85. பெருங்கேட்டினை நீங்குவோம்

1073

“உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்பது சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும். கண்ணகியின் கற்புத் திறத்தாலேயே அவளுக்குக் “கற்புத் தெய்வம்” எனும் சிறப்பும் சேரன் செங்குட்டுவனின் சிலை எடுப்பும் கிடைக்கப் பெற்றது. கற்புடைய பெண்களின் சிறப்பினை உலகப் பேராசான் திருவள்ளுவரும் சிறப்பிக்கின்றார். கற்பு நெறியில் தவறாது, தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் கற்பு நெறியில் இருந்து தவறாமல் காப்பாற்றித் தன்னுடைய பெருமையும் தன் கணவனின் பெருமையும் சற்றும் குறையாமல், வாழ்க்கையில் தளராமல் உறுதியோடு வாழ்கின்ற பெண்களைச் சிறப்பித்துக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர். தன் கணவனைத் தவிர மனதாலும் வேறு ஆடவரைத் தீண்டாத பெண்களுக்கு இயற்கையையும் வெல்லும் ஆற்றல் உண்டாகும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

தன்னையும் கற்புநெறி தவறாது தற்காத்துத் தன் கணவனையும் கற்புநெறி தவறாமல் காப்பாற்றும் கற்புக்கரசிகளைத் திருமூலர் உலகக் கல்வி ஆசான்களுக்கு நிகராகக் குறிப்பிடுகின்றார். ஆசான்கள் எனப்படுபவர்கள் குற்றங்களில் இருந்து நீங்கியவர்களாக, மாணவர்களின் குற்றங்களைப் போக்கியும் இனி குற்றங்கள் செய்யாமல் இருப்பதற்கும் வழிவகுத்தல் போல, கற்புக்கரசிகளும் தங்கள் குற்றங்களில் இருந்து நீங்கியவர்களாகவும் தங்கள் கணவன்மார்களின் குற்றங்களைக் களைகின்றவர்களாகவும் இருக்கின்றனர் என்கின்றார் திருமுலர். தான் நற்பண்புகளும் நல்லொழுக்கமும் கொண்டு வாழ்வதோடு மட்டும் அல்லாமல் தன் கணவனையும் அந்நெறியில் இருத்தி, நற்பண்புகளும் நல்லொழுக்கமும் உடையவர்களாக ஆக்கும் திறமும் கடப்பாடும் உடைய பெண்கள் சிறப்பிற்குரியவர்கள் என்கின்றார் திருமூலர். இத்தகைய கற்புக்கரசிகளுக்குத் தீமை செய்தால் தீமை செய்பவரது செல்வமும் மகிழ்ச்சியும் வாழ்நாளும் அழிந்து ஒழிந்து போகும் என்கின்றார் திருமூலர். கற்புக்கரசி கண்ணகிக்குத் தீங்கு இழைத்தக் கோவலனின் செல்வமும் மகிழ்ச்சியும் வாழ்நாளும் அழிந்து ஒழிந்து போனமையைச் சிலப்பதிகாரம் சுட்டுவதனை இங்கு ஒப்பு நோக்கல் சாலப் பொருந்தும்.

எனவே கற்பிற் சிறந்த பெண்களுக்குக் கணவன்மார்களும் பிறரும் துன்பம் விளைவித்தல் பெருங் கேட்டினை உண்டாக்கும் என்கின்றார் திருமூலர். கற்பிற் சிறந்த பெண்கள் வீட்டில் இருக்க வேறு பெண்களை நாடுவதும் கற்பிற் சிறந்த பெண்களின் மனம் நோகும்படி நடந்து கொள்வதும் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதும் அவர்களை முறையாக வைத்து அன்பு பாராட்டாமல் விடுவதும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களைத் துன்பத்தில் வாட்டுவதும் பிறர் முன்பு அவர்களை இழிவு படுத்துவதும் அவர்களின் நற்பண்புகளைச் சிறுமை படுத்துவதும் கணவன்மார்களுக்குக் கேட்டினை வருவிக்கும் என்கின்றார் திருமூலர்.

கணவன்மார்களைத் தவிர, மாமனார், மாமியார், மற்றும் குடும்பத்தில் உள்ள இதர உறவு முறைகளும் கற்பிற்சிறந்த பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மன உளைச்சலையும் துன்பத்தையும் ஏற்படுத்துவார்களேயானால் அவர்களுக்கும் அதே கேடுதான் விளையும் என்கின்றார் திருமூலர். இது தவிர, பணியிடங்கள், பொது இடங்கள் போன்ற இடங்களில் தென்படும் கற்பிற்சிறந்த பெண்களுக்கும் கணவனை இழந்து வாடும் கைம்பெண்களுக்கும் தொல்லைகள் கொடுப்பது, அவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்வது, கேலி செய்து மகிழ்வது, கட்டுக்கதைகளை அள்ளிவிட்டுத் துன்புறுத்தி இன்புறுவது போன்றவையும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமூலர். கற்புடைய பெண்களின் மனதைக் கலங்க வைத்தல் பெரும் அழிவைத் தரும் என்று இறைவன் மேல் ஆணையிட்டுக் குறிப்பிடுகின்றார் திருமூலர்.

கற்புடைப் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் எவ்வுயிர்க்கும் துன்பம் விளைவித்தல் கூடாது என்பதே சித்தாந்த சைவத்தின் கொள்கை. குரு நிந்தை எனும் இப்பகுதியில் கற்புடைப் பெண்களுக்குத் துன்பம் விளைவித்தல் ஆகாது என்று குறிப்பிடும் திருமூலர், இறை அடியவர்களுக்குத் துன்பம் விளைவித்தலும் பெருந்தீங்கினை ஏற்படுத்தும் என்கிறார். திருக்கோவிலில் இறைவழிபாடு இயற்ற வருகின்ற அடியவர்களின் மனம் கலங்குமாறு செய்கின்றவர்களுக்குப் பெருந்துன்பம் காத்திருக்கின்றது என்கிறார். இறைவனின் திருவடியை எப்பொழுதும் மனதில் இருத்தி வைத்து இறைநெறியில் வழுவாது நிற்கும் இவ்வடியவர்களுக்கு எவ்வகையிலேனும் நேரடியாகவோ அல்லது வேறு வழிகளிலோ துன்பமும் மனக்கலக்கமும் உண்டாக்குகின்றவர்களின் செல்வமும் இன்பமும் வாழ்நாளும் அழிந்து ஒழிந்து போகும் என்கிறார் திருமூலர். அடியவர்கள் இறைவனை நினைப்பிக்கும் அடையாளங்களையும் இறைவனை நினைப்பிக்கும் மந்திரங்களையும் இறைவனிடத்தில் அன்பினை ஏற்படுத்தும் திருமுறைகளையும் சமய நெறிமுறைகளையும் நமக்குக் காட்டிக் கற்பிக்கும் ஆசான்கள் என்பதனால் அவர்களை மனம் நோகும்படிச் செய்தல் பெருங்கேட்டினை விளைவிக்கும் என்கின்றார்.

அடியவர்களைத் தவறாகப் பேசுவதும் அவர்கள் அணிந்துள்ள சமயச் சின்னங்களை இழிவு படுத்துவதும் அடியார்களுக்கிடையில் குழப்பம் விளைவிப்பதும் முறையான இறைநெறியையும் வழிபாட்டினையும் அவர்கள் பரப்புவதற்குத் தடையாய் இருந்து அவர்களின் மனம் புண்படும்படி செய்வதும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கும் என்கின்றார் திருமூலர். கோயில்களில் உரக்கப் பயனற்றக் கதைகளைப் பேசுவது, பிள்ளைகளைக் கோயிலுக்குள் விளையாட விட்டுக் கவனியாமல் இருப்பது, கோயில் சுற்றுக்களில் காதல் செய்வது, கைப்பேசிகளை அலறவிடுவது போன்றவை அடியார்களின் மனதை நோகச் செய்வனவாம். திருவிழாக்களில் குழப்பம் விளைவிப்பது, சண்டை போடுவது, மது அருந்துவது, பெண்களைக் கேலி செய்வது, வம்பிற்கு இழுப்பது போன்ற செயல்களின் வழி அடியார்களின் மனதை நோகச் செய்வதனால் அவ்வாறு செய்வோருக்குப் பெருங்கேடு வரும் என்கின்றார் திருமூலர்.

“பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள், சித்தம் கலங்கச் சிதைவு செய்தவர், அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும், சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே” என்று குறிப்பிடும் திருமூலர், கற்பிற்சிறந்த பெண்கள், அடியவர்கள் போன்றவரோடு தத்துவ ஞானிகளுக்கும் தீங்கு விளைவித்தவர்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பதனையும் குறிப்பிடுகின்றார். தத்துவ ஞானம் நூல்களினாலும் பட்டறிவினாலும் வருவது என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். தாங்கள் கற்றக் கல்வியினாலும் பட்டறிவினாலும் மற்றவருக்கு உண்மைநெறியினையும் அறவுரைகளையும் புகட்டும் நல்லறிவாளர்களும் உலக ஆசான்கள்தான் என்கின்றார் திருமூலர். இவர்களோடு எண்ணையும் எழுத்தையும் கற்றுக்கொடுக்கும் பள்ளி ஆசான்களும் குறிப்பிட்டத் துறைகளில் துறைபோகிய ஆசான்களும் கலை வல்லுநர்களும் அறிவுசால் சான்றோர்களும் உலகக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்களே! இத்தகைய அரிய ஆசான்களின் மனங்கலங்கும்படி அவர்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றவர்கள் செல்வமும் இன்பமும் வாழ்நாளும் அழிந்து ஒழிந்து துன்புறுவார்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பள்ளி ஆசிரியர்களை மதியாமல் இருப்பதுவும் எதிர்த்துப் பேசுவதும் அவர்களைக் குண்டர் கும்பலை வைத்துத் தாக்குவதும் அவர்களின் உடைமைப் பொருட்களைப் பாழ்படுத்தி வஞ்சம் தீர்ப்பதும் மாணாக்கர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் பெருங்கேடாம். அறிவுசால் பெரியவர்களின் அறிவுரைகளையும் அறவுரைகளையும் கருத்துக்களையும் ஏளனம் செய்து அவர்களைப் பொருட்படுத்தாமல் நடந்து அவர்களின் மனதைப் புண்படுத்துவதும் பெருங்கேட்டினை விளைவிக்கும் என்கின்றார் திருமூலர். நல்லோரின் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் கேலி செய்து நகைப்பதுவும் அவற்றைப் புறந்தள்ளி மகிழ்வதுவும் அவர்களின் மனம் புண்படும்படியாக நடந்து கொள்வதும் அவ்வாறு செய்கின்றவர்களுக்கு அறிவு விளக்கம் ஏற்படாமல் செய்வதோடு வருங்காலத்தில் வாழ்வில் இன்பத்தினையும் செல்வத்தினையும் வாழ்நாளையும் இழந்து துன்புறுவார்கள் என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். சிந்திப்போம் செயல்படுவோம்! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!