32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்

1547

சீர்மிகு செந்தமிழரின் வீரத்தினையும் கொடையினையும் பறைசாற்றி நிற்பன புறநானூநூற்றுப் பாடல்கள். கொடை அல்லது ஈகையை அவர் அவர் நிலையில் இயற்ற வேண்டும் என்பதே தமிழர் வகுத்த அறம். இதனையே, “இயல்வது கரவேல்”, “ஈவது விலக்கேல்”, “ஐயமிட்டு உண்” எனும் பொன்மொழிகளால் ஒளவை பிராட்டி அழகுற இயம்புவார். ஈகையில் மிகச் சிறந்தது உயிர்களுக்கு உணவும் உறையுள் எனும் இருப்பிடமும் அளிப்பது ஆகும். இதனாலேயே, தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக்கொள்வது. அத்தவ வலிமை கூட இன்னொருவரின் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் வலிமைக்குப் பிற்பட்டதே ஆகும் என்கின்றார் ஐயன் திருவள்ளுவர். மற்ற உயிர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல் பசியை அடக்கித் தவம் இயற்றுவதைக் காட்டிலும் சிறந்தது என்பது சீர்மிகு செந்தமிழர் இறைக் கொள்கையாகியச் சித்தாந்த சைவத்தின் கொள்கை. இதனையே திருமூலரும் அறம் செய்வான் திறம் எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.

         ஈகை செய்ய விரும்புகின்றவர்கள் நம் உறவினர், நமக்கு வேண்டியவர், நமக்கு வேண்டாதவர், நம் நண்பர், நம் பகைவர், இன்ன நாட்டினர், இன்ன இனத்தவர், இன்ன மொழியினர், படித்தவர், படிக்காதவர், பதவியில் உள்ளவர், இன்ன பிரிவினர், வறுமையானவர், செல்வம் உடையவர், அழகானவர், இளமையானவர், முதுமையானவர் போன்ற வேறுபாடு காட்டாது யாவருக்கும் உதவ வேண்டும் என்கின்றார் திருமூலர். யார் ஒருவர் மேற்கூறியவற்றைப் போன்ற கூறுகளைக் கருத்தில் கொண்டு பிரருக்கு உதவுகின்றார்களோ அது ஈகை ஆகாது என்கின்றார். அது பயனை எதிர்ப்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. அது உண்மையான ஈகையின் பயனை அளிக்காது என்கின்றார். ஒவ்வொருவரும் தாம் உழைத்துப் பெறும் செல்வத்தையும் தம்முன்னோர் உழைத்து ஈட்டிய செல்வத்தையும் பல முறைகளில் சேமித்து வைத்து அதன் உண்மைப் பயன்பாட்டினை அறியாது இறந்து போகின்றனர். நிலவுலகில் கிட்டும் செல்வம் இறந்த பிறகு இறை உலகில் உயிர்களுக்குத் தேவைப்படும் அருட்செல்வத்திற்குக் கொடுக்கப்படும் முன் பணம். இதனைக் கொண்டே அருள்செல்வத்தினைத் தேட வேண்டும். அருள் செல்வத்தினைத் தேடுவதற்கான வாயிலே ஈகை செய்தல் என்கின்றார் திருமூலர். வறியவரின் துன்பத்தைப் போக்குவதற்கு ஒருவன் தம் கைப் பொருளை ஈகை கொடுத்தலே தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைத்தல் என்பதனைத் தருமம் தலை காக்கும் என்றனர் நம் முன்னோர்.

         தன்னிடம் இருந்த செல்வமும் தம் முன்னோர் சேமித்து வைத்த நீண்ட செல்வமும் தில்லை மன்றில் ஆடிக்கொண்டிருக்கின்ற பெருமானின் அடியவர்களுக்காக இறைவன் தமக்கு அளித்தது என்று பெரு மகிழ்ச்சியோடு அனைவருக்கும் உணவும் உறையுளும் கொடுத்ததனால் நற்பண்பும் நற்சிந்தனையும் ஆழ்ந்த இறைப் பற்றும் மெய்ப்பொருள் நாயனாருக்குப் பெருக, அன்பின் பிழம்பாய்த் திகழ்ந்தார் அவர் என்பார் தெய்வச் சேக்கிழார். எனவே சிவமாம் தன்மை பெறுதலுக்குத் தலையாயைப் பண்பாகத் திகழும் அன்பு பெறுகுதலுக்குப் பிற உயிர்களுக்கு ஈகை செய்தல் இன்றி அமையாததாகும். பொருள் உள்ளவர்கள் அவர் அவர் நிலையில் உணவோ, உடையோ, கல்வியோ, இருப்பிடமோ, வேலை வாய்ப்போ, அடிப்படை வசதிகளோ என்று தம்மால் இயன்றதைச் செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். நாளும் உண்பதற்கு முன் இன்று யாருக்காவது ஏதாவது உதவி செய்திருக்கின்றோமா என்று எண்ணி உண்ணுங்கள். உதவி இன்னும் செய்யாவிடில் உதவி செய்யும் விருப்புடனும் உதவி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும் உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும் முன் தம் இனத்தையும் கரைந்து அழைத்துக் கொண்டு உண்ணுதலைக் கண்டு கற்றுக் கொள்ளுங்கள் என்பதனை, “ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்அன்மின், பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின், வேட்க்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்அன்மின், காக்கை கரைந்து உண்ணும்காலம் அறிமினே” என்பார்.

         நம்மால் செய்யக்கூடிய வகையால் அல்லது இயன்றவகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லும் இடமெல்லாம் அறச் செயலைப் போற்றிச் செய்தல் வேண்டும் என்பதனை, “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே, செல்லும்வாய் எல்லாம் செயல்” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மாந்தர் தங்கள் வாழ்நாளில் செய்யக்கூடிய எளிதான ஈகைச் செயலைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். ஈகை செய்கின்றவர் தாம் ஈகை எனும் பெரும் அறத்தைத் தம் பொருளாலும் முயற்சியாலும் தம் கருணையாலும் செய்கின்றார் என்று எண்ணுவாரேயானால் தற்பெருமை என்ற செருக்கு பற்றிக் கொள்ளும். எனவே ஈகைக்கு முதலில் வேண்டுவது இறை உணர்வாகும். இறைவன் எனக்கு அளித்த இறைவனின் பொருளையே பிறருக்குக் கொடுக்கின்றேன் என்ற எளிமை ஏற்படுவதற்கும் அறிவு தெளிவு பெறுவதற்கும் இறைவழிபாட்டினையும் இறைவனையும் நாம் செய்யும் ஒவ்வொரு ஈகைச் செயலிலும் முன் இருத்த வேண்டும் என்கின்றார். எளிய, பகட்டு இல்லாத, இயல்பான வழிபாடுகளைச் செய்வதன் மூலம் பொருளைச் சிக்கனப்படுத்தி ஏழை எளியவருக்கு உதவலாம் என்கின்றார். “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்றார். பொருள் படைத்தவர்கள் கூட்டுவழிபாடு, உபயம், குட முழுக்கு, திருமஞ்சனம் என்று இயற்றுகின்ற போது ஆடம்பரம் இன்றி அளவோடு விரலுக்கு ஏற்ற வீக்கத்தோடு பொருள் செலவு செய்து அதில் பிடித்தம் செய்த பொருளை ஏழை எளியவருக்கும் வறியவருக்கும் உணவு, உடை, உறையுள், கல்வி, நல்லுணர்வு போன்றவற்றைக் கொடுக்கப் பயன்படுத்தலாம் என்கின்றார். பல நூறு ஆயிரம் வெள்ளிக்கு மலர்களும் பல ஆயிரங்களுக்குத் தேனும் பாலும் தயிரும் நெய்யும் பல ஆயிரங்களுக்கு வேள்வித் தீயில் பொருள்களும் பட்டாடைகளும் உணவுப் பொருள்களும் இட்டுப் பெருமானை மகிழ்விப்பதாய் எண்ணிப் பொருள் செலவிடுவதனைக் காட்டிலும் வறியவர்களுக்கு உதவுவதையே பெருமான் விரும்புவான் என்பதனை மலரைச் சொல்லாமல் பச்சிலை என்று சொல்லி எளிய வழிபாட்டைச் செய்து ஈகையைப் பெருக்குவதே மகேசன் தொண்டு என்று குறிப்பிடுகின்றார்.

         பொருள் படைத்தவர்கள் வறுமையில் வாடும் வறியவர்களுக்குக் கல்வி கற்பதற்கு உதவிப் பணம், தொழில் திறன் பெறுவதற்குக் கடன் உதவி, சிறு தொழில் அமைத்துக் கொடுத்தல், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், பொருளீட்டல் வழிகாட்டிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், ஊன்முற்றோர், முதியோர் காப்பகங்களுக்கு உதவுதல், ஆதரவு அற்ற குழந்தைகள் காப்பகங்களைப் பேணுதல், குமுகாய நற்பணிகளுக்கு அறக்கட்டளைகள் அமைத்தல், இளைஞர்களுக்கு வாழ்வியல் பட்டறைகள் நடத்துதல், குமுகாயச் சீர்திருத்தப் பணிகளுக்கு உதவுதல் போன்றவையும் இறைபணிதான் என்பதனைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். திருக்கோயில்களில் திருமுறை வகுப்புகள், சமயக் கல்வி, சொற்பொழிவுகள், சமய ஆய்வுகள், சமய வெளியீடுகள் போன்றவற்றிற்குத் துணை நிற்றலும் பொருள் படைத்தவர்களின் இறைப் பணியேயாம்.

         மாந்தர்களுக்கே அன்றிப் பிற உயிர்களுக்கும் பரிவு காட்டி ஈதல் வேண்டும் என்பதனை, “யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை” என்கின்றார் திருமூலர். சிவ பூசனைக்கு ஐந்து வகையான பொருட்களைத் தருவதோடு அருந்த தன் பாலையும் வயலில் தன் உழைப்பையும் கொடுக்கின்ற பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுத்தல் மட்டுமல்லாது நம்மால் இயன்ற அளவு மாந்தரே அல்லாத பிற உயிர்கள் மீதும் பரிவு கொண்டு அவற்றிற்கும் ஈதலைச் செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். வெறுமனே பிற உயிர்களைக் கொல்லாமையும் அவற்றைத் துன்புறுத்தாமையும் அவற்றிற்கு உணவும் உறைவிடமும் கொடுத்தல் இவற்றில் அடங்கும். இதற்கு அதிகப் பொருள் தெவையில்லை எனவும் அவரவருக்கு இயன்ற நிலையில் இதனைச் செய்யலாம் எனவும் குறிப்பிடுகின்றார்.

         தொடர்ந்து ஈகையை அனைவரும் அவர் அவர் நிலையில் இயற்ற வேண்டும் என்பதற்காக, “யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி” என்கின்றார் திருமூலர். வறியவருக்கு உணவு கொடுத்தலும் தம் அளவில் இயன்ற சிறு சிறு உதவிகளைச் செய்தலும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்பதில் அடக்கலாம். ஏழை மாணவர்களுக்கு உணவு, உடை, பள்ளிப் பொருட்கள், தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவுதல் போன்றவையும் இதில் எண்ணிப்பார்க்கத் தக்கது. கொடுப்பதற்குப் பணமோ பொருளோ இல்லை என்பவர்கள் தத்தம் அளவிலே இனிய சொற்களையாவது பிறருக்கு ஈகை செய்யலாம். இனிய சொற்கள், பிறரைத் துன்புறுத்தாத சொற்கள், பிறரை மகிழ்விக்கும் சொற்கள், பிறருக்கு ஆக்கமும் நல் உணர்வும் இனமான உணர்வும் அறிவும் கொடுக்கும் சொற்களைப் பேசுவதும் போதிப்பதும் நல்ல ஈகையே! அது எல்லோராலும் எளிதாக இயற்றக்கூடியது என்கின்றார் திருமூலர். இவ்வுலகத்தில் வாழும் காலத்து இன்பத்தையும் மன நிறைவையும் அளிக்கும் ஈகையை விரும்பிச் செய்து, அவ்வுலகத்து வாழுங்காலத்திற்கு அமையும் வைப்பு நிதியான ஈகையை, வாழுங்காலம் முடிவு அடைவதற்குள் விரைந்து செய்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!