123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்

1490

123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்

கண் பார்வையற்ற இரு குழந்தைகள் கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடும் விளையாட்டை விளையாடுவார்களேயானால் இருவரும் பல்வேறு ஆபத்திற்கு ஆளாகக் கூடும். கண் பார்வை உள்ள குழந்தைகள் கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடினாலும் அவர்கள் கண்களைக் கட்டுவதற்கு முன்னால் தங்களைச் சுற்றியுள்ள பொருள்களைப் பார்த்திருக்கின்ற பயிற்சியினால், கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடும் போது அவர்களுக்குப் பெரிய தீமைகள் ஏற்படாமல் மகிழ்ச்சியுற விளையாடுவதற்கு வாய்ப்பு உண்டு. அதுபோல சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் இறைவனை அடைதற்குரிய வாயில்களாகச் சொல்லியிருக்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்கினில் பயிற்சியும் உறைப்பும் இல்லாத போலி ஆசான்களிடம் மாணாக்கர்களாகக் கண்மூடித்தனமாகப் பற்று கொண்டு கிடக்கும் மாணாக்கர்கள் வாழ்வின் குறிக்கோளாகிய பிறவித் துன்பத்திலிருந்து விடுபட்டு இறையின்பத்தினை நுகர்ந்து இன்புற்று இருக்கும் நிலையினை எய்தமாட்டார்கள் என்கின்றார் திருமூலர். மருத்துவம் தெரியாத போலி மருத்துவர் நோயாளியின் நோயைப் போக்கும் வழியினை அறியாது நோயை இன்னும் கூட்டுவிப்பதற்குக் காரணமாகிவிடுவது போல மாணவரின் அறியாமையைப் போக்கத் தெரியாத ஆசான் மேலும்மேலும் இவ்வுலகிலே பிறந்து உழல்வதற்கே வழிவகுப்பான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்கின் வழிச் சென்று இறைவழிபாட்டினையும் நல்லொழுக்கத்தினையும் இறை அன்பையும் அடிப்படையில் பெற்றிறாத மாணாக்கன் தம் ஆசானிடத்திலே வேண்டுவது எதை என்பதனை அறிந்திராது காலத்தையும் ஆற்றலையும் திறத்தையும் பொருளையும் வீணடிப்பான் என்கின்றார் திருமூலர். தனக்கு உடலில் எங்கு நோவு இருக்கின்றது அல்லது எது நோவைச் செய்கின்றது என்று அறியாத நோயாளி அந்நோய்குரிய சரியான மருந்தினை மருத்துவனிடம் பெற இயலாதது போல சமய ஆசானிடம் எதை வேண்டுவது என்று தேராத மாணவனும் வாழ்க்கையின் குறிக்கோளான பிறவிப் பிணியை அறுத்தலுக்கான வழியினையும் இறையின்பத்தினையும் பெறமாட்டாது பெரும் துன்பத்தையே தேடிக்கொள்வான் என்பதனை,

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்,
குருட்டினை நீக்காக்குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்,
குருடும் குருடும் குழிவிழும் ஆறே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சித்தாந்த சைவம் குறிப்பிடும் இறைத்தொண்டு, மக்கள் தொண்டு, இறையன்போடு கூடிய பூசனைகள், தனி மனித ஒழுக்கத்தோடு கூடிய சிவத்தை முன்னிலைப் படுத்தும் சிவச்செறிவுகள், உயிர் அறிவை விளக்கம் பெறச் செய்யும் சிவ அறிவு நூல்களைக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், அதில் அழுந்தி இருந்து பின்பற்றுதல் போன்ற பயிற்சியில்லாதவர் தொண்டு நெறியினையும் பூசனை நெறிகளையும் சிவச்செறிவு நெறிகளையும் சிவஅறிவுக் கல்வியினையும் அதில் அழுந்தி இருத்தலையும் பிறருக்குக் கற்றுக்கொடுத்தல் ஒரு சில பயனைக் கொடுக்குமே ஒழிய உண்மை இலக்கை அடையத் துணை நிற்காது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உண்மை நெறியை அறியாதவர் உண்மை நெறியை அறிவிப்பதாய் எண்ணி எதையோ ஒன்றைக் கற்பிக்க பின்பு அது அறியாமையைக்கூட்டுகின்ற ஏதோ ஒன்றாய் முடிந்து தீமையான விளைவை ஏற்படுத்தி நல்லாசிரியர் நன்மாணாக்கர் என்ற நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் என்கின்றார் திருமூலர். மாணாக்கரின் தகுதியை அல்லது தேர்ச்சியை அறியாது அவரின் செவ்வியை (பக்குவத்தை) அறியாது விரும்பியபடி கற்பித்தல் ஒருபோதும் மாணவர்களின் அறியாமையை அகற்றாது. மாறாக குழப்பத்தையும் அறியாமையையும் போலியையுமே மேலும் கூட்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

உயிரைப் பற்றியுள்ள ஆணவமலம் என்ற அழுக்கின் காரணமாக உலக வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியாது உலகப் பொருட்களிலும் உலகச் சிற்றின்பங்களிலும் மயக்குற்றுக் கிடக்கும் வாழ்க்கையில் அவ்வழுக்கினைப் போக்கிக் கொள்வதற்கு வழிகாட்டும் நல்ல தேர்ச்சி உடைய நல்லாசிரியர்கள் எவ்வளவு விளக்கிக் கூறினாலும் அவர்களைத் தேர்ச்சியுறாத மாணவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்கின்றார் திருமூலர். நல்லாசிரியர்கள் கண்டிப்புடனும் நல்ல ஒழுக்க நெறியுடனும் உள்ளதை உள்ளபடி சொல்லி உண்மையையும் நல்லறிவினையும் நன்னெறியினையும் உணர்த்த விரும்புதலைப் பலரும் விரும்பமாட்டார்கள் என்கின்றார் திருமூலர். உயர்ந்த கல்வி கேள்விகளாலும் ஆரவாரமின்றி அமைதியான முறையிலும் அவசரமின்றி உண்மை இறை அன்பையும் இறைஅறிவையும் இறைஅருளையும் உணர்த்தி, அறியாமை நீங்குதற்கு இயல்பு வழியைக் காட்டினாலும் நல்லாசிரியரை நல்லறிவும் நல்லுணர்ச்சியும் உடைய மாணாக்கரே அறிந்து அவரை அணுகிப் பணிந்து நிற்பர் என்கின்றார் திருமூலர்.

செவ்வியும் பயிற்சியும் ஆராய்ச்சி அறிவும் இல்லாத மாணாக்கர்கள் மனமும் உணர்ச்சியும் போகும் வேகத்தினைப் பின்பற்றி, தங்கள் அறியாமையைப் போக்கிக் கொள்வதற்கு வழிகாணாமல் உலகமயமானவற்றினைக் கருத்தில் கொண்டு அவசர அவசரமாகக் குறுக்கு வழியில் அல்லது பின்வாசல் வழியில் அடந்து விடலாம் என்று நல்லாசிரியர் அல்லாதவர் வழியினைப் பின்பற்றித் தடுமாறிச் சோர்வர் என்கின்றார் திருமூலர். உலகச் சிற்றின்பங்களையும் உலகப் பொருள்களையுமே உண்மைப் பொருளாகக் காட்டித் திரியும் நல்லாசிரியர் அல்லாத ஆசிரியர்களின் இயல்புக்கு மாறான நெறிமுறைகளும் போதனைகளும் ஒருபோதும் உயிர்த் தேவையினை நிறைவு செய்யாது என்பதனை,

“மனத்தில் எழுந்ததோர் மாயக் கண்ணாடி,
நினைப்பன் அதனில் நிழலையும் காணார்,
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்,
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பெருமானுடைய தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், நம்மை யாராவது “ஏய்” என்று கூப்பிட்டால், நம்மிடம் இருக்கும் ‘யான், எனது’ எனும் செருக்கினால் திரும்பிப் பார்க்க மாட்டோம். ஏன் என்றால் அது நம் தகுதிக்கு இழிவு என்று எண்ணும் அளவிற்குச் செவ்வி உறாதவர்களாய் இருக்கின்றோம் என்கின்றார் திருமூலர். நல்லாசிரியர்களாக விளங்கும் உண்மை உணர்வாளர்கள் அவர்களின் செவ்வியின் காரணமாகவும் எளிமையின் காரணமாகவும் ‘ஏன் அழைத்தீர்கள்’ என்று பதில் அளிப்பார்கள் என்கின்றார் திருமூலர். பிறந்த குழந்தை தன் வாயைத் தாயின் முலைக்காம்பில் வைத்தவுடன் தாய்ப்பாலாகிய அமுதம் ஊறிக் குழந்தையின் பசியைத் தீர்க்கும் என்பதனையும் மற்ற வேளைகளில் பால் ஊறாது என்பதனையும் பலரும் அறிந்து வைத்திருப்பினும் குழந்தைப் பெற்றவரே அதை உணர்வர். அதுபோல உண்மை இறையன்பு உடைய நல்லாசிரியரிடத்தும் நன்மாணாக்கரிடத்தும் மட்டுமே உள்ளத்தில் வடிவம் அற்றவனாக விளங்கும் சிவபெருமான் அன்பு பெருக்கெடுக்கும் போது தோன்றி விளங்குவான். சிவ அன்புக்கும் சிவஅருளுக்கும் தங்களைச் செவ்வி அடையச் செய்யாத தேரா மாணாக்கருக்கும் தேரா ஆசானுக்கும் ஒரு போதும் சிவபெருமான் விளங்கித் தோன்றி அருள் செய்ய மாட்டான் என்கின்றார் திருமூலர். இதனை,

“ஏய்எனின் என்னென மாட்டார் பிரசைகள்,
வாய்முலை பெய்ய மதுரம்நின்று ஊறிடும்,
தாய்முலை ஆவதுஅறியார் தமர் உளோர்,
ஊனினால் செய்யும் உருஇலி தானே”

என்று குறிப்பிடுகின்றார்.

உலகப் பற்றுக்கள் இவை என்று அறியாதவரும் அப்பற்றுக்களை விட்டாலே ஒழிய இறைவனை அடைய இயலாது என்று உண்மை நெறி நூல்களால் குறிப்பிடப்பட்டவற்றை விட்டு விலகும் உண்மை நெறியினை உணர்த்திடாதவரும் நல்லாசிரியனாக இயலாது. மேலும் அந்நெறியில் நின்று காட்டி, அதற்குரிய செவ்வியை அடைந்து, இறைவனை அடைதலையே இலக்காகக் கொண்டு இறைவனையே விரும்பி, அதற்கேற்ற முயற்சிகளைச் செய்யாமலும் நிற்கின்ற தேரா ஆசிரியருக்கும் இறைவனைக் காட்டும் அருள் விளக்கினை இறைவன் நல்க மாட்டான்னென்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தவநெறி ஒழுக்கத்தாலும் இறை அன்பினாலும் உலகப் பற்றை நீங்கிய தன்மையாலும் சிறந்து விளங்காத ஆசிரியர்கள் நிறைமொழி மாந்தர்களாக விளங்க இயலாது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இத்தகையோரின் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் திருவருள் நின்று அருள் புரியாமையால் இத்தகையோரைப் பின்பற்றி நிற்கும் மாணாக்கருக்கும் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் சிவமாம் தன்மை பெருகாது என்றும் திருமூலர் குடிப்பிடுகின்றார். தேரா மாணாக்கரையும் தேரா ஆசிரியரையும் திருமூலர் குறிப்பிடும் அளவுகோல் கொண்டுச் சீர்தூக்கி முறையான நெறியில் சென்று பிறவிப் பெறும் பயனை அடைந்து இன்புற்று வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!