124. அண்டமும் சிவலிங்கமும்
அண்டங்களையும் அண்டத்தில் உள்ள விண்மீன்களையும் அண்டத்தில் உள்ள கோள்களையும் கோள்களில் உள்ள பொருள்களையும் தோற்றுவித்தும் ஒடுக்கியும் அருளும் பரம்பொருளை இலிங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இலிங்கத்தைத் தமிழில் குறி அல்லது அடையாளம் என்பர். எல்லாவற்றையும் தோற்றுவித்தும் ஒடுக்கியும் அருள்புரியும் பேரறிவுப் பேராற்றலாகிய சிவம் எனும் பரம்பொருளைக் குறிக்கும் அடையாளமாக அல்லது குறியாகச் சிவலிங்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் வழிபட்டனர். இடுகுறியாய், கடவுளைக் குறிக்கும் குறியாய்ச் சித்த்தாந்தச் சைவர் வழிபட்டச் சிவலிங்கத்தைச் சதாசிவம் என்றும் தமிழில் அருளோன் என்றும் அழைத்தனர். அண்டம் எனப்படும் புற உலகம் முழுவதிலும் சிவப்பரம்பொருளின் திருவருள் பொதிந்து உள்ளமையினால் புற உலகினை அண்டலிங்கம் என்றும் அண்டமும் சிவத்திற்கு மற்றொரு வடிவம் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத் திருமேனியையும் இறைவனின் இதரத் திருவடிவங்களையுமே இறைவனுக்கு அடையாளம் அல்லது குறி என்று பலரும் எண்ணி மயங்குவது தவறு என்கின்றார் திருமூலர். உலக உயிர்களின் அறிவு வளர்ச்சிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் அறுபத்து நான்கு கலைகளிலும் இறைவனின் திருவருள் பொதிந்து நின்று உதவுவதனால் அறுபத்து நான்குக் கலைகளும் சிவலிங்கங்களே என்கின்றார் திருமூலர். எட்டுத் திசைகளாய் விரிந்து காணப்படும் இவ்வுலகம் முழுவதிலும் இறைவனின் திருவருள் மறைபொருளாய் நின்று உதவுவதனால் இவ்வுலகமும் இறைவனின் திருவருளுக்கு அடையாளமாக அல்லது அருள் குறியாக விளங்குகின்றது என்கின்றார் திருமூலர். எனவே இவ்வுலகமும் அண்டமும் இறைவனின் சிவலிங்கத் திருமேனியை உணர்த்தும் மற்றொரு வடிவம் என்பதனை,
“இலிங்கம் ஆகுவது யாரும் அறியார்,
இலிங்கம் ஆகுவது எண்திசை எல்லாம்,
இலிங்கம் ஆகுவது எண்எண் கலையும்,
இலிங்கம் அதாக எடுத்தது உலகே”
என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.
மாயை எனும் நுண்பொருளைக் கொண்டு உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும் தனது திருவருளைக் கொண்டே செய்வித்தான் என்கின்றார் திருமூலர். தனது திருவருளினால் பொருள்களின் வடிவினையும் அப்பொருள்களின் இயல்பினையும் அமைத்து உதவினான் இறைவன் என்கின்றார் திருமூலர். உலகில் உயிர்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலம், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐம்பூதங்களும், உடலில் பொருந்தியுள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்ற அறிகருவிகளும் அறிகருவிகளின் உணரும் தன்மைகளான கேட்டல், உணர்தல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல் என்ற ஐந்து புலன்களும் செயற்கருவிகளான வாய், கால், கை, எருவாய், கருவாய் என்பனவும் மனம், புத்தி, மனவெழுச்சி (அகங்காரம்) சித்தம் எனும் உட்கருவிகளும் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனும் உயிர் அறிவு விளக்கம் பெறும் உள் இயவுகளும் இறைவனின் திருவருளாலேயே செய்விக்கப்பட்டுள்ளன என்கின்றார் திருமூலர்.
இவை தவிர சொல்லுலகம் எனப்படும் வாக்கியம், சொல், எழுத்து எனப்படும் மூன்றும் பொருள் உலகம் எனப்படும் கலை, மெய்கள், புவனங்கள் எனப்படும் மூன்றும் உயிர்கள் உலக வாழ்வையும் இறை வாழ்வையும் அடைதற்கு உள்ள ஆறு வழிகளும் (ஆறு அத்துவாக்கள்) இறைவனின் திருவருளேயாக நின்று துணைப் புரிவதனால் அவையும் சிவலிங்கங்களே என்கின்றார் திருமூலர்.
இதனை,
“போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்,
ஆகமும் ஆறுஆறு தத்துவத்து அப்பாலாம்,
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்,
ஆகம அத்துவா ஆறும் சிவமே”
என்கின்றார். இதனால் அண்டம் முழுவதும் சிவலிங்கம் ஆதல் நன்கு விளங்கும் என்கின்றார் திருமூலர்.
சிவபெருமான் அண்டத்தில் உள்ள பொருள்களில் மறை பொருளாய், சிவ அருளாய் நின்று உயிர்களுக்கு அருள் புரியினும் அண்டமும் திருக்கோயில்களில் உள்ள திருவடிவங்களும் தான் அவனுக்கு வடிவமோ எனின் அவன் அவற்றை எல்லாம் கடந்து அவற்றிற்கு அப்பாலாகவும் உள்ளவன் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அண்டலிங்கமாயும் திருக்கோயிலில் உள்ள திருவடிவங்களாயும் கண்டு புகழ்ந்தும் வாழ்த்தியும் இன்பப்பொருளாக உணர்ந்தும் சிவத்தை வேண்டுகின்றவர்களுக்கு அவர் அவர் வேண்டும் பொருள்களை அப்பொருள்களில் நின்று அவனின் பரிவின் காரணமாக அவன் வழங்குகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உலகம் கடந்த அப்பரம்பொருள் உயிர்களின் மீது கொண்ட பரிவின் காரணமாகப் பொதுநிலையில் இறங்கி வந்து அண்டத்தில் நின்று அருளுகின்றது என்பதனை உயிர்கள் உணருமாயின் அப்பரம்பொருளிடத்தில் ஆராத அன்பு ஏற்பட்டு அவனை நாளும் இடைவிடாது வணங்கி நிற்கும் என்கின்றார் திருமூலர்.
அண்டப் பொருள்களில் எல்லாம் மறைந்து அண்டலிங்கமாக நிற்கும் சிவனது திருவருளையும் அவனின் பரிவினையும் மேலான உண்மை நிலையையும் உணர்ந்து அவனை வழிபடுகின்றவர் மிகச் சிலரே என்கின்றார் திருமூலர். அண்டலிங்கமாய் உலகப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் சிவனை உணர்ந்து வழிபடுகின்றவருக்குப் பூவைத் தன்னுள்ளே அடக்கி இருக்கும்
அழகிய கொடி, அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போன்று பெருமான் தனது உண்மை நிலையினைச் சிறிது சிறிதாக வெளிப்படுத்துவான் என்கின்றார் திருமூலர். இதனால் திருக்கோயில்களில் உள்ள அவனின் பொது திருவடிவங்களிலும் சிவலிங்கங்களிலும் கூட அவ்வாறே அவன் நின்று அருளுகின்றான் என்பதும் புலப்படும். இதனை,
“தாவரத்துள் நின்றுஅருள வல்லான் சிவன்,
மாபதத்து உண்மை வழிபடுவார் இல்லை,
மாபரத்து உண்மை வழி படுவாருக்கும்,
பூவகத்துள் நின்ற பொற்கொடி ஆகுமே”
என்று குறிப்பிடுகின்றார்.
அண்டலிங்கமாய் நிற்பதோடு மட்டுமல்லாமல் திருக்கோயிலிலுள்ள கருவறையின் மேல் உயர்ந்து விளங்கும் விமானங்களும் கோபுரங்களும் பருலிங்கங்கள் (தூலலிங்கம்) என்றும் கருவறையில் மூலமாய் விளங்கும் இலிங்கம் நுண் இலிங்கம் (சூக்குமலிங்கம்) எனவும் கூறப்பெறும் என்கின்றார் திருமூலர். கருவறைத் திருவாயிலின் காணப்படும் பலிபீடம் பத்திரலிங்கம் எனப்படும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,
“தூய விமானமும் தூலம்அது ஆகுமால்,
ஆய சதாசிவம் ஆகும்நல் சூக்குமம்,
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்,
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”
என்று குறிப்பிடுகின்றார்.
சிவலிங்கங்களை முத்து, மாணிக்கம், பவளம், படிகம், மரகதம் முதலான இரத்தின வகைகள், மரக்கழி, கருங்கல், திருநீறு போன்றவற்றால் அமைக்கலாம் என்கின்றார் திருமூலர். இவைத்தவிற சோற்று உருண்டை, அரிசிக்குவியல், ஒற்றை மலர், கோர்த்த மலர், மணல் அல்லது மண் போன்றவற்றைக் கொண்டும் சிவலிங்கத்தை நிறுவி வழிபடலாம் என்று சிவ ஆகமங்கள் கூறுவதாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். திருக்கோயில்களிலே நிலையாக நிறுவப்பட்டு இடம் பெயராமல் பொது வழிபாட்டிற்குரியதாய் உள்ள இலிங்கம், அசைவற்ற இலிங்கம் அல்லது அசல லிங்கம் எனப்படும் என்கின்றார். தனி மாந்த வழிபாட்டில் உள்ள, வேண்டும் இடங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகின்ற இலிங்கங்களும் வழிபாட்டின் போது ஓர் இடத்திலும் பின்பு வழிபாடு முடிந்து பெட்டகத்திலோ அல்லது வேறு கலன்களிலோ வைக்கப்படும் இலிங்கங்களும் அசைவுடையவை என்பதனால் அவை சல லிங்கங்கள் எனவும் குறிக்கப்படுகின்றன என்கின்றார் திருமூலர்.
அசைவுடை சிவலிங்கங்களைக் கணிகம், திரம், என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்கின்றார் திருமூலர். கணிக இலிங்கம் நிலையில்லாதது. அவ்வப்போது இலிங்க வடிவம் அமைத்து வழிபட்டவுடன் அவை கரைக்கப்படும் அல்லது கைவிடப்படும் என்கின்றார். திரம் இலிங்கம் எனப்படுவதோ நிலையானது என்கின்றார். ஒருமுறை அமைக்கப் பெற்றது வாழ் நாள் அளவும் விடாமல் நிலையாக வழிபடப்படுவது என்கின்றார். இவைத் தவிர பசுவிடம் இருந்து பெறப்படும் தயிர், நெய், பசுவின் மலம் போன்றவற்றைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்தும் பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர், பசுவின் மலம் கலந்த நிறை குடமும் (கும்பம்) சிவலிங்கமாய் உருவகிக்கப்படும் என்கின்றார் திருமூலர்.
செம்பு, தாமிரம், பொன், வெண்பொன் ஆகியவற்றில் ஆன சிவலிங்கமும் சிவ வேள்வித் தீயும் பெரிதாய் எரியும் சுடரும் சுடர் விளக்கும் சித்த மருத்துவ முறையில் செய்யப்படும் இரசக்கல் சிவலிங்கமும் சந்தனத்தில் ஆன சிவலிங்கமும் வில்வக்காயும் வில்வப்பழமும் சிவலிங்கங்களாக வழிபடக்கூடியவை என்கின்றார் திருமூலர். அண்டமாகிய சிவலிங்கத்தில் பூமி சிவனது திருவடியாகவும் அண்ட முகடு சிவனின் திருமுடியாகவும் வானம் சிவனின் திருமேனியாகவும் குறிக்கப்படுகின்ற முறையும் உண்டு என்கின்றார் திருமூலர். அடியவர்களின் அறியாமையைப் போக்கித் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை அளிப்பதற்குச் சிவன் அண்டத்தையே இலிங்கமாக ஆக்கிக் கொண்டு அமர்ந்திருக்கின்ற அப்பெருமானின் பரிவையும் அன்பினையும் உணர்ந்து அவனை வழிபடுவோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!