பொய் அன்பு கொண்ட பொது மகளிரும் மதுவும் சூதும் தீய ஒழுக்கங்கள் எனவும் இவை மூன்றும் பெரும் செல்வம் அழிவதற்குக் காரணமாய் அமைவது மட்டும் இன்றி இவற்றினால் பிற பாவங்களும் துன்பங்களும் வந்து சேர்தலினால், இவற்றை வாழ்வில் விலக்கி வாழ வேண்டும் என்று அற நூல்கள் குறிப்பிடுகின்றன. குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது அருந்துதல், குடும்பத்தைப் பேணுதல், அறப்பணிகளைச் செய்தல் இறைப் பணிகளைச் செய்தல் போன்ற கடப்பாடுகளையும் நற்பணிகளையும் செய்வதற்குப் பெருந்துணையாக இருக்கின்ற கைப்பொருளை அழிப்பதோடு மட்டும் அல்லாமல் அறத்தோடு வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கின்ற அறிவையும் அழித்துத் தீங்கையும் உண்டாக்கும் என்று சான்றோர் கூறுவர். மது அருந்துதலின் தீமையை, இழிவைக், “கள்ளுண்ணாமை” எனும் அதிகாரத்தில் ஐயன் திருவள்ளுவர் இடித்துரைப்பார்.
கற்று அறிந்த சான்றோர்களால் மதிக்கப்படாதவர்கள் மது அருந்துகின்றவர்கள் என்பதனால் சிந்தனைத் தெளிவுடையோர் மது அருந்த மாட்டார்கள் என்பார். தாம் ஈன்ற பிள்ளைகளின் குற்றங்களை எல்லாம் அவளின் அன்பின் காரணமாக மன்னித்து அருளும் தாய் கூட தம் பிள்ளை மது அருந்துவதை மன்னிக்க மாட்டாள் என்பதனால் சுய மரியாதையும் தாய் அன்பும் நாணமும் உள்ள எவரும் மது அருந்த மாட்டார்கள் என்கின்றார். அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்துச் சேர்த்த பொருளைக் கொண்டு உடலையும் உயிரையும் பேணாது, உடலுக்கும் உயிருக்கும் கேட்டினை விளைவிக்கும் மதுவினை விலை கொடுத்து வாங்கி அருந்துவது, கொடுமையிலும் கொடுமை, அறியாமையிலும் அறியாமை என்பார். விலை கொடுத்து நஞ்சினை வாங்கி உண்டு, அறிவு மயங்கிக் கிடப்பது எவ்வகையில் அறிவுடைமையாகும் என்று கேட்பார். கள் அல்லது மது அருந்துவது மகிழ்ச்சியைத் தருகிறது; அன்றாட வாழ்வில் ஏற்படும் மனச்சோர்வினை மறப்பதற்குத் துணைபுரிகிறது என்று யாரேனும் கூறுவாராயின் அவர் கூற்று அறிவுக்கு இடம் கொடாதவர்களின் கூற்றாகும் என்பார். அது நீருக்குள் மூழ்கியவனை விளக்குக் கொண்டு தேடுவது போல் ஆகும் என்பார். மது அருந்துகின்ற ஒருவன், தான் மது அருந்தாத போது, மது உண்டு மயங்கிக் கிடக்கின்ற ஒருவரின் செயலையும் சோர்வையும் இழிவையும் தெளிவின்மையையும் கண்ட பின்பும் மனம் மாறவில்லையே, நாணவில்லையே என்று வியப்படைவார். இத்தகைய மது என்னும் தீய ஒழுக்கத்தினைப் பற்றி மூவாயிரம் தமிழ் மந்திரங்களைத் திருமந்திரம் என்று அருளிய திருமூலரும் குறிப்பிடுகின்றார்.
பசுக்கள் அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டுப் பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூய நீரை நாடிச் சென்று பருக மாட்டா. அவை கழு நீரையே வேண்டி உடல் மெலியும். இத்தகைய பசுக்கள் தம் இயல்பிலிருந்து நீங்கியவை. அது போல மதுவினைச் சுவையும் வலிமையும் நிறைந்த ஒன்றாக நினைத்துக் கொண்டு அதனை உண்ணுகின்றவர்கள் மக்கள் இயல்பிலிருந்து நீங்கியவர்கள். உடலுக்கு வலு உண்டாக்குதற்கு மதுவையும் இதர பருகுப் பொருள்களையும் அருந்துவார் உளர் எனினும் உயிருக்கு வளமும் வலுவும் சேர்க்கும் ஒரே பருகுப் பொருள் சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பார் திருமூலர். அருள் வந்து ஆடுவதாகக் கூறி மது அருந்துவதுவும் கடவுளுக்கு என மதுவைப் படைப்பதுவும் சீர்மிகு செந்தமிழர் இறைக் கொள்கையான சித்தாந்த சைவ நெறிக்குப் புறம்பானதாம். புலாலையும் மதுவையும் ஏற்கின்ற தெய்வங்கள் சிவநெறிக்கு உட்படாதவைகளாம். ஆண்களும் பெண்களூம் கட்டுப்பாடுகளின்றி கூடி இன்பம் நுகர்கின்ற நெறிகளை மக்களிடையே பரப்பி அதனைச் சமயம் என்று குறிப்பிடுகின்றவர்கள் சிவநெறிக்கு அப்பாற்பட்டவர்களாம். காமக் களிப்பும் கள்ளின் களிப்பும் கீழான மக்களுக்கே உரியனவாம். அதனால் இவற்றைச் சிறப்பித்துக் கூறி, மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்துகின்ற அறியாமையை உடைய சமய ஆசான்கள் நல்ல வழிகாட்டுநர்கள் அல்லர் என்பார் திருமூலர். அறியாமையும் மயக்க உணர்வும் பொருந்திய இந்நெறியில் நிற்பவர்களுக்கு அறிவு அழிந்து போகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியிலிருந்து உண்டாகின்ற, மாசற்ற, உண்மையான, நிறைவான இன்பத் தேனினால் உண்டாகும் இறையறிவு உண்டாகாமல் போகும் என்பதனைக், “ காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும், மாமலமும் சமயத்துள் மயல் உறும், போமதி ஆகும் புனிதன் இணையடி, ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதவர்களையும் மயங்கச் செய்யும் மருந்தால் எனக் கூறுபவர்களின் கூற்றை ஆராய்ந்து தெளிந்து அம்மருந்தை உண்டால் உண்டாவது பெரும் மயக்கமே அல்லது வேறு ஒன்றும் இல்லை என்பதனை உணரவேண்டும். உலகப் பற்றாகிய மயக்கத்தினை, அறிவை மயக்குகின்ற கள்ளினை உண்டால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையை உடைய சமயத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள், அறியாமையினால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேர் அறியாமையில் அழுந்துவர். அவரைத் தெளிவித்தல் இயலாது என்பதனை, “மயக்கும் சமய மலமன்னும் மூடர், மயக்கும் மது உண்ணும் மாமூடர் தேராதார், மயக்குறு மாமாயை மாயையின் வீடும், மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே” என்பார் திருமூலர்.
பல குறைகளை உடைய மாந்தரும் மது அருந்துதல் இழிவு என்று சான்றோர்களும் சமயமும் வலியுறுத்திக் கூறி கண்டிக்க, உயர்ந்த பொருளாக, வழிபடு பொருளாக இருக்கின்ற கடவுள் எப்படி மது அருந்துகின்றவராக இருக்க முடியும்? தீய பண்புள்ள கடவுள் எப்படி நமக்கு நல் அறிவை வழங்க முடியும் என்று சிந்தித்தல் வேண்டும். பழக்கத்தினால் மரபினால் வந்த வழிபாடுகள் என்று அமைதி கூறுகின்றவர்கள் நம் இளைய குமுகாயத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். தீயப் பண்புகளை விலக்குவதனை விடுத்து அத்தீயப் பண்பினைக் கொண்டிருக்கின்ற கடவுளர்களை வழிபடச் சொல்வது அறிவுக்கும் செயலுக்கும் நடைமுறைகளுக்கும் ஒழுக்கத்திற்கும் பொருந்தாமையை எண்ணிப் பார்க்க வேண்டும். அறிவை மயக்கும் மதுவினை விலக்க வேண்டிய பெரியவர்களே மதுவினை வழிபாட்டில் வைத்து அது நன்மை உடைய ஒன்றினைப்போல் காட்டும்போது அதை எப்படி நம் இளையோரிடமிருந்து நீக்க இயலும் என்பதனைச் சிந்திக்க வேண்டும். அறிவை மயக்கக் கூடிய மதுவினை அருந்தும் கடவுளர்கள் அறிவுத் தெளிவுடன் எப்படி நமக்கு அருள் வழங்க முடியும் என்று எண்னிப் பார்க்க வேண்டும்.
பெருநாட்காலங்களிலும் திருவிழாக்காலங்களிலும் இதர நாட்களிலும் பெரியவர்கள் மது அருந்துதலை நீக்கி அறிவுத் தெளிவோடு இருந்து இளையோருக்கு முன்னோடிகளாக இருத்தல் வேண்டும். பல்லினமும் பல சமயங்களும் வாழும் மலேசியத் திருநாட்டில், நாமே நம் சமயத்தை இழிவு படுத்தா வண்ணம் மதுவை வழிபாட்டிலிருந்து நீக்க வேண்டும். திருவிழாக்களில் நம் இளைஞர்கள் மதுபானத்துடன் உலவுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டுத் திருவிழாக்களில் கூச்சலிடுவதும் குழப்பம் விளைவிப்பதும் கைகலப்புகளில் ஈடுபடுவதும் பிறருக்குத் தொல்லையாக இருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். மது அருந்துவதனால் அறிவு மயங்கிப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் நம் தமிழ் இனத்தின் மானத்தை அழிப்பதுவும் பிறருக்கு அச்சுறுத்தலாக இருப்பதுவும் சுய மரியாதையை இழப்பதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாம். உண்மைச் சமயம் மறுக்கின்ற, சான்றோர்கள் வெறுக்கின்ற மதுவினை நம் சமயத்திலிருந்தும் நம் குடும்பத்திலிருந்தும் நம் குமுகாயத்திலிருந்தும் விரட்டி, சைவநெறிப்படி வாழ்வோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!