45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே

1427

செந்தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையான சித்தாந்தச் சைவக் கொள்கைகளை விளக்கும் நூல்களைச் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்கள் என்பர். சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சிவ ஆகமங்கள் இருபத்து எட்டும் இறையன்பைக் குழைத்துக் கூறும் சித்தாந்தச் சைவ உண்மைகளை இம்மெய்கண்ட நூல்கள் நேரிடையாகச் சித்தாந்தச் சைவ கொள்கைகளாக விளக்குகின்றன. இப்பதினான்கு சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்களில் தலையாயதாகக் கூறப்படுவது மெய்கண்டாரின் சிவஞானபோதம் எனும் நூல் ஆகும். இச்சிவஞானபோதம் இவ்வுலகிலேயே இறைவனின் திருவருளைப் பெற்றுவிட்ட உயிர் முற்றப்பெற்றவர்களின் (சீவன் முத்தர்கள்) நிலையையும் அந்நிலையினையும் கடந்து, இவ்வுடலை நீத்து, இறைவனின் அருள் வெளியாகிய சுத்தவெளியிலே சோம்பி இருக்கின்ற உயிர்களின் நிலையினைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. இவ்விரு நிலைகள் பற்றியும் திருமந்திரமும் தெளிவுறக் குறிப்பிடுகின்றது.

            இன்று பலரும் பல வழிபாட்டு முறைகளை அல்லது இறைவனை அடையும் முறைகளைத் தெரிவு செய்து கொண்டு பின்பற்றுகின்றனர். சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்தச் சைவம் அதற்கு வழிவிடுகின்றது. சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்கின்ற நன்நெறி நான்கினுள்ளேயே அவை அனைத்தும் அடங்கி நிற்கின்றன. எனினும் அந்நால்வகை நெறிகளையும் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுவது போன்று அணுகிப் பின்பற்றினாலேயே அவற்றின் இலக்கினை அல்லது அவற்றின் முடிந்த முடிவான, இறைவனை அடைதல் என்பதனைப் பெற இயலும் என்பதனைப் பலரும் அறியாது மயங்கிக் கிடக்கின்றனர். இறைநெறி வாழ்க்கையில் தங்களைச் சற்று ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், மெய்கண்ட நூல்கள் கூறும் உண்மைகளை அறிந்து மெய்ப்பொருளான இறைவனை அடைய வேண்டும் என்று முயலுகின்றவர்களில் பலர் இன்று தவறான வழிகாட்டுதல்களினால் வழி தவறித் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மெய்கண்ட நூல்கள் கூறும் உண்மைகளை அறியாத பல ஆசான்களைப் பின்பற்றி வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் தவறான கொள்கைகளை அறியாமையினால் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

            தொண்டுநெறியாகிய சீலத்தில் நிற்பவர்களில் பலரும் இறைவனுக்குப் புறத்திலும் அகத்திலும் பூசனை இயற்றுகின்ற நெறியாகிய நோன்பு நெறியில் நிற்கும் பலரும் இறைவனை அகத்திலே ஒன்றியிருந்து எண்ணுகின்ற செறிவு நெறியில் நிற்கின்ற பலரும் இறைவனை அறிவால் வழிபடுகின்ற அறிவுநெறியாளர்களில் பலரும் பல்வேறு குழப்பங்களில் நின்று தடுமாறுகின்றனர். மேற்கூறிய நான்கு நெறிகளிலும் சற்றுத் தேறி விட்டவர்களாகத் தங்களை எண்ணிக் கொள்கின்றவர்கள், தங்களின் ஆசான்களின் படிப்பினைகளைப் பின்பற்றியோ, தங்களின் சிற்றறிவினுக்கு எட்டியபடி பின்பற்றியோ, சமயச் சின்னங்களை அணிவது, ஆலயத்திற்குச் சென்று இறைவழிபாடு செய்வது, சிவபூசனை செய்வது, உண்மைச் சிவ அடியார்கள் நடுவே தம்மை வைத்துக்கொள்வது போன்றவை கீழ்நிலை இறை அன்பர்களுக்கு உரியது என்று எண்ணி அவற்றைச் செய்யாது விடுகின்றனர். சிவ ஆலயத்திற்குச் செல்வது, சைவ சமயச் சின்னங்களை அணிவது, சிவபூசனை செய்வது, நற்சிவனடியார்களின் நடுவே தன்னை வைத்துக் கொள்வது போன்றவை உடல் தாங்கி இவ்வுலகில் வாழும் அனைத்து அன்பர்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கின்றது.

            சிவஞானபோதம் என்ற மெய்கண்டநூல் தமது பன்னிரண்டாவது பாடலில், சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற எந்நிலையில் நின்று உயிர் முற்றப்பெற்றவராக (சீவன் முத்தராக) இருந்தாலும் அவர்கள் மேற்கூறிய பின்பற்றுதல்களைச் செய்தே ஆக வேண்டும் என்கின்றது. இவ்வுலகில் வாழும் காலத்திலேயே உயிர் முற்றப்பெற்ற அருளாளர்களை அணைந்தோர் என்கின்றது. இவர்களின் நிலையை அணைந்தோர் தன்மை நிலை என்கின்றது. மக்கள் தொண்டினாலும் இறைத்தொண்டினாலும் சிறந்து இறைவனின் திருவருள் கூடப்பெற்றவர்களும் மிகச் சிறந்த பூசனைகளால் இறைவனின் திருவருள் கூடப்பெற்றவர்களும் செறிவு அல்லது யோகநெறியின் வழி எட்டுப்படிநிலைகளைக் கடந்து இறைவனின் திருவருள் கூடப்பெற்றவர்களும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடுதல் என்பனவற்றைத் துணைக்கொண்டு அறிவுக்கு அறிவாய் இறைவனின் திருவருளைக் கூடப்பெற்றவரும் இவ்வுலகில் உடல் கொண்டு வாழும்வரை மேற்கூறியவற்றைச் செய்தே ஆகவேண்டும் என்பதனை, “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா, அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ, மால்அற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே” என்று சிவஞான போதம் குறிப்பிடுகின்றது.

            உயிர் முற்றப் பெற்றவர்களுக்கு இறைவனே சிவ ஆசானாக உள்ளத்திலோ, வெளியிலோ வெளிப்பட்டு அவர்களுடைய எஞ்சியிருக்கும் வினைகளையும் வருவினைகளையும் வறுத்த விதையைப் போன்று அழித்திவுடுவானே ஆயினும் மல மாயையை இனி முளையாதவாறு ஆக்கி விடுவானேயாயினும் இப்பொழுது வாழும் பிறவி நீங்கும் வரை உடல் அவர்களுக்கு இருப்பதனால் மேற்கூறிய அனைத்து பின்பற்றுதல்களையும், (சாதனங்கள்) செய்தே ஆதல் வேண்டும் என்பதனைச் சிவஞான போதம் வலியுறுத்துகின்றது. இதற்குச் சான்றாக உயிர் முற்றப்பெற்றவர்களாக வாழ்ந்த நாயன்மார்கள் வாழ்ந்து காட்டிய இறை நெறியைக் குறிப்பிடலாம். சரியை நெறி எனும் தொண்டு நெறியில் வாழ்ந்த அரிவாள்தாயர், அதிபத்தர், இளையான் குடிமாறர், திருக்குறிப்புத் தொண்டர் போன்ற நாயன்மார்கள் உயிர் முற்றப் பெற்றவர்களாக இவ்வுலகில் வாழ்ந்திருந்து இறைவன் அவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றும் நிலையினைப் பெற்றிருந்தாலும் சாதனங்களை அவர்கள் விட்டது கிடையாது.

            சோமாசிமாறர், திருநீலநக்கர், அப்பூதி அடிகள் போன்றோர் பூசனைகளில் உறைப்பாய் நின்று உயிர் முற்றர்கள் நிலையை அடந்திருப்பினும் இறைவன் அவர்களுக்கு வெளிப்பட்டு அருளும் நிலையைப் பெற்றிருப்பினும் அவர்கள் மேற்கூறிய பின்பற்றுதல்களை விட்டவர்கள் இல்லை. இவ்வுடலையும் உலகையும் விட்டு நீங்கும் வரை இறைவழிபாட்டினையும், சமயச் சின்னங்களையும் அடியார் இணக்கத்தையும், சிவ வழிபாட்டினையும் தவறாது செய்து வந்துள்ளனர். செறிவு அல்லது யோக நெறியில் சிறந்து விளங்கிய திருமூலர், பெருமிழலைக் குறும்பர், பூசலார், போன்றோர் அடியார் இணக்கத்தையும் ஆலய வழிபாட்டையும் விடாது செய்து வந்திருக்கின்றனர். அறிவு நெறியில் நின்ற பட்டினத்து அடிகள், தாயுமானவ அடிகள் போன்றோர் இறுதி வரை மேற்கூறிய சாதனங்களை விடாது செய்து வந்துள்ளனர். இக்கொள்கையினைத் திருமூலரும் ஒன்பதாம் தந்திரத்தில் அணைந்தோர் தன்மை எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார். மேற்கூறிய பின்பற்றுதல்கள் நீங்குவதாய் இருப்பினும் தூங்குகின்ற குழந்தையின் கையில் இருக்கின்ற பொம்மை அக்குழந்தையின் கையிலிருந்து அக்குழந்தை அறியாதவாறு தானே நீங்குகின்றதோ அதுபோல இப்பின்பற்றுதல்களும் இறைவன் திருவருளால் தானே விடுபட வேண்டும். நான் விடுத்துக்கொள்கின்றேன் என்று விடுவது தவறு என்று மெய்கண்ட நூல்களும் திருமந்திரமும் குறிப்பிடுகின்றன.

            இன்று நம்மில் பலர் உயிர் முற்றப்பெற்றவர் நிலையை அடையாவிட்டாலும் உயிர் முற்றப்பெற்றவர் நிலையை அடந்துவிட்டவர் கூட பின்பற்ற வேண்டிய பின்பற்றுதல்களை மிக எளிதாய்த் தூக்கி எறிந்துவிட்டு எதோ நெறியில் நின்றுக்கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் சமயச் சின்னங்களை அணியத் தேவையில்லை என்றும் இறைவழிபாடு செய்யாது தானே கடவுள் என்றும் சிவ பூசனைகள் இயற்றத் தேவையில்லை என்றும் உண்மை அடியார் இணக்கம் தேவையில்லை என்றும் தன்னைத் தியானியுங்கள் என்றும் கூறும் ஆசான்களைப் பின்பற்றி வழிதடுமாறி நிற்கின்றோம். தவிர, மேற்கூறிய பின்பற்றுதல்களைச் (சாதனங்கள்) செய்பவர்களைப் பாலர் பள்ளி நிலையில் வழிபாடு செய்கின்றவர்கள் என்று மருந்துக்கும் சமய அறிவு இல்லாதவர்கள் ஏளனமாகக் குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் உயிர் முற்றப்பெற்றவர்களான (சீவன் முத்தர்கள்), இறைவனின் திருவடியை அணைந்து இவ்வுலகில் வாழ்பவர் மேற்கூறிய பின்பற்றுதல்களை எல்லாம் விடுத்துச் சும்மா இருப்பது அல்லது சோம்பியிருந்து இறை இன்பம் மட்டும் நுகர்ந்து இருப்பது எப்போது எனும் கேள்விக்குத் திருமூலர் பதிலளிக்கின்றார்.

            இவ்வுலகிலேயே சிவ உலக நிலையை உணர்ந்தும் உலகம் முழுவதும் இறைவன் விரைவி நிற்கும் உண்மையை உணர்ந்தும் இறைவனின் திருவருள் துணையால் அவன் அருள் இன்பத்தை நுகர்ந்துகொண்டும் அவனை உற்று நோக்கியும் வாக்குகள் ஒடுங்கி மலமாசு அகன்று மனக் கவலை நீங்கி விருப்பு வெறுப்பு அற்றும் இருக்கின்ற இவர்கள் உயிருக்குப் பொறுத்தப் பட்டிருக்கின்ற உடல், கருவி கரணங்கள் இவற்றை எல்லாம் நீங்கினால் தான் அந்நிலை ஏற்படும் என்கின்றார் திருமூலர். முப்பத்தாறு மெய்கள் (36 தத்துவங்கள்) என்பனவற்றைக் கடக்கவேண்டும் என்கின்றார். இறைவனின் திருவருளால் இவ்வுலகத்தைப் பற்றியத் தெளிவும் உயிரைப் பற்றிய தெளிவும் இறைவனைப் பற்றிய தெளிவும் பெற்று, இறைவனது திருவருளையே நிலைக்களமாக் கொண்டு, உயிர் அழுந்தி இருப்பது பரவெளியிலேயாம். இதனையே சுத்தவெளி என்கின்றார் திருமூலர். இப்பரவெளி மனம், வாக்கு, காயம் என்பவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டதாம். இங்குதான் உயிர் இறைவனின் திருவருளையே கருவியாக் கொண்டு இறைவனைக் கண்டு செயல்கள் எதுவும் செய்யாது சும்மாயிருந்து அல்லது சோம்பியிருந்து இன்பம் நுகர்ந்து அசைவற இருக்கும் என்பதனைச், “சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே, சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே, சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம், சோம்பர் கண்டார் அச்சுருதிக்கண் தூக்கமே” என்கின்றார் திருமூலர். இச்சோம்பியிருக்கும் நிலை ஏற்படும் வரையிலும் சித்தாந்தச் சைவ நெறி இறைவனை அடைய வகுத்து வைத்திருக்கும் பின்பற்றுதல்கள் உயிர்முற்றப்பெற்ற அணைந்தோர் தன்மையை உடைய அன்பர்கள் அனைவருக்கும் உரியதே என்பதனை உணர்ந்து உண்மை இறை நெறியைப் பின்பற்றி வாழ்வோமாக.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!