41. உள் எழும் சூரியன்

1650

“பேராற்றலும் பெரும் கருணையும் தூய பொருளுமாய உன்னை எனக்குத் தந்து, சிற்றறிவும் தன்னலமும் சிறுமையும் உடைய என்னை உனது அடியவனாகக் கொண்டாயே இறைவா! நீ என் உடலினை உனக்கு இடமாகக் கொண்டதனால் முடிவில்லாத எல்லையற்ற இன்பத்தினைப் பெற்றேன்! இதில் உனக்குக் கிட்டுவது ஒன்றும் இல்லை! உன் கருணையே கருணை!” என்று இறைவனின் கருணையை எண்ணிக் கசிந்து உருகுவார் மணிவாசகப் பெருமான். நான்முகனும் நாராயணனும் தங்கள் முற்சியால் இறைவனைத் தேடிக் கண்டுவிட முடியும் என்று முயன்று தோல்வியுற்றனர். எனினும் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையான அப்பெருமானை என் அன்பினால் என் உடளுள்ளே தேடிக்கண்டேன் என்பதனைத், “தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடி தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

               இவ்வுடம்பு வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு பொருள் என்று முதலில் தாம் எண்ணியதாகவும் பின்பு உடம்புக்குள்ளே தன்னை மேநிலைக்கு உயர்த்தும் பரம் பொருளைக் கண்ட பிறகு தான் தம் உடம்பைப் பேணிக் காப்பதாகவும் சிவச் செறிவாளர் திருமூலர் குறிப்பிடுவார். தேனுக்குள் இருக்கின்ற இனிப்பு, சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்று தேடுவது எவ்வளவு ஆராய்ச்சி அற்றதோ அதனைப் போன்று இறைவனைப் புற உலகப் பொருட்களில் தேடுவதாகும். தேனுக்குள் இருக்கின்ற இன்பம் செறிவுற்று இருப்பதனை அதனை அருந்தினாலேயே அறிய முடியும். அது போன்று உடம்பினுக்குள்ளே உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை நுகர்ச்சியினாலேயே உணர முடியும் என்பதனைத், “தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ, பாருக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர், தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல், ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே” என்பார் திருமூலர்.

               இறைவன் நிலம், நீர், காற்று, தீ, வெளி, கதிரவன், நிலவு, உயிர் எனும் எட்டுப் பொருள்களில் விரவி இருக்கின்றான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. நிலம், நீர், காற்று, தீ, வெளி என்ற ஐந்து பொருள்களின் கூட்டும் அவற்றின் மறுதலைகளுமே உலகங்களாகவும் உலகப் பொருட்களாகவும் உள்ளன. கதியும் மதியும் இதர கோள்களும் மேற்கூறிய ஐந்துப் பொருட்களினாலேயே ஆகியிருக்கின்றன. உயிரற்ற இவற்றை மாயை எனும் மூலப் பொருளைத் துணையாகக் கொண்டு தோற்றுவித்து அவற்றின் உள்ளிருந்து அவற்றை இயக்குபவனும் அப்பெருமானே! மாந்தர்களுக்கும் இதர உயிர் வகைகளுக்கும் உடல்களைப் பஞ்சபூதங்கள் எனப்படும் மேற்கூறிய பொருள்களிலே செய்து அவற்றினுள்ளே உயிர்களைப் புகுத்தி, அவ்வுயிர்களில் நின்று அவ்வுயிர்களை இயக்குபவனும் அவனே! இதனையே, “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய், யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டுவானாகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே” என்று மணிவாசகர் குறிப்பிடுவார்.

               பெருமான் உறைகின்ற புறப்பொருள்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. மாந்தர்களின் ஆற்றல்களுக்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டவகையாக அவை இருக்கின்றன. பரந்துபட்டு எல்லை அற்று கிடக்கின்ற உலகப் பொருள்களிலும் உலகங்களிலும் அண்டங்களிலும் இறைவனைத் தேடல் அரிது. எங்கும் எதிலும் நீக்கம் அற நிறைந்திருக்கும் பெருமானைப் புறத்தில் காண்பதனைக் காட்டிலும் அகத்தில் காண்பது எளிது என்கின்றார் திருமூலர். பெருமான் விறகில் தீ மறைந்து இருப்பது போலவும் பாலில் நெய் மறைந்து இருப்பது போலவும் பட்டைத் தீட்டப் படாத மாணிக்கக் கல்லில் ஒளி மறைந்து இருப்பது போலவும் உடம்பினுள்ளே உயிரில் கலந்து இருக்கின்றான். அவ்விறைவனிடத்தில் மகமை உறவு பாராட்டியோ, ஆண்டான் அடிமை உறவு பாராட்டியோ, தோழமை உறவு பாராட்டியோ, ஆசான் மாணாக்கன் உறவு பாராட்டியோ அன்பைப் பெருக்கினால் அவன் வெளிப்பட்டு அருளுவான் என்பதனை, “விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான், உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே” என்று குறிப்பிடுவார் திருநாவுக்கரசு அடிகள். இக்கருத்தினையே தமிழ் ஆகமம் அருளிய திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

               குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என்ற வாழ்க்கைப் பருவங்களுக்கு உட்பட்டு, நாளும் மாற்றங்களைப் பெறுவதும் நிலையற்றதும் ஆனது மாந்தர்களின் உடல். இத்தகைய, கிடைத்தற்கரிய உடம்பு எனும் கோயிலிலே சற்றும் நீங்காது தங்கி, மறைந்திருக்கின்றவன் பேர் அருளாளனான, உயிர்களுக்குத் தலைவனான சிவன். விறகில் மறைந்திருக்கின்ற தீ, அது வெளிப்படும் காலத்திலே வெளிப்பட்டு விளங்குதல் போல, உயிர்கள் செவ்வி அடைந்த காலத்தில் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மல இருளைப் போக்கி, உள் எழும் கதிரவனாய்ப் பெருமான் வெளிப்பட்டு விளங்குவான். அவ்வாறு வெளிப்படும் போது அவன் பெற்ற தாயின் அன்பினை விடவும் மிக்க பேர் அன்பு உடைய அருள் வெள்ளமாய் நின்று பேரின்பத்தை அளிப்பான் என்பதனை, “ வேயின் எழுங்கனல் போலே இம்மெய் எனும், கோயிலில் இருந்து குடிகொண்ட கோன் நந்தி, தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும், தோயம் அதாய் எழும் சூரியனாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

               புறத்திலே செய்யும் இல்ல வழிபாடுகளும் திருக்கோயில் வழிபாடுகளும் உயிரிலே எழும் சிவச்சூரியனைக் காண்பதற்கேயாம். தாயினும் சாலப் பரிந்துஅருள் புரியும் பெருமானைப் பூசனைகளின் வழியும் தீவேட்டல் வழியும் அன்பு செய்து உயிரிலே வெளிபட்டுத் தோற்றுதலைக் காண்பதற்கேயாம். மூச்சை அடக்கி, வெளித்தொடர்புகளைத் துண்டித்து, மனதை ஒரு நிலைப்படுத்தி, உள்ளே உற்று நோக்குகின்ற சிவச் செறிவும் உயிரில் ஒளிந்து நிற்கின்ற மறை பொருளைக் கண்டு இன்பம் பருகுவதற்கேயாம். இறைவன், உயிர், உயிர் இறைவனை அறிய முயாது தடையாய் இருக்கின்ற மலம் என்பவை யாவை என்பதனைக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், அதில் அழுந்தியிருந்து அறிதல் எனும் அறிவு நெறிவழி நிற்பதும் உயிரிலே ஒளிந்திருக்கும் பேர் அருள் ஒளியைக் காண்பதற்கேயாம். அப்பேர் அருள் ஒளியின் பேரின்பத்தை நுகர்வதற்கேயாம்.

               உயிரிலே நின்ற உள்ளொளியைக் காண்பதற்கு ஐயன் திருவள்ளுவர் வழி கூறுவார். மனத்திலே குற்றங்களைப் போக்க வேண்டும் என்பதே அதற்கு வழி என்பார். இதனை, “மனத்தின்கண் மாசு இலன் ஆதல்” என்பார். மனத்தில் மாசு இலன் ஆதற்குத் திருநாவுக்கரசு அடிகளும் வழி கூறுவார். மனம், வாக்கு, காயத்தினால் தூய்மையாக இருத்தல் இதற்கு அடிப்படை என்பார். நாளும் இறைவனை வழிபட்டு நம் வாக்கு தூய்மை பெற இறைவனை வேண்டல் வேண்டும் என்பார். நம் உடலில் ஒளிந்திருக்கும் இறைவனை எண்ணி நாம் பேசும் சொற்களில் உண்மையும் நன்மையும் இனிமையும் இருத்தல் வேண்டும் என்பார். தவறியும் பிறருக்குத் துன்பமான, தீமையான சொற்களைப் பேசுதல் கூடாது என்பார். இது உயிரில் ஒளிந்துள்ள இறைவன் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் என்பார்.

               இறைவழிபாட்டில், எந்நெறியில் நிற்பவர்களாயினும் உள்ளத்தில் உள்ளும் எண்ணங்கள் உயர்வாக இருத்தல் வேண்டும் என்கின்றார். கனவிலும் பிறருக்குத் தீங்கினை விளைவிக்காத நற்சிந்தனைகள் யார் உள்ளத்தில் உதிக்கின்றனவோ அங்கே இறை ஒளி தோன்றும் என்கின்றார். அழுக்கில்லாத தெளிந்த நீரைப் போன்று உள்ள உள்ளத்திலே இறை ஒளியைக் காணலாம் என்பார். ஆசை, சினம், மயக்கம் உடைய உள்ளம் தெளிவுறாது. தெளிவுறாத உள்ளத்தில் உள்ளொளியும் தோன்றாது என்பார். மனம், வாக்கு ஆகியவற்றில் தூய்மை மட்டும் இன்றி மெய்யால் செய்யும் செயல்களிலும் தூய்மை வேண்டும் என்பார் திருநாவுக்கரசு அடிகள். நம் உடலுக்குக் கேட்டினை விளைவிக்கும் மது, வெண்சுருட்டு, போதைப் பொருள், முறையற்ற உணவு, தீய பழக்க வழக்கங்கள், உடலுக்கு ஊறினை ஏற்படுத்தி உயிரையும் சர்குழைக்கும். தமக்கே மட்டுமன்றி பிற உயிர்களின் உடல்களுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் செயல்களை உடலால் செய்யாமல் இருப்பதே அடுத்த தூய்மையாகும். வன்முறைகள், குற்றச் செயல்கள், ஏமாற்று, வஞ்சகம், பொய், கோள் என்று அழுக்கையே தம் உடலினால் செய்யும் செயல்களாகக் கொண்டவர்களின் உயிரில் ஒளிந்துள்ள இறைவன் ஒருபோதும் வெளிபட்டு நற்கதியை நல்க மாட்டான் என்றும் குறிப்பிடுவார். இறை நெறியில் நிற்றல் என்பது வெறும் வழிபாடு செய்வது மட்டும் என்று இல்லாமல் மனம், வாக்கு, காயத்தினால் தூய்மையாக நின்று உயிரில் ஒளிந்துள்ள இறைவனைக் காணும் முயற்சியாகும் என்பதனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!