46. ஒருமையுள் ஆமை போல்வர்

1649

மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் தமது முதல் தந்திரத்தில் உபதேசம் எனும் அறிவுரை கூறும் பகுதியில் உயிர் முற்றப் பெற்றவர்களின் இயல்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். இவ்வுலகிலே மாந்த உடலோடு வாழும் காலத்திலே இறைவனின் திருவருள் கூடப்பெற்றவர்களை உயிர் முற்றப் பெற்றவர்கள் அல்லது சீவன் முத்தர்கள் என்கின்றோம். உயிர் முற்றப் பெற்ற இவ்வடியார்களின் அறிவு,விருப்பம்,செயல் ஆகியவை இறைவனின் திருவருளாலே செயல்படுவதனால் இவர்களைச் சாதாரண மாந்தர்களாக எண்ணுவது தவறு என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய அருளாளர்களின் சொல்லும் செயலும் இறைவனின் திருவாக்காயும் இறைவனின் திருவருட்செயலுமாகவே நடைபெறுகின்றன. இதனாலேயே, “எனது உரை தனது உரையாக” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். தாம் கூறும் சொற்கள் இறைவன் கூறும் சொற்கள் என்று திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

               தமிழ் மந்திரங்களான திருமுறைகள் உயிர் முற்றப் பெற்ற அருளாளர்களின் திருநாவில் இறைவன் நின்று உரைத்தவை ஆகும். அவை ஆற்றல் உடைய மந்திரங்கள் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர்களில் பெரும் பகுதியினர் அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கதுதான். இறைவன், உயிர் முற்றப் பெற்ற அடியார்களின் திருநாவில் நின்று அருளியதே திருமுறைகள் என்பதனை அவ்வடியார்களே குறிப்பிடுகின்றனர். “நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை” என்று மணிவாசகரும் “பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே” என்று திருநாவுக்கரசு அடிகளும் இறைவன் தங்கள் திருநாவில் நின்று தங்களைப் பாடுவித்தமையைக் குறிப்பிடுவர். தவிர இவ்வருளாளர் பெருமக்களின் திருவாய்களில் இருந்து வெளிப்பட்டத் தமிழ் மந்திரங்களான திருமுறைகளில் “திரு” இருந்தது. எனவேதான், “கல்துணைப்பூட்டி ஓர்கடலில் பாய்ச்சினும் நல்துணையாவது நமசிவாயவே” என்று திருநாவுக்கரசு அடிகள் கூறியவுடன் அவர் பிணிக்கப்பட்டிருந்த பாறை நடுக்கடலில் மிதந்தது. இறைவனின் திருவருள் அவர் சொல்லில் நின்றதனாலேயே அவ்வருள் நிகழ்ச்சி நிகழ்ந்தது.

               இறைவனின் திருவருள் சுந்தரமூர்த்தி அடிகளின் திருவாக்கிலே நின்று அருள்புரிந்தமையினால்தான், “கரைக்கால் முதலை பிள்ளையைத் தரச்சொல்லு காலனையே” என்று சுந்தரமூர்த்தி அடிகள் கூறியதும் அவிநாசியில், முதலை தாம் விழுங்கிய சிறுவனை மறுபடியும் கரையில் வந்து கக்கிச் உமிழ்ந்து சென்றது. திருஞானசம்பந்தர் அடிகள் ஆண் பனை மரங்களைப் பெண் பனை மரங்களாக்கியதும் திருமயிலையில் சாம்பலை மறுபடியும் பெண் ஆக்கியதும் திருவீழிமிழலையில் ஒவ்வொரு நாளும் ஒரு பொற்காசுப் பெற்று உணவு தட்டுப்பாட்டைப் போக்கியதும் போன்ற அருள் செயல்கள் இறைவனின் திருவருள் செயல்களாய் உயிர்முற்றப் பெற்ற அடியவர்கள் மூலம் நிறைவேற்றப் பட்டன. அருட்செயல்களை இறைவன் தங்கள் மூலம் செய்கின்றான் என்பதனை நன்கு உணர்ந்த உயிர்முற்றப் பெற்ற அருளாளர் பெருமக்கள் அவ்வருட்செயல்களை ஒருபோதும் தாங்கள் நிகழ்த்துவதாகச் சொல்லவோ, எண்ணவோ செய்யாது, அனைத்துச் செயலும் அவன் செயலாகவே செய்தனர்; உணர்ந்தனர். இதனையே உயிர் முற்றப் பெற்றத் தாயுமானவ அடிகள், “என் செயலாவது யாதும் ஒன்றும் இல்லை, தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்” என்று இறைவனை நைந்து இறைஞ்சுவார்.

               உயிர் முற்றப் பெற்ற அடியார்கள் அல்லது சீவன் முத்தர்கள் மறந்தும் பிறர் தங்களைக் கடவுளாகவோ ஆசானாகவோ கொண்டு வாழுங்கள் என்று குறிப்பிடுவதோ விரும்புவதோ கிடையாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தங்களிடம் உள்ள சிறு சிறு ஆற்றல்களைக் கொண்டு தங்களைத் தலைசிறந்த ஆசான்களாகவும் ஞானிகளாகவும் சித்தர்களாகவும் இன்னும் கடவுளின் மறுவடிவாகவும் எண்ணிக்கொள்கின்ற அறியாமை உடைய அன்பர்களுக்கு இறைவன் பெறுவதற்கு அரியவனாக இருப்பான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தங்களிடம் உள்ள சிறு சிறு ஆற்றல்களைக் கொண்டுச் சிறு சிறு பொருட்களை வரவழைப்பதனாலும் அவற்றை மறைப்பதனாலும் தாங்கள் ஒரு குட்டிக் கடவுள் என்று செருக்கித் திரிபவர்களுக்கு இறைவன் அடைய முடியாத அரிய பொருளாகிப் போவான் என்கின்றார் திருமூலர். பிறர் தங்களைக் கடவுள் என்றும் ஆசான் என்றும் அறியாமையினால் போற்றி வழிபடும்போது அதனைத் தடுக்காமல், நிறுத்தாமல் சுகங்காணுகின்றவர்களுக்கு இறைவன் அறிய முடியாத பொருளாய்ப் போய்விடுவான் என்கின்றார் திருமூலர். போற்றுதலுக்கும் வழிபாட்டிற்கும் உரியவன் இறைவனே என்பதனை உணர்ந்து, தம்மை வழிபடுவதனைத் தவிர்த்து, இறைவனை வழிபடுகின்ற நெறியினை நினைவுறுத்தாத அன்பர்களுக்கு இறைவன் அடைவதற்குக் கடினமாகிவிடுவான் என்கின்றார் திருமூலர்.

               உயிர்முற்றப் பெற்ற அருளாளர்கள் எப்பொழுதும் தங்கள் சிறுமையை எண்ணியே இறைவனிடத்தில் அழுது புலம்புவர் என்கின்றார் திருமூலர். இதனையே, “கடையவனேனைக் கருணையினால் ஆண்டு கொண்ட விடையவனே” என்றும் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்றும் தம்மை இழிவாகக் கூறிக்கொள்வார் மணிவாசகப் பெருமான். “நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்து உன்னை” என்று சுந்தரமூர்த்தி அடிகள் தன் சிறுமையைக் குறிப்பிடுகின்றார். உயிர் முற்றப் பெற்ற உண்மை அடியார்கள் தங்கள் சிறுமையை உணர்ந்து வருந்தும் இயல்பு உடையவர்கள் என்பதனாலே இறைவன் அவர்களுக்கு எளிதில் அவனது திருவடிகளை நல்குவான் என்பதனைப், “பெருமை சிறுமை அறிந்த எம்பிரான்போல், அருமை எளிமை அறிந்தவர் இல்லை” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பெயரும் புகழும் தற்பெருமையும் கொண்டு இறைவனின் பெருமையை உணரச் செய்யாது பிறரை மயங்கச் செய்யும் அன்பர்களை இறைவன் ஒருபோதும் நெருங்கமாட்டான்; அவர்கள் வாக்கிலும் திருவருள் நில்லாது என்கின்றார் திருமூலர். இத்தகையோரை ஆசானாகக் கொள்கின்றவரும் திருவருள் கூடப்பெறமாட்டார்கள் என்கின்றார் திருமூலர்.

               உயிர் முற்றப் பெற்ற ஆசான்கள் இவ்வுலகில் உடல் தாங்கி வாழும் காலத்தில் ஆமை தனது ஐந்து உறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்கிக் கொள்வதுபோல, ஐந்து புலன்களினால் ஏற்படும் அவாக்கள் ஐந்தினையும் தங்களுக்கும் அரணாய் உள்ள இறைவனது திருவருளிலும் வழிபாட்டிலும் அடக்கி, இவ்வுலக இன்பத்தினையும் மேலுலக இன்பத்தினையும் வேண்டாம் என்று விட்டு விலகிக் குற்றமற இருப்பார்கள் என்பதனை, “ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந்து அடக்கி, இருமையும் கெட்டு இருந்தார் புரை அற்றே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே, “கேடும் ஆக்கமும் கெட்டத் திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார், கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுவார். உலகியலில் இது தங்களுக்குப் புகழும் பெருமையும் கொடுப்பது, இது தங்களுக்குச் சிறுமையும் தாழ்வையும் கொடுப்பது என்று எண்ணாது இறைவனின் புகழ் ஒன்றினை மட்டும் முன்வைத்து, எல்லாவற்றயும் ஒருபடித்தாய் எண்ணி, விருப்பு வெறுப்பு அற்று இறைவனை வழிபட்டுக்கொண்டிருப்பதிலேயே முழு கருத்தையும் அவன் திருவருள் துணையால் நிலைநிறுத்தி, வீடுபேறு பெறவேண்டும் என்ற எண்ணம்கூட அற்று இருப்பவர்கள்தான் உண்மையான உயிர் முற்றப்பெற்றவர்கள் என்று தெய்வச்சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

               இறைவனின் பெருமையையும் கருணையையும் எண்ணி, முனைப்பின்றி அவன்பால் அடங்கி நிற்பவர்களே உண்மை உயிர் முற்றப் பெற்றவர்கள். உயிர் முற்றப் பெற்றவர்கள் புலன் அடக்கம் உடையவர்கள் என்பதனை ஐயன் திருவள்ளுவரும், “ஒருமையுள் ஆமைபோல்ஐந்து அடக்கல் ஆற்றின், எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று குறிப்பிடுவார். அதாவது ஒரு பிறப்பில், ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வல்லவனானால், அ•து அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது என்கின்றார். உயிர் முற்றப் பெற்ற உன்மை அன்பர்களின் அறிவு, விருப்பம், செயல் என்பன ஐம்புலன்களின் வயப்பட்டு உலக முகமாக இருக்குமாயின் அவர்களின் சொல்லும் செயலும் அருள்வழி நில்லாது போய்விடும் என்கின்றார் திருமூலர். கண், காது, மூக்கு, வாய், மெய் என்பவற்றினால் உண்டாகும் உலகியல் இன்பங்களுக்கே முதன்மை கொடுக்கின்றவர்களிடத்து அன்பு நெறியான இறை நெறி வாழாது என்கின்றார் திருமூலர். உணவு, உடை, உறையுள், பொன், பொருள், பணம், பட்டம், பதவி, புகழ் போன்ற ஐம்புலன்களின் வேகத்திற்கு ஆளாய்க் கிடக்கும் அன்பர்கள் ஒருபோதும் உயிர் முற்றப்பெற்றவர் ஆகமாட்டார்கள். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் இறைவன் திருவருளே தமக்கு வழிகாட்டியாகவும் இறைவனின் திருவடியைப் பற்றி வணங்குவதையே தங்கள் மூச்சாகவும் கொண்டு வாழும் அன்பர்களே உயிர் முற்றப் பெற்றவர்கள். இவர்களே உண்மை ஞானிகள். இவர்களே உண்மை சித்தர்கள். இவர்களே உண்மை ஆசான்கள் . இவர்களே போற்றுதலுக்குறியவர்கள் என்கின்றார் திருமூலர்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!