“வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம்.
வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணக்குகின்றேன் என்று பொருள்படுகிறது. ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று கூறும்போது அவர் முகத்துக்கு மட்டுமல்லாமல் அவர் உயிரில் கலந்துள்ள இறைவனை வணங்குவதாய் எண்ணி வணங்குகிறோம். எனவேதான் வணக்கம் என்பது ஒரு வழிபாட்டிற்குச் சமம் என்று ஆன்றோர் கூறுவர். மேலும் இதன் காரணமாகத்தான் வணக்கம் கூறுகின்றபோது காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று நாம் கூறுவதில்லை. அப்படிக் கூறுவதும் அயல் கலாச்சாரத்தின் தாக்கத்தினாலேதான்.
வணக்கம் கூறும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பிக்கூற வேண்டும் என்பதை நம் முன்னோர் வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கு அறிவியல் சார்ந்த அறிவார்த்தமான பொருளுண்டு. நமக்குத் தலையில் இடது பக்க மூளை வலது பக்க மூளை என்பவை உண்டு. நாம் நம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறுகையில் நம் உடல் முழுக்க ஆற்றல் செயல்பட்டு, நமது இடது பக்க மூளையும் வலது பக்க மூளையும் முழு விழிப்பு நிலையினை அடைந்து, நாம் முழு விழிப்பு நிலையில் உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணங்குகின்றேன் என்று செயல்படுகின்றோம். எனவே வணக்கம் கூறுகையில் இரண்டு கைகளையும் கூப்பிக் கூற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலர் ஒரு கையை மட்டும் உயர்த்துவது, இன்னும் சிலர் வெறும் “ஊம்” என்று மட்டும் சொல்வது இன்னும் சிலர் அதைக் காலத்தால் பின்தங்கியவர்கள் செய்வது என்று எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டியது.
அறிவியல் சார்ந்த இக்கருத்தையட்டியே நம்மவர்கள் இறைவனுக்குப் பூசனை செய்கின்றபோது நாமே மணியடித்துப் பூசனை செய்ய வேண்டும் என்றார்கள். பூசனை செய்கின்றபோது இடது கையில் மணியை அசைத்து ஒலித்தும் இடது கையில் தீபத்தட்டையும் ஏந்தியும் ஒரே சமயத்தில் வழிபாட்டினைச் செய்தனர். சற்று உற்றுப் பார்த்தால் மணி ஏந்திய கை இடது புறமாகவும் தீபத்தட்டு ஏந்திய கை வலமாகவும் எதிரும் புதிருமாகச் செயல்படுவதை அறியலாம். இச்செயல் நம் வலது பக்க மூளையையும் இடது பக்க மூளையையும் இயங்கச் செய்து முழு விழிப்பு நிலையில் நம்மை வைத்துக் கொள்வதே ஆகும். இதனையே நாம் வணக்கம் கூறுகின்றபோது செய்கின்றோம்.
வணக்கத்தில் மூன்று விதமாகக் கூறுவது குறிப்பிடப்படுகிறது. முதல் வகை, கைகளை மார்பு அளவில் குவித்துக் கூறுவதாகும். இவ்வணக்கம் நம்மோடு ஒத்த வயது உடையவர்களுக்கும் நம்மை விட வயதில் குறைந்தவர்களுக்கும் கூறுவதாகும். என் உயிரில் கலந்திருக்கின்ற இறைவன் உங்கள் உயிரிலும் கலந்திருன்றான்; அவனை நான் வணங்குகின்றேன் என்பதே இதன் பொருளாகும். இரண்டாவது வகை வணக்கம், இரண்டு கண்ளின் புருவ மத்தியில் இரண்டு கட்டை விரல்கள் படும்படியாகக் கைகளைக் கூப்பி வணங்குவதாகும். இத்தகைய வணக்கம் எல்லா விதமான ஆசிரியர்களுக்கும் கூறப்படுவதாகும். அதாவது என் உயிரில் கலந்துள்ள இறைவன் உங்கள் உயிரிலும் கலந்துள்ளான். அவன் என் அறிவுக்கண்களைத் திறக்கின்ற ஆசிரியராக உங்கள் போன்று தோன்றுகின்றான். அவனை நான் வணங்குகிறேன் என்று பொருள்படும். ஆசிரியரை இறைவனாகவே உணரும் நம் தமிழர்களின் மாண்பே மாண்பு! மூன்றாம் வகை வணக்கம் தலைக்குமேல் கைகளை உயர்த்திக் கூப்பி வணக்குவதாகும். இது இறைவனுக்கு மட்டுமே சொல்லக்கூடியது. அதாவது நம் ஒவ்வொருவர் தலைக்கு மேலும் 12 அங்குலங்களுக்கு மேல் இறைவனுடைய திருவடிகள் இருக்கின்றன என்று நம் தமிழர் சைவ செந்நெறி குறிப்பிடும். எனவே என் உயிரில் கலந்துள்ள இறைவா, உம்முடைய திருவடிகள் எம் தலைமேல் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நான் உன்னை வணங்குகின்றேன் என்று இறைவன் திருமுன்பு தலைக்கு மேல் கையுயர்த்தி இறைவனை வணக்குகின்றோம். இதைத்தான் மணிவாசகர் தமது திருவாசகத் திருப்பள்ளி எழுச்சியில், “சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்” என்று குறிப்பிடுவார். எனவே நம் போன்ற சராசரி மனிதர்கட்குத் தலைமேல் கைகுவித்து வணக்கம் சொல்வது சரியற்றது.
இதையட்டியே திருநீறு அணிகின்றபோது நாம் இடது, வலது, தலைமேல், வாயுள் என்று திருநீற்றை அணிவித்துப் பூசிக் கொள்கிறோம். எல்லாத் திக்குகளிலும் உள்ள இறைவனின் திருவடிகள் எம் தலைமேல் உள்ளன; அவன் என் உள்ளேயும் உறைகின்றான் என்பதே இதன் பொருளாகும். இவ்வளவு அறிவார்த்தமான, அறிவியல் சார்ந்த, ஆன்மீகத்தோடு இயைந்த இவ்வரிய வணக்கம் சொல்கின்ற வழக்கத்தைத் தமிழர்களாகிய நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு தமிழர் என்னதான் வேற்று மொழிகளில் புலமைப் பெற்றிருத்தாலும் நம் இளைய குமுகாயத்தின் நலனைக் கருதியாவது இவ்வணக்கம் சொல்கின்ற பண்பைக் கட்டிக் காக்க வேண்டும். இதற்கு முதல் அன்னையர்கள் தத்தம் வீடுகளில் காலையில் கணவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புகின்றபோது தவறாமல் வணக்கம் கூறி எழுப்ப வேண்டும். எழுகின்ற கணவன் மனைவிக்கு வணக்கம் கூறி எழுவதோ அல்லது வேலைக்குச் செல்வதையோ நம் பிள்ளைகளுக்காகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதனால் பிள்ளைகள் வணக்கம் கூறும் வழக்கத்தைக் கற்றுக் கொள்வார்கள். அப்பாவிற்கு அம்மா வணக்கம் கூறுவதால் அப்பா வணங்கப்பட வேண்டியவர் என்று பிள்ளைகளுக்கு அப்பாவிடம் மரியாதை ஏற்படும். அம்மாவிற்கு அப்பா வணக்கம் கூறுவதால் அம்மாவைத் தானும் வணங்க வேண்டும் என்ற சிந்தனைத் துளிர்விடும். வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு வணக்கம் கூறி வணங்குவதோடு அவர்கள் பெரியவர்களை மதிக்கின்ற உளப்பாங்கை வளர்த்துக் கொள்வர்.
பள்ளிக்குக் கிளம்பிச் செல்லும் பிள்ளைகள் பெற்றோருக்கு வணக்கம் சொல்லியே விடைப்பெற்றுச் செல்ல வேண்டும். பிள்ளைகளைப் பள்ளியில் சென்று இறக்கிவிடும் பெற்றோர்கள், பிள்ளைகள் வணக்கம் சொல்வதையும் விடைபெறுவதையும் உறுதிபடுத்தியப் பிறகே அவர்களை அனுப்ப வேண்டும். எல்லா வேளையிலும் நண்பர்களையும் உறவினர்களையும் நம் இனத்தவரையும் எங்குப் பார்த்தாலும் வணக்கம் கூறுகின்ற வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்கள் அல்லது நண்பர்களிடம் கைக்குலுக்கி நலம் விசாரிக்கின்ற அதே வேளையில் வணக்கமும் சொல்ல வேண்டும். கைத்தொலை பேசியிலோ அல்லது வீட்டுத் தொலைப்பேசியிலோ பேசும் போது நம்மவர்களாய் இருப்பின் வணக்கம் சொல்கின்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழர்களின் இத்தகையை அரிய செல்வக் களஞ்சியங்களுக்கு நாமும் சொந்தக்காரர்கள் என்று எண்ணிப்பார்க்கின்றபோது பெருமையாகவுள்ளது.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”