14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை

1790

பெருமானின் ஆற்றலுக்கும் ஆணைக்கும் உட்பட்டே அனைத்து உலகங்களும் அதன் உட்பொருள்களும் இயங்குகின்றன என்பதனை, “அவனன்றி ஓர் அணுவும் அசையாது,” என்று சுருங்கக் கூறுவர். இதனையே மணிவாசகரும், “அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய், போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்று சிவபுராணத்தில் குறிப்பிடுவார். பல்வேறு உலகங்களில் வாழும் உயிர்வகைகளுக்குப் பெருமான் செயல் செய்வதன் வழி நுகர்ச்சியை(அனுபவத்தை) ஏற்படுத்திச் செவ்வியை(பக்குவத்தை) அளிக்கின்றான் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். உயிர்களுக்கு நுகர்ச்சிகள் மூன்று வாயில்கள் வழியாக வரும் எனவும் குறிப்பிடும். அவை பிற உயிர்களின் மூலம் (ஆதி ஆன்மிகம்), பஞ்ச பூதங்களின் மூலம் (ஆதி பௌதிகம்), சிற்சத்திகளின் மூலம் (ஆதி தெய்விகம்) என்பனவாம்.

எழு வகைப் பிறவிகள் என்று வகைப்படுத்தப்படும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பனவற்றினால் ஒவ்வொறு உயிருக்கும் வரக்கூடிய அனத்துச் செவ்வி நுகர்ச்சிகளும் இறைவன் சொல்லியே நமக்கு வந்து சேர்கின்றன. மாந்தர்களினால் ஏற்படும் நன்மை தீமைகள், கரடி, யானை, புலி, சிங்கம், பாம்பு, பல்லி, தவளை, ஆந்தை, காகம் என எவ்விலங்கினாலும் பறவைகளினாலும் தாவரங்களினாலும் ஏற்படும் இன்ப நுகர்வுகளும் துன்ப நுகர்வுகளும் பெருமான் சொல்லியே நம்மை அவற்றின் வழியாக வந்து சேர்கின்றன. இதனால் பெருமானை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு உண்மை உண்மையாக அவனை வழிபடுகின்றவர் யாவரேனும் இறைவன் சொல்லாது அவர்களுக்கு மேற்கூறியவை ஒருபோதும் துன்பம் செய்யா! நன்மையே செய்யும் என்பதனை, “நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்த அதனால், கோளறி உழுவையோடு கொலையான கேழல் கொடுநாகமோடு கரடி, ஆளரி நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே” என்பார் திருஞானசம்பந்தர். கனவில் பாம்பினைப் பார்த்துத் தீமை வருமோ என்று அஞ்சுபவர் வீட்டினுள் பாம்பு, தவளை, ஆமை, போன்றவைப் புகுந்தால் தீமை ஏற்படும் என்று அஞ்சுபவர், பல்லியின் ஓசை கேட்டு அஞ்சுபவர், வீட்டின் முற்றத்தில் ஆந்தை அலறக் கேட்டு அஞ்சுபவர், காகம் கரைதலைக் கேட்டு அஞ்சுபவர், உண்மையில் அஞ்சத்தேவையில்லை என்பதனை உணருதல் வேண்டும். அப்படியே துன்பம் வந்தாலும் இறைவன் திருப்பெயரைச் சொல்லி அவற்றை வர வர எதிர்கொள்ள மன உறுதி கொள்ள வேண்டும் என்கிறது சித்தாந்த சைவம்.

விண்மீன்கள், கோள்கள், நாட்கள், நிலம், நீர், தீ, காற்று, வெளி என்பனவற்றைப் பௌதிகம் என்பார்கள். இவற்றைப் படைத்தவன் இறைவனே! அவற்றினால் வரும் இன்ப துன்ப நுகர்வுகளும் இறைவன் சொல்லியே அவற்றின் மூலம் நம்மை வந்து அடைகின்றன. இவை உயிரற்றவை! இவற்றினுள்ளே நின்று அருள் புரிபவன் பெருமானே! ஆதலால் அவற்றிற்கு என்று தனிச் செயல்பாடுகள் கிடையாது. எனவே நீரில் கண்டம், தீயில் கண்டம், பயணத்தில் ஆபத்து, என்று அஞ்சத் தேவயில்லை! மேற்கூறிய அனைத்தும் இறைவன் நம் உள்ளத்தில் இருப்பதாலும் இறைவன் அவற்றின் உள்ளே இருந்து அவற்றைச் செலுத்துவதாலும் அவற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை! அவற்றினால் வரும் இன்பத்துன்ப நுகர்வுகளை இறைவன் திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்லி எதிர்கொள்ள வேண்டும் என்று சித்தாந்த சைவம் பகருகின்றது. கோள்களினால் வரும் நுகர்வுகளும், விண்மீன்களினால் வரும் நுகர்வுகளும், இராசிகளினால் வரும் நுகர்வுகளும் அவ்வாறே என்பதனை உணர்தல் வேண்டும்.

அன்றாட வாழ்வில் தீய சத்திகள் மூலம் பில்லி, சூன்யம் என்ற மாந்திரிகம், காத்து, கருப்பு, பேய், ஆவிகள் என்று பல்வேறு சிற்சத்திகளைக் கண்டு அஞ்சுகின்றவர்களும் அவை அனைத்தும் பெருமானின் பேராற்றலுக்கு உட்பட்டவையே என்று எண்ணித் தெளிதல் வேண்டும். அவற்றை எண்ணி அஞ்சாமல், பெருமான் நம் உள்ளே இருப்பதனால், திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவது போன்று, “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று மனத்திடத்துடன் வாழுதல் வேண்டும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. “அஞ்சி அஞ்சி சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவணியிலே” என்று பாரதியாரும் இதனையே இடித்துரைக்கின்றார்.

மாயை எனும் அணுப்பொருளிலிருந்து ஆக்கப் படும் அனைத்துப் பொருள்களின் முதலும் முடிவுமாகப் பெருமான் விளங்குகின்றான். அனைத்து உலகில் வாழும் உயிர்களுக்கும் நல்ல அருள் புரிவதற்காகவே தன் கருணையின் காரணமாக அனைத்தையும் பெருமான் செய்கின்றான். அவன் எல்லாப் பொருள்களிலும் தங்கியிருந்து அவற்றைச் செலுத்துகின்றான் என்பதனை ஆராய்ந்தால் உயிர்கள் அஞ்சவேண்டியது எதுவும் இல்லை! இடியினுள்ளும் அதன் முழக்கத்தினுள்ளும் பெருமானும் அவன் திருவருளுமாய் நின்று அருள்புரிபவன் அவனே! எனவே இடியையும் அதன் முழக்கத்தையும் கண்டு அஞ்சத்தேவையில்லை என்பதனை,”முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அற நெறி நாடில், இடியும் முழக்கமும் ஈசர் உருவம், கடிமலைக் குன்ற மலயது தானே” என்பார் திருமூலர்.

பெருமான் நம்முள்ளே இருப்பதனை உறுதியாய் எண்ணிப் பார்த்தால் அச்சம் என்பது ஏற்படுவதில்லை! இவ்வுறுதியைத் தான், திருநாவுக்கரசு அடிகள் தாம் பெருமானுக்கு மீளா ஆளாகி விட்டதனால் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன், எமனுக்கும் அஞ்சமாட்டேன், நரகத்திற்கும் அஞ்சமாட்டேன், யாருக்கும் அஞ்சி நடிக்கவும் மாட்டேன், போலியாக யாரையும் பணியமாட்டேன், இன்பத்தைத் தவிர ஒரு நாளும் துன்பமில்லை என்ற துணிவோடு வாழ்ந்து காட்டினார். இறைவன் நம் உள்ளே இருந்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கின்றான் என்று மறந்துவிடும் நம் பிள்ளைகளுக்கும் மற்றவருக்கும் அச்சம் ஏற்படும் போது இறைவன் திருப்பெயரைசொல்லி அச்சம் போக்கப் பழக்க வேண்டும். இடி இடித்தாலோ, பேய் பயம் வந்தாலோ, தெருவில் எலுமிச்சைத் துண்டு கிடந்தாலோ, கருப்புப் பூனை குருக்கே போனாலோ, தீயக் கனா ஏற்பட்டுத் திடுக்கிட்டு எழுந்தாலோ, ஆந்தை அலறினாலோ, பாம்பு தென்பட்டாலோ, பல்லி கத்தினாலோ, இறைவன் திருப்பெயரையோ, திருவைந்து எழுத்தையோ, திருநீற்றையோ கைக் கொண்டு அச்சம் தவிர்தலை எண்ண வேண்டும். இதை விடுத்துச் சிற்சத்திகளை நம்பி அவற்றின் பின்னே போவதும், ஏமாறுவதும், நாளும் அஞ்சி அஞ்சிச் சாசவதும் சர்£மிகு செந்தமிழர் இறை நெறிக்கு இழுக்காகும். இறைவன் மீது நம்பிக்கையை வைப்போம், உளத்துணிவோடு வாழ்வோம், வருவதை எதிர்கொள்வோம்.