2. பெயர் சூட்டு விழா

11808

தமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின்  உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும் விழா உறுதி செய்யப்படும். பதினாறு அல்லது முப்பது நாட்களில் பெரும்பாலான தாயும் சேயும் சற்றுத் தேரிவிடுவதனால் இவ்விழாவினைப் பதினாறாம் நாள் செய்துவிடும் வழக்கத்தினை நம் முன்னோர் கொண்டுள்ளனர்.

       குழந்தைப் பிறந்தால் பதினாறு நாட்களுக்கோ அல்லது முப்பது நாட்களுக்கோ தீட்டு, அதனால் இறைவழிபாட்டையும் திருக்கோவிலுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் குறிப்பிடுவர். குழந்தையின் உடல் நலத்தையும் தாயின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு கூறப்படுகின்றது. குழந்தையினாலோ அல்லது குழந்தைப் பெற்றத் தாயினாலோ இறைவனுக்குத் தீட்டு ஏற்படுவதில்லை என்பதே உண்மை! பெருமான் குழந்தையின் உயிரிலும் தாயின் உயிரிலும் இமைப்பொழுதும் நீங்காது பிரிப்பின்றி இருத்தலினால் பெருமானை விலக்கி வைப்பது என்பது இயலாத ஒன்று என்று தெளிதல் வேண்டும். தவிர உயிர்களினால் பெருமானுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது என்பதும் தெளிய வேண்டிய ஒன்றாகும்.

       பிறந்த குழந்தையைப் பொதுமக்கள் வருகின்ற திருக்கோவிலுக்குத் தூக்கிச் சென்றால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இன்னும் வலுப்பெறாமல் இருக்கும் குழந்தைக்குப் பல்வேறு நோய்களும் கிருமிகளும் தீங்கு விளைவிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று கருதியே தாயும் சேயும் இக்காலத்தின் போது திருக்கோவிலுக்குச் செல்வதனை வேண்டாம் என்றனர்.

       குழந்தையை ஈன்றிருக்கும் தாயானவள் இன்னும் முழுமையாக நலம் பெறாமல் இருப்பதனால், அவளால் நமது திருக்கோவில் வழிபாட்டில் முறைப்படுத்தப்பட்டு உள்ளவாறு வழிபாடு இயற்ற முடியாது. ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் படும்படியாக வழிபாடு செய்யும்போது அவள் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படும் என்று அஞ்சி அவளைத் திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். தவிர, குழந்தை ஈன்ற தாய்க்கு வெப்ப தட்பம் எளிதில் ஊறு விளைவிக்கும் என்பதாலும் நீண்ட தொலைவு நடத்தல் கூடாது என்பதாலும் திருக்கோவிலுக்குச் செல்வதனைத் தவிர்க்கச் சொன்னார்கள். எனினும் வீட்டில் செய்யக் கூடிய எளிய வழிபாட்டினையும் திருமுறைகள் ஓதுதலையும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுதலையும் தவிர்த்து விடல் வேண்டும் என்பது அறியாமையாமை ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் தாய்க்கும் இறை சிந்தனை, திருவைந்து எழுத்து கணித்தல், திருமுறைகள் ஓதுதல், என்பன இறைக் காப்பு என்பதனை உணர்தல் வேண்டும்.

       தமிழ்ச் சைவர்களின் வாழ்வியலில் ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா என்பது சமய அடிப்படையிலும் குமுகாய அடிப்படையிலும் பெரும் நன்மை பயப்பதாய் அமைகின்றது. பெயர் சூட்டு விழா அன்று காலையிலேயோ மாலையிலேயோ குடும்பத்தோடு திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு இயற்றுவார்கள். குழந்தை, குழந்தையின் தாய், தந்தை, இருதரப்புத் தாத்தா பாட்டி, உடன்பிறப்புக்கள், நெறுங்கிய உறவினர் ஆகியரோடு திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு இயற்றுவர். இது புதிதாகப் பிறந்த குழந்தையைப் பெருமானின் திருமுன்பு காட்டிப் பெருமானின் திருவருளை வேண்டி நிற்பதோடு தாயும் சேயும் எச்சிக்கலும் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாகும்.

       பெயர் சூட்டு விழாவன்று திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பியவுடன் உற்றார் உறவினர், நண்பர்களுக்கென வீட்டில் கூட்டு வழிபாட்டினை நடத்துவர். வீட்டின் நடுக்கூடத்திலே பெருமானின் திருவுருவப் படத்தினையோ, திருவடிவங்களையோ ஒரு பீடத்தில் இருத்திக் கூட்டு வழிபாட்டினை நடத்துவர். தமிழ் மந்திரங்களான திருமுறைகளை ஓதி, மலர் வழிபாடு செய்வர். இல்லத் தலைவர் அல்லது குடும்பப் பெரியவர் இக்கூட்டு வழிபாட்டினை முன்நின்று நடத்துவர். கற்றறிந்த சமயச் சான்றோர் இவர்களுக்கு வழிகாட்டி நிற்பர்.

       இயன்றவரை இறைவழிபாட்டினை இல்லத்தார்களே செய்வது சாலச் சிறந்தது. குழந்தையின் தாயைச் சார்ந்த தாத்தாவோ அல்லது குழந்தையின் தந்தையைச் சார்ந்த தாத்தாவோ குழந்தையின் தாய் மாமனோ குழந்தையின் தந்தையோ பூசனை இயற்றுவது மிகச் சிறப்பு உடையது. பூசனையின் நடுவே குழந்தை ஈன்ற தாயையும் தந்தையையும் கொண்டு மலர் வழிபாடும் போற்றியையும் செய்வித்தல் வேண்டும். குழந்தையின் பெற்றோர்களின் வாயால் ஒரு திருமுறைப் பாடலையேனும் ஓதச் செய்து வழிபட வைத்தல் வேண்டும். பெருமானைப் பாமாலையாலும் பூமாலையாலும் வழிபாடு செய்த பின்பு அனைவருக்கும் திருநீறு வழங்க வேண்டும். குழந்தைக்கும் திருநீறு அணிவித்தப் பிறகு குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பெயர் சூட்டும் அங்கத்தினைத் தொடங்குவார்கள்.

       நன்கு அழகு செய்யப்பட்டத் தொட்டிலிலே குழந்தையின் தாயைச் சார்ந்த பாட்டியும் குழந்தையின் தந்தையைச் சார்ந்த பாட்டியும் ஒரு சேரக் குழந்தையைத் தொட்டிலில் இடுவார்கள். குழந்தையைத் தொட்டிலில் இட்ட அவர்கள், குழந்தையின் பெயரை மூன்று முறை உரக்கச் சொல்லி அழைத்துத் திருநீற்றினை அணிவித்துத் தொட்டிலை மெல்ல அசைத்துத் தாலாட்டுப் பாடுவார்கள். “ஆர் ஆரோ, ஆர் இவரோ” என்று அரிய சமய உண்மையைக் கொண்ட தாலாட்டு வரிகளைப் பாடுவர். இப்படிச் செய்வதானது புதிதாகப் பிறந்திருக்கின்ற குழந்தைக்கு இறைச் சிந்தனையை ஏற்படுத்துவதற்கு ஆகும் என்பர்.

       சென்ற பிறவியில் இவர், “யார் யாராக இருந்தாரோ, இப்பிறவியில் இவர் இவ்வாறாக இங்கு வந்து பிறந்தாரோ என்ற ஆழ்ந்த சமய உணர்வைப் பெற்றோருக்கும் மற்றவருக்கும் உணர்த்தி, இப்பிறவியில் இவர் மேம்பட இறையருளும் பிறர் அன்பும் வாய்த்தல் இன்றியமையாதது என்று இக்கரணத்தின் வழி உணர்த்துவர். மூன்று முறை பெயர் சொல்லி அழைத்தல் என்பது புதிதாகப் பிறந்த குழந்தையைக் குடும்ப உறுப்பினருக்கும் பிறருக்கும் அறிமுகப்படுத்தி, அக்குழந்தையை அக்குமுகாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும்படி அறிவித்தற்கு ஆகும். திருநீறு அணிவித்தல் என்பது பெருமானின் திருவருள் துணை நிற்பதற்கும் வாழ்த்துவதற்கும் ஆகும். அதன் பின்பு உற்றார் உறவினரும் மற்றவரும் திருநீறு அணிவித்தும் குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்தும் பரிசுகள் வழங்கியும் தங்கள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொள்வர். பின்பு அனைவருக்கும் உணவு கொடுத்து மகிழ்வர்

       தமிழ்ச் சைவர்களின் வரலாற்றில் பெயர்களுக்குத் தனி இடம் உண்டு. சுந்தர மூர்த்தி அடிகளின் திருப்பெயரைச் சொல்லியே பெருமிழலைக் குறும்பர் எனும் அடியவர் நற்பேறு பெற்றார் என்பதாலும் திருநாவுக்கரசு அடிகளின் பெயரைச் சொல்லியே அப்பூதி அடிகளின் குடும்பமே நற்பேறு பெற்றது என்பதாலும் நல்ல, பொருள்தெரிந்த, மேன்மையுடைய தமிழ்ப் பெயர்களைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இடுவது தமிழ்ச் சைவர்களின் கடமையாகும். தமிழ்ச் சைவர்கள் இறைவனின் தமிழ்த் திருப்பெயர்களையும் வாழ்ந்து பேறு பெற்ற நல்லடியார்களின் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சான்றோர்களின் திருப்பெயர்களையும் நல்லொழுக்கம் மிக்க தமிழ்த் தலைவர்களின் பெயர்களையும் தமிழ்க் குழந்தைகளுக்குச் சூட்டினால், அத்திருப்பெயர்களின் தன்மைக்கு ஏற்ப அக்குழந்தைகள் சீருடனும் சிறப்புடனும் விளங்குவார்கள் என்று நம்முன்னோர் அறிவுறுத்தி உள்ளனர். நம் குழந்தைகள், தமிழ் இனமான உணர்வு உள்ளவர்களாகவும் தமிழர் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் தொடர்ந்து நிலை நிறுத்துகின்ற தமிழ்ச் செல்வங்களாகவும் எதிர்காலத்தில் விளங்க வேண்டும் என்றால், தமிழ்ச் சைவர்களான நாம், நம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட்டு நம் அடையாளத்தை நிலைநாட்டுவோம்! தமிழராய் வாழ்வோம்! இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!