37. முயல் தவமே பிறவியை அறுக்கும்

1566

அறம் வாழ்கின்ற இடமாக உள்ள இறைவனின் திருவடிகளைத் தொழாமல் பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இயலாது என்பார் ஐயன் திருவள்ளுவர். வாழும் இப்பிறவியையும் இனி வரும் பிறவிகளையும் போக்கிக்கொள்வதே இப்பிறவியின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிடுவார். பிறவியைப் போக்கிக்கொள்வதற்கான வழி இறைநெறிக்கு நம்மை ஆளாக்கிக் கொள்ளுதல் என்பதைத், “தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கிக், அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே, எல்லை மறுவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன்” என்று திருவாசகத்தின் சிறப்பாயிரம் குறிப்பிடும். அதாவது தேனை ஒத்த, உயிரின் நோயைப் போக்க வல்ல, மாறாத இறைநெறியை அளிக்க வல்ல, திருவாதவூரர் அருளியத் திருவாசகம் எனும் இறைநெறிநூலை ஓதினால், நீண்ட காலமாய் உயிரைப் பற்றியிருகின்ற உறுதியான பிறவி எனும் கட்டு அறுந்து, துன்பம் நீங்கி இறையின்பம் ஏற்படும் என்று குறிப்பிடுகின்றது. எனவே வழிபாடு என்பது இப்பிறவியினை அறுக்க மேற்கொள்ளப்படுவது என்பது புலனாகிறது.

வழிபாடு நம்மை இறைநெறிக்கு உட்படுத்துவது ஆகும். அதற்காகத்தான் நமது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யும் செயல்களைச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நான்கு நெறிமுறைகளின் மூலம் நெறிபடுத்துகின்றோம். சீலத்தில் மலர் பறித்தல், விளக்கு ஏற்றுதல், திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு செல்லல், பூசனைப் பொருட்களைக் கோயிலுக்குக் கொண்டு செல்லல், வழிபடுதல், திருக்கோயிலைக் கூட்டுதல், கழுவுதல், மெழுகுதல், தீவத்தி ஏந்துதல், பல்லக்குச் சுமத்தல், ஆலய வலம் வருதல், அடியவருக்கு உணவு, உடை அளித்தல், வறுமையில் வாடுவோருக்கு உதவுதல் போன்ற இறைத்தொண்டுகள் செய்து நம் உடலின் புறத்தில் உள்ள கருவிகளைத் தூய்மை செய்து இறைப் பணிக்கு அவற்றைப் பழக்கி, உயிர் பிறவி அறுவதற்கு அவற்றைத் துணைக்கொள்கின்றோம்.

உடலின் புறத்தில் உள்ள கருவிகளைத் தூய்மை செய்து அவற்றை இறைப் பணிக்குத் திசை திருப்புவதனால் ஐம்புலன்களினால் உயிருக்கு வரும் தொல்லைகள் குறைகின்றன. பிறவி அறுவதற்கு ஏதுவாகின்றன. தவிர, நம் மனதை இறைவன்பால் திருப்பி உள்ளேயும் வெளியேயும் அவனைப் போற்றி வழிபடுவதற்குத் திருமுறைகள், மந்திரங்கள், பூசனைகள், சடங்குகள் என்ற செயல்முறைகளைச் செய்து, பிறவி அறுவதற்கு உயிரை இறைவன்பால் திசை திருப்புகின்றோம். திருவுருவத்திற்குப் பூசனை இயற்றினாலும் சிவத்தீ வளர்த்து பூசனை இயற்றினாலும் உயிரை இறைவன்பால் வழிபடுத்துவதற்கே அவற்றைச் செய்வதன் நோக்கம் என்று குறிப்பிடுவர். அகப்பூசனையானாலும் புறப்பூசனையானாலும் உயிரை இறைவன்பால் படுத்துவற்கே ஆகும் என்பது தெளிவு. தவிர, புறத்திலும் அகத்திலும் எண்ணி சொல்லப்படுகின்ற மந்திரங்களும் திருமுறைகளும் கூட உயிரை இறைவன்பால் குவித்துப் பிறவி அறுவதற்கே ஆகும் என்பது நம் சித்தாந்தச் சைவத்தின் தெளிவு. இதைப்போன்றே செய்ய வேண்டியவற்றைத் தவறாமல் செய்தும் விட வேண்டியவற்றை விட்டும் வெளித்தொடர்புகளைத் துண்டித்து, மூச்சைச் சீர்படுத்தி, உடல் நோகாமல் இருக்க நல்ல இருக்கைகளைக் கற்றும் இறைவனை உயிரில் தொடர்ந்து வைத்து எண்ணுவதும் உயிரை இறைவனோடு சேர்த்து வைத்து மகிழ்ந்து பிறவி அறுவதற்குத்தான் என்பதனை, “நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல், மாடுவன் மாடுவன் வன்கைப் பிடித்து மகிழ்ந்துளே, ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே” என்று திருஆமாத்தூர் பதிகத்தில் சுந்தரமூர்த்தி அடிகள் குறிப்பிடுவார்.

அறிவு நூல்களைக் கற்றும் கேட்டும் சிந்தித்தும் அதில் அழுந்தி இருந்தும் பெறுகின்ற இறை அறிவினால் திருவருளைத் துணயாகக் கொண்டு பெறுவதும் பிறவி அறுவதுதான். எனவே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று இறைவனை அடையும் நெறிகளாகச் சீர்மிகு செந்தமிழர் வகுத்து வைத்துள்ள வழிபாட்டு நெறிகள் பிறவி அறுதலையே பிறவியின் நோக்கமாகவும் அதற்கு இறை அறிவும் அவ்விறை அறிவினால் விளையும் திருவருளையும் துணைக் கொண்டு பிறவியை அறுக்க வேண்டும் என்கின்றது. எனவே வழிபாடு என்பவற்றால் நாம் இயற்றுவது நம் இறை அறிவைப் பெருக்குவதாகவே இருத்தல் வேண்டும் என்பது திருமூலர் உணர்த்தும் செய்தியாகும்.

இறைவழிபாடு இயற்றுகின்றவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பின் உள்ள பொருள் உண்மை அல்லது அதன் உட்பொருளினைத் தெளிதல் வேண்டும். நம் உள்ள அன்பிற்கு அடையாளமாகவே இறைவனின் திருவடிகளில் மலரிடுகின்றோம் என்பதனை மலர் இடுபவர் தெளிதல் வேண்டும். என் அறிவு தெளிவு பெற வேண்டும் என்றே நான் தேங்காய் உடைக்கின்றேன் என்று தேங்காய் உடைப்பவர் தெளிதல் வேண்டும். இறைவன் ஒளி வடிவாகத் தோன்றி மறைகின்றான் என்று உணர்த்தவே பெருமான் முன்பு கற்பூரம் ஏற்றுகின்றேன் என்று கற்பூரம் ஏற்றுபவர் உணர்தல் வேண்டும். இதை உணராமல் வெறும் செயல் முறையாக அல்லது சடங்குகளாக மட்டும் செய்வதில் இறை அறிவு வளராது. இது உயிரை இறைநெறிக்கு இட்டுச் செல்லாது, பிறவி அறாது என்கின்றார் திருமூலர். இதைப் பூசனை இயற்றுகின்றவர்களும் பெற்றோர்களும் மற்றோரும் தெளிவு படுத்துவது கடனாகும் என்கின்றார் திருமூலர். இதுவே முயல் தவம் என்கின்றார்.

சிவத்தீ வளர்ப்பவர்கள் அதில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு அவர்களுக்கு மட்டும் பொருள் தெரிந்திருப்பதோடு மட்டுமல்லாமல் சமயச் செயல் முறைகளின் தலைவராக இருந்து அவர்கள் மக்களுக்கு உணர்த்த எண்ணும் வழிபாட்டினையும் அதன் பொருளையும் மக்களுக்கு விளக்க வேண்டும். அதுவே முயல் தவம். திருமுறைகளை ஓதும் ஓதுவார்களும் மற்ற ஆசிரியர்களும் அதன் ஆழ்ந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்து விளக்கிக் கேட்பவரின் உயிர் அதில் திளைக்குமாறு செய்தல் வேண்டும். அதுவே முயல் தவம் என்கின்றார் திருமூலர். நீண்ட நேரம் இயற்றப்படும் பூசனைகளுக்கும் சிவத்தீ வளர்த்தலுக்கும் சொல்லப்படும் மந்திரங்களுக்கும் திருமுறைகள் ஓதுதலுக்கும் தெளிவினைக்கூறாது வெறுமனே செய்தல் முயல் தவம் ஆகாது. இப்படி அவற்றின் உட்பொருளைத் தெளிவினைக் கூறாமையினால் தான் பலரும் சமயத்தெளிவின்றி அன்றாட வாழ்வில் தேவைப்படும் சிறு சிறு இன்பங்களுக்கும் பயன்களுக்கும்தான் இறைவனை வழிபடுகின்றோம் என்று மயங்கிக் கிடக்கின்றனர்.

மூச்சுப் பயிற்சி, இருக்கைகள், இறைவனைத் தொடர்ந்து எண்ணல், புறத் தொடர்புகளை அறுத்தல் என்பது எதற்கு, செறிவுப் பயிற்சியினால் கிட்டும் சித்துக்கள் எனப்படும் சிறு சிறு ஆற்றல்கள் எதற்கு என்று உணர்த்தாமையினால் தான் அத்தகைய பயன்களை உலக இன்பங்களுக்கு என்று எண்ணி பலரும் மயங்குகின்ற நிலையினைக் காண்கின்றோம் என்பார் திருமூலர். இறை உணர்வைப் பெறவும் அவ்வுணர்வினால் பிறவியை அறுக்க முயல வேண்டும் என்பதனை உணர்த்தாமையினால் தான் பலரும் இன்று அதனைப் பொருளும் பிறவும் சேர்க்கும் வழியாக எண்ணி மயங்குகின்றனர் என்கின்றார் திருமூலர். இது முயல் தவம் இல்லை, பிறவியை வருவிக்கும் என்பதனை, “பின்னே, நின்று என்னே பிறவி பெறுவது, முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர், என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கின்றார்.

இறை நெறியை உணர்வதற்கும் உண்மையான முயல் தவத்தினை நன்றாகச் செய்வதற்கும் அம்முயற்சியைச் செய்பவருக்கு விளங்கும் மொழி இன்றியமையாததாக உள்ளது. இறை உண்மைகளையும் வழிபாட்டு நெறிகளையும் பிறருக்கு உணர்த்தும் சமய ஆசான்கள், பயிற்றுனர்கள், பூசகர்கள், அவர்கள் வழிகாட்டும் நெறிகளைத் தம்மைச் சார்ந்து இருக்கின்ற சமய ஆர்வலர்கள் தாங்களாகவே மேலும் கற்றுக் கொள்வதற்கு அவர்களைத் தயார் செய்தல் வேண்டும். தத்தம் ஆசான்களிடத்தில் பெற்ற சிறு அறிவோடு நின்று விடாமல் தாங்களாகவே தேடலை மேற்கொள்ளும் வழிக்கு வகை செய்யுமாறு அவர்களுக்குத் தெரிந்த, புரிந்த மொழிகளில் எளிய வழிகளில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எல்லோரும் இதனை அடைய இயலும் என்று உண்மையான ஆசானுக்கு இலக்கணமாய் இருந்து காட்டலும் கற்பித்தலுமே உண்மையான முயல் தவம் என்பது திருமூலரின் செய்தியாகும்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!