நாளும் வழிபடல் வேண்டும்

3511

நலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது “அப்பர்” என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். “வாக்கின் மன்னர்” என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனால் “திருநாவுக்கரசர்” என்று பெயர் சூட்டப்பெற்றார். அத்தகைய திருநாவிலிருந்து உதிர்ந்த திருவாக்கினை இனி காண்போம்.

    “சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
    உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
    உலடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன் அதிகைக்கெடில
    வீராட்டனத்துறை அம்மானே”

திருநல்லூரில் இறைவனின் திருவடி தன் தலைமேல் வைக்கக் கிடைக்கப்பெற்ற அப்பெருமகனார், எளிய; சிறந்த உண்மையான; சைவநெறிக்கு ஏற்புடைய வழிபாட்டினை இம்மந்திரத்தின் வழி குறிப்பிடுகின்றார். இறைவழிபாட்டில் உள்ளன்போடு அளிக்கப்படும் நீரையும் மலரையும் குறிப்பிடுகின்றார். நீரைப் படைத்த இறைவனுக்கும் பருக நீர் தேவையில்லை எனினும், வீட்டிற்கு வரும் மரியாதைக்குரியவருக்குப் பருக நீர் அளிப்பதைப் போன்று, இறைவனிடத்தில் நம் மரியாதையைக் காட்டுவதற்கு நீரைப் படைக்கின்றோம். தவிர மலர்களைத் தூய்மை படுத்துவதற்கும் ஒரு பொருளைச் சமர்ப்பிப்பதற்கு அடையாளமாகவும் பூசனையில் நீரை வார்க்கின்றோம். நம் உள்ள அன்பின் அடையாளமாகப் பூவைக் கையில் எடுத்து சேர்ப்பிகின்றோம். இறைவழிபாட்டில் நம் உள்ளன்பை இறைவன் திருவடியில் சேர்ப்பதின் அடையாளமாகவுள்ள பூவினை இம்மந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து பூசனையின்போது இறைச்சிந்தனையைத் தூண்டும் நல்ல மணமுள்ள புகைவகைகளையும் கற்பூரம் போன்ற தீபவகைகளையும் குறிப்பிடுகின்றார். ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற புகைவகைகள் இறைச் சிந்தனையை ஏற்படுத்தக்கூடியவை. கற்பூர ஒளி, தீப ஒளி போன்றவை இறைவனை ஒளிவடிவில் காட்டக்கூடியவை. எனவே இவை வழிபாட்டில் இடம்பெறவேண்டியவை என்று திருநாவுக்கரசு சுவாமிகள் இம்மந்திரத்தில் குறிப்பிடுகின்றார். “மறந்தறியேன்” என்றதனால் எப்போதும் இதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். வழிபாடு என்பது நன்றியுணர்வோடு இறைவனிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட செய்யப்படுவதினால், இறைவனை அவரவர்க்குப் புரிந்த மொழியில் தெளிவுடன் வழிபடவேண்டும் என்கிறார். திருநாவுக்கரசு சுவாமிகளின் தாய்மொழி தமிழாதலின் “தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று குறிப்பிடுகின்றார். ஊனினை உருக்கி உள்ளொளி பெருகச் செய்யும் அருளாளர்களின் திருமுறைகளான தமிழ் மந்திரங்கள் நம் தாய்த்தமிழ்மொழியில் இருப்பது நாம் பெற்றப் பேறு. தவிர தமிழ்மொழியிலேயே இறைவனைப் பாடிபரவி, இறைவனின் திருக்காட்சியினைக் கண்டு இறைவன் திருவடிக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டவர் திருநாவுக்கரசு சுவாமிகள். அத்தகைய பெருமானின் திருவார்த்தையைப் புறக்கணிப்பது அறியாமையாகும். தமிழ் சார்ந்த சைவர்கள் இறைவனைத் தமிழிலேயே பாடி வழிபட வேண்டும் என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் கூற்று.

அடுத்து திருநாவுக்கரசு சுவாமிகளின் நலம் தரும் மந்திரமானது, இறைவனை இன்பமான சூழலிலும் துன்பமான சூழலிலும் தவறாது மறவாது வழிபட வேண்டுமென்று வலியுறுத்துகின்றது. இறப்பு, நோய், விபத்து, வறுமை போன்ற சூழலிலும் இறைவனை மறவாது வழிபட வேண்டும். அதனைப்போன்றே திருமணம், பிறந்தநாள், காதணிவிழா போன்ற இன்பமான நாட்களிலும் இறைவனை மறவாது வழிபட வேண்டும். இன்றைய நடைமுறையில் துன்பமான சூழலிலேயே பலரும் இறைவனை வழிபடுதலைக் காண்கின்றோம். திருமணம், பிறந்தநாள், காதணிவிழா போன்ற இன்பமான சூழலிலும் பெரும்பாலோர் இறைவனை மறந்துவிடுவதையே பெரிதும் காண்கின்றோம். அது தவறு என்கிறது திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ் மந்திரம்.

மேலும் இவ்வரிய மந்திரத்தில் இறைவன் திருநாமத்தை எப்பொழுதும் எதிலும் மறவாது சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுவதனைப்போன்று அமர்ந்தால் “சிவ-சிவ” என்றும், எழுந்தால் “சிவ-சிவ” என்றும் படுத்தாலும் “சிவ-சிவ” என்றும் பேசத்துவங்கும் முன் “சிவ-சிவ” என்றும் பேசி முடித்தவுடன் “சிவ-சிவ” என்றும் உண்பதற்கு முன் “சிவ-சிவ” என்றும் உண்டு முடித்தப் பின் “சிவ-சிவ” என்றும் எங்கும் எப்பொழுதும் இறைவன் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கூறுபவருக்கு அத்திருநாமம் ஞானமாகவும், கல்வியாகவும், வித்தையாகவும், நன்னெறி காட்டுவதாகவும் அமைவதோடு வீடுபேற்றினையும் அளிக்கும் என்கிறார்.

திருச்சிற்றம்பலம்.