125. உடம்பே சிவலிங்கம் ஆதல்

2372

125. உடம்பே சிவலிங்கம் ஆதல்

நம் உடலே சிவலிங்கம் ஆதலைப் பிண்டலிங்கம் என்னும் பகுதியில் திருமூலர் உணர்த்துகின்றார். தசையும் நரம்பும் எலும்பும் குருதியும் கலந்து நிற்கும் மாந்தரின் உடலை அருள் வடிவினதாகச் சிவலிங்கமாய் ஆக்கக் கூடும் என்கின்றார் திருமூலர். சிவபெருமான் வாழும் கோயிலான இவ்வுடம்பை வெளிப்படையாகத் தோன்றும் பரு இலிங்கமாக விளங்கும்படிச் செய்ய இயலும் என்கின்றார் திருமூலர். அகத் தூய்மையும் புறத் தூய்மையும் கொண்டு சிவபெருமானுக்குக் குறிக்கப்படும் எண் குணங்களை இவ்வுடலும் உயிரும் பெறுமானால் உடல் சிவலிங்கமாய்ச் சிவனை உணர்த்தி நிற்கும் என்கின்றார் திருமூலர். தூய நீரால் உடலைத் தூய்மை செய்து சிவனை நினைப்பிக்கும் திருநீறு, கண்டிகை, தூய ஆடை, திருவைந்து எழுத்தைக் கணித்தல், கனிவான பார்வை, எளிமையான தோற்றம், காண்போருக்குச் சிவ சிந்தனையை ஏற்படுத்துவதனால் நம் உடலையும் சிவலிங்கமாகப் பிறர் மதிக்கக் கூடும் என்கின்றார் திருமூலர். 

அன்பும் சிவமும் வேறு ஆதல் இல்லாமையால் அன்பும் அருளும் பொருந்தியவரின் உடலும் உயிரும் சிவலிங்கமாதலோடு மட்டும் அல்லாமல் அவரின் சொல்லும் செயலும் சிவனை உணர்த்துபவை என்கின்றார் திருமூலர். மாந்த உடலைக் கொண்டு இவ்வுலகில் வாழ்பவரும் சிவனுக்குரிய எண் இயல்புகளைப் பெற்று வாழ்வாரேயானால் அவரின் உடலும் சிவலிங்கத்தை உணர்த்துவதே என்று திருமூலர் குறிப்பிடுவார். விருப்பு வெறுப்புக்களினால் ஏற்படும் வேண்டுதல் வேண்டாமை எனும் குற்றத்திற்கு ஆளாகாது தன்னைத் தற்காத்துக் கொண்டு பற்று அற்றவர்களாய் வாழ்கின்ற உயிர் முற்றப் பெற்றவர்கள் (சீவன் முத்தர்கள்) நடமாடும் சிவலிங்கங்களேயாம் என்கின்றார் திருமூலர். தன் வயம் உடைமை எனும் இயல்போடு உலகப் பொருள்களின் பால் ஈர்க்கப்படாது, தன் நிலையில் இருந்து பிறழாது ஒருபடித்தாய் இவ்வுலகில் வாழ்கின்றவரின் உடல் சிவலிங்கமாகவே கொள்ளப்படும் என்பார் திருமூலர்.

பிற உயிர்களிடத்தில் அன்பும் அருளும் உடையவராய் அன்பின் பிழம்பாய்ச் சிவ நெறியில் விலக்கப்பட்டதையும் வலியுறுத்தப்பட்டதையும் கடைபிடித்து வாழ்கின்றவரின் உடல் சிவலிங்கமேயாம். கள், காமம், களவு எனும் பெரும் குற்றம் நீங்கிப் பொருந்தா உணவைத் தவிர்த்து, வாக்கால், செயலால், எண்ணங்களால் தூய்மையோடு வாழ்பவர் தூய உடம்பினன் ஆதல் எனும் நிலையினை உணர்த்தி நிற்றலால் இவர்களின் உடல்களும் சிவலிங்கங்களே என்பார் திருமூலர். இறை அறிவைப் பெற வேண்டும் என்ற விருப்பும் இறைவனையே இடைவிடாது எண்ணும் தெளிவும் இறை அன்பில் நிற்கும் உறைப்பும் கூடியவர்களின் உடல்களும் சிவலிங்கங்களாகக் கருதப்படும் என்கின்றார் திருமூலர். “யான் எனது” என்ற முனைப்பு அற்று, எல்லாம் சிவன் செயல் எனும் உணர்வு ஏற்பட, எங்கும் எதிலும் சிவனின் திருவருளே நிறைந்துள்ளமையைக் கண்டு உயிர் அறிவு முதிர்ச்சியுற்று செவ்வியுற்றவர்களாக நிறைவுடையவர்களாக விளங்குபவரின் உடல்களும் சிவலிங்கங்களே என்கின்றார் திருமூலர். இறைவனை வழிபடப் பெற்றமையினால் வாழ்வில் இன்பமே அன்றித் துன்பமில்லை என்று வாழும் தன்மை உடையவரின் உடல்கள் சிவலிங்கங்கள் என்பதனை,

“மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்,
மானுடர் ஆக்கை வடிவு 
சிதம்பரம்,
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்,
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே”

என்கின்றார் திருமூலர்.

கிடைத்தற்கரிய இவ்வுடம்பினைத் திருக்கோயிலாகக் குறிப்பிடும் அடிப்படையிலும் இவ்வுடம்பு வெளிப்படையாகத் தெரிகின்ற, பரு இலிங்கம் எனப்படும் திருக்கோயிலின் திருக்கோபுரமாகவும் குறிக்கப்படுகின்றது. இதனையே இவ்வுடலே கோயிலாகவும் இவ்வுடலுக்குள்ளே உயிருக்குப் பொறுத்தப்பட்டுள்ள விரைவுடைய மனம் அத்திருக்கோயிலிலே தொண்டு செய்கின்ற அடிமையாகவும் வாய்மை எனப்படும் தூய சொற்களே இவ்வுடம்பு எனும் திருக்கோயிலின் தூய்மையாகவும் உடலை ஒட்டிய உயிர் இலிங்கமாகவும் குறிப்பிடுவார் திருநாவுக்கரசு அடிகள். உள்ளத்தில் பெருமானிடத்தில் வைத்த அன்பே இவ்வுடம்பு எனும் திருகோயிலில் பெருமானுக்கு ஆட்டும் நெய்யாகவும் பாலாகவும் நீராகவும் அப்பெருமானைப் போற்றிப் பாடும் பாடல்களே பூசனையாகவும் திருவமுதாகவும் விளங்கும் என்று மேலும் அவர் குறிப்பிடுவார். இவ்வடிப்படையிலேயே உள்ளம் என்பது பெருங்கோயில் எனவும் ஊனால் ஆகிய உடம்பு பெருமானுக்கு ஆலயம் எனவும் அருள் வள்ளலான அப்பெருமானின் திருக்கோயிலான இவ்வுடம்பில் வாய் எனப்படுவது அத்திருக்கோயிலின் கோபுர வாயில் எனவும் பல்வேறு குற்றங்களையே குறியாகக் கொள்ளும் உடம்பில் உள்ள ஐம்புலன்கள் அத்திருக்கோயிலில் தொங்கும் கண்டா மணியும் ஒளிவிளக்குகளும் ஆகும் எனவும் திருமூலரே வேறொரு பாடலில் குறிப்பிடுவார். எனவே உடலைத் திருக்கோயிலாகவும் உண்மை அன்பின் வழித் திருவருள் வாய்க்கவும் திருவருளின் துணையால் புலனடக்கம் ஏற்படவும் புலனடக்கத்தால் திருவருள் சிறந்து உயிரும் உடலும் சிவலிங்கமாய் அல்லது பிண்டலிங்கமாய் மாறுதல் கூடும் என்பதனை, 

“கோயில்கொண்ட அன்றே குடிகொண்ட ஐவரும்,
வாயில்கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்,
தாயில்கொண்டார் போல் தலைவனென் 
உட்புக,
ஆயில்கொண்டு ஈசனும் ஆள வந்தானே”

என்கின்றார் திருமூலர்.

சிவச் செறிவு (சிவ யோகம்) இயற்றுகின்றவர்கள் சிவனை உடம்பின் உள்ளே கண்டு அவனை உணர்தல் பற்றியும் மாந்தர் உடல் சிவனது சிவலிங்கம் ஆகும் முறையையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவனை உடம்பாகிய சிவலிங்கத்திலே வழிபடுகின்றவர்கள் சிவச் செறிவாளர்கல் என்கின்றார் திருமூலர். இவர்கள் மூலாதாரம் முதலாகிய ஆறு நிலைக் களங்களில் இறைவனைக் காண்பர் என்கின்றார். இவர்கள் உடலில் உள்ள தலையான பத்து நாடிகளின் செயற்பாடுகளைக் கொண்டு மன அடக்கத்தையும் புலன் அடக்கத்தையும் கைவரப் பெறுவர் என்கின்றார். இவ்வாறு அடங்கச் செய்வதனால் திருவருள் கூடி இவர்களின் உடம்புக்குள்ளே நின்று உயிருக்கு அருள் செய்வதனால் இவர்களின் உடம்பும் சிவலிங்கம் ஆகும் என்பதனை, 

“கோயில்கொண்டான் அடி கொல்லைப் பெருமறை,
வாயில்கொண்டு அடி நாடிகள் பத்துள,
பூசைகொண்டான் புலனைந்தும் பிறகு இட்டு,
வாயில்கொண்டான் எங்கள் மாநந்தி தானே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது” என்ற வழக்கைப் பலரும் அறிவர். இறைவனின் திருவருள், மாயை எனும் மூலப் பொருளைக் கொண்டு நிலம், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பொருள்களை உருவாக்கி அதன் வழி அண்டங்களையும் அண்டத்தில் உள்ள பொருள்களையும் தோற்றுவித்தது என்று திருமூலர் குறிப்பிடுவார். அவ்வகையில் அண்டத்தில் உள்ள பூமி எனும் கோளில் வாழும் மாந்த உடலையும் இறைவன் நிலம், நீர், காற்று, தீ, வெளி எனும் ஐந்து பொருட்களைக் கொண்டே செய்வித்திருக்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அவ்வகையில் மாந்த உடலில் உள்ள அகப்புற உறுப்புக்கள் அனைத்தும் இறைவனின் திருவருளால் ஆனவை என்கின்றார் திருமூலர். எனவே உடலும் சிவலிங்கமே என பெறப்படும்.

உடலில் நிலத்தின் கூறுகளாக விளங்கும் எலும்பு, நரம்பு, தசை, தோல், மயிர் ஆகிய உறுப்புக்கள் இறைவனின் திருவருளால் ஆனவை என்கின்றார் திருமூலர். உடலில் நீரின் கூறாக உள்ள ஓடு நீர், குருதி, மூளை, மச்சை, விந்து ஆகியவை இறைவனின் திருவருள் துணையால் ஆக்கப்பட்டவை என்கின்றார் திருமூலர். உடலில் உள்ள தீயின் கூறாக விளங்கும் செரிமான ஆற்றல், உறக்கம், அச்சம், பால் இன்பம், சோம்பல் ஆகியவையும் திருவருள் துணையாலேயே ஆக்கப் பட்டுள்ளன என்கின்றார் திருமூலர். உடலில் காற்றின் கூறாக விளங்கும் ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் எனும் செயல்கள் இறைவனின் திருவருளாலேயே நிகழ்கின்றன என்கின்றார் திருமூலர். வெளியின் கூறாக விளங்கும் காமம், கருமித்தனம், விருப்பம், மயக்கம், பேராசை என்பனவும் இறைவனின் திருவருளாலேயே ஆக்கப்பெற்றிருக்கின்றன என்கின்றார் திருமூலர். தவிர உடலில் உள்ள பத்து வகையான வாயுக்கள், பத்து முதன்மையான நாடிகள், ஐந்து வகையான செயற் கருவிகளின் செயலாற்றல்கள், நான்கு வகையான வாக்குகள், மூவகை பண்பு இயல்புகள் (குணங்கள்), மூன்று வகையான மனவெழுச்சிகள் போன்றவையும் இறைவனின் திருவருள் துணையாலேயே ஆக்கப்பட்டுள்ளன என்கின்றார் திருமூலர். சுருங்கக் கூறின் உடலும் உடலின் அகப்புறச் செயல்பாடுகளும் திருவருளாலேயே செயல்படுவதனால் உடல் முழுவதுமாய் உள்ள திருவருள் சிவலிங்கத்தின் மறுவடிவமே என்கின்றார் திருமூலர். இதனாலேயே சிவ வழிபாட்டில் இவ்வுடலைச் சிவமாகவே எண்ணிப் பூசனை இயற்றுகின்ற முறையும் சிவ பூசனையில் இடம் பெற்றுள்ளது.

சிவலிங்கத்தின் மறுவடிவாய்த் திகழும் இவ்வுடலைத் தூய்மையானதாகவும் அன்பும் அருளும் நிறைந்ததாகவும் பேணிக்காத்துச் சிவமாம் தன்மை கைவர அப்பெருமானின் திருவருளை வேண்டி நிற்போமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!