48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்

1163

“சாகாமைக் கற்பதுவே கல்வி,” என்பார் ஔவைப் பிராட்டி. கல்வியின் நோக்கம் என்னவென்றால் இனி இவ்வுலகில் பிறக்காமல் இருப்பது எப்படி என்பதனைக் கற்றுக் கொள்வதுதான் என்கிறார் ஔவைப் பிராட்டி. பள்ளிகளில் நடத்தப்படும் அரசாங்கத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சிப் பெறுவது, நல்ல உயர்பணியில் அமர்வது, நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டு நன்மக்களைப் பெறுவது, உயர் பதவிகளை வகித்துப் பல பட்டங்களையும் புகழையும் பெறுவது, நிறைய வீடு வாசல், பொன் பொருள் என்று ஊர் மெச்ச வாழ்வது, ஒரு நாளைக்கு இறந்து விடுவது என்பது தான் உயர்ந்த வாழ்க்கை என்று பலரும் வாழ்கின்றனர். உண்மையில் மேற்கூறியது அனைத்தும் நன்மையானவைதான். ஆனால் அது முழுமை பெற்ற நிறைவான, உண்மையான வாழ்வா என்றால் இல்லை என்கின்றது சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம். இம்மாந்த வாழ்விற்கு ஒரு உன்னத குறிக்கோள் உண்டு என்று தமிழர்களின் இறைக்கொள்கை குறிப்பிடுகின்றது. உயிர்கள் இவ்வுலகினை அறிந்து, இவ்வுலகினைத் தங்களுக்காகப் படைத்து அளித்தத் தங்கள் தலைவனையும் அறிந்து, தங்களையும் அறிந்து கொண்டு, இவ்வுலக வாழ்வுச் சுழற்சியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, இறைவனிடத்திலே இருக்கின்ற நிலையான பேரின்பப் பெருவாழ்வினை அடைய வேண்டும் என்ற குறிக்கோளினைக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடுகின்றது. இதனையே தமது இளமைக் காலத்தையெல்லாம் கடவுள் இல்லை என்று சொன்ன சமண சமயத்திலே கழித்து விட்டேனே என்று வருந்தி, “குறிக்கோள் இன்றிக் கெட்டேன்,” திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

              உண்மையான இறைவழிபாடும் இறையருள் துணையுமே இவ்வுலக வாழ்க்கையைக் குறிக்கோள் உள்ளதாகவும் பிறவி அறுத்தற்கும் துணைநிற்கும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்பார் ஐயன் திருவள்ளுவர். இறைவனின் திருவடியைப் பற்றி வாழ்கின்ற வாழ்க்கையே உடலுக்கும் உயிருக்கும் உறுதி பயக்குகின்ற வாழ்க்கை என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவது போன்று திருமூலரும் குறிப்பிடுகின்றார். திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை எனும் பகுதியில், இறைவழிபாட்டையும் இறையருளையும் தவறாது துணையாகக் கொண்டு இறைவனின் திருவடியை அடைதலே வாழ்க்கையின் உண்மையான இலக்கு என்பதனைக் குறிப்பிடுகின்றார். உடல் கொண்டு உயிர் வாழும் உயிர் வகைகளின் உடம்பையும் உயிரையும் இரு வகையாகக் குறிப்பிடுகின்றார் திருமூலர். இறைவழிபாட்டையும் இறையருளையும் வாழ்க்கையில் துணைக்கொள்ளாத உயிர்களின் உடலையும் உயிரையும் சுடப்படாத பாத்திரங்கள் என்கின்றார். இறைவழிபாட்டையும் இறையருளையும் பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் உயிர்களின் உடலையும் உயிரையும் சுட்ட பாத்திரங்கள் என்று குறிப்பிடுகின்றார்.

              மண்ணால் செய்யப்படும் மண் பாண்டங்கள் ஒரே வகை மண்னால் செய்யப்பட்டவை ஆயினும் தீயில் சுடப்பட்ட மண்பாண்டம் வானத்திலிருந்து விழும் மழைநீரை வென்று நிற்கும். மழைநீரால் அதற்குக் கேடு விளையாது. சுடப்படாத மண்பாண்டம் மழைநீர் படும்போது மறுபடியும் முன்போல மண்ணாகிக் கெட்டுவிடும் என்று குறிப்பிடுகின்றார். இதனை, “மண்னொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம், திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது, விண்ணின்று நீர்வீழின் மீண்டு மண்ணானாற்போல், எண்ணின்று மாந்தர் இறக்கின்றவாறே,” என்று குறிப்பிடுகின்றார். “உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’’ என்று மற்றொரு மந்திரத்தில் திருமூல நாயனார் குறிப்பிடுவார். அரும்பாடு பட்டு, நோய் நொடியின்றிப் பேணி வளர்த்துப் பாதுகாக்கும் இவ்வுடலானது இறக்கும்போது வெறுமனே அழிதற்கு விடல் ஆகாது என்கின்றார் திருமுலர். உடலை வளர்ப்பது என்பது உடலுக்குள் இருக்கும் உயிரை வளர்த்தற்கேயாம் என்கின்றார். உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக் கட்டுத்திட்டமாக வைத்திருந்து பின்பு இறக்கும்போது வெறுமனே தீயினுக்கு இரையாக்குவதற்கும் மண்ணோடு மண்ணாக்குவதற்கும் அல்ல என்கின்றார் திருமூலர். இறைவழிபாட்டோடும் இறையுணர்வோடும் செய்யப்படுகின்ற உடற் பயிற்சிகளும் மூச்சுப் பயிற்சிகளும் உயிரைச் செம்மைப் படுத்தி, உடலோடு இருக்கும்போதோ அல்லது உடல் அழியும்போதோ இறையின்பத்தை உயிருக்கு அளிக்கின்றன. இறைவழிபாட்டையும் இறையருளையும் வாழ்வில் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்கின்றவர்களுக்கு இறப்பு ஏற்படும்போது அவர்களின் உடல் கெட்டுப் போனாலும் அவ்வுடலில் தங்கியிருந்த உயிர் செவ்வியடைந்து இறையின்பத்தை அடையும் உறுதியைப் பெற்றிருக்கும் என்கின்றார் திருமூலர்.

              மாந்தருக்குக் கிடத்திருக்கின்ற உடல் உயிர் வாழ்க்கை கிடைத்தற்கரியது. மாந்தருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உடல் நிலையற்றது எனினும் அதன் உள்ளே இருக்கின்ற உயிர் என்றும் நிலையான உறுதிப்பொருள் என்கின்றார் திருமூலர். நிலையாமையை உடைய இவ்வுடல் இருக்கும்போதே அதனை உறுதிப்பொருளான உயிரைத் திடப்படுத்துவதற்கு நன்கு, விரைந்து பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றார். இறைவழிபாட்டையும் இறையருளையும் வாழ்க்கையில் துணையாகக் கொள்கின்ற உயிர்களே உலகம் என்கின்ற மழைநீரை வெல்லக்கூடிய சுட்ட மண்பாத்திரங்கள் எனவும் மற்றவை சுடாத மண்பாத்திரங்கள் எனவும் குறிப்பிடுகின்றார்.

              இவ்வுடம்பானது பல பண்டங்களை நிரப்பி வைத்துள்ள இல்லம் போன்றது என்கின்றார் திருமூலர். இத்தகைய உடம்பு உழைத்து உழைத்துத் தளர்ந்து ஒரு நாள் இறக்கும்போது, வீழ்ந்து பிணம் என்று கிடக்கும்போது, இவ்வுடம்பின் உழைப்பால் பயன் அடைந்த மனைவியும் மக்களும் அவ்வுடலை விட்டுப் பிரியும் உயிருடன் துணைக்கு வரமாட்டார்கள் என்கின்றார். உறவினர்களும் அவர் சேர்த்து வைத்தப் பொருளும் துணைக்கு உடன் வருமா எனின் அவையும் வரமாட்டாது என்கின்றார். ஒருவர் வாழுங்காலத்துக் கொண்ட இறைக்கொள்கையும் அக்கொள்கையினால் உண்டான இறையறிவும் இறையருளும் அல்லாமல் வேறு எதுவும் உடன் வராது என்பதனைப், “பண்டம்பெய்கூரை பழகி விழுந்தக்கால், உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செல்லார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநடவாதே” என்கின்றார் திருமூலர்.

              வயதாகி, உடல் தளர்ந்து விடுவதற்குள் மனை மக்களுக்கு என்று உழைக்கின்ற நாம், வயதாகி இவ்வுடல் முற்றாக அடங்கிவிடுவதற்குள் நம் உயிர் ஈடேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்கின்றார் திருமூலர். மனைவி, மக்கள், உறவினர், நண்பர் என்று ஓடி ஓடி உழைத்த நமக்கு இறப்பு ஏற்படும்போது ஒருவரும் நமக்குத் துணைநிற்கமாட்டார் என்கின்றார். இறப்பு அச்சம் ஏற்படும்போது அஞ்சவேண்டாம் என்று அரவணைத்துப் பேரின்பப் பெருவாழ்விற்கு வழிகாட்டுபவன் இறைவன் ஒருவனே என்பதனைப், “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவுஅழிந்திட்டு ஐமேலுந்தி, அலமந்தபோதாக அஞ்சேல் என்று அருள்செய்வான்,” என்று திருஞானசம்பந்த அடிகள் திருமூலர் குறிப்பிடும் அதே உண்மையைக் குறிப்பிடுவார். கொல்வதற்கு எமனின் தூதர்கள் வரும்போது, மனைவி, மக்கள், உறவினர் போன்றோர் ஒன்றும் செய்ய இயலாது. திருநல்லம் எனும் திருக்கோயிலில் இருந்து நமக்கெல்லாம் அருள்புரிந்து கொண்டிருக்கும் பெருமானின் திருவடிப்புகழைச் சொல்லவல்லவருக்கே இறப்புத் துன்பமும் அச்சமும் இதர வினைகளும் தீரும் எனும் செய்தியைத் திருநாவுக்கரசு அடிகளும், “கொல்லத்தான் நமனார்தமர் வந்தக்கால், இல்லத்தார் செயல் ஆவதென் ஏழைகாள், நல்லத்தான் நமை ஆளுடையான் கழல், சொல்லத்தான் வல்லீரேல் துயர்தீருமே” என்று குறிப்பிடுவார்.

              ஓடி ஓடி உழைத்துச் சேமித்து வைத்தாலும் கண்ணே மணியே முத்தே என்று கண்ணை இமை காப்பது போலப் பேணிக்காத்தாலும் உடலை விட்டு உயிர் பிரியும்போது உடன் வராத பொன்னுக்கும் பொருளுக்கும் மனைவிக்கும் மக்களுக்கும் கொடுக்கும் உழைப்பில் அவரவர் உயிர் வளர்ச்சிக்கும் உயிர் மேம்பாட்டிற்கும் இறந்த பின்பு வரக்கூடிய ஒரே துணையாகிய இறையருளுக்கும் உடலைக் கொண்டு உழையுங்கள் என்பதே திருமூலரின் அறிவிரை. நம் உடலின் இன்றியமையாமையையும் அதன் நிலையாமையையும் உணர்ந்து, காலத்தை விரையம் செய்யாது, அதனைப் பிறவியின் குறிக்கோளை அடைய பயன்படுத்தாது பலரும் வீணே கழிக்கின்றனர் என்கின்றார் திருமூலர். இதனையே ஒரு சித்தர், “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறு மாசமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” என்று நயம்படப் பாடுகின்றார். உடல் நிலையாமையை எண்ணிக் காலத்தை வீணே கழிக்காமல், விரைந்து இறைவழிபாட்டினையும் இறையருளினையும் வாழ்வில் துணைக்கொண்டு உயிருக்கு உறுதி பயப்போமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!