49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே

1211

சீர்மிகு செந்தமிழர் வழக்கில், “பேர் போதல்” எனும் வழக்கு ஒன்று உண்டு. பேர் போதல் என்றால் சிறந்து விளங்குதல் என்ற பொருள் உண்டு. “நற்செயல்களுக்குப் பேர் போனவர்” என்றால் நற்செயல்கள் ஆற்றுவதிலே சிறந்து விளங்குகின்றவர் என்று பொருள்படும். “பேர் போதல்” என்ற மற்றொரு வழக்கை நமக்குத் திருமந்திரம் அருளிய திருமூலர் உணர்த்துகின்றார். இவ்வுடலை விட்டு உயிர் பிரியுமானால் ஒவ்வொருவருக்கும் அவரின் இயற்பெயர் போய்விடும் என்கின்றார் திருமூலர். இயற்பெயருக்கு முன்னால் படிப்பினால் வந்த சிறப்புப் பெயர்களும் வகித்தப் பதவிகளினால் வந்த சிறப்புப் பெயர்களும் உறவு முறைகளினால் அமைந்த உறவுப் பெயர்களும் நீங்குவதோடு பெற்றோர் இட்ட இயற்பெயர்களும் போய் விடும் என்கின்றார் திருமூலர். இறந்த ஒருவரின் உடலைப் பேராசிரியர் என்றோ, மாண்புமிகு அமைச்சர் என்றோ, அப்பா என்றோ, கணவன் என்றோ, மகள் என்றோ அழைக்கமாட்டார்கள் என்கின்றார். இயற்பெயர், சிறப்புப் பெயர் எல்லாம் போய்ப் “பிணம்” என்றே அழைப்பர் என்பதனை, “ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப், பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச், சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு, நீரில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே,” என்கின்றார்.

              உணவு சமைப்பதற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுத்து விட்டு, சமைத்தப் பின்பு அவ்வுணவினைச் சமைத்தத் தம் மனைவியின் திறமையைப் பாராட்டிப் பேசி அன்பை வெளிப்படுத்துவார். அப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதே உடலில் இடது பக்கமாய்ச் சற்று வலிக்கிறது என்று சொல்லுவார். அவ்வலி நீங்குவதற்காகக் கொஞ்சம் ஓய்வு எடுக்கச் சற்றுப் படுப்பார். படுத்தவர் மீண்டும் எழாமலேயே மடிந்து விட்டார் என்ற நிலைமையை உடையது மாந்தர் வாழ்வு. உயிர் உடலை விட்டுப் பிரியும் காலம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கின்ற நம் யாக்கை நிலையாமையைத் திருமூலர் நயம்படக் கூறுவார். இதனை அறிந்து உயிருக்கு வேண்டுவனவற்றை, உயிருக்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தாது செய்தலே அறிவுடைமை என்பார் திருமூலர்.

              திடீர் இறப்பால் இறப்பவர் ஒரு புறம் இருக்க, நீண்ட காலம் வாழ்ந்து இறக்கின்றவர்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அரும்பாடுபட்டு மனத்திற்குப் பிடித்த மங்கையைத் தேர்வு செய்து, நெறிப்படி அவளைத் திருமணம் செய்வர். கணவனிடத்திலும் மனைவியினிடத்திலும் திருமண நாளன்று இருந்த அன்பு, நாள் செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் ஆகிவிட, பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டு விடுவர் என்கின்றார். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கி விட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் போடுவார்கள் என்கின்றார் திருமூலர். அதாவது நோய் நொடியின்றி, வயதாகின்றவரை வாழ்ந்தவரும் ஒரு நாள் இறந்தே போவர் என்றும் வாழ்வை உண்மைக் குறிக்கோளுக்குப் பயன்படுத்தாவிடில் அதனால் உயிர் பெறும் பயன் ஒன்றும் இல்லை என்கின்றார்.

              உடலாகிய தேர்க்கு அச்சாக இருந்த உயிர் உடலை விட்டு நீங்கிவிட, அறுசுவை தவறாது, சத்தான உணவாகத் தேர்ந்து உண்டு வாழ்ந்த உடம்பு பிணமாகக் கிடக்கின்றது. பல்வகை வாசனைத் திரவியங்களும் விலை உயர்ந்த ஆடை அணிகளும் அணிந்து சொகுசாக வாழ்ந்த உடம்பு வெற்றெனக் கிடக்கின்றது. உடம்பை அடிப்படையாகக் கொண்டு பிணிக்கப்பட்டிருந்த உறவு முறைகளான மனைவியும் மக்களும் செல்வமும் முன்போல இவ்வுலகிலேயே நிற்கவும் நன்குப் பேணிக்காத்த இவ்வுடம்பு அவர்களை விட்டு வேறு இடத்திற்குப் போவது திண்ணமாகக் கண்கூடாகக் காண்பது என்கின்றார். நாளும் உடலை வளர்க்க ஓடாய் உழைக்கின்றோம் நாம். ஆனால் இறந்தவரின் உடலை ஊரார் கொண்டு போய்ப்புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும்போது, அறிவுடையார் அறிந்து விரும்புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேர் அருள் காரணமாக இறந்தவரின் உயிரைப் பின்தொடர்ந்து வந்து உதவுகின்றான் என்கின்றார். பிறர் யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்கின்றார். இதனையே, “உற்றார் யார் உளரோ உயிர்கொண்டு போம்பொழுது, குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யார் உளரோ,” என்று திருநாவுக்கரசு அடிகள் நைந்து பாடுவார்.

              மண்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் குளத்திலிருந்து மண் கொண்டு வந்து, தங்கள் வீட்டு முற்றத்திலே பல மட்குடங்களைச் செய்வர். அம்மட்குடங்கள் செயற்படுத்தப்படும்போது உடைந்து போகுமானால் எதையாவது வறுப்பதற்காவது பயன்படுமே என்று வீட்டின் ஒரு புறம் சேமித்து வைப்பர். ஆனால் உயிர் பிரிந்து கிடக்கும் உடல் சிதைந்தால் நொடி நேரமும் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். சிதைந்த உடல் பெரிதும் தீய நாற்றம் வீசி, அழுகிப் பிறருக்கு இன்னலை விளைவிக்கும் என்று அஞ்சுவர் என்கின்றார் திருமூலர். இதனையே, “கடலில் நஞ்சுஅமுது உண்டவர் கைவிட்டால், உடலினார் கிடந்து ஊர்முனிப் பண்டமே,” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். இதனால் இவ்வுடலானது நெருப்புக்கோ, மண்ணுக்கோ இரையாகும் முன், ஊரார் வெறுத்து ஒதுக்கு முன், இவ்வுடலை உயிருக்கு உறுதி பயக்கப் பயன்படுத்திக் கொள்ளுதலே அறிவுடைமையாகும் என்பார் திருமூலர்.

              தாய் வயிற்றில் முட்டையாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு குழந்தையாய்ப் பிறக்கும். பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் கழிய பருவம் அடைந்து திருமணம் என்னும் செயலுக்கு உட்படும். பின் எழுபது ஆண்டுகள் எனும் காலக் கணக்கில் வயதாகிச் செயல் இழந்து இறந்தது என்று கிடக்கும். இதுவே மாந்தரின் உடல் வாழ்க்கை என்கின்றார் திருமூலர். ஒவ்வொரு இமைப்பொழுதும் உடல் அழிவு நெறியில் சென்று கொண்டிருக்கின்றது என்பதனைப் பலரும் அறிவதில்லை என்கின்றார் திருமூலர். இதனையே,” நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும், வாளது உணர்வார்ப் பெறின்,” என்பார் ஐயன் திருவள்ளுவர். உடம்பு காலம் எனும் வாளின் வாய்ப்பட்டு இடையறாது அறுக்கப்பட்டு வருகின்றது என்பதனைப் புலப்படுத்துவார்.அகல் விளக்கில், இருளைப் போக்கிப் பொருள்களைத் தெளிவாகக் காட்டுகின்ற எரியும் சுடரை அணத்து விட்டால், அகல் இருப்பினும் அது இருளைப் போக்கப் பயன்படாது. அது போலவே உடம்பின் வாழ்நாளும் உடலில் உயிர் தங்கி இருக்கும் அளவே ஆகும். உயிர் நீங்கியவுடன் உடலுக்குக் கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பயன் அற்றும் போகும் என்கின்றார் திருமூலர். இவ்வுண்மையை அறியாமல் பலரும் உடம்பையே பொருளாகக் கருதி உடம்பைப் பற்றிய பற்றுக்களிலேயே நாளும் பொழுதும் காலத்தைச் செலவிட்டு வருகின்றனர். உயிர் வளர்த்தலில் பற்றின்றி இருக்கின்றனர் என்கின்றார் திருமூலர்.

              மாந்தரில் இன்னும் சிலர், உடலில் உயிர் தங்கியிருந்த காலம் எல்லாம் உடம்பையே பொருளாகக் கருதியதை, அதோடு நிறுத்திக் கொள்ளாமல் உயிர் உடலை விட்டு நீங்கிய பின்பும் அவ்வுடல் பற்றினையே முன் இருத்தி, உயிர் பற்றினைச் சற்றும் சிந்திக்க மாட்டார்கள் என்கின்றார். காக்கைகள் கொத்தித் தின்னும் ஆதரவு அற்ற அழுகிய இழிவான பிணம் என்றும் உப்பி அழுகிய தீய நாற்றம் உடைய தெருவில் கிடக்கும் கீழான பிணம் என்றும் பேசுவர். சுற்றத்தாரும் மற்றவரும் மதித்து, மிகுந்த ஆடம்பரத்தோடு பல இறப்புக் கிரியைகளை முறையாகச் செய்து மண்ணில் அடக்கம் செய்த பிணமும் அல்லது சுடலையில் தீயில் இட்டு எரித்துச் சாம்பற் ஆக்கப்பட்ட பிணமும் ஏற்றம் உடைய பிணம் என்று எண்ணுகின்றனர். எனினும் உயிர்போன பிறகு உடல்களுக்குச் செய்யப்படும் கிரியைகளினால் பெறப்படுவது ஒன்றும் இல்லையாம் என்கின்றார் திருமூலர். இதனால் பெருமை சிறுமைகளும் இறப்பினில் செய்யப்படும் கிரியைகளின் பலனும் எப்பொழுதும் உயிரைப் பற்றியே அன்றி இறந்த வெற்று உடலுக்கு இல்லை என்பதனையும், “ காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென், பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென், தோற்பையுள் நின்று தொழிலறச் செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே” என்று குறிப்பிடுவார்.

              உயிருக்கு உறுதி பயக்குகின்ற இறைநெறியில் நிற்பவர்களில் கூட பலரும் உலகப் பயன் கருதியே இறைநெறி என்ற பெயரில் வழிபாடு இயற்றுகின்றனர். இது போன்று உலகப் பயனை விரும்பி வழிபடுகின்றவர்களின் ஆசைகள் முற்றுப் பெற்று உயிர்ப்பயன் வந்து கிட்டும் முன்னமே உடல்வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பதனால் உயிர் வாழ்க்கையில் பற்று வைக்கும் உண்மை வழிபாட்டில் பற்று வைப்போமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!