்பிடும் அறிவுரையைத் திருஞானசம்பந்தரும் குறிப்பிடுகின்றார். இன்பச் செருக்கு முதுமை வர வெறுமனே கழியும் என்பதனைக், “காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால், ஏலவார்க் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம், மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா, நீல மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே” என்று குறிப்பிடுகின்றார். அதாவது கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்போடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக என்கின்றார்.
எனவே இளமைப் பருவம் உலக இன்பங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் உரியது; வெறுமனே பயனற்ற கதைகளைப் பேசுவதற்கும் வீணே பொழுதைப் போக்குவதற்கும் உரியது; இளமைத் துடிப்பையும் வீரத்தையும் கோயில் திருவிழாக்களிலும் திரையரங்குகளிலும் கட்டுதற்கு உரியது; வீண் வம்புகளைச் செய்து, பிறரை அச்சுறுத்திச் செருக்கும் பெருமையும் கொள்வதற்கு உரியது; அடாவடித்தனம், வன்முறை, மது. போதைப்பொருள், குண்டர் கும்பல், சுற்றித்திரிவது, மணிக்கணக்கில் பேர் அங்காடிகளின் வாயில்களில் அமர்ந்து நேரத்தைப் போக்குவது, கேளிக்கை மையங்களிலும் இரவு விடுதிகளிலும் ஆட்டம் போடுவது, இணையத்தில் வெறுமனே அரட்டை அடிப்பது, கணினி விளையாட்டுக்களில் மூழ்கிக்கிடப்பது போன்றவைதான் இளைஞர்களின் உலகம் என்று மயங்கிக் கிடப்பது தவறு. இம்மயக்கம் நீங்கி, இறைப்பணி, இறைவழிபாடு, இறையறிவு பெறல் என்பதனை இளமை நீங்குவதற்கு முன்னமே வாழ்வில் கொண்டு வந்து உயிருக்கு உறுதி பயப்பதே தெளிவுடைமையாகும் என்ற கருத்தினைச் சிந்தையில் கொண்டு வாழ்வில் வளம் பெறுவோமாக! உயிர் நலம் பெறுவோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!