9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்

6139

ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு இறைவனே முதலில் அருள்புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப் பரம்பொருளைப் போற்றுதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உனர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அத்தகைய இறைவன் யார் என்பதற்கு அடையாளமும் கூறுவார். அவன் நிலவு, கங்கையைத் தலையில் அணிகளாகக் கொண்டவன், அளவு இல்லாத ஒளிப்பொருந்தியவன், அறிவு வெளியாகிய சிதம்பரத்தில் ஆடல் வல்லனாக ஆடுபவன் என்பார். இதனையே, திருமூலரும் எல்லா உயிர்களும் தொழ வேண்டிய தன்மையாளன் யார் என்பதனைப் புலப்படுத்துகின்றார்.

எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் பரம்பொருளான சிவமே என்பதனைப், “போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை, நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை, மேற்றிசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம், கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனே” என்கின்றார். எல்லா உயிர்களும் சிவம் என்னும் பரம்பொருளைத் தொழ வேண்டும் என்பதற்குத் திருமூலர் பல காரணங்களைச் சொல்கிறார். “போற்றி, என் வாழ் முதலாகிய பொருளே” என்பார் மணிவாசகர். தமது வாழ்விற்கு இறைவனே முதாலாகப் பலவற்றைக் கொடுத்து அருள் புரிந்திருக்கின்றான் என்று குறிப்பிடுகின்றார். பல்வேறு உலகங்களில் வாழ்கின்ற எல்லா உயிர்களிலும் இறைவன் தங்கி இருந்து அருள்புரிகிறான். அவன் உயிர்களில் தங்கி இருக்கும் வகையால் ஒன்றாயும் உயிர்களைச் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் தன்மையால் உயிர் வேறு இறைவன் வேறு என்று வேறுபட்டும் நின்று அருளுகின்றான், அதனால் அவனே எல்லா உயிர்களும் தொழுதற்கு உரியவன் என்கின்றார்.

அன்றாட வாழ்வில் எல்லா உயிர் வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். அவனே உயிரற்ற எல்லா பொருள்களையும் உயிர்கள் பயன் பெறும் பொருட்டு இசைவிக்கின்றான். இப்படி உயிர்களிலும் நீக்கம் அற நின்று அனைத்தையும் அவன் நிகழ்த்துவித்த போதும் உயிர்களாலோ உலகப் பொருள்களாலோ அழுக்கு  அடையாத தூயவனாக இருக்கிறன். அதனால் உலக உயிர்கள் அனைத்தும் அவனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கின்றன. அத்தகைய உயர்ந்த இறைவன் ஒருவனே எல்லா உயிர்களாலும் தொழப்படும்  தன்மையாளனாக உள்ளான் என்று குறிப்பிடுகின்றார்.

எல்லா உலகங்களையும் உயிர்களையும் தனது திருவருளான நடப்பாற்றலைக்கொண்டே நடத்துவிக்கின்றான். இதனையே பெண்ணாக, அம்மையாக, அம்பிகையாக உருவகப்படுத்தி, ஆதிசத்தி என்று மொழியும் சித்தாந்த சைவம். இதனையே நான்கு திசைகளிலும் வாழும் உயிர்களுக்கு நல்ல அருள் புரியும் அம்மைக்குத் தலைவன் என்கிறார் திருமூலர்.

இறைவனும் இறைவனின் திருவருளுமே உலகையும் உலக உயிர்களையும் பேணிக்காப்பதனால் இறைவனையும் அவன் திருவருளையும் உயிர்களுக்கும் உலகங்களுக்கும் அம்மை அப்பர் என்றனர். சித்தாந்த மெய்கண்ட நூலும், “அம்மை அப்பரே உலகிற்கு அம்மை அப்பர்” என்று குறிப்பிடும். இதை ஒட்டியே, “ அப்பன் நீ அம்மை நீ …..  துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ” என்பார் திருநாவுக்கரசு அடிகள். எல்லா உயிர்களின் உள் இருந்தும் அவற்றிற்குப் பெருமான் அம்மை அப்பராக இருந்து திருவருள் புரிவதனாலே அவன் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் என்பார் திருமூலர்.

பெருமான் தென்திசைக்கு வேந்தன் என்பதாலும் அவன் கூற்றுவனை உதைத்தவன் என்பதாலும் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் என்றும் குறிப்பிடுகின்றார் திருமூலர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற சிறந்த திசைகளில் மிகச்சிறந்ததாகத் தென்திசையைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். திருமூலர் போற்றும் தமிழ் மொழி வழங்கும் தென்பாண்டி நாடு தென் திசையில் இருப்பதாலும் தென்நாட்டினைத் தெரிவு செய்து பெருமான் ஆடல் புரிந்து, தென்னாடு உடைய சிவனே எந்நாட்டவற்கும் இறைவனாய் விளங்குவதனாலும் தென்திசையைச் சிறப்புடைய திசையாகக் குறிப்பிடுகின்றார். தவிர, உயிர்கள் தொழவேண்டியவன், “தென் திசைக்கு ஒரு வேந்தன்” என்கின்றார். தொன்மைத் தமிழர் சிவ பெருமானை, “வேந்தன்” என்று அழைக்கும் வழக்கு உள்ளமை தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்பது தொல்காப்பியம். உயிர்களால் கற்பனை செய்தும் பார்க்க இயலாத இறைவன் தமிழ் வழங்கும் தென் நாட்டில் வெளிப்பட்டுத் தோன்றி அனைத்து உயிர்களுக்கும் அருள் வழங்குபவனாய் இருப்பதனால் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளனாய் இருக்கின்றான் என்பார் திருமூலர்.

எல்லா உயிர்களையும் பறித்துச் செல்லும் பணியினைச் செய்பவன் காலன் அல்லது எமன் என்று கூறுவர். காலனைக் கூற்றுவன் என்றும் குறிப்பிடுவர். மார்கண்டேயர் எனும் சிறந்த சிவனடியாருக்காக அவரின் உயிரைப்பறிக்க வந்த காலனைச் சிவபெருமான் காலால் எட்டி உதைத்து அருள்புரிந்தார். காலனுக்கும் காலனாகிய அச்சிவபெருமானே சொர்க்கம் நரகம் எனும் உலகினுக்கு மேம்பட்ட உலகான சிவ உலகினை அளிக்க வல்லவன். உண்மையான மரணம் இல்லாத பெருவாழ்வினை அளிக்கக் கூடியவன். காலனுக்கும் காலனாக இருக்கக் கூடியவன் பரம்பொருளான சிவபெருமானே! அதனாலேயே உயிர்கள் உண்மையான மரணம் இல்லாத பெருவாழ்வு அடைய வேண்டுமாயின் சிவப் பரம்பொருளையே தொழவேண்டும் என்கின்றார் திருமூலர்.

பிறந்து மடியும் சிற்றுயிர்களையும் சிறுதெய்வங்களையும் வழிபடுவதனால் சிறு சிறு நன்மைகள் மட்டும் கிடைக்குமே ஒழிய, பேரின்பப் பெருவாழ்வான, உண்மையான மரணமிலா பெருவாழ்வான இன்பநிலை கிட்டாது என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். இதனால் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் பரம்பொருளான சிவனே என்று புலப்படுத்துகின்றார்.

தொடரும் ……………..